Monday, July 15, 2013

668. என் பொழப்பு ஓடணும்....


தருமி பக்கம் (1) – என் பொழப்பு ஓடணும்..*
என்னமோ அந்தக் காலத்திலேயே பெரியவங்க ஒண்ணு சொல்லிட்டு போய்ட்டாங்க … ‘உபகாரமா இல்லாட்டியும் உபத்திரவா இருக்காதே’ன்னு! இதில் இருந்து எனக்குத் தெரிய வர்ரது என்னன்னா … எப்பவுமே, அந்தக் காலத்திலேயும் சரி, இந்தக் காலத்திலேயும் சரி, நம்ம ஆளுக அடுத்தவங்களுக்கு உபகாரமா இல்லாம உபத்திரவமாத்தான் இருந்திருக்காங்க. அது கொஞ்சமும் மாறாம நாமும் இன்றைக்கும் நல்லா அதைக் கடைப்பிடிச்சிருக்கோம். இதுல படிப்பு, வயசு, பழக்க வழக்கம், சமூக நிலை எதிலேயும் எந்த வித்தியாசமும் இல்லாம நாம எல்லோருமே உபத்திரவமான ஆட்கள் தான். இது நம்ம உடம்போடு .. அல்லது நம்ம ஜீனோடு பிறந்த வியாதின்னு தான் நினைக்கிறேன். நம்ம எல்லாத்துக்கும் நம்ம வசதி .. நம்ம வாழ்க்கை .. இது பற்றி மட்டும் தான் நினைப்பு. சுத்தி இருக்கிறவங்களைப் பத்தி நினைக்கிற புத்தியே நமக்கு இல்லை. அட .. அவங்களுக்கு உதவுவதற்காக அவர்களைப் பத்தி நினைக்கணும்னு நான் ஒண்ணும் சொல்லலை. அவங்களுகு உபத்திரவம் இல்லாம இருக்கணும்னு நினைக்கிற புத்தி கொஞ்சூண்டு எட்டிப் பார்த்தாலே போதும்.

ரொம்ப பிடிக்காம போன விஷயம் ஒண்ணு ரெண்டு இருக்கு. அது எப்படி ஒரு வண்டியில போற ஆளு சடார்னு லெப்ட் .. ரைட்டுன்னு திரும்பி எச்சில் துப்பிட்டு போறாரு என்பது எனக்கு மிக ஆச்சரியமான விஷயம். பேருந்துகளைத் தாண்டும் போதெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக வேண்டியதிருக்கு. எந்த வினாடி எங்கிருந்து எவன் துப்புவானோ என்று பயந்து கொண்டே தாண்டணும். எச்சில் துப்புறதே தப்பு .. ஆனால் அதை இடம் பொருள் என்றில்லாமல் எங்கெங்கும் செய்வோம்னு கங்கணம் கட்டிட்டு மக்கள் தொட்ர்ந்து செய்வதைப் பார்க்கும் போது ஆச்சரியமும் வேதனையும் மிஞ்சுகிறது.

என் வயசு ஆளு… ஸ்கூட்டரில் போய்க்கொண்டே படக்கென துப்பினார். பின்னால் வந்த நான் ’என்னங்க இப்படித் துப்புறீங்க’ என்றால், ’பின்னால் வர்ரவன் பார்த்து வரணும்’ என்றார். அடப் பாவி மக்கா ..! இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான்.

சைக்கிள், கார், பைக் .. எதுவாக இருந்தாலும் அதை நிப்பாட்டும் போது அது அடுத்த ஆளுக்கு இடைஞ்சலா என்று பார்ப்பது நம் வழக்கமே கிடையாது. நான் என் வண்டியை நிப்பாட்டணூம் .. நிப்பாட்டிட்டேன் – இது தான் நம் வழக்கமான philosophy! அட .. அடுத்த வண்டியை வழி மறிச்சி நிப்பாட்றோமே .. ம்ம் .. அந்த மாதிரி நினைப்பே வர்ரதேயில்லை. அப்போ நீங்க அங்க நின்னு, ஏங்க இப்படி நிப்பாட்றீங்கன்னு கேட்டா ஒரு ரெடிமேட் பதில் ஒண்ணு வரும். ’இதோ .. ஒரு நிமிஷத்தில வந்திருவேன். அதான் இப்படி நிப்பாட்டியிருக்கேன்.!

எங்க ஊர் மதுரையில் இன்னும் ஒரு பெரிய விஷயம். சத்தத்தையும் எங்களையும் வேறுபடுத்தி யாராலும் பிரிச்சிப் பார்க்க முடியாது. cone speaker வச்சா சத்தம் ரொம்ப இருக்கேன்னு பொட்டி speaker வைக்க சொன்னாங்க. வச்சாங்க பாருங்க எங்க ஊர்க்காரங்க ..
கும்கி சைஸ்களில் box speakers. என்னா சைஸ்! சத்தம் பிச்சி உதறும். இதில் என்ன ஜோக்குன்னா… அம்மாம் பெரிய ஸ்பீக்கர் முன்னால் எங்க ஊரு ஆளுக நின்னு ‘பூ .. இதெல்லாம் என்ன சவுண்டு!’ அப்டின்னு எனக்கென்னன்னு நிப்பாங்க.

இன்னொரு விஷயமுங்க. அந்த வியாதி எனக்கும் உண்டுன்னு ஒத்துக் கொள்கிறேன். எங்கே போனாலும் முதல் ஆளா நான் இருக்கணும்; அடுத்தவனை முந்தணும் அப்டின்ற ஒரு மன நிலை நம்மில் பலருக்கு. பலருக்கா இல்லை எல்லோருக்குமா என்று நீங்களே கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டமான போக்குவரத்து இடங்களில் நான் முந்தி .. நீ முந்தி என்று நாம் போட்டுக்கொள்ளும் அவசரமே நம் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு முதல் காரணம். அஞ்சு வண்டி நிக்கும்போது கூட பச்சை விளக்கு வருவதற்குள் சிகப்பு விளக்கு இருக்கும்போதே புறப்பட்டுப் போகணும். சந்திப்புகளில் உனக்காக நான் எதற்கு வழி விடணும் அப்டின்ற ‘உயர்ந்த’ புத்தி நமக்குள். எல்லாம் ஒரு ego தானோ?

வண்டிகளில் ஒலிப்பான் ஒண்ணும் இருக்குமே .. அது எதுக்குன்னே நம்ம மக்களுக்குத் தெரிவதில்லைன்னு நினைக்கிறேன். என் வண்டி .. என் horn ..நான் எப்படியும் சத்தம் போட்டுட்டு போவேன் அப்டின்றது நம்மூர் philosophy! கியர் போடுறதை விட horn அடிச்சிக்கிட்டே போறது தான் மக்கள் வழக்கம். ஒரு முறை மதுரை – சென்னை – பெங்களூரு – கோவா என்றொரு பயணம். ரொம்ப மகிழ்ச்சியான ஒரு விஷயம். இந்த ஊர்களில் வரிசைக்கிரமமாக ஒலிப்பான் சத்தம் குறைந்து கொண்டே வந்தது.

இது மாதிரி ‘எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன .. என் பொழப்பு ஓடணும்; அம்புட்டுதான்’ அப்டின்ற philosophy-ல் இன்னும் நிறைய விஷயம் இருக்கு. ஏழு ஊருக்கு கேக்குறது மாதிரி கைப்பேசியில் ரிங் டோன்; பாட்டுகளைச் சத்தமாக வைத்து பாட்டு கேட்கும் இசைப் பித்தர்கள்; கழுத்தை வளைத்து கைப்பேசியில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிச் செல்லும் முட்டாள் சர்க்கஸ்காரர்கள்; என் வீட்டுக் குப்பையை உன் வீட்டின் முன்னால் கொட்டுவேன் என்று சொல்லும் சுத்தக்கார மக்கள் …. இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போகும். இந்தப் பழக்கங்களையெல்லாம் எப்படி மாத்துவது? எனக்கு இது ஒரு பெரிய கேள்வி. எல்லாமே சமூகம் சொல்லிக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் சமூகமே இப்படி கேடு கெட்டுக் கிடக்கும் போது எங்கிருந்து யார் யாருக்குச் சொல்லிக் கொடுப்பது?

பிள்ளைகளை வைத்து இருசக்கர வண்டிகளில் செல்லும் தகப்பன்மார்கள் எல்லா சாலை விதிகளையும் மீறி வண்டி ஓட்டிச் சென்றால் அந்தப் பிள்ளைகள் எதைக் கற்றுக் கொள்ளும்? சின்னக் குழந்தைகளை முன்னால் வைத்து, அப்போதும் கைப்பேசியில் பேசிக்கொண்டு செல்லும் பெற்றோர்களிடமிருந்து குழந்தை எதைக் கற்றுக் கொள்ளும்?
*

6 comments:

தருமி said...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது:

தொடருவதை தான் கற்றுக் கொள்ளும்... சிலர், பிள்ளைகள் சொன்னாலும் திருந்துவதில்லை என்பதும் உண்மை...! முதலில் திருந்த வேண்டியது நாம் தான்...!

ஜோதிஜி said...

ஒரு முறை வெளியே சென்று வீட்டுக்குள் வந்ததும் எனக்கான ஆயுள் ஒரு நாள் கூடியுள்ளது என்று சொல்வேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

பிள்ளைகளுக்கு நாம்தான் முன்மாதிரியாக இருந்து காட்டவேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு முன், மைசூர் சென்றிருந்தேன். பிருந்தாவன் சென்று விட்டு திரும்பும் பொழுது, டிராபிக் ஜாம். மூன்று கி.மீ தூரத்திற்கு மேல் வரிசையாக கார்கள், கார்கள். ஒரு கார் கூட, சாலையின் இடது புறத்தில் இருந்து வலது புறத்திற்கு எல்லை மீறி நுழையவில்லை. பத்தே நிமிடத்தில் போக்கு வரத்து மீண்டும் சீரடைந்து விட்டது. தமிழகத்தையும் நினைத்துப் பார்க்கின்றேன். நாம் மட்டும் சென்று விட்டால் போதும் என்ற மனோபாவம் மேலோங்கி இருக்கின்றது

TBR. JOSPEH said...

ரொம்ப நாளாச்சிது இப்படி சுதந்திரமா Internetஐ சுத்தி வந்து. ஒருவழியா BSNL கனெக்‌ஷன்லருந்து ரிலையன்சுக்கு மாறிட்டேன். முந்தியெல்லாம் ஒங்க ப்ளாக திறக்கறதுக்கே படாதபாடு படுவேன். இப்போ நொடியில திறக்குது. அதப்பத்தியே என் பதிவுல புலம்பியிருக்கேன்.

அது சரி, என்ன நீங்க எழுதற ஸ்டைல மாத்திட்டீங்க? துளசி அம்மா ஸ்டைல்ல இருக்கு. இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு. இப்படியே இருக்கட்டும்.

நீங்க சொன்ன பல தொல்லைய நானும் குடுத்துருக்கேன்,எச்சி துப்பறத தவிர :)

நா அடிக்கடி செய்யிற தொல்லை பின்னால வர்றவனுக்கு வழி தராம போறது. ஒன்னால முடிஞ்சா ஓவர்டேக் பண்ணிக்கிட்டு போயேன்னு நா பாட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்... என் வேகத்துல. சில பேர் ஓவர்டேக் பண்றப்போ 'யோவ் பெருசு'ம்பான். சரிடாப்பான்னு சிரிச்சிக்குவேன்... ஏதோ நம்மால முடிஞ்ச தொல்லை, பின்னால வர்றவன கடுப்பாக்கி பாக்கறதுல ஒரு சந்தோசம்.

தருமி said...

//பின்னால வர்றவனுக்கு வழி தராம போறது//

இதை இருசக்கர வண்டியில் செஞ்சிராதீங்க ...

//நீங்க எழுதற ஸ்டைல மாத்திட்டீங்க? //
அப்படியா ...? எப்புடி மாத்தியிருக்கேன்னு தெரியலையே!

//துளசி அம்மா ஸ்டைல்ல இருக்கு. //

உங்களுக்கு அவங்களை சுத்தமா பிடிக்காதா ...??

துளசி கோபால் said...

ரெண்டு சமாச்சாரம் சொல்லணும்.

ஜோதிஜி சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். வீட்டை விட்டு வெளியே போன ஆள் பத்திரமா அன்னிக்கு வீட்டு வந்தால் அன்றைக்கு அவர் ஆயுள் கெட்டி ன்னு நான் சென்னை வரும்போதெல்லாம் கோபாலிடம் சொல்லிக்கிட்டே இருப்பேன்.

துளசி அம்மா ஸ்டைலுன்னு ஒன்னு உருவகி இருக்கேன்னு நினைச்சாலே வியப்பாவும் மகிழ்ச்சியாயும் இருக்கு:-)))

Post a Comment