Sunday, August 07, 2005

45. எனது 'காஷ்மீர்' பிரச்சனை.

முன்பிருந்தே இந்த காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி எனக்கொரு கருத்துண்டு. நமது அரசினரின் தேவையற்ற, தவறான முடிவுகள் நம்மை இந்த காஷ்மீர் பிரச்சனையைக் காலம் காலமாய் தொடரும் ஒரு பிரச்சனையாக மாற்றிவிட்டது என்பதே அது. இந்தப் பிரச்சனையை நமது அரசு கையாண்ட முறை மட்டுமல்லாமல், அதில் நமது அடிப்படை உரிமைகளே ஒரு தவறான புள்ளியில் ஆரம்பித்து நீண்ட நெடுங்கோடாகி, முடிவில்லா தொடர்கதையாகி விட்டது. தினமும் நம் செய்திப்பத்திரிக்கைகளின் முதல் பக்கத்திலேயே காஷ்மீர்-குண்டுவெடிப்பு-தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் சண்டை என்பது போன்ற செய்திகள் இல்லாதிருந்து விட்டால் அன்றே நம் நாட்டின் அனைவருக்கும் நல்ல நாள் அது. ஆனால் அப்படிப்பட்ட நாட்கள் மிக அபூர்வமாகவே நமக்குக் கிடைக்கின்றன.

இந்தக் கருத்துக்களை என் தனிப்பட்டக் கருத்துக்களாகவே வைத்திருந்தேன். அந்த மாதிரியான கருத்துக்களை வெளியேசொன்னால் நம் மக்கள் எப்படி அதை எடுத்துக் கொள்வார்களோ என்ற நினைப்போடே 'My Kashmir Problem" என்று ஆங்கிலத்தில் allegory மாதிரி ஒரு கட்டுரை எழுதினேன்; அப்படி ஒன்று எழுதியதும் மறந்தே போயிற்று - சமீபத்தில்
தமிழ்சசி மூன்று தொடர்கட்டுரையாக காஷ்மீரைப்பற்றி எழுதியதைப் படிக்கும்வரை. நல்ல முயற்சி. குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்ற தொனியில் எழுதப்பட்ட அந்த்க் கட்டுரைகளை வாசித்ததும் என் பழைய குப்பைகளைக் கிளறி, அதை rediscover செய்து என் ஆங்கிலப்பதிவில் சேர்த்தேன். உங்கள் பார்வைக்கும் கொண்டுவருகிறேன்.

காஷ்மீரை இப்படி கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருப்பது தேவைதானா என்று நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

10 comments:

வாசகன் said...

நல்ல கட்டுரை சார்!
ஒரு தருமியும் தமிழ்சசியும் சொல்லும் போது கிடைக்கிற அர்த்தம் வேறொரு அபுவோ அப்துல்லாவோ சொல்லும் போது கிடைப்பதில்லை என்பது ஒரு புறமிருக்க, அபுவோ அப்துல்லாவோ சொல்லும் போது 'அர்த்தம்'ஆக விளங்கப்படாமல் அனர்த்தமாகவே விளங்கப்படுகிறது என்பதையும் உணர்ந்திருக்கிறீர்களா?

Anonymous said...

//ஒரு தருமியும் தமிழ்சசியும் சொல்லும் போது கிடைக்கிற அர்த்தம் வேறொரு அபுவோ அப்துல்லாவோ சொல்லும் போது கிடைப்பதில்லை என்பது ஒரு புறமிருக்க//
அதனால்தான் இப்படி ராஜா,அழகப்பன் என்ற பெயரிலெல்லாம் வந்து பின்னுட்டமிட வேண்டியுள்ளதா?
தவறு யார் செய்தாலும் தவறுதான் என்ற கண்ணோட்டம் சிறந்ததே.ஆனால் அதில் தனக்கு தேவையானதை
மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை சவுகரியமாக விடுவது சரியல்லவே.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அழகப்பன் said...

இதுகுறித்து தமிழ்சசியின் பக்கத்தில் இடப்பட்ட பின்னூட்டம் அப்படியே இங்கே.

மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு பதிவு. எவருமே தொடத்தயங்குகிற ஒரு தலைப்பு. அதிலும் குறிப்பாக என் போன்ற முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று.

இந்திய ஊடகங்களால் மறைக்கப்பட்ட அல்லது மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களை கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். அவை எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றின் நம்பத் தன்மை இவற்றை நாம் பார்க்க வேண்டும்.

ஹரிசிங்குடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்திய ராணுவம் காஷ்மீரில் நுழைந்தது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. (காரணம் அப்போது காஷ்மீரில் மக்களாட்சி நடைபெறவில்லை. மன்னராட்சியின் தத்துவப்படி அது சரியே.) ஆனால் அதற்குப்பின் ஐ.நா. தீர்மானத்தின்படி ஓட்டெடுப்பு நடத்தப்படாததில்தான் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இருநாடுகளுமே தவறிழைத்துள்ளன. தவறிழைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது காஷ்மீரில் மக்களைப் பிளந்துதான் இருநாடுகளும் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவை ஆதரிக்கும் ஒரு பிரிவு, பாக்கிஸ்தானை ஆதரிக்கும் ஒரு பிரிவு, தனி சுதந்திர நாடு கொள்கையை ஆதரிக்கும் ஒரு பிரிவு என்று மக்களை இரு அரசுகளும் கூறு போட்டுள்ளன. ஆனால் இந்த பிரச்சனையை பாக்கிஸ்தானிலும், இந்தியாவிலும் மதக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் இந்த பிரச்சனையை தீர்ப்பது மிக எளிதான காரியம் அல்ல. அது மட்டுமின்றி இரு அரசுகளுமே உள்ளூர் அமைப்புகளை கலந்தாலோசிக்காமல் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்வது ஒரு வகையான ஏகாதிபத்தியமே.

Anonymous said...
//அதனால்தான் இப்படி ராஜா,அழகப்பன் என்ற பெயரிலெல்லாம் வந்து பின்னுட்டமிட வேண்டியுள்ளதா?//

தமிழ் மணத்தில் எழுதுபவர்கள் அனைவருமே தங்களுடைய சொந்தப் பெயரிலேயே எழுதுகிறார்கள் என்று கூறமுடியாது. அவரவர்களுக்குப் பிடித்த புனைப்பெயரில் எழுதி வருகிறார்கள். பொதுவாக புனைப்பெயர் என்று வரும்போது, முஸ்லிம்களிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. தன்னுடைய குழந்தைகளின் பெயருடன் தந்தை என்று போட்டுக் கொள்வதே அது. என் மகனின் பெயர் ஹசன். அழகன் என்பது அதன் பொருள். தந்தைக்கு அபு என்று அரபியில் சொல்வார்கள். அதாவது அபுஹசன் - அழகனின் தந்தை என்று தமிழ்ப்படுத்தி, அதையே அழகப்பன் என்று வழக்கில் உள்ளதற்கு ஏதுவாக மாற்றி அமைத்துள்ளேன். (விளக்கம் போதுமென நினைக்கிறேன்)

தருமி said...

"ஒரு தருமியும் தமிழ்சசியும் சொல்லும் போது கிடைக்கிற அர்த்தம் வேறொரு அபுவோ அப்துல்லாவோ சொல்லும் போது கிடைப்பதில்லை என்பது ஒரு புறமிருக்க"

அது ஏன் என்று உங்களையே கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா, ராஜா? அந்த விஷயத்தில் கிறித்துவர்களும், அவர்களைவிட ஒருபடி மேலேயே இஸ்லாமியர்களும் நான் இங்கு சொன்னதுபோல இருப்பது உண்மையில்லையா? பிறப்பு ஒரு காரணம் மட்டும் போதுமா நம் நம்பிக்கைகளுக்கு?

வாசகன் said...

//"ஒரு தருமியும் தமிழ்சசியும் சொல்லும் போது கிடைக்கிற அர்த்தம் வேறொரு அபுவோ அப்துல்லாவோ சொல்லும் போது கிடைப்பதில்லை என்பது ஒரு புறமிருக்க"

அது ஏன் என்று உங்களையே கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா, ராஜா? //

நான் கேட்டுப் பார்ப்பது இருக்கட்டும்.
என் வாதத்தில் உள்ள் உண்மையை உணர்ந்தீர்களா என்பதை முதலில் சொல்லுங்கள் அய்யா!

//அதனால்தான் இப்படி ராஜா,அழகப்பன் என்ற பெயரிலெல்லாம் வந்து பின்னுட்டமிட வேண்டியுள்ளதா?
தவறு யார் செய்தாலும் தவறுதான் என்ற கண்ணோட்டம் சிறந்ததே.ஆனால் அதில் தனக்கு தேவையானதை
மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை சவுகரியமாக விடுவது.....//

யாரோ ஒரு XYZ அனானிமஸாகும் போது, ஒரு சாம் தருமியாகும் போது, மாலிக்கும் அபுல்ஹசனும் அர்த்தம் சிதையாமல் ராஜாவாகவும் அழகப்பன் ஆவதில் என்ன தவறு?

அடுத்து, தவறு யார் செய்தாலும் தவறு தான். இதை முஸ்லிம்கள் எங்கே மறுத்தார்கள்? பிரட்சினையே தவறுகளை தவறாக விளங்கி இருப்பது தான்.

உதாரணம் வேண்டுமா..?
மனைவியை கொன்றவன் முஸ்லிமாக இருந்தால் அது இவர்களுக்கு 'மதம் படுத்தும் பாடு' என்றாகிவிடும்.(Though Muslims never oppose to punish such criminals)

மகளையே புணர்ந்தவன் 'வேறு மதத்தான்' எனில் 'அது ஜஸ்ட் ஒரு தனி மனித குற்றம் மட்டுமே!
நல்லா இருக்கே நியாயம்!

காஷ்மீர் பற்றி எழுத வந்தும் எப்படியெல்லாம் 'குதர்க்கம்'கண்டுபிடிக்கிராய்ங்கப்போவ்!

வாசகன் said...

//பிறப்பு ஒரு காரணம் மட்டும் போதுமா நம் நம்பிக்கைகளுக்கு? //

நிச்சயம் போதாது!
நீங்கள் எல்லா மத நம்பிக்கைகளையும் ஒரே மாதிரியான கண் கொண்டும் முழுமையாகவும் ஆராய்ந்திருக்கிறீர்களா?

தருமி said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

"நீங்கள் எல்லா மத நம்பிக்கைகளையும் ஒரே மாதிரியான கண் கொண்டும் முழுமையாகவும் ஆராய்ந்திருக்கிறீர்களா? "

- முழுமையாக என்றில்லாவிட்டாலும், முடிந்தவரை முயற்சித்திருக்கிறேன். அதன் விளைவே, நான் குறிப்பிட்ட அந்த பதிவு - வாசித்தீர்களா?
இன்னொரு நீண்ட முழுப்பதிவிற்கு தயாராகிறேன்.
என் கண்களை நானே திறந்து கொள்ளும் முயற்சியாக அது இருக்கும்.

Anonymous said...

இந்தியா-பாகிஸ்தான்:
சமாதானமும் ஆயுதப் போட்டியும்
இந்த முரண்நிலையின் பொருள் என்ன?
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் மீது போர் தொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த இந்திய ஆட்சியாளர்கள், இன்று, ''இந்தியா பாகிஸ்தான் இடையே உருவாகிவரும் சமாதான முயற்சிகளில் இருந்து யாரும் பின்னோக்கிப் போக முடியாது'' என வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியைப் பார்க்க 8,000 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கியதில் ஆரம்பித்த இந்த நல்லிணக்க முயற்சிகள், ''இந்தியா வசமுள்ள ஜம்முகாசுமீர் தலைநகர் சிறீநகருக்கும், பாக். வசமுள்ள ஆசாத் காசுமீர் தலைநகர் முசாபராபாத்துக்கும் இடையே மீண்டும் பயணிகள் போக்குவரத்தை நடத்துவது; இரு தரப்பு வர்த்தகத்திற்காக எல்லைக் கட்டுப்பாடு கோட்டைத் திறப்பது; கராச்சியில் இந்திய தூதரகத்தையும், மும்பையில் பாகிஸ்தான் தூதரகத்தையும் இந்த வருட இறுதிக்குள் திறப்பது; இந்தியா பாக். கூட்டு வர்த்தக கவுன்சிலை அமைப்பது; எல்லைக் கட்டுப்பாடு கோட்டையொட்டி பிரிந்து வாழும் குடும்பங்கள் சந்தித்துக் கொள்ள ஏற்பாடு செய்வது'' எனத் தொடர்கிறது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் 2,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட வர்த்தகம், இந்தச் சமாதான ஒப்பந்தத்தால், அடுத்த ஆண்டிற்குள் 25,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனக் கணக்குப் போட்டுக் காட்டுகிறது, ''ஹிந்து'' நாளிதழ். இந்தியா பாகிஸ்தானைச் சேர்ந்த முதலாளிகளின் கைகளுக்குப் போகும் இந்த இலாபக் கணக்குக்கு அப்பால், இந்தச் சமாதான ஒப்பந்தம் காசுமீர் மக்களுக்குத் தரப் போவது என்ன என்பதுதான் கேள்வி.

சுயநிர்ணய உரிமை கோரிப் போராடி வரும் காசுமீர் மக்களுக்கு மாநில சுயாட்சி வழங்குவதற்குக் கூட இந்திய அரசு தயாராக இல்லை. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பாக். அதிபர் முஷாரப்புக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் இதுபற்றி ஒரு வார்த்தை கூடப் பேசப்படவில்லை.

பேச்சு வார்த்தையில் காசுமீரைச் சேர்ந்த போராளிக் குழுக்கள், ஹூரியத் அமைப்பினர் கலந்து கொள்வதை பாகிஸ்தான் வாய்வார்த்தை அளவிலாவது ஏற்றுக் கொள்கிறது. ஆனால், இந்தியாவோ காசுமீர் பிரச்சினை குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த இன்று வரை மறுத்தே வருகிறது.

இந்தியா வசமுள்ள ஜம்முகாசுமீரிலும்; பாக். வசமுள்ள ஆசாத் காசுமீரிலும் உள்ள இந்தியபாக். படைகளைத் திரும்பப் பெறுவது குறித்தேர் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள இராணுவ துணை இராணுவப் படைகளைத் தண்டிப்பது குறித்தோ இப்பேச்சுவார்த்தைகளில் ஆலோசிக்கப்படவில்லை.

காசுமீர் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, இந்தியா பாக். இடையே மீண்டும் ஒரு சமாதான நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்தியாபாக். இடையே நல்லுறவைப் பேணி, வர்த்தகதொழில் உறவை நிலைநாட்டுவதுதான் இந்தச் சமாதானத்தின் நோக்கம். இந்த இலாப நோக்கம் பச்சையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் பிரிந்த குடும்பங்கள் சந்திக்க ஏற்பாடு செய்வது; பயணிகள் போக்குவரத்து என இந்தச் சமாதானத்தின் மீது ''சென்டிமெண்ட்'' சாயம் பூசப்பட்டுள்ளது.

இந்தியாபாக். இடையே இந்தச் சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த பொழுதே, பாகிஸ்தானுக்கு எஃப் 16 இரக போர் விமானங்களை விற்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த மறு நிமிடமே தனது விமானப் படைக்குப் புதிதாக 126 போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை இந்தியாவும் அறிவித்தது.

இந்தியாபாக். இடையே போர் மூளுவதற்கு உடனடி வாய்ப்புகள் இல்லை என்றாலும், இரு நாடுகளும் ஆயுதங்களை வாங்கி குவிக்கும் போட்டியில் ஒன்றையொன்று விஞ்சி நிற்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதங்களை வாங்குவதற்கு 25,141 கோடி ரூபாய் செலவழித்த இந்தியா, 2004இல் 49,127 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்திருக்கிறது.

பாகிஸ்தான், தற்பொழுது அமெரிக்காவிடமிருந்து இறக்குமதி செய்யவுள்ள போர் விமானங்களின் மதிப்பு மட்டும் ஏறத்தாழ 15,000 கோடி ரூபாய். இதனால் மிகப் பெரும் இலாபமடையப் போவது, ''எஃப்'' இரக போர் விமானங்களைத் தயாரிக்கும் ''லாக்ஹீட்'' என்ற அமெரிக்க நிறுவனம்தான். இந்நிறுவனத்தின் வியாபாரம் படுத்துவிட்டதால், கடந்த சனவரி மாதம் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 800 தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்; மேலும், 1,000 தொழிலாளர்களை நீக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், அமெரிக்க அதிபர் புஷ் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்க அனுமதியளித்து, இந்த நிறுவனத்திற்கு உயிர் தண்ணி ஊற்றியிருக்கிறார். இந்தியாவும் இந்த நிறுவனத்திடமிருந்து எஃப் 18 இரக போர் விமானங்களை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி, முதலாளித்துவ அரசியல் நிபுணர்கள் கூட, அமெரிக்கா தெற்காசியாவில் ஆயுதப் போட்டியை ஊக்குவிப்பதாகவும், இதன் மூலம் இந்தியாபாக். இடையே ஏற்பட்டுள்ள சமாதானத்தைச் சீர்குலைக்கச் சதி செய்வதாகவும் அமெரிக்கா மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

ஆனால் அமெரிக்கவோ, ''தெற்காசியாவில் தாம் புதிய வியூகம் வகுத்திருப்பதாகவும்; அதற்கு ஏற்ற வகையில்தான் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்க முன் வந்திருப்பதாக''வும் கூறி இந்த ஆயுதப் போட்டியை நியாயப்படுத்துகிறது.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஏற்கெனவே ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான். இதற்காகவே ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவும், இசுரேலும் குற்றஞ்சுமத்தி வருகின்றன. வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் இராணுவத் தளங்கள் மீது அதிரடித் தாக்குதலை நடத்தவும், இதற்கு ஈரானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்தவும் அமெரிக்கா திட்டமிடுகிறது.

ஆனால் ஆப்கானிஸ்தானிலோ, அமெரிக்கா நிறுவியுள்ள பொம்மையாட்சியின் அதிகாரம் தலைநகர் காபூலைத் தவிர, அந்நாட்டின் பிற பகுதிகளில் செல்லுபடியாகவில்லை. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தலைமறைவாக இயங்கும் தாலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் பொறுப்பை பாகிஸ்தான் தலையிலும் சுமத்தியிருக்கிறது, அமெரிக்கா. இதற்காகவே அமெரிக்காவின் இராணுவம் பாகிஸ்தானின் ஐந்து இராணுவத் தளங்களையும், மூன்றில் இரண்டு பங்கு விமானப் படையினையும் பயன்படுத்தி வருகிறது.

இந்த அடியாள் வேலைக்குப் பரிசாகத்தான் முஷாரப்பின் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு அமெரிக்கா, ''நேடோ'' அணியில் இல்லாத நட்பு நாடு தகுதியினையும்; போர் விமானங்களையும், ஆயுதத் தளவாடங்களையும் வாரி வழங்குகிறது. பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகாரக் கும்பலை இப்படிக் குளிப்பாட்டுவ தன் மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதங்களையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வர முயலுகிறது, அமெரிக்கா. இதன் மூலம், ஈரான் பாகிஸ்தானிடமிருந்து தான் இரகசியமாக அணு ஆயுத தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது என நிரூபிக்க முயலுகிறது.

இது ஒருபுறமிருக்க, மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடல் பகுதியில் கிடைக்கும் எண்ணெய் வளத்தைத் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வரவும் அமெரிக்கா திட்டம் போடுகிறது. இப்பகுதியில் இன்றும் செல்வாக்கோடு இருக்கும் ரசியாவை ஓரங்கட்டுவதோடு, இங்கு கிடைக்கும் கச்சா எண்ணெயை மேற்கு ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்வதன் மூலம் ரசியாவின் எண்ணெய் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளுவதும் அமெரிக்காவின் நோக்கம்.

காஸ்பியன் கடல் பகுதி எண்ணெய் வளத்தை உறிஞ்ச 1,50,000 கோடி ரூபாய் மூலதனமிட்டுள்ளது அமெரிக்கா. இப்பகுதியில் தனது மேலாதிக்க நோக்கங்களைக் காத்துக் கொள்வதற்காக, முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜார்ஜியா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், அஜர்பெய்ஜான், மால்டோவா ஆகிய நாடுகளை இணைத்து, பிராந்திய இராணுவக் கூட்டணி அமைக்கவும் முயன்று வருகிறது. மேலும், தாஜிகிஸ்தான் நாட்டில் இராணுவத் தளம் அமைத்துள்ள இந்தியாவையும் தனது ரசிய எதிர்ப்புக் கூட்டணிக்குள் கொண்டுவரத் திட்டம் போடுகிறது.

மேற்காசியாவில் ஈரானைக் குறிவைப்பது; காஸ்பியன் கடல் பகுதியில் ரசியாவை ஓரங்கட்டுவது என்ற நோக்கங்களின் பின்னணியில்தான், ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியாவின் திட்டத்தை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என ஆசை காட்டி இந்தியாவைத் தன் பக்கம் இழுத்துவிட முயலுகிறது.

அமெரிக்க இராணுவத் தலைமை நிலையம் ''பென்டகன்'' தயாரித்துள்ள அறிக்கையொன்றில், ''போர்த் தந்திர ரீதியாகப் பார்த்தால், சீனா அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் எதிரிதான்'' எனக் குறிப்பிட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து, ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தலாம் என்பது அமெரிக்காவின் இன்னொரு திட்டம். ஏற்கெனவே சீன எதிர்ப்பில் ஊறிப் போயிருக்கும் இந்திய ஆளும் கும்பலுக்கு இந்தத் திட்டம் கசக்கவா செய்யும்? இந்தியாவுக்கு எஃப் 18 இரக போர் விமானங்களை விற்கவும்; இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்து போர் விமானங்களைத் தயாரிக்கவும்; உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படும் அணு அறிவியல் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குத் தரவும் அமெரிக்கா முன்வந்திருப்பதை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

''இந்தியா வல்லரசாக வளருவதற்கு நாங்கள் உதவுவோம்'' என அமெரிக்கா சொல்லுவதைப் பச்சையாக மொழி பெயர்த்தால், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத் திட்டத்திற்கு இந்தியா அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பது தவிர வேறில்லை. ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் கங்காணியாக வேலை பார்ப்பதற்கு இந்திய ஆளுங் கும்பலுக்குக் கொஞ்சமும் தயக்கம் கிடையாது. மாறாக, பாகிஸ்தானுக்குத் தரும் முக்கியத்துவத்தை, அமெரிக்கா தனக்குத் தருவதில்லை என்பது மட்டும்தான் இந்தியாவின் ஆதங்கம். பாகிஸ்தானைக் காட்டி வாங்கிக் குவிக்கப்படும் ஆயுதங்களோ, இந்தியா அமெரிக்காவின் மறுகாலனி ஆக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராகவும், சுயநிர்ணய உரிமை கேட்டுப் போராடும் தேசிய இனப் போராளிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.
· செல்வம்

Post a Comment