Tuesday, July 17, 2018

993. F. I. F.A. 2018 ... 8



இறுதிப் போட்டி


15.7.2018







ப்ரான்ஸ்  vs  க்ரோஷியா






இறுதி நாள் விழா நடந்தது. ஏற்கெனவே விம்பிள்டன் டென்னிஸ் முடிந்து விட்டது. ஏற்கெனவே ..// இறுதியில் ரபா, செரினா ஜெயிச்சிருவாங்களா?
கால்பந்துல க்ரோஷியா  வெல்லுவாங்களா?// ... என்று என் முந்திய பதிவில் கேட்டிருந்தேன் மூன்றில் முதல் இரண்டு அவுட். கொஞ்சம் பயம் வந்திருச்சி... போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே க்ரோஷியா பற்றிய பயம் வந்திருச்சி. மூணாவதும் புட்டுக்குமோன்னு பயம்! மூணும் புட்டுக்கிச்சி. ஆனாலும் இதில் ரபா தோற்றது மட்டும் தான் கொஞ்சம் சோகம். ஏனெனில் இரு சமமானவர்களுக்கு நடுவில் நடந்த போட்டி அது. யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்ற சம நிலை இருந்தது. ஆனால் செரினா ஓர் இளம் தாய்; கடினமான பிரசவம் முடிந்து சில மாதங்களில் போட்டியிடுகிறார். அவர் உடல் நிலை, வயது எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அரையிறுதி ஆட்டம் வரும் வரை விளையாடியதே மிக மிக பெருமைக்குரிய வெற்றிதான், இறுதி வரை வந்ததே பெருமைக்குரியது தானே.

இதே லாஜிக் க்ரோஷியாவிற்கும் பொருந்தும்.ப்ரான்ஸ் ஆறே கால் கோடி மக்கள் தொகை. பெரிய வளர்ந்துள்ள நாடு. வரலாற்றுப் பெருமை வாய்ந்த நாடு. எதிரணியின் க்ரோஷியாவின் மொத்த மக்கள் தொகையே 41.7 லட்சம் மக்கள் தான். (மதுரை 15.6 லட்சம்; சென்னை 71 லட்சம்) சென்னைக்கும் மதுரைக்கும் நடுவில் உள்ள எண்ணிக்கையில் மொத்த நாட்டின் மக்கள் தொகை. நினைத்துப் பார்க்கவே பயமாகவும், மிகுந்த ஆச்சரியமாகவும் உள்ளது, இத்தனூண்டு நாட்டிலிருந்து “உலக விளையாட்டான” கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு வந்ததே ஆச்சரியமல்லவா? க்ரோஷியா தோற்றாலும் அவர்களும் அரும் பெரும் வெற்றி பெற்றவர்களே!

நம் அன்பும் பாராட்டும் அந்த அணிக்கும் அதனைத் தந்த அந்த சின்ன நாட்டிற்கும். இதிலும் இன்னொரு விசித்திரம். வென்றது பிரான்ஸ் அணியாக இருக்கலாம். ஆனால் அதில் உள்ள வீர்ர்களில் பலர் ஆப்ரிக்க நாட்டுக்காரர்கள். இளம் இளைஞராக உலகிற்கு அறிமுகமாகியுள்ள - அவர் பெயரை எப்படி தமிழில் சொல்வது  -- BMappe - பேப்பே -ன்னு சொன்னால் நல்லாயில்லையே ! ப்ரான்ஸ் அணியையே ஆப்ரிக்க அணி என்று பல நாளிதழ்கள் “பாராட்டி” எழுதியிருந்தன.

போகிற போக்கில் பல வளர்ந்த நாட்டு கால்பந்து அணிகள் அதிக எண்ணிக்கையில் அயல் நாட்டு வீர்ர்களைக் “கடன்” வாங்கி, தங்கள் குடிமக்களாக்கி விளையாட அழைத்து வருகிறார்கள். இந்தச் செய்தியைத் தாங்கி ஒரு நாளிதழ் வந்திருந்தது. எனக்கு உடனே ஒரு ஐயம், இந்த ஜெர்மன்காரர்கள் கொஞ்சம் ”இனவெறி” அதிகமாக உள்ளவர்களாச்சே... அதனால் அந்த நாட்டில் அயல்நாட்டு imported வீர்ர்கள் குறைவாக இருப்பார்கள் என நினைத்து, அந்த நாட்டின் அணியில் உள்ள அயல்நாட்டு இறக்குமதிகள் எத்தனை என்று தேடிப்பார்த்தேன். ஆச்சரியம் .. 34% என்று இருந்தது. அங்கேயே அப்படியா? 

இதையெல்லாம் பார்க்கும் போது கால்பந்தின் அழகு தென் அமெரிக்க நாடுகள் என்றிருப்பது இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். ஐரோப்பிய நாடுகளே இப்படி கால்பந்திற்காக கால்பந்து வீர்ர்களை தங்கள் நாட்டோடு அவர்களை இணைத்துக் கொண்டால்... கால்பந்து விளையாட்டு உலகின் ஒரு ஓரத்திற்குப் போய் விடுமோ என்று தோன்றுகிறது. இப்போதே ஆசிய நாடுகள் அதிக அளவில் விளையாடி முன்னேறி வரவில்லை, ஜப்பான் அரைக்கால் இறுதிக்கு வந்ததே (கடைசி 16) ஆச்சரியாமான ஒன்றாக இருந்தது.


சரி .. இறுதிப் போட்டிக்கு வருவோம் 
...
இறுதிப் போட்டியில் பந்து என்னவோ க்ரோஷியாவிடமே அதிகமாக இருந்தது. 60% விழுக்காட்டிற்கு மேல் அவர்களிடமே பந்து இருந்தது. முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன். பந்து அதிகமாக வைத்திருக்கும் அணியிலிருந்து சில தடவை பந்து எதிரணியால் விரைவாக எடுத்துச் செல்லப்பட்டு ‘காலியாக’ இருக்கும் எதிர் அணிக்கு கோல் போடுவதுண்டு. இங்கு இன்னொரு சோகம் நடந்தது. 18ம் நிமிடத்தில் கிர்ஸ்மேன் அடித்த கார்னர் ஷாட்டை தன் தலையால் க்ரோசியாவின் மரியோ தட்டி விட அது அவர்கள் கோலுக்குள்ளே சென்று விட்டது. பெரும் அதிர்ச்சி தான். இருந்தும் இன்னும் 70 நிமிட விளையாட்டு மீதியிருக்கிறதே என்று தேற்றிக் கொண்டேன். 

ஆனால் அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே, 28வது நிமிடத்தில் க்ரோஷியாவின் அழகான  கோல் ஒன்று ப்ரான்ஸிற்கு விழுந்தது. கோல்கள்: 1 : 1. சம நிலை. ஆனால் அடுத்த பத்தாவது நிமிடம் - 38ம் நிமிடம் முதல் கோல் க்ரோஷியாவிற்குக் கிடைக்க காரணமாயிருந்த மரியோவின் கையில் கோல் போஸ்ட்டுக்கு அருகில் தற்செயலாக பந்து பட்டுவிட்டுப் போனது. ப்ரான்ஸ் அணி பெனல்ட்டி கேட்டது, நடுவர் VAR -VIDEO AIDED REFEREE- யைப் பார்க்க விரைந்தோடினார். பெனல்ட்டி அறிவிக்கப்பட்டு ... அதே கிர்ஸ்மேன் பந்து அடிக்க ... பந்து அவர் காலிலிருந்து விடுபடும் முன்னே க்ரோஷியா கோக் கீப்பர் ஒரு பக்கம் விழ, பந்து அடுத்த பக்கம் உருண்டு சென்று கோலானது.

முதல் பாதி முடிவில் க்ரோஷியா இரண்டு கோல் வாங்கியிருந்தது. ஒன்று தாங்களே போட்டுக் கொண்டது; இரண்டாவது பெனல்ட்டி மூலம் கோல். அதுவும் வீடியோ இல்லையென்னால் பெனல்ட்டி கிடைத்திருக்காது. ஏதோ ஓசியில் விழுந்த மாங்காய் போல் ப்ரான்ஸிற்கு இரு கோல்கள் ... சோகம் தான்.

இதிலும் முதல் பாதி வெகு வெகு விருவிருப்பாக நடந்து முடிந்தது. எப்போது பாதி நேரம் என்று கடிகாரம் பார்ப்பதற்குள் பாதி நேரம் வந்தது இம்முறையில்  இப்போது தான். இதில் இன்னொன்றும் நடந்தது. வழக்கமாக டென்னிஸ், கால்பந்து போட்டிகள் பார்க்கும் போது என்னையறியாமல்ஆய் .. ஊய்..’ என்று அவ்வப்போது உணர்ச்சிப் பெருக்கால் கத்துவதுண்டு. ஆனால் இந்த முறை வீட்டம்மா ரொம்ப கண்டிஷனாக கட்டளை ஒன்று போட்டு விட்டார்கள். அந்த மாதிரி எந்த சத்தமும் வரக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். வீட்டம்மா அடுத்த டிவியில் பிக் பாஸ் பார்ப்பதற்கு எந்த disturbance இருக்க்க்கூடாது என்பதற்குத்தான் இந்த தடவை அப்படி ஒரு ஆணை ! ஏறத்தாழ இந்த முறை உலகக் கால்பந்து போட்டியில் சத்தம் போடாமல் தான் பார்த்திருந்தேன். ஆனால் இறுதிப் போட்டியில் நாலைந்து முறை கத்தி ... கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். அதுவும் தலைவர் கமல் கலந்து கொள்ளும் நாளல்லவா ...! அன்னைக்கிப் போய் இப்படியெல்லாம் கத்தலாமா...?


இரண்டாம் பாதி. இன்னும் அதே விருவிருப்பு. பந்தும் அதிகமாக க்ரோஷியாவின் கால்களுக்குள் தான், ஆனால் 58ம் நிமிடம். போக்பாவின் அழகான கோல் ஒன்று க்ரோஷியாவிற்கு விழுந்தது. அதிலிருந்து அடுத்த பத்தாவது நிமிடம் பந்து திடீரென்று க்ரோஷியா அணிப் பக்கம் போக, பேப்பேவின் - மிக இளம் வயது; 19 தான்; 

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் - கோல் ஒன்று மீண்டும் க்ரோஷியாவிற்கு விழுந்தது.

ஆட்டத்தின் வேகம் தணியவில்லை. ஒரு poetic justice  என்பார்களே அது மாதிரி க்ரோஷியா வாங்கிய முதல்  இரு கோல்களுக்குக் காரணமாக இருந்த மரியா மண்ட்ஸ்கிக் என்பவர் கோல்பக்கம் விரைந்தார். கோல் கீப்பர் பந்தை வைத்து தேவையில்லாமல் “விளையாடிக்” கொண்டிருந்தார். இதைப் பற்றி எற்கெனவே என் முந்திய பதிவுகளில்  எழுதியிருந்தேன். தேவையில்லாமல் கோல் கீப்பர்கள் பந்தைத் தாமதப்படுத்தி ரிஸ்க் எடுக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். நிச்சயமாக கோல் கீப்பர்களை விட பார்வர்ட் விளையாட்டுக்காரர்கள் நன்றாக பந்தை dribble செய்வார்கள். பின் ஏன் இந்த கோல் கீப்பர்கள் இப்படி ரிஸ்க்கை ரஸ்க்காக மாற்றுகிறார்கள் என்ற எரிச்சல் எனக்கு. அந்த எரிச்சல் இன்று உண்மையானது. மரியோ வரும்போது கோல் கீப்பர் பந்தை பெரிதாக உருட்ட. கிடைத்த இடைவெளியில் மண்ட்ஸ்கிக்  கோலை எளிதாகப் போட்டு விட்டார். மீதி விளையாட்டின் விருவிருப்பு தொடர்ந்தாலும் ஆட்டம் முடிந்த்து 4;2 என்ற கணக்கில்.

இறுதி விசில் ஊதியது நாலைந்து பெரும் மழைத்துளிகள் விழுந்தன. இயற்கை க்ரோஷியாவிற்காக அழுகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பரிசு கொடுக்க ஆரம்பித்த நேரத்தில் கடும் மழை. சரி... ப்ரான்ஸ் ஜெயிச்சதை இயற்கை கொண்டாடுகிறதுன்னு நினைத்துக் கொண்டேன். 

இரு விஷயங்களைச் சொல்லணும். ஒன்று க்ரோஷியாவின் கோச் never lost his cool.  so much composed unlike most of the other coaches.



அடுத்து ... க்ரோஷியா நாட்டு பிரசிடெண்ட். ஒரு லேடி. அழகான பெண். தன் நாட்டு வீர்ர்கள் அணிந்திருந்த விளையாட்டுச் சீருடையில் இருந்தார். கொட்டிய மழையில் வெகு சாதாரணமாக நனைந்து கொண்டிருந்தார். 

புட்டின், ப்ரான்ஸ் தலைவர்களுக்குக் குடை வந்தன. இவருக்கு வெகு தாமதமாக ஒரு குடை வந்து, அதுவும் இவரை விடத் தள்ளி இருந்தது. மழையோ வெயிலோ... அழகாக ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் அணைத்து அன்பாக சிரித்துக் கொண்டே பேசினார். அடுத்து வெற்றி பெற்ற ப்ரான்ஸ் வீர்ர்கள் வரும் போதுm அதே மாறாத சிரிப்பு ... அன்பு .. அணைப்பு.

தங்கச் சிலை - வெற்றிக் கோப்பை - வந்தது.. ப்ரான்ஸ் தலைவர் கோப்பையை முத்தமிட்டார். தோற்றிருந்தாலும் க்ரோஷியாவின் தலைவியும் முத்தமிட்டார். 


ப்ரான்ஸ் அதிபர் தோளில் கை போட்டு அணைத்துத் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

நல்ல நாடு .. நல்ல வீர்ர்கள் ... நல்ல தலைவி.

 





















1 comment:

வேகநரி said...

உங்க பதிவில் உங்க கருத்தோடு 100 வீதம் ஒரே கருத்து கொண்ட நான்

க்ரோஷியா தோற்றாலும் அவர்களும் அரும் பெரும் வெற்றி பெற்றவர்களே!
ஜப்பான் அரைக்கால் இறுதிக்கு வந்ததே (கடைசி 16) ஆச்சரியாமான ஒன்றாக இருந்தது.
நல்ல நாடு .. நல்ல வீர்ர்கள் ... நல்ல தலைவி.(க்ரோஷியா-ஐரோப்பா)
கவர்ந்த கருத்து.

Post a Comment