Friday, September 29, 2017

950. BIG SALUTE TO HER !
*


 சும்மா சொல்லக்கூடாது. அந்த 75 நாட்கள். என்ன நடந்தது .. என்னவெல்லாம் நடக்கவில்லை என்பது பயங்கர மர்மமாக இருக்கிறது. இப்போது ஒவ்வொரு மூலைக்குள்ளிருந்தும் ஒவ்வொரு முனகல்கள். சில பிதற்றல்கள். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மையாக விசுவரூபமெடுத்து நிற்கிறது. அந்தக் கட்சியில் எல்லாருமே காசு .. பணம் .. பதவி. இவ்வளவு தான். எந்த நன்றியுணர்வோ, அன்போ பாசமோ, எதுவும் இல்லாமல் காசுக்கு நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு அலையும் ஆட்களே எங்கும் காணப்படுகிறார்கள். அட .. அந்த அம்மாவின் விசிறிகளாகவும், பக்தர்களாகவும் இருந்த சாதாரண மக்கள் கூட இப்போது எந்த உணர்வும் இல்லாமல் அலைகிறார்கள். செத்தவுடன் சித்தி மேல் கோபமாக இருந்தது போல் தெரிந்தது. இந்தம்மாதான் அந்தம்மாவை கொன்னுரிச்சின்னு கோபமா இருந்தாங்க. இப்போ எல்லாம் மறந்தது போல் தெரிகிறது. ஆறிப் போச்சு போலும். முதலில் மன்னார்குடி மேலிருந்த கோபமெல்லாம் இப்போது இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை.


ஆயிரம் இருந்தாலும் ‘சித்தி’ சரியான சித்திதான் போலும். எம்புட்டு காரியங்களை செய்ய முடியுதுன்னு பார்த்தா மலைப்பா இருக்கு.


சரி … மம்மியை மருத்துவ மனையில் சேர்த்தாச்சு. ஏன் சர்க்கரை அம்புட்டு கூடிப்போச்சுன்னு தெரியலை. விடுங்க. மருத்துவ மனையில் பெரிய பெரிய மருத்துவர்களெல்லோரும் வந்தாங்க .. மருத்துவம் பார்த்தாங்க. மருத்துவ மனைத் தலைவர் அப்பப்போ என்னென்னவோ செய்திகளையெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் நோயாளி எப்போ வீடு திரும்பலாம் என்பதை நோயாளியே முடிவு செய்யும் படியான அளவிற்கு மருத்துவம் வெற்றியடைந்தது என்றார். அது ஒரு நல்ல ஜோக்காக இருந்தது. மற்ற மருத்துவர்கள் வாயே திறக்கவில்லை. ஒரு வேளை அது medical ethics என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இங்கிலாந்து மருத்துவர் பீலே ஏன் ஊடகங்களைக் கூட்டி பேசினார் என்று தெரியவில்லை. அப்போது அதற்கான அவசியம் இருந்ததா என்றும் தெரியவில்லை. அடுத்து, அரசியல் வியாதிகள் எல்லோரும் வந்து பார்த்தார்கள். நேரில் எல்லோரையும் அந்த சித்தியால் எப்படி filter பண்ண முடியும், எப்படி தடுத்து நிறுத்த முடியும் என்பது எனக்குப் புரியவே இல்லை. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் என்று எல்லோரையும் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை எப்படி ஒருவரால் எடுத்துக் கொள்ள முடிந்தது? வந்து பார்க்க வந்தவர்களும் எப்படி அதற்கு அடிபணிந்தார்கள் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. எப்படி அவ்வளவு அதிகாரம்? யாரும் ஏன் கேள்வி கேட்கக்கூட தைரியம் இல்லாமல் இருந்தார்கள். ஆச்சரியம் … அவலம். அவ்வளவு தான் நம் ஆட்கள்.


மேல்மட்ட ஆட்களை எப்படி ”தன்னைக்கட்டினார்” என்பது புரியவில்லை. காசு வேலை பார்த்ததா? அப்படியா எல்லோரும் சரமாரியாயக் காசுக்கு விழுந்து விடுவார்கள்? சரி … அது ஒழியட்டும். அடுத்து அடுத்த நிலை ஆட்கள். நிச்சயம் ஒரு மருத்துவ மனையில் மிகச் சாதாரண வேலை பார்க்க அத்தனை பேர்கள் இருப்பார்கள். அடிமட்ட வேலைக்கு வந்த மக்களைக் கூட எப்படி “வாயைக் கட்ட முடியும்” என்றும் புரியவில்லை. எந்த செய்தியும் வராத அளவிற்கு எப்படி அந்தப் பெண்ணால் அணைகட்ட முடிந்தது. காசும், பதவியும்(?) செய்த வேலையா அது?


தன் கட்சி ஆட்களை அடக்கி வைப்பது எளிது. வளைந்தே பழகிய மக்கள். நிமிர்ந்து நிற்க முடியாத ஜென்மங்கள். சாலையைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் தானே. (இன்னும் கூட அவர்களின் முதுகு நிமிறவே முடியவில்லை. எடப்பாடி அவர்களோடு இருந்த இன்னொரு சாதாரண எம்.எல்.ஏ. ஆனால் இப்போது முதல் அமைச்சர். அவர் வரும்போதும் இப்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் மம்மிக்கு குனிந்த அளவு இல்லாவிட்டாலும் அப்படி ஒரு அநியாயமாகக் குனிந்து வணக்கம் போடுகிறார்கள். என்னவோ சொல்வார்கள். மரத்துக்குச் சேலையைச் சுற்றினாலும் திரும்பிப் பார்ப்பான் என்பார்கள். அது மாதிரி இந்தக் கட்சி உறுப்பினர்கள் பதவியில் யார் வந்தாலும் விழுந்து கும்பிடுவார்கள் போலும். நல்ல வளர்ப்பு!)


ஆக, சித்தி தன் கட்சி ஆட்களை அடக்கி ஆண்டார்; ஆண்டு கொண்டிருக்கிறார். அது பெரிதில்லை. ஆனால் கூட்டிப் பெருக்க வரும் ஒரு பாவப்பட்ட பெண்ணிலிருந்து, மத்திய அமைச்சர்கள் வரை வந்தவர்கள் அனைவரின் கண்ணைக் கட்டி விட்டது எப்படி? ஒரு விஷயமும் கசியாதபடி எப்படி திரை போட்டு அக்குடும்பம் மறைத்தது? இரண்டு முறை ஒரே ஆளைச் சாக வைத்த நாடகமும் நடந்தேறியது. செத்தவரின் மீது போர்த்திய நாட்டின் மூவர்ணக் கொடியை வாங்கும் மனத்திறமை மிக அபாரம். அப்போதே தனது வாரிசுரிமைக்குக் கையெழுத்தைப் போட்டாகி விட்டது. அல்லது அது நம் தலையெழுத்துக்கே போட்ட கையெழுத்தோ என்னவோ?


சிறைக்குப் போனதென்னவோ குற்றம் செய்ததற்கும், குற்றத்திற்கு உதவியாக இருந்ததற்கும். போலி கம்பெனி இருந்ததற்கும் ஆதாரம் வந்தாச்சு. ஆனால் ஷாப்பிங் போற அளவு திறமையாக தன் சுற்றத்தை சிறையிலேயே அமைத்துக் கொள்ள முடிகிறது. சும்மா வந்த ஊர்ப்பய காசு தானே. அதானால் தான் அது சிறையாக இருந்தால் என்ன .. கூவத்தூராக இருந்தால் என்ன … கூர்காக இருந்தால் என்ன? அள்ளி எறிய முடிகிறது!


இவ்வளவு திறமையான அந்தப் பெண்ணுக்கு ஒரு பெரிய சல்யூட் தாராளமாகப் போடலாம்.


படே ஆத்மி!


*

ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்கு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான powerfulஆக இருந்துட்டு, எப்படி செத்தோம்னு தெரியாம ஒரு ஆள் போயாச்சு. இன்னொரு ஆளுக்கு காத்து அடிக்க ஆரம்பிச்ச காலத்துல சிறைக்குப் போயாச்சு. என்னதான் ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டாலும் சிறை தானே வாழ்க்கையாகப் போச்சு.

பிள்ள குட்டிகளுக்கும் சேர்க்கலை. தியேட்டரும், நீரும், நிலமும் வாங்கி/பிடுங்கிக் குமிச்சி யாருக்காகவோ குமிச்சி வச்சாச்சி… என்ன வாழ்க்கை? 

இது தான் வாழ்க்கையா? தெரியலையே!


*http://tamil.south.news/sasikala-jayalalitha-fight/


*

11 comments:

koilpillai said...

ஐயாவிற்கு வணக்கம்,

தலைப்பை பார்த்ததும் மம்மிக்குத்தானோ அந்த சல்யூட் என்று நினைத்துகொண்டேன்.

படித்து முடிக்கும்போது தோன்றியது இத்தனையையும் அலசி பதிவிட்ட உங்களுக்குத்தான் அந்த சல்யூட் போய் சேரவேண்டுமென்று.

இன்றில்லை என்றாலும் ஒருநாள் உண்மைகள் வெளிப்படும் சித்தியின் "சித்து" குறித்து.

கோ


KILLERGEE Devakottai said...

மிகச் சரியாக அலசி இருக்கின்றீர்கள் ஐயா.
நான் பலமுறை சித்திமீது கோபப்பட்டாலும் இன்னும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

இரும்பு ம(ன)னுஷி.

ராஜி said...

தும்பை விட்டு வாலை பிடித்த கதை

தருமி said...

கில்லர்ஜி,
இரும்பு மனுஷின்னு சொல்ல மாட்டேன் … துட்டு மனுஷின்னு கூப்பிடலாம்.
ஆனா தத்துவமா பேசணும்னா இருக்கிறவரைக்கும் ரெண்டு பேரும் ஆடினாங்க … ஆனால் முடிவுகள் இம்புட்டு மோசமா ரெண்டு பேருக்கும் இருக்கக்கூடாதுங்க.


தருமி said...

தியேட்டர் வாங்கின ”கதை” கேக்கவே டெரர் சினிமா மாதிரில்லா இருக்கு.

தருமி said...

ஆனால் philosophical-ஆக பார்த்தால் … 20 வருஷத்துக்கு மேல அப்படி ஒரு முரட்டுத்தனமான powerfulஆக இருந்துட்டு, எப்படி செத்தோம்னு தெரியாம ஒரு ஆள் போயாச்சு.

இன்னொரு ஆளுக்கு காத்து அடிக்க ஆரம்பிச்ச காலத்துல சிறைக்குப் போயாச்சு. என்னதான் ஷாப்பிங் போய்ட்டு வந்துட்டாலும் சிறை தானே வாழ்க்கையாகப் போச்சு.
பிள்ள குட்டிகளுக்கும் சேர்க்கலை. தியேட்டரும், நீரும், நிலமும் வாங்கி/பிடுங்கிக் குமிச்சி யாருக்காகவோ அள்ளி வச்சாச்சி… என்ன வாழ்க்கை?

இது தான் வாழ்க்கையா? தெரியலையே!

யாருக்காக … இது யாருக்காக ….?

தருமி said...

http://tamil.south.news/jayalalitha-did-some-secrete-activities/
http://tamil.south.news/sasikala-jayalalitha-fight/

G.M Balasubramaniam said...

நக்கீரன்குறும்படம் பார்த்தீர்களா

வேகநரி said...

அருமையான பதிவு. அவ்வளவும் உண்மைகள்.
//தன் கட்சி ஆட்களை அடக்கி வைப்பது எளிது. வளைந்தே பழகிய மக்கள். நிமிர்ந்து நிற்க முடியாத ஜென்மங்கள். சாலையைத் தொட்டுக் கும்பிடும் மக்கள் தானே.//

ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணமடைந்து விட்டது. வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார், இட்லி சாப்பிடுகிறார், எப்போ வீடு திரும்பலாம் என்பதை அவரே முடிவு எடுக்க வேண்டும் இவை எல்லாம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்ட மாதிரியே அப்படியே நினைவில் உள்ளது.

//மரத்துக்குச் சேலையைச் சுற்றினாலும் திரும்பிப் பார்ப்பான் என்பார்கள். அது மாதிரி இந்தக் கட்சி உறுப்பினர்கள் பதவியில் யார் வந்தாலும் விழுந்து கும்பிடுவார்கள் போலும். நல்ல வளர்ப்பு!)//
மரத்துக்கு பர்த்தாவால் மூடிவிட்டாலும் திரும்பார்க்கும் அரபுகாரன் போல் தான் இவர்கள்.

தருமி said...

ஒன்று பார்த்தேன். நீங்கள் சொல்வது எது என்று தெரியவில்லையே! தொடுப்பு …?

சார்லஸ் said...

பணத்தாலும் ஆணவத்தாலும் ஆடியவர்களுக்கு கடைசியில் வாழ்க்கை அவலத்தைத்தான் அள்ளி வழங்கியிருக்கிறது. அம்மாவிற்கும் சின்னம்மாவிற்கும் அதே நிலைமை. புகைய ஆரம்பித்ததை புதைக்க முடியுமா? உண்மை வெளியில் கொஞ்சம் கொஞ்சமாய் வரும். மக்கள் ' நாங்கதான் ஆரம்பத்தில் சொன்னோமே ' என்ற செய்தியை நீதிமன்றம் புதிதாய் கண்டு பிடித்துச் சொல்லும்.

Post a Comment