Sunday, September 28, 2014

788.. செயலலிதா வழக்கு - முன்னும் பின்னும்

*


ஜெயலலிதா வழக்கு இப்படி ஒரு தண்டனையோடு முடிந்தது சந்தோஷம் தான்.ஒரு வேளை இது ஒரு படிப்பினையாக இருக்கலாம் என்ற ஆசை வருகிறது. ஆனாலும் இந்த வழக்கு இப்படியே முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நீதியரசர் டீ குன்ஹாவிற்கு என் வாழ்த்துகளும், வணக்கமும்.

இப்படி யோசித்த போது தர்மபுரி வழக்கு முடிந்து மூவருக்குத் தூக்குத் தண்டனை விதித்த போது நம் பதிவர்களில் பலர் மிகவும் சந்தோஷப்பட்டு பதிவிட்டிருந்தார்கள். எனக்குஅப்படி ஒன்றும் பெரிய மகிழ்ச்சி வரவில்லை. இது ஒரு தொடர்கதை. மறுபடியும் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் என்றே நினைத்தேன். அதைப் பற்றி நான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவை மீள் பதிவாக இடுகிறேன்.

பழைய கதையே தொடரும் என்றே நினைக்கிறேன். ஜெயலலிதா வழக்கும் மேல்முறையீடு ... அது .. இது என்று இழுத்தடிக்கப்பட்டு விரைவில் வெளியே வந்து விடுவார் ... அவரது வெற்றி ஊர்வலமும் தொடரும். உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்றுதான் நினைக்கிறேன். பார்க்கலாம்.


*

மீள் பதிவு - சில பகுதிகள்

 $செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தோஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி. ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன்.

எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும். (வெண்மணி பற்றிய குறும்படத்தில் இப்படி ஒரு காட்சியோடு படம் உள்ளது.)

இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும் இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன?

====================== 888888888888888888888 ===================

 இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும். இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.) 

அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!


 *

7 comments:

வேகநரி said...

//நீதியரசர் டீ குன்ஹாவிற்கு என் வாழ்த்துகளும், வணக்கமும்.//

நானும் உங்களோடு சேர்ந்துக்கிறேன்.

ப.கந்தசாமி said...

"இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே"

புரியாததினால்தான் இன்னும் சாதாரணக் குடிமகனாகவே இருக்கிறீர்கள்.

'பசி’பரமசிவம் said...

//உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தை என்றுதான் நினைக்கிறேன்//

நானும்தான்.

? said...

//நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! //

இதுதானே எங்களுக்கு வேணும். உடனே கீழ்த்தளம் விதிப்படிதான் கட்டப்பட்டது அதை ஏன் இடிக்கணும்னு வழக்கு போட்டு இழுத்தடிப்பமில்ல,

? said...

பிளசண்ட் ஸ்டே ஹோட்டலில் விதியை மீறி 7 ஏழு மாடிகள் கட்டப்பட்டது. அதில் 2 தளங்களுக்கு மட்டுமே சட்டப்படி அனுமதி அளிக்க முடியும். ஆத்தா ஒரு GO பாஸ் செய்து அனுமதி அளித்தார். இதை எதிர்த்த செயலர் சிரிக் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், விதி மீறிய 5 மாடிகளை இடிக்கவும், அந்த ஜிஓ வை இரத்து செய்தும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட அப்பீலில் எந்த மாடி என சொல்லவில்லை என்றார்கள். அதை தெளிவு படுத்தவும் என உச்சநீதிபதிகள் சொன்னார்கள், இதனால் முதல் 5 மாடிகளை இடி என்று அறிவுறுத்தியது உயர்நீதி மன்றம். அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கவும் ஆணை இடப்பட்டது. 5 மாடிகளையும் இடித்துவிட்டார்கள் என நினைக்கிறேன், ஏனெனில் இந்த வழக்கு மற்ற விதி மீறிய கட்டங்கள் குறித்த வழக்குகளில் இந்தியா முழுவதுமான நீதிமன்றங்களில் ரெபரன்ஸ் வழக்காக குறிக்கப்பட்டுகிறது.

இன்னொரு விடயம் இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் ஆத்தாவுக்கு ஒரு வருடசிறை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நடந்த போராட்டத்தில்தான் தர்ம்புரி மாணவிகள் எரிப்பும் நடந்தது. சிறையை எதிர்த்து ஆத்தா செய்த அப்பீலில் அவரது ஊழல் நோக்கம் நிருபிக்கப்படவில்லை என ஆத்தாவை டான்சி மற்றும் இந்த ஓட்டல் வழக்கிலிருந்து விடுவித்து நீதிமான் தினகர் தீர்ப்பளித்தார். இவர் 2001ல் செய்த சேவையினை பாராட்டும் விதமாக சரோஜா தேவி யூஸ் பண்ணிய சோப்பு டப்பாவை (தமிழக சட்ட கமிசன் தலைவர் பதவி) 2014ல் அளித்து மகிழ்ந்தார் காவிரித்தாய். (அதிமுககாரனுக ஆத்தாவை காவிரித்தாய்ன்னு கூப்பிட்டதுனாலயோ என்னவோ இப்ப கர்நாடாக்காரனுக பிடிச்சு வைச்சுகிட்டு விடமாட்டீங்கறானுக!!!)

Packirisamy N said...

எனக்கு ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது.

ஒருவருக்கு வக்கீலிடம் இருந்து தீர்ப்பு விஷயமாக போன் வந்தது. வக்கீல் "தருமம் ஜெயிச்சிடுதைய்யா." என்றார். பதிலுக்கு முன்னவர்
"அப்பீல் பண்ணிட்டியா?" என்றார்.

G.M Balasubramaniam said...

பல வழக்குகள் ஆய்வில் இருக்கின்றன. பல வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. /படுவதில்லை, பலரும் ஜாமீனில் இருக்கிறார்கள். ஜாமீனில் இருப்பவர்கள் குற்றம் இன்னும் ருசுப்படுத்தப் படவில்லை என்றும் சொல்கிறார்கள் நமக்கு மறதியே வரம்தானே. எத்தனை நாள் ஆறப் போடுவார்கள். பிறகு ஆறியகஞ்சி பழங்கஞ்சி யாகிவிடும். அடப் போங்கப்பா இந்த விளையாட்டு போரடிச்சுப் போச்சு....!

Post a Comment