Sunday, January 27, 2019

1029. பொங்கல் “பரிசு” ... பார்த்த சில திரைப்படங்கள்




*





பொங்கல் விடுமுறை. தொலைக்காட்சி தயவுகளில் நாலைந்து படம் பார்த்தேன்.
1. செக்கச் சிவந்த வானம்
2. மகா நடி
3. வடசென்னை
4. சர்(க்)கார்
5. திருட்டு டிவிடியில்  .. சீதக்காதி.

3 & 5 படங்களில் பாதியிலேயே எழுந்து விட்டேன். வடசென்னை .. மிடியலை!
சர்கார் .. முருகதாஸைப் பற்றித் தெரியும் முன்னே அவரது ரமணா படம் பிடித்தது. சர்கார் .. நல்ல பிரச்சனை. அதை இம்புட்டு வசனம் மூலம் சொல்ல நினச்சது உயிரை வாங்குச்சு. அதோடு நம்மாளு விசய் வசனம் பேசும் போது பண்ணும் கொனஷ்டைகளை அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். எனக்கு வேடிக்கை & வேதனை. எழுந்து விட்டேன். ஆனாலும் ஒரு பாரின் ரிட்டர்ன் ... இப்படி ஐம்பது ஆட்களை ஒரே நேரத்தில் துவம்சம் செய்வது அவரது ரசிகர்களுக்கே பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. துவச்சி எடுத்துறார் மனுசன் ... சிவகாசி படத்தில் இருந்த மாதிரி.

செக்கச் சிவந்த வானத்திற்கும் எழுதிருந்திருக்க வேண்டும், ஆனால் ஒரு வேளை விஜய்சேதுபதி ஏதாவது ஒன்றிரண்டு நல்ல சீன் பண்ணிவிடுவாரோ என்ற தயக்கத்தில் படம் முழுவதும் பார்த்துத் தொலைத்தேன். எப்படி விஜய் சேதுபதி உட்பட எல்லோரும் ஒருமித்த குரலில் இன்னும் மணிரத்தினத்தின் புகழ் பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்த்தை நெகட்டிவ் காட் பாதர் ஆக்க நினைத்து முயன்றிருப்பார் போலும். ஒரே துப்பாக்கி சூடுகள் தான். அதோடு நம் காதில் ஓட்டை போட ஒரு ஊசியும் கையில் வைத்துக் கொண்டே இயக்கியிருக்கிறார். ஒரு நண்பரிடம் சொன்னேன், ஆனால் அவர் 5 கோடி செலவு செய்து 9 கோடி அந்தப் படம் கொடுத்தது .. ஆகவே அது ஒரு வெற்றிப் படம் என்றார்.

சீதக்காதி ... சேதுபதி உயிரோடு இருக்கும் வரை படம் கனமாக இருந்தது. நடுவில் சில பக்கத்தைக் காணோம் என்ற நகைச்சுவைப் படத்தை எடுத்த இயக்குனர் எப்படி ஒரு கனமான கதையை எடுத்திருக்கிறார் என்று நினைத்துப் படம் பார்க்க ஆரம்பித்தேன். நிறைய நாடகக் காட்சிகள் வரும் போது அந்தக் காலத்தில் சிவாஜிக்காக படங்களின் நடுவே நாடகங்கள் வருமே அந்த நினைவு வந்தது. அதிலும் சேதுபதி இளவயதில் அரச உடையோடு வரும் ஒரு சீன். சரி... சிவாஜி வீர மகனைப் போரில் பறி கொடுத்த வீரத்தாய் வசனம் மாதிரி ஏதும் பேசுவாரோ என்று எதிர்பார்த்தேன். ஒரே வரி வசனத்தோடு முடிந்தது. அவ்ரங்கசீப் படுத்திருப்பது போல் ஒரு போஸ். அதில் வலது காலை நீட்டி, இடது காலை மடித்து இருப்பதுபோல் சேதுபதி படுத்திருப்பார். அந்த போஸில் சிவாஜி நன்கு எட்டிப் பார்த்திருந்தார்.

ஒரு வேளை அந்த சீனில் எனக்கு சிவாஜி நினைவுக்கு வந்ததற்கான காரணம் கலை கலைஞனுக்குப் பிறகும் வாழும் என்ற இப்படத்தின் tag line சொல்வது போல் எனக்கு சிவாஜியின் நினைவு வந்திருக்குமென நினைக்கின்றேன்.

ஆனால் சேதுபதி இறந்த பிறகுதான் இந்தப் படம் பாண்டசி என்ற வகையான ஒரு காமெடி படம் என்பது புரிந்தது. கலைஞனுக்குப் பிறகு அவன் கலை நீண்டு வாழும் என்பது சரி. ஆனால் அவரது ஆத்மாவே வந்து நடிப்பதாகச் சொல்லி ... படத்தைப் பார்த்து சிரிப்பதா, இயக்குனரைப் பார்த்து சிரிப்பதா என்று தெரியவில்லை. பெருத்த ஏமாற்றம்.



மகா நடி ... சாவித்ரி மீது மிகுந்த மரியாதை உண்டு. அதுவும் அவர் மரணத்திற்குப் பின் அவரை நினைத்தாலே ஒரு வெறுமையும், இருளும் சுற்றி கவிவதைத் தடுக்க முடிந்ததில்லை. இதுவரை கீர்த்தி சுரேஷ் அழகாகச் சிரிப்பார் என்பதைத் தவிர ஏதும் பெரிதாகக் கண்டதில்லை. நன்றாக நடிப்பார் என்று எப்போதும் எதிர்பார்த்ததில்லை. ஆனால் இந்தப் படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்து விட்டார். இறுதியில் வரும் சீன்களில் முகமும் கூட சாவித்ரியின் முகமாகவே அவரது முகம் எனக்குத் தோன்றியது. இறுக்கமான படம்.











*



4 comments:

ஸ்ரீராம். said...

எனக்கு அமேசான் பிரைமில் சீதக்காதி இருக்கிறது. பார்க்கும் துணிவும், பொறுமையும் வரவில்லை. மஹாநடியும் அப்படியே!

மற்ற படங்கள்... அதே உணர்வுகள்!

G.M Balasubramaniam said...

மலையாள மகா நடி அண்மையில் டிவியில் பார்த்தேன் நான் என்னதான் கருத்துஎழுதினாலும் உங்கள் பதிவில் வராதே

தருமி said...

//நான் என்னதான் கருத்துஎழுதினாலும் உங்கள் பதிவில் வராதே// ....அதெல்லாம் போன மாசம்; இது இந்த மாசம். பாருங்க ... டக்குன்னு உங்க கருத்து இங்க வந்து விழ வைச்சுட்டேன்ல ... இனிமே கருத்து நிறைய சொல்லுங்க, அய்யா.

Eazhisai Radhakrishnan said...

சரியான விமர்சனங்கள் ஐயா

Post a Comment