Thursday, May 30, 2019

1054. Elango Kallanai ON DSL





*

அடிமேல் அடி என்பது எனக்கு இந்த வருடத்தில் அதிகம். 

எனது தாயார் ஜனவரியில் மறைந்தார். என்னுடைய ஆசிரியர் சாமுவேல் லாரன்ஸின் மறைவு அடுத்தது. 

ஒரு நாள் திருப்பாலையில் உள்ள இயற்கை அங்காடிக்கு வாழையிலைக் கட்டை எடுத்துக் கொண்டு போனேன். "சார் உங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கேன் , வரவா ?" என்றேன். "உன்னைப் பார்த்தால் உற்சாகம் தான். வா" என்றார்.திங்கள் வியாழன் வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிஸிஸ். டயாலிஸிஸ் முடிந்த அடுத்த நாட்கள் சோர்ந்து இருப்பார். அன்று புதன். வீட்டுக்கு சென்றதும் தழுவிக் கொள்ள வந்தார். கால்களைத் தொட்டு வணங்கினேன். " இதையா உனக்கு சொல்லிக் கொடுத்தேன்?" என்று கடிந்து கொண்டார். 

எனது கல்லூரி நாட்களில் ஜனநாயகம் என்பதை கற்றுக்கொள்ள முதல்க் காரணம் அவரே. இளைஞர்களை அப்படி மதித்த ஒரு நம்பிக்கையாளரை இதுவரை நான் வாழ்நாளில் திரும்பவும் பார்க்கவில்லை. Young minds நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று திடமாக நம்பும் பழைய தலைமுறை ஆசிரியர். 

கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் போராட்டம்.அன்று சக மாணவர்களை வகுப்பை விட்டு வெளியேற அழைக்க ஓடுகிறோம். ஒரு வகுப்பில் மாணவர்கள் வெளியே வருவதை ஆசிரியர் ஒருவர் தடுக்கிறார். அந்த வகுப்புக்கு வெளியே இருந்த கண்ணாடியிலான அறிவிப்புப் பலகையை கையால் உடைக்கிறேன். கைகளில் இரத்தம். தலைமறைவாக ஒட முயற்சி செய்கிறேன். லாரன்ஸ் பார்த்து விடுகிறார். கண்டிக்கப் போகிறார் என்று நினைத்து கூசி நிற்கிறேன். பையில் இருந்த பணத்தை எடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்து கொண்டு கடைசி வரை என்னை எதுவும் கேட்டதேயில்லை.. 

முதுகலை வந்த போது துறைத் தலைவர் அவரே. மூன்று தாள்களில் எனக்குப் பிடிக்காத ஆசிரியர்கள் இருவர் மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு விடுகிறார்கள். நான் இவ்வளவு குறைவாக வாங்க வாய்ப்பில்லை என்று வாதாடுகிறேன். என்னுடைய துறைத் தலைவர் லாரன்ஸ் சக ஆசிரியர்களைப் பகைத்துக் கொண்டு நீ மறு திருத்தலுக்குப் போ என்றார். மூன்று தாள்களிலும் 15 மதிப்பெண்களளுக்கு அதிகம். பரீட்சைக்குக் கட்டிய பணம் முதற்கொண்டு எனக்குத் திருப்பித் தர கல்லூரியில் உத்தரவு. அதற்கு பின்னர் அந்த குறிப்பிட்ட ஆசிரியருக்கு என்னுடைய வகுப்புகளுக்குத் தரவில்லை. கடைசி வரை இந்த நீதியுணர்வு தான். லாரன்ஸ் சார். 

கிறிஸ்தவ kindness தான் எனது ஆசிரியரின் செய்தி. அவர் எனக்கு இன்னொரு தாய். எனது ஆன்மீகம் ஆசிரியர்களின் நீதியுணர்வில் கிளைத்து வந்தது. லாரன்ஸ் தான் எனக்கு அதைக் கொடுத்தார். 

அவரை வெறும் உடலாகப் பார்க்க முடியாமல் பதற்றத்தில் நகரை விட்டு ஓடினேன். 

இப்போதும் மூச்சிரைக்கிறது. போங்க சார்.



No comments:

Post a Comment