Saturday, May 11, 2019

1047. எங்க காலத்திலெல்லாம் ... 5 (மீசைகளின் பரிணாமம்)

*
Alvin Toffler எழுதிய Future Shock என்ற எதிர்காலவியல் நூல் வெளிவந்த போது  அது ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. 'நாளை’ வரப்போகும் knowledge explosion பற்றிய ஒரு எச்சரிக்கையை அது தந்தது. எப்படிக் காலங்களும் கருத்துகளும் மாறிப் போகும். அதற்காக தயாராக இல்லாத அனைவருக்கும் மாற்றங்கள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கும் என்ற பொதுக் கருத்தில் நிறைய சான்றுகளோடு அந்த நூலை வெளியிட்டிருப்பார்.

ஒரு பகுதியில் நம்முடைய நாகரீகங்கள் - fashions - இப்படி தொடர்ந்து மாறும் என்றும் கூறியுள்ளார்.

உண்மை தானே. நம்மூர் பெண்களின் ஜாக்கெட்டின் கை நீளம் மட்டும் எடுத்துப் பாருங்களேன். மேலே போகும் .. கீழே வரும். மேலே போகும்போது puff வரும் ... கீழே வரும்போது இப்போதுள்ளது மாதிரி மெல்லிய துணிவரும். தோளுக்கும் மணிக்கட்டுக்கும் நடுவில் பல இடங்களில் பஸ் ஸ்டாப் மாதிரி அங்கங்கே நின்று .. நீண்டு .. என்னென்னமோ நடக்கும். தமிழில் ஒரு சொலவடை சொல்வார்கள்: முப்பது ஆண்டுகள் தொடர்ந்து தாழ்ந்த குடும்பமும் கிடையாது; வாழ்ந்ததும் கிடையாது என்பார்கள். அது மாதிரி தான் fashions.

ஆண்களின் உடையில் நமது நீள் கால்சட்டைகளுக்குத்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? அறுபதுகளில் skin tight என்று ஒரு fashion. அதுவும் அந்தக் காலத்தில் ஏறத்தாழ முழுமையாக பருத்தித் துணியில் தான் அதிகம் தைப்போம்.60களின் கடைசியில் தான் மெல்ல டெர்லின், நைலான், டெர்ரி காட்டன், ஷார்க் ஸ்கின் ... என்று மெல்ல வகை வகையாகத் துணிகள் வர ஆரம்பித்தன. ட்வீட், உல்லன் எல்லாம் கொஞ்சம் எட்டாத உயரம். அந்த சமயத்தில்  ரொம்ப காஸ்ட்லியான துணியாக நான் நினைத்திருந்தது gaberdine என்றொரு வழுவழுப்பான, பளபளக்கும் ஒரு பருத்தித் துணி தான்.


இந்த மாதிரி பருத்தி ஆடைகள் மட்டுமே அதிகமாக இருந்த நாளில் skin tight என்று ஒரு fashion வந்தது. நான் ஒன்றே ஒன்று தைத்தேன். பிரச்சனை என்னவென்றால் உடை அணிய ஆரம்பிக்கும் போது  கால்களை ஒரு வழியாக உள்ளே நுழைத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் கழற்றுதற்கு தனியொரு  டெக்னிக் இருந்தது. மிகவும் இறுக்கமாக இருக்குமா .. அதனால் குதிகாலில் ஒரு நோட்டுப் பேப்பரை வைத்துக் கொண்டு கால்சட்டையில் முதல் கீழ்பகுதியை இழுத்து பேப்பர் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வீட்டில் தம்பி, தங்கை என்று யாரையாவது நயந்து வைத்துக் கொள்ள வேண்டும். first step-ல் கால்சட்டையை இப்படி வைத்துக் கொண்டு ஒரு கைலியை மேலாகக் கட்டிக் கொண்டு தம்பி / தங்கைகளைக் கூப்பிட்டு, நயந்து பேசி கால்சட்டையை உருவி எடுக்கச் சொல்ல வேண்டும். அப்போது நிற்க முடியாதில்லையா ... கட்டில் மல்லாந்து படுத்துக் கொண்டு ... அம்மாடி ஒரு வழியா இப்படித்தான் அதைக் கழற்றணும். ஆனால் இப்படி ஒரு தடவை அல்லது ஒரு முறைதான்  போட முடியும். எல்லாம் பருத்தித் துணியா .. ஒரு தடவை போட்டுக் கழட்டினாலே கசங்கி சுருக்கங்களோடு இருக்கும். இப்படி ஒரு கால்சட்டை தைத்து அதனோடு  மல்லுக் கட்டியதிலிருந்து அதன் மேலுள்ள ஆசை போய் விட்டது.

ஆனால் இன்னொரு நண்பர் இருக்கிறார். அவர் இதிலெல்லாம் கில்லாடி. அவரைப் பற்றி கொஞ்சம் பொருத்து சொல்கிறேன்.

1964-66 முதுகலை படித்த ஆண்டுகள். நான் தியாகராஜர் கல்லூரியில் இளம் கலை முடித்து அங்கேயே முதுலை தொடர்ந்தேன். மதுரையில் - மதுரையில் என்ன.. தென் தமிழகத்திலேயே - மதுரையில் மட்டும் இரு கல்லூரிகளில் முதுகலை இருந்தன. இவைகளை விட்டால் சென்னையில் 3 கல்லூரிகள் என்றுதான் இருந்தன மொத்தம் மாநிலத்திலேயே 5 கல்லூரிகளில் மட்டும் எங்கள் பாடத்திட்டம் முதுகலையில் இருந்தது. அப்போது. ஒரு வழக்கம். நாங்கள் இன்னொரு கல்லூரியான அமெரிக்கன் கல்லூரிக்கு ஒரு நாளும், பல்கலைக்கு ஒரு நாளும் வகுப்பிற்குப் போக வேண்டும். அதே போல் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் எங்கள் கல்லூரிக்கு வரவேண்டும். Inter-collegiate classes.  ஒரு கல்லூரியில் மாணவர்கள் ... ஆனால் மூன்று கல்லூரி ஆசிரியர்கள். ஒட்டு மொத்தமாக அங்கங்கு போவோம். அதில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது எனக்கும் என் வகுப்புத் தோழர்களுக்கும் எப்போதும் ஒரு பொறாமை. பல காரணங்கள். அட .. ஒண்ணே ஒண்ணு சொல்றேனே .. எங்கள் வகுப்பில் மாணவிகளோடு நாங்கள் கொஞ்சம் பேசினாலே எங்கள் பேராசிரியர்கள் முறைப்பார்கள். ஆனால் பொதுவாக அந்த பழைய பஞ்சாங்கத்தனம் அமெரிக்கன் கல்லூரியில் கிடையாதாம்.ஆனால் நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர்  எஸ். ஆப்ரஹாம் அத்தனை நல்ல மனிதர். மாணவர்கள் எல்லோரும் அவருக்குச் செல்லப் பிள்ளைகள். அவர் மதியச் சாப்பாட்டை சுவை பார்க்க மாணவர் கூட்டம் சுற்றி நிற்கும். நாங்கள் ஜெயில் பறவைகள். அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் சுதந்திரப் பறவைகள்- எல்லா விஷயத்திலும்!

இதனால் என் வகுப்புத் தோழர்கள் அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் அதிகமாகப் பழக மாட்டார்கள். ஆனால் எனக்கு அதில் இரு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் Tagore.  சிலரின் பெயர்கள் அவர்களுக்கு சில கஷ்டங்கள் தரும். என் பெயரை ஷியாம், ஷாம் என்று இஷ்டப்படி உச்சரிக்கும் போது கஷ்டமாக இருக்கும். அதைப் பற்றி கூட இங்கே எழுதியுள்ளேன்... வாசித்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி தான் Tagore-க்கும். அவர் பெயரை தாகூர் என்று நாம் வழக்கமாகத் தமிழில் சொல்வோமே .. அதே மாதிரி சொன்னால் மனுஷனுக்குப் பிடிக்காது. ஆங்கிலத்தில் சொல்வது போல் சொல்லுங்கள் என்று கராறாகப் பேசி விடுவார். அவரிடம் தான் முதலில் பழகினேன்.  முனைவர் பட்டம் எல்லாம் பெற்று இளம் வயதிலேயே இறந்து விட்டார்.

அவர் மூலமாக இன்னொரு நண்பர் கிடைத்தார். பெயர் ப்ரின்ஸ். பயங்கர ஸ்டைல் மன்னன். தலைமுடி வெட்டிலிருந்து கால்களில் போடும் பாதணி (காலணி) வரை எல்லாமே தனி ஸ்டைல் தான். அதனால் தானோ என்னவோ என் வகுப்புத் தோழர்களுக்கு அவர் மேல் எப்போதும்  ஒரு கண். அதுவும் அந்தக் காலத்தில் skin tight போடுபவர்களே மிகக் கொஞ்சம். அதிலும் அந்த pants  போடும்போது அதோடு இடையில் கட்டியிருக்கும் இடை வார் - belt- அந்தக் காலத்து fashion  படி மிக மிக அகலம் குறைந்ததாக இருக்க வேண்டும். நானெல்லாம் அந்த பெல்ட் வாங்கவில்லை. ஆனால் இந்த ஸ்டைல் மன்னன் ஒரு பெல்ட் போட்டிருப்பார். அவரும் ஒல்லி .. அவர் பெல்ட்டும் அத்தனை ஒல்லி. அவர் மேல் என் வகுப்பு மாணவர்கள் ஏதாவது comment அடித்துக் கொண்டிருப்பார்கள்.என்னிடம். “ இங்க பார்ரா ... அரைஞாண் கயிரு மாதிரி இத்தனூண்டு பெல்ட் போட்டு வர்ராண்டா உங்க ஆளு” என்பார்கள்.

அட .. சொல்ல நினைத்தது மீசை பற்றியது. எங்கெங்கோ போய் விட்டேன். உண்மையிலேயே Alvin Tofflerசொன்னது போலவே இந்த மீசை தாடியெல்லாம் எனக்கு நிறையவே ஷாக் கொடுத்திருக்கிறது.  ஒரு சின்ன சான்று: எங்க காலத்தில எல்லாம் கல்யாண மாப்பிள்ளை வழு வழுன்னு ஷேவ் பண்ணியிருக்கணும். முதலில் சில மாப்பிள்ளைகளை ட்ரிம் பண்ணிய குட்டித் தாடியோடு பார்த்த போது Alvin Toffler சொன்ன ஷாக் எனக்கும் ஆனது. கர்ணன் அப்டின்னு ஒரு பெரிய cinematographer இருந்தார். அவர் கட்டபொம்மன் படத்தில சிவாஜி வச்சிருந்த மீசை மாதிரியே வச்சிருந்தார். It was an exception... so it became a very familiar one. ஆனால் தேவர்மகன் வந்த பிறகு தான் அந்த மீசை யார் வேணும்னாலும் வச்சிக்கலாம் என்ற நிலைக்கு வர முடிந்தது. முந்தியெல்லாம் “படிச்சவங்க” அந்த மாதிரி மீசையெல்லாம் வைக்கவே முடியாது. No social recognition. இப்போ இது சாதாரணமா ஆயிரிச்சி.
STEPHEN
PRINCE  '60s


நானே நான் .. ‘72

எங்க அறுபதுல நாங்க வச்சிருந்த மீசைக்கு மூணு சாம்பிள் மேலே கொடுத்திருக்கிறேன்.

அந்தக் காலத்து கதாசிரியர்கள்  ஒரு கதாநாயகனை வர்ணிக்கும் போது ”பென்சிலால் வரைந்தது போன்ற மெல்லிய மீசை” என்றுதான் எழுதுவார்கள். எம்ஜிஆருக்கெல்லாம் மீசை ரொம்ப சிம்பிள். நடுவில் கொஞ்சம் இடம் விட்டு பென்சிலால் அந்தப் பக்கம் ஒரு கோடு... இந்தப் பக்கம் இன்னொரு கோடு. முடிஞ்சிது. நம்ம ஜெயசங்கரைப் பாருங்க. அதே மாதிரி தான். நாங்களும் அப்படித்தான் வைத்திருந்தோம். அதில் மீசை சரியாக சைஸ் செய்வது ஒரு பெரிய கலை. பிளேடைத் தனியாகக் கையில் எடுத்து ஒவ்வொரு முடியாகச் சரி செய்வோம். செய்வோமோ என்னவோ .. நான் செய்தேன்.ப்ரின்ஸ் வைத்திருப்பது போல் நடுவில் கோட்டு மீசை. முடியும் இடத்தில் கொஞ்சம் கூடுதல். இது ஒரு டைப்! அல்லது ஸ்டீபன் மாதிரி கொஞ்சம் கீழே இழுத்துக் கொள்வது இன்னொரு ரகம்.

நாளாக நாளாக நாளொரு மேனியும் பொழுதொரு சைசுமாக அது வளர்ந்து மூக்கிற்கும் வாய்க்கும் நடுவில் உள்ள இடத்தை முழுவதாக இப்போது ஆக்கிரமித்துக் கொண்டது. எங்கள் வயசுக்கார ஆளுக பலபேர் இன்னும் அந்தக் கோட்டு மீசையோடு போவதைப் பார்க்கும் போது அந்த காலத்து நினைவு வரும். ஆனாலும் சில மீசைகள் மட்டும் மிகப் பிரபலமாகி விடும்.நம்ம ஊருக்கு கட்டபொம்மன் மீசை ஒரு தனி ரகம். ஆனால் உலகத்துக்கே ராட்சசன் ஹிட்லரின் பில்ட்டர் மீசை தனி ரகமாக நின்றது. அச்சமூட்டும் அந்த மீசையை வேணுமென்ற நகைப்பதற்குரிய ஒன்றாக மாற்றினார் சார்லி சாப்ளின்!

மீசை அளவு பெருத்தது. ஆனால் சைட் பர்ன் பல உருவமெடுத்துள்ளது. பல ஏற்ற இறக்கங்கள். இப்போது ஏறத்தாழ மக்களுடைய concentration எல்லாம் தாடிப்பக்கம் வந்து விட்டது என்று நினைக்கின்றேன்.பல ஆண்டுகளாக சைட் பர்ன் பற்றி யாரும் மெனக் கெடுவதில்லை. ஆனால் எழுபதுகளில் அதுவும் பல உருவம் எடுத்தது. சைட் பர்ன் அப்படியே வளர்ந்து தாடியோடு இணைந்து விடும். அல்லது மீசையோடு ஒட்டி விடும். இப்போது யாரும் அந்த ஏரியாவில் மெனக்கெடுவது இல்லை போலும். தாடி தான் இப்போதைக்கு ஓங்கிய நிலையில் உள்ளது.  ட்ரிம்மர் வேறு வந்து விட்டதா? மோடி மாதிரி ஒழுங்காக ஷேப் செய்த தாடிகள் இப்போதைய fashion.

அவரு சொன்னது மாதிரி 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள். மீசையைக் கோடா வச்சா என்ன ... முழுசா வச்சா என்ன? ஆனாலும் காலத்திற்கு ஒரு கோலமாக அவை மாறுகின்றன. ஆனால் எப்படி யாரால் அது மாறுகின்றது என்று யாராலும் சொல்ல முடியாது. எப்படியோ மாறுகின்றன.


பாருங்க இப்போது எங்க மூணுபேர் மீசையையும்.
முதலில் உள்ள நண்பர் பிரின்ஸ். நான் சொன்ன அந்த ஸ்டைல்காரர். பாத்தீங்கல்ல .. அப்போ மட்டுமில்லை... தல இன்னைக்கும் ஸ்டைல்காரர் தான்.

அடுத்த நண்பர் ஸ்டீபன் எனக்கும் பிரின்ஸிற்கும் அமெரிக்கன் கல்லூரியில்ஓராண்டு ஜூனியர். ;படித்த காலத்தில் அதிக தொடர்பில்லை. ஆனால் அவரது மெல்லிய வளர்ந்த உடல் எனக்கு அப்போதே பிடிக்கும். கொஞ்சம் majestic look கொடுப்பார். இப்போதும் பாருங்களேன் .. என்னை மாதிரி தொப்பையெல்லாம் இல்லாமல் ‘கச்சின்னு’ இருக்கிறார். எல்லாம் ஒரு கொடுப்பினை! அமெரிக்கன் கல்லூரியில் ஒரு பேராசிரியர் - - J.C.B.Abraham. - பரிணாமத் துறையில் வல்லுநர்.  இவருக்கு அவர் ஓர் ஆதர்சன ஆசிரியர். அதனால் அத்துறையில் இவரும் ஒரு பெரும் புள்ளி.. அரசுக்கல்லூரிப் பேராசிரியர். இவர் சமீபத்தில் தன் இரு படங்களையும் முகநூலில் போட்டிருந்தார். அவரும் ஒரு பரிணாம அவதானியா. அதனால் எனக்கு இந்த மீசையின் பரிணாமம் நினைவுக்கு வந்தது. 

அதன் பலன் தான் இந்தப் பதிவு.
STEPHEN

2 comments:

வேகநரி said...

சுவாரஸ்யமான பரிணாம தகவல்கள் :)
//தாடி தான் இப்போதைக்கு ஓங்கிய நிலையில் உள்ளது.//
அதற்கு காரணம் ட்ரிம்மர்கள் நிறைய நல்ல விலையிலும் வந்துவிட்டது தான் என்று நினைக்கிறேன். முற்காலங்களில் தனது தாடியை ஒருவர் தனாகவே அழகாக ஒழுங்காக ஷேப் செய்வதென்பது எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்.

PREMKUMAR SAMUEL said...

மிக அருமை

Post a Comment