Saturday, April 13, 2019

1038. எங்க காலத்திலெல்லாம் ... 4 ... காசுக்கு காலம் காலமாக ஓட்டுப் போட்ட திராபைகள் நாம்.


*
என்னமோ காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது புதுசு மாதிரி எல்லாரும் பேசுறாங்க. அதிலும் திருமங்கலமும், R.K. நகரும் முன்மாதிரியா வச்சுப் பேசுவாங்க. ஆனால் சின்னப் பிள்ளையிலேயே இதைப் பற்றிக் கேட்டிருக்கேன்.

அந்தக் காலத்தில அப்பாவும் நானும் ஒரே பள்ளியில் தான் இருந்தோம் - அவர் ஆசிரியராக .. நான் மாணவனாக. அப்பா நாள் முழுவதும் ஓடி உழைக்கிற ஆளு. காலையில நாலரை மணிக்கு எழுந்து ஐந்து மணி பூசைக்குக் கோவிலுக்கு அம்மாவோட போயிருவார். அவரும் மெனக்கெட்டு என்னை எழுப்பி உட்டுட்டு போவார். அவங்க அந்தப் பக்கம் போனதும் நான் படுத்துத் தூங்கிடுவேன். அப்பா கோவிலுக்கும் போய்ட்டு அப்படியே ‘வீட்டு ட்யூஷன்’ எடுக்க போயிருவாங்க, இதெல்லாம் பசையான ஆட்களுடைய வீடாக இருக்கும். அதிலும் பல சமயங்களில் அப்பாவிடம் படித்தவர் தன் பிள்ளைக்கு வீட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தர அழைப்பார்கள். அவர்களிடமெல்லாம் பொதுவாக மாதா மாதம் ட்யூஷனுக்கு காசு வாங்க மாட்டார்கள். மொத்தமாக ஆண்டு இறுதியில் வரும். அது ஒரு சேவிங்க்ஸ் என்பார்கள். 7 மணிக்கு வீட்டுக்கு வந்தால் வீட்டு மெத்தையில் அடுத்த செட் மாணவர்களுக்கு ட்யூஷன். அப்பாவின் குளிப்பு, சாப்பாடு எல்லாமே interludeல் நடந்து விடும்,  மாலையும் இதே மாதிரி இரண்டு அல்லது மூன்று பேட்சாக ட்யூஷன் நடக்கும்.

மதியம் ஒன்றாக அப்பாவோடு உட்கார்ந்து சாப்பிடுவேன். அப்போது அப்பா அம்மாவிடம் ஏதாவது சொல்லிக் கொண்டே சாப்பிடுவார். அவர் ஒருவேளை எனக்கும் சேர்த்தே சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில் அவர் சொன்னதில் பல இன்னும் நினைவில் இருக்கிறது. சான்றாக, முதன் முதல் ஹவாய் செருப்பு வந்ததே... அந்த சமயம் அப்பா அம்மாவிடம் அந்த செருப்பைப் பற்றி பேசினார். முடிவில் வாழை மட்டையில் கிராமத்தில் செருப்பு செஞ்சு போடுவேமே அச்சு அசலா அதே மாதிரி இருக்கிறது என்றார். ஹீல்ஸ் இல்லை என்பதையும் சொன்னார். எங்களுக்கு அப்போ அது புதுசு. யாரோ வெளி நாட்டில் இருந்து கொண்டு வந்தது என்றார்கள்.

அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டே சாப்பிடும்போது அப்பா அப்போது நடந்த தேர்தல் - முனிசிபாலிடி தேர்தல் - பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ‘ஓட்டுப் பெட்டிகள்” கலர் கலரா இருக்கும். சிகப்பு, பச்சை, மஞ்சள் என்ற வண்ணங்களில் பெட்டிகள் இருக்கும். அந்தப் பெட்டிக்கு ஓட்டு போடு .. இந்தக் கலர் பெட்டிக்கு ஓட்டு போடு என்றுதான் பிரச்சாரம் நடக்கும். நான் சொல்கிற காலத்தில் கட்சி பெயர் சொல்லி ஓட்டுக் கேட்டதாக எனக்கு நினைவில்லை.

ஓட்டு கேட்கும் போது அந்தந்த ஏரியாவில் உள்ள பெரிய மனுஷங்களை உடனே அழைத்துக் கொண்டு அந்த ஏரியாவைச் சுற்றி வந்து வீட்டுக்கு வீடு போய் ஓட்டுக் கேட்பார்கள். நாங்கள் இருந்த தெற்கு வாசலில் இஸ்லாமியர்கள் அதிகம். என் கூட சண்டை போட்ட தாவூத்தின் சொந்தக்காரர் ஒருவர் தேர்தலில் நின்றார். அப்பாவையும் அழைத்திருக்கிறார்கள், ஒரு நாள் அவர்களோடு சென்று வந்தவர் அடுத்த நாள் மதியச் சாப்பாட்டு நேரத்தில் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘எல்லோருமா போனோமா .. தேர்தலில் நின்றவருக்குப் பக்கத்தில் ஒருத்தர். அவர் கையில் ஒரு தாம்பாளம். அதில் வெற்றிலை வைத்து சூடக்கட்டியும் வைத்திருந்தார்கள். எந்தக் கலர் பெட்டி என்று சொல்லிவிட்டு வெற்றிலை மேல் காசு வைத்துக் கொடுத்தார்கள்”/ அம்மா ‘எவ்வளவு காசு வச்சாங்க?’ அது சிலருக்கு நாலணா ... சிலருக்கு எட்டணா வைத்தார்கள்’ என்றார் அப்பா. சூடத்தோடும் வெற்றிலையோடும் வைத்துக் கொடுத்தால் அது அவர்களைக் “கட்டிப் போடும்” என்றார்கள். சூடம் அடித்து சத்தியம் செய்வது போல் அது என்றார்கள்.

ஆக காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது பரம்பரையா அந்தக் காலத்திலிருந்து வருது. ஏதோ நேத்தோ முந்தா நாளோன்னு சொல்லிக்கிட்டு நம்மளையே ஏமாத்திக்க வேணாம்.

இதெல்லாம் எப்போ நடந்ததுன்னு எந்த வருஷமின்னு ஞாபகமில்லை, ஆனால் இதோடு கேட்ட சில விஷயங்களை வச்சா ஓரளவு வருஷத்தைக் கண்டு பிடிச்சிரலாம். ஏன்னா அப்பா இதைப் பற்றி பேசுறது மாதிரி ஒரு நாள் ’பாத்திமா காலேஜ் அப்டின்னு பொம்பிளைப் பிள்ளைகளுக்கு ஒரு காலேஜ் சிஸ்டர்ஸ் கட்டப் போறாங்களாம் ... ஆனால் புத்தி கெட்ட தனமா எங்கேயோ மதுரை டவுனை விட்டுத் தள்ளி கட்டுறாங்களாம். பொம்பிளைப் பிள்ளைகளுக்கு கட்டுறதை ஊருக்குள்ள கட்டணும்னு இந்த சிஸ்டர்களுக்குப் புரியலையே’ என்று கவலைப்பட்டார் அப்பா. இப்போ எடுத்துப் பார்த்தேன். அந்தக் கல்லூரி ஆரம்பித்தது 1953. ஆக அதுக்கு ஒன்று அல்லது இரு ஆண்டுகளுக்கு முன்பு அப்பா அப்படி சொல்லியிருக்க வேண்டும். நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள் - எப்போது அந்த தேர்தல் நடந்திருக்க வேண்டுமென்று.

நானும் பாத்துட்டேன். காசுக்கு மடியிற ஆட்கள் ரொம்ப ஈசியா நாம் தான். கேடு கெட்டவர்கள் நாம். இதைப் பற்றி முக நூலில் எழுதவா என்று பெர்மிஷன் கேட்டேன். பெரியவங்க நிறைய பேர் எழுதுங்க அப்டின்னாங்க. அதுக்கு வரலாற்றிலிருந்து சில சான்றுகள் எடுத்தேன்; ஆனால் எழுதவில்லை. (எழுதணும் - நம்ம வண்ட வாளம் பத்தி)  பல முறை போர்களில் காசுக்குக் காட்டிக் கொடுத்த நாய்கள் நம்மில் அதிகம். அதிலும் வெளிநாட்டுக்காரன் வரும் போது கூட காசு, பதவி .. இப்படி எதற்காகவாவது காட்டிக் கொடுத்து வந்தவனை வெற்றியடையச் செய்திருக்கிறார்கள்.

காசுக்காக நாயா அலைஞ்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்.

நாமும் தொடர்கிறோம் ...


*

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

நினைவுகள் சிறப்பு.. காசு பணம் துட்டு.... எதையும் செய்ய வைக்கும்... :(

வேகநரி said...

மிகவும் கவலையாக இருந்தது. பணம் வாங்கி கொண்டு வாக்களிப்பது நம் பாரம்பரியமோ!

வேகநரி said...

தேர்தல் என்பது கள்வர்கள் பாதை என்று ஜனநாயக தேர்தலையே நம் ஊரில் குற்றம் சாட்டுவதும், தேர்தலை நிராகரி என்பதும்,பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கும் நம்மக்களின் செயல்களினால் வந்தாய் இருக்கலாம்

Post a Comment