Thursday, August 25, 2005

57. எனது "ஜாவா மஹாத்மியம்"...

ஜாவா எனக்குத் தண்ணி பட்ட பாடு. பிறகு என்ன, கொஞ்சமா, நஞ்சமா.. 22 வருஷத் தொடர்பு என்றால் சும்மாவா? மேலே சொல்வதற்கு முன்பே ஒரு முக்கியமான சேதி. ஜாவா என்றதும், software கில்லாடிகளாக நிறைந்திருக்கும் இந்த வலைஞர்களில் பலர் நான் 'ஜாவா'ன்னு சொன்னது JAVA என்று நினைத்திருக்கலாம்.. இல்லை..இல்லை.. நான் சொல்லவந்தது - JAWA, 1966 மாடல், 250 c.c., Made in Czechoslovakia (இப்போ அந்த நாடே இல்லையோ?!), MDA 2107, என்னிடம் வந்தபோது 'சிகப்பழகி'; பின் எனக்குப் பிடித்தவாறு 'கறுப்பழகி'யாக மாறியவள். 1970 அக்டோபர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நான் 'அவள்' கைப்பிடித்தேன் - I mean its 'handlebar' ! அப்போது நான் ஒரு bachelor. ஆனால், 1992-ல் -22 ஆண்டுகள் என் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்ட'அவள்' என்னைவிட்டுப் பிரியும்போது எனக்கு இரு வளர்ந்த குழந்தைகள். அந்தப் 'பிரிவு' என்னைவிட என் மகள்களை மிகவும் பாதித்தது. சின்னவளுக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

தஞ்சையில் 4 ஆண்டுகள் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு நல்ல மூடில், உள்ளூரில் வேலை பார்த்தால் ஒரு பைக் வாங்கிக்கொள் என்று அப்பா permission கொடுக்க, என் நல்ல நேரம் அமெரிக்கன் கல்லூரியில் 1970-ல் வேலை கிடைத்த உடனே அப்பாவை அனத்த ஆரம்பித்தேன். நான் அப்போது கல்லூரியில் வேலை பார்த்தது 'சித்தாள்' வேலை; அதாவது, அப்போதெல்லாம், கல்லூரிகளில் லெக்சரர் மட்டுமல்லாமல், tutor/demonstrator என்ற போஸ்ட்டும் உண்டு. ஒரே தகுதியிருப்பினும், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதால், சில பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அந்தப் பதவிகளே கிடைத்து, பின், உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்காய் தவமிருந்து லெக்சரர் பதவி உயர்வு பெறவேண்டும். அது ஒரு சோதனைக்காலம். நான் சேர்ந்தது அப்படி 'சித்தாள்' வேலையில்தான். அப்பாவுக்கு இது ஒரு சாக்காகப் போய்விட்டது. 'பார்க்கிற வேலை என்னவோ சித்தாள் வேலை; இதில் பைக்கில் போய் இறங்கினால் ரொம்ப நல்லாவே இருக்கும்; போ..போ... பிறகு பார்த்துக்கொள்ளலாமென' சொல்ல மனம் உடைந்து, தாடி இல்லாமல் சோகம் காட்டி, பிறகு பயங்கர பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து அப்பாவைச் சரிக்கட்டினேன்.

மனம் மாறிய அப்பா அவருக்குத் தெரிந்த நண்பரிடம் இருந்த ஜாவா பைக்கை எனக்காக வாங்கி, ஒரு சனிக்கிழமை இரவு 'வண்டியை நாளைக்கு எடுத்துக்கொள்' என்று அதன் சாவியைக் கொடுத்தபோது ஒரே 'ஜிவ்'தான். ஏனென்றால், அப்போது மொத்தமே மூன்றே மூன்று வகை பைக்குகள்தான். புல்லட் 350 சி.சி.- அப்போது விலை 4,500 ரூபாய்; அந்த வண்டியைப் பார்க்க ஆசை ஆசையாகத்தான் இருக்கும். பார்க்கும்போதெல்லாம் யானை நினனவுதான் வரும். அடுத்தது ஜாவா 250 சி.சி. - விலை 3,500. பார்க்கும்போது வரும் நினைவு: முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் அழகுக் குதிரை. முன்றாவது, ராஜ்டூத் 150 சி.சி. விலை 2,500. சரியான எருமை மாடு மாதிரி நிற்கும். பிடிக்காது. 'குதிரை' கிடைத்ததும் எக்கச்சக்க சந்தோஷம். என் குதிரைக்குக் கொடுத்த விலை 2,500.

அதுவரை வண்டி நன்றாக ஓட்டத்தெரியாது. தஞ்சையில் தங்கியிருந்த லாட்ஜில் வேளாண்மைத்துறையில் வேலை பார்த்த அடுத்த அறை நண்பருக்கு அளிக்கப்பட்டிருந்த 'எருமைமாடு'- அதாங்க, ராஜ்தூத்தை அவர் வெளியூர் செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம். அந்த அனுபவம் மட்டுமே உண்டு. அடுத்த நாள், நண்பர் ஒருவரை அழைத்துச்சென்று, நான் படித்த மரியன்னை பள்ளியில் இருந்த என் குதிரையை எடுத்துக்கொண்டு நேரே ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குச் சென்றோம். நட்ட நடு மைதானத்தில் வண்டியை நிப்பாட்டிவிடு நண்பர் 'தம்' அடிக்க உட்கார்ந்து விட்டார். சரி வண்டியை எடு என்றார். ஸ்டார்ட் செய்தேன்; கியர் போட்டேன்; நாலைந்து சுற்று சுற்றினேன். அவ்வளவுதான், உனக்கு ஓட்டத் தெரிந்துவிட்டது என்று சொல்லி நண்பர் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு அப்பாவிடம் நல்ல சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஏழுமணிக்கு முந்தி எப்பவுமே எழுந்திருக்காத நான் அடுத்த சில நாட்களுக்கு ஐந்து ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து குதிரையை நன்றாகத் துடைத்து, அப்போதெல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமலிருந்த (இப்போது அங்கு ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து ஒரே மக்கள் கூட்டம்தான்) வைகை நதிக்கரையின் ஓரமாக இருக்கும் சாலையில் சைலன்சர் இல்லாத வண்டியை ஓட்டிப் பழகினேன். கொஞ்சம் தைரியம் வந்த உடன் கல்லூரிக்கு ஓட்டிப்போனது; போகும் வழியில் எல்லோருக்கும் நடப்பது போலவே, போலீஸ்காரரைப் பார்த்ததும் வண்டி நின்றுபோனது - எல்லாமே நினைவிலிருக்கிறது. இப்போ பைக் ஓட்டுபவர்களுக்குத் தெரியுமோ என்னவோ, இந்தக்காலத்து பைக்குகள் எல்லாமே கையாலேகூட ஸ்டார்ட் செய்யமுடியும். ஆனால், புல்லட், ஜாவா பைக் இரண்டுக்குமே செம உதை கொடுக்கவேண்டும். கொஞ்ச காலம் வரை இடது கால் பெருவிரலில் எப்பவுமே ரத்தக்காயத்தோடேயே அலைந்தேன். ஷூகூட போடமுடியாது.

எப்போது கோடை விடுமுறை வருமெனக் காத்திருந்தேன். விடுமுறையும் வந்தது.
சொந்தஊருக்கு பைக்கிலேயே செல்ல முடிவு செய்திருந்தேன். 130 மைல்கள். ஊருக்குள் நுழைந்ததும் பைக் பின்னாலேயே ஒரு பெருங்கூட்டமாகச் சின்ன பசங்கள் எல்லோரும் ஓடிவர வீடுவந்து சேர்ந்தேன். என் அப்பம்மாவிற்குப் பெருமை பிடிபடவேயில்லை; திருஷ்டிதான் சுற்றவில்லை. நான் வீட்டுக்குள் வந்த பிறகும் சின்னப் பிள்ளைகளின் கூட்டம் குறைந்தபாடில்லை. அப்போது எங்கள் ஊர் பக்கம் நானே பைக் எதுவும், யாரும் ஓட்டி வந்தும் பார்த்ததில்லை. பசங்க கூட்டத்திலிருந்து பைக்கைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதாகப் போய்விட்டது. அன்று ஊருக்குப் போனதால் என் வண்டிக்குப் புதுப் பெயர் ஒன்று கிடைத்தது. பசங்க எல்லோரும் வண்டியைச் சூழ்ந்துகொண்டும், நான் போகும்போது பின்னாலேயே கூட்டமாய் ஓடி வந்தும், 'டக்கு மோட்டார் ...டக்கு மோட்டார்' என்றார்கள். அந்தப் பெயர் மிகவும் பிடித்ததால் 'Darling Duck' என்று நாமகரணம் சூட்டினேன். ஆனால், இந்தப் பெயரைக் கடைசியில் மாற்றும்படியானது. என்ன பெயர், ஏன் அந்தப் பெயர் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

நான் பைக் வாங்கியபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய், ஏழு பைசா !. Fill tha tank எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்! கால் கீழேயே பாவாது; துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான். எனக்கு டிரைவிங் சொல்லிக்கொடுத்த நண்பரும் ஜாவா வைத்திருந்தார். இரண்டுபேருமாகச் சேர்ந்தே தனித்தனி பைக்கில் சுற்றுவோம். 'சர்க்கஸ்காரங்க மாதிரில்ல சுத்துறாய்ங்க'ன்னு மற்ற நண்பர்கள் அடிச்ச கமெண்ட் ரொம்ப பெருமையா இருந்திச்சு. ஆனா, கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டின்னு வந்தப்புறம் இந்த நிலை மாறிப்போச்சு. எங்கள் கல்லூரி slang படி நான் ஒரு 'ஒத்தை மாட்டு வண்டி'; அதாவது, என் மனவி அப்போது வேலை பார்க்கவில்லை; நான் மட்டுமே 'தனி மாடாக' வண்டியை இழுத்தாகணும். வாங்கும் சம்பளம் இழுத்துப் பிடித்து 'வண்டி'யை ஓட்டுவதற்கே சரியாக இருக்கும்; இதில் பைக் வேறு. அதுக்கு ஊத்தணுமே, பெட்ரோல். நிலைமை ரொம்ப 'டைட்' ஆன பிறகு, சம்பளம் வாங்கியதும் போடற பெட்ரோல் முதல் பத்து நாளைக்கோ ஒரு வாரத்துக்கோ வரும்; குடும்பத்தோடு போகவேண்டிய கடமைகளை இந்த நாட்களுக்குள் முடிப்போம். பிறகு, அடுத்த பத்து நாட்களில் அவசரத்தேவைகளுக்கு மட்டும். கடைசி பத்து நாட்களுக்கு 'நடராஜா செர்வீஸ்'தான். முதல் வாரம் 'பெட்ரோல் வாரம்'; கடைசி வாரம் 'பஸ் வாரம்'. த்சொ, த்சொ... ஐயோ, பாவம் இந்த மனுஷன் அப்டின்னு யாரும் நினைச்சீங்கன்னா, இன்னும் ஒரு விஷயம் சொல்லணும். நான் பைக் வாங்கும்போது ஏறத்தாழ 200 ஆசிரியர்கள் இருந்த எங்கள் கல்லூரியில் இருந்த இருசக்கர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையே பன்னிரெண்டே பன்னிரெண்டுதான்! நான் பதின்மூன்றாவது ஆள். என்ன பண்றது; அப்போ கல்லூரி வாத்தியார்கள் நிலைமை அவ்வளவுதான்.

அதோடு இப்ப எல்லாம் ரோட்ல போகும்போது அங்கங்கே இருசக்கர வாகனங்களைக் 'கூறு கட்டி' வைத்து விற்கிறார்கள். நீங்கள் வண்டி ஒன்று வாங்கலாமா என்று ஒரு கனவு கண்டால்கூட அடுத்த நாளே உங்கள் வீட்டுக்கு ஆள் வந்திடும்- 'சார், வண்டி வாங்கலையோ, வண்டி' என்று கூவிக்கொண்டு. ஆனால், அப்போதெல்லாம் வண்டிகள் வாங்க ஆட்களைத் தேடித்தான் பிடிக்கவேண்டும். இயலாமை ஒரு பக்கம்; அதைவிட இதெல்லாம் தேவையில்லை என்ற மனப்பாங்கு அதிகம். It was out and out a luxury item! பைக்குகள் வாங்க ஆள் கிடையாது; ஆனால், ஸ்கூட்டருக்கு மட்டும் கொஞ்சம் போட்டி உண்டு. அதுவும் demand-supply விதிகளால்தான்! அப்போது இருந்த வண்டிகள்: லாம்பி என்று செல்லமாக அழைக்கப்பட்ட லாம்ப்ரெட்டாவும், வெஸ்பாவும்தான். அதிலும், இந்த வெஸ்பாவுக்கு ஏக டிமாண்ட்; அதிலும், குறிப்பாக 'chetak' என்று ஒரு மாடல். அடேயப்பா, அந்த வண்டி வச்சிருந்தா அவர்மேல்தான் எத்தனை பொறாமைக்கண்கள். அப்போது, டாலரில் கொடுத்தால் இந்த வண்டி உடனே கிடைக்கும். எங்கள் கல்லூரியிலிருந்து அமெரிக்காவிற்கு வருஷத்திற்கு ஒருவராவது போய் வருவதுண்டு. போய் வந்தவர்கள் வந்த வேகத்தில் செய்வது ஒரு chetak வாங்குவதுதான். ஒரு chetak கல்லூரிக்குள் வந்து விட்டால் அதைச் சுற்றி ஓரிரு வாரங்களுக்காவது அப்பப்போ ஆசிரியர் கூட்டம் வேடிக்கை பார்க்க நிற்கும். டாலர் இல்லாமல் சாதாரண முறையில் வாங்க வேண்டுமானால், ரூபாய் 500 கட்டிவிட்டுக் காத்திருக்கவேண்டும் - எத்தனை வருடங்களுக்கு தெரியுமா? Just for 6 years! கையில் காசு இருந்தாலும் காத்திருக்கவேண்டும். அதிலும் சிலர் ஒரு வியாபாரம் செய்வதுண்டு. 500 ரூபாய் கட்டிவிட்டு, 6 ஆண்டுகள் கழித்து வண்டி அலாட் ஆனதும் அதை 'பிரிமியத்துக்கு' விற்று விடுவதுண்டு. கட்டிய 500 ரூபாயுடன் மேலும் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு வாங்கிக் கொண்டு வண்டியைக் கொடுத்துவிடுவார்கள். இப்படி வாங்குபவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் உண்டு; ஆனாலும் இந்த வியாபாரம் வெற்றி நடை போட்டு வந்தது. இப்படி ஒரு காலத்தில் பார்த்துவிட்டு, இப்போது தெரு முனைகளில் வண்டிகளை நிப்பாட்டிகொண்டு, ' கூவி கூவி ' விற்பதைப் பார்க்கும்போது... என்னமோ போங்க..எனென்னமோ நடக்குது நாட்டிலன்னு நீட்டி முழக்கணும்போல தோன்றும்.

ஆனாலும், சும்மா சொல்லக்கூடாது என் 'டார்லிங் டக்'கை. எப்போதுமே ரொம்ப தொல்லை கொடுத்ததேயில்லை. ஏதோ, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல அதுபாட்டுக்கு ஓடியது. குடும்பத்தில் ஒரு நபர் மாதிரிதான். ஜாவா + தோளில் ஒரு ஜோல்னா பை + கழுத்தில் அடிக்கடி ஒரு காமிரா - இதுதான் ரொம்ப நாள் என் அடியாளமாக இருந்தது. வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn! டார்லிங் டக்கில் பல இடங்களுக்கும் பயணம் - தனியாக, குழுவாக. எனக்கும் இளம் வயசு; என் பைக்குக்கும் இளம் வயசு. ஊர்சுற்ற கேட்கணுமா, என்ன? ஒரு முறை தஞ்சை பயணம். வேலைபார்த்த இடத்தில் பழைய நண்பர்களைப் பார்க்கலாமென ஒரு பயணம். காலையில் மதுரையிலிருந்து புறப்பட்டேன். திருமயம் என்று நினைக்கிறேன். அந்த ஊரிலுள்ள கோட்டையைத் தாண்டியதும் கண் முன்னே நீ...ண்...ட நெடுஞ்சாலை; நல்ல சிமெண்ட் சாலை; கண்ணுக்கெட்டிய தொலைவு உயிரினம் ஏதும் காணோம்; வேறு வாகனங்களும் இல்லை. ஒரு ஆசை; டார்லிங் டக்கின் முழு 'பலத்தையும்' டெஸ்ட் செய்துவிட ஆசை. த்ராட்டிலைத் திருகினேன்; முழுவதும் திருகியபிறகு அதன் முழுத் திறனில் வண்டி சென்றபோது - வண்டி அப்படியே மிதப்பதுபோல உண்ர்ந்தேன்; வண்டி தரையைத் தொட்டு செல்வதுபோலவே தோன்றவில்லை; மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை. இப்போது காரில்கூட எழுபதைத் தொட்டால் பயம் வந்துவிடுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒருவனே கையாண்டதாலோ என்னவோ டார்லிங் டக் நல்ல கண்டிஷனில் இருந்துவந்தது. அதன் பிறகு, நண்பர்களாக மாறிவிட்ட என் பழைய மாணவர்கள் - அதில் பலரும் பெரிய பதவிகளுக்கு வந்துவிட்டிருந்தனர் - பைக்கை 'ஆத்திர அவசரத்திற்குக்' கேட்கும்போது எப்படி இல்லை என்று சொல்வது. அதுவும் சிலர் மதுரைக்கு வந்தால் என்னோடு இருப்பதே அதிக நேரமாயிருக்கும். அவர்களுக்கு எப்படி இல்லையென்பது. அப்படி நாலைந்து நண்பர்கள். வயசும் ஆகிப்போச்சு. எல்லாமாகச் சேர்ந்து பைக் இப்போது சல சலக்க ஆரம்பித்துவிட்டது. டார்லிங் டக் என்ற பெயரை மாற்றிவிட்டு புதுப்பெயரைச் சோகமாகச் சூட்டினேன் - 'கண்ணகி' என்று. ஏன் தெரியுமா? சிலம்பைக் கையில் எடுத்துக்கொண்டு மதுரையை வலம் வந்தாளல்லவா, சிலம்பல்லவா கைகளில்; ஜல்..ஜல் என்று சத்தம் வந்திருக்கணுமே. என் பைக்கும் இப்போது சல சலவென மதுரையம்பதியின் தெருக்களை வலம் வருகிறதல்லவா, அதனால்தான்.

1992. 'கண்ணகி'யை விற்றுவிட்டு வேறு வண்டி வாங்க முடிவெடுத்தேன்; மனைவிக்கும் முக்கியமாக மகள்களுக்கும் இந்த முடிவு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிறந்த நாளிலிருந்தே இர்ந்துவந்த தொடர்பல்லவா? ஆனாலும் விற்றுவிட முடிவு செய்து, 2,500 ரூபாய்க்கு வாங்கியவர் வந்து வீட்டிலிருந்து MDA 2107-யை / டார்லிங் டக்கை / கண்ணகியை எடுத்துச்செல்லும்போது மனதை என்னவோ செய்தது. பக்கத்தில் இருந்த சின்ன மகளின் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது.

27 comments:

SnackDragon said...

ஜாவா எனக்கு பிடித்த மோட்டார் சைக்கிளில் ஒன்று. சில நாட்கள் ஓசியில் ஓட்டியிருக்கிறேன். அதன் கம்பீரம் தனிதான். :-)

Anonymous said...

//இப்போ அந்த நாடே இல்லையோ?!), //

அது இரண்டு நாடுகளாக பிரிந்து செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லொவாகியா வாக உள்ளது.

Suresh said...

நன்றி தருமி அவர்களே. எனக்கு என் அப்பாவினுடைய ஜாவா மோட்டார் சைக்கிள் ஞாபகம் வந்தது....

Anonymous said...

நல்லா இருக்கு இத படிக்கும் போது.
AC-ல காண்டீன், டென்னிஸ் கோர்ட்..இதெல்லாம் படிச்ச உடனே.. அந்த செங்கல் நிற கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு முறை மானசீகமாக போய் வந்தேன். Zumbro-ஹாலுக்கு அந்த வழியாத்தான் போவது வழக்கம்.
:)
:)
நன்றிகள் தருமி!!

Anonymous said...

Good write-up Dharumi. :)

Chetak -- Is n't that a model from Bajaj?

Kasi Arumugam said...

அட,

எனக்கும் கனவு வாகனம் ஜாவாவகத்தான் இருந்தது. ஆனால் வாங்கி ஓட்ட வாய்ப்பில்லை. நான் முதன்முதலில் வண்டி வாங்கும்போது ஜாவாவின் அந்திமக்காலம், வேண்டாம் என்று எல்லாரும் ஏமாற்றிவிட்டார்கள். இன்றும் ஆனால் ஜாவா ஆசை மட்டும் குறையவேயில்லை, ஹும்...

முகமூடி said...

சரி... அந்த காலத்திலயே தெகிரியமா உங்க பின்னாடி ஜாவாவில உக்காந்த 'அவிங்கள' எல்லாம பத்தி ஒரு சிறு குறிப்பயும் காணுமே.. வீட்டுக்காரம்மாவுக்கு தெரிஞ்சிருமுன்னு இன்னமும் மறைச்சி வக்கரதெல்லாம் டூ மச்சிங்கண்ணா..

Anonymous said...

//'அவிங்கள' எல்லாம பத்தி ஒரு சிறு குறிப்பயும் காணுமே.. //

இப்படி தள்ளாத வயசுல பிளாக்கில அஸினப் பத்தி ஜொள்ளுரது தெரிஞ்சா அவிங்க இவர பிச்சுப் பிஸினாக்கிர மாட்டாக அதேன் இந்த பயம் :-)))))

தருமி said...

கார்த்திக்ராமாஸ், பரணீ (தெரிஞ்சுதானே எழுதினேன், தலீவா!),
சுரேஷ் செல்வா (போஸ் செம அசத்தலா இருக்கு!), பாலாஜி-பாரி (அந்தக் campus காத்துக்கே ஒரு தனி மகிமைதான்), காசி,முகமூடி - நன்றி

தருமி said...

முகமூடி, என்னங்கண்ணா இப்டி சொல்லீட்டீங்க. நமக்கு எப்பவுமே நம்ம நயினாட்ட பயங்கண்ணா; அதனால ரிஸ்க் எடுக்கலீங்கண்ணா.

ஆனா, மனசுக்குள்ள எப்பவும் ஒரு 'இதுதாங்கண்ணா'; அப்டியே,'ராசாவின் பார்வை ராணியின் பக்கம்'னு பாடிக்கிட்டே போயாச்சு...ம்..ஹும்..பழைய நினப்புடா பேராண்டின்னு ஆயிப்போச்சு.
தலீவா, அப்ப உங்களுக்கு 'அந்த' அனுபவம் நிறைய உண்டோ?

அதோட யாரோ அசினைப்பத்தி எழுதறாங்க. அதல்லாம் வேண்டாம்னு சொல்லிடுங்க.எனக்கு கோவம் வந்திச்சு...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//துறையிலிருந்து காண்டீன் போகவேண்டுமானாலும், டென்னிஸ் கோர்ட் போகவேண்டுமானாலும் பைக்தான்.//

pollution pollution!! :O)

நந்தன் | Nandhan said...

//வைத்திருந்த 22 ஆண்டுகளில் அநேகமாக ஒரு 18 ஆண்டுகளுக்காவது horn இருந்திருக்காது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல நல்ல டிரைவருக்கு எதற்கு horn!//

நிஜத்த சொல்லுங்க, Silencer இல்லாத பைக்குக்கு எதுக்கு horn என்று தானே போடாம விட்டுடீங்க?

நாங்கெல்லாம் இந்த காலத்து குழந்தைங்க, இந்த மாதிரி பதிவுகளை படிச்சுதான் 'அந்த காலம்' பற்றி தெரிஞ்சுக்க முடியுது. நன்றி தாத்தா!

தருமி said...

ஷ்ரேயா, நந்தன் - நன்றி.
பேரன், பேத்திகள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது..!

முகமூடி said...

// நிஜத்த சொல்லுங்க, Silencer இல்லாத பைக்குக்கு எதுக்கு horn என்று தானே போடாம விட்டுடீங்க //

கெட்டுது போங்க. அவரு பைக்குல horn தவிர மத்த பாகங்கள் எல்லாம் சத்தம் போடும்.

தருமி said...

அவரு பைக்குல horn தவிர மத்த பாகங்கள் எல்லாம் சத்தம் போடும். //
அய்யன்மீர், அது உண்மைதானய்யா. ஆனால் அது அந்த கடைசி இரண்டு ஆண்டுகளில்தான். அதனால்தான் darling duck கண்ணகி ஆனாள்.

அது சரி, முகமூடி, குழலி, வீ.எம்., ஞான்ஸ் - இந்த நாலுபேருக்கும் ஒரு பெயர் வைத்தேனே, பார்த்துவிட்டீர்களா? ஒன்றிலிருந்து நாலு வரை ஆளாளுக்கு ஒரு எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், சரியா??

குழலி / Kuzhali said...

உங்களுக்கு ஜாவா மாதிரி எனக்கு மாருதி ஜிப்சி ஓட்ட வேண்டுமென்ற ஆசை, ஆனால் அதன் உற்பத்தியை நிறுத்திவிட்டார்களாமே??

சரி இல்லையென்றால் அர்மடார் கேட்டேன் அதுவும் உற்பத்தி நின்றுவிட்டதாம் சரி அதுவும் இல்லையென்றால் பரவாயில்லை JEEP த/அ என்று எழுதி அரசாங்க அதிகாரிகள் பயன்படுத்துவார்களே அது முயற்சி செய்தேன் அதுவும் உற்பத்தி இல்லையாம் என்ன செய்வேன் நான்?

//அது சரி, முகமூடி, குழலி, வீ.எம்., ஞான்ஸ் - இந்த நாலுபேருக்கும் ஒரு பெயர் வைத்தேனே, பார்த்துவிட்டீர்களா? //

சின்னவன் என்று ஒருவர் செய்யும் லொள்ளு உலக மகா லொள்ளாக இருக்கின்றது, நன்றாக உள்ளது, என்ன அடிக்கடி நம்மையும் போட்டு தள்ளிடுறாரு

தருமி said...

குழலி,
வயசுக்கேசு அல்லவா நான்; அதான் ஒரு பழமொழி ஒண்ணு ஞாபகம் வந்திச்சு: "இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு அலஞ்சானாம்"

நான் ஒண்ணும் உங்கள சொல்லலை; சும்மா ஒரு பழமொழி எடுத்து விட்டேன்.

'சின்னவனை'யும் பாத்துட்டு, போட்டுட்டு வந்தேன்.

சின்னவன் said...

குழலி மிக்க நன்றி.
லொள்ளு செய்ய இன்னொருத்தரை காட்டியதற்கு..
JAVA என்று Coffee கூட இருக்கு .இல்லையா ?
சரி சரி..

வருகைக்கு நன்றி தருமி

சின்னவன் said...

விரைவில் எதிர்பாருங்கள்
ஜாவா, எனது கா·பி த்தியம்
:)

Thekkikattan|தெகா said...

செல்லும்போது ஆணியைப் போட்டு எல்லோரும் எடுத்து அந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஓட்டுவோம்.//

நல்ல வேளை உங்க டார்லிங்க் டக்கை யாரும் கடப்பாரை போட்டு ஓட்டலயே ;-))

//மெல்ல குனிந்து ஸ்பீடாமீட்டரைப்பார்த்தேன். 102. அதைப் பார்த்த பிறகே பயம் வந்தது. மெல்ல த்ராட்டிலை விடுத்தேன். அம்மாடியோவ்! செய்தது தவறு என்று அப்போதுதான் தெரிந்தது. அதன் பிறகு 'அந்த அளவுக்கு' தவறு செய்யவில்லை.//

என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே... என்ன கீழே விழுந்து தாய் மண்ணே வணக்கமின்னு முத்தமிட்டீங்களா...? :-))

உங்களோட இந்த பைக் அனுபவம், என்னோட Hero Honda அனுபத்தை முன் கொண்டு வருகிறது. அந்த காடியைக் கொண்டு எத்துனை முறை வால்பாறையிலிருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு ஓட்டி வந்திருக்கிறேன்.

பிறகு ஆரம்பித்தில் ஒரு சரிவில் உருண்டு வால்பாறையில் எனக்கு ஒரு பாறை முத்தமிட்டு முகத்தில் தழும்பு ஒன்றை விட்டுச் சென்றது, இப்படி எத்துனையோ...

Sundar Padmanaban said...

அடடா தருமி ஸார். இந்தப் பதிவை முன்பே படிக்காமல் போனேனே என்று வருத்தப்பட்டேன். இளவஞ்சியின் புல்லட் பதிவைப் பார்த்து உங்கள் பின்னூட்டத்திலி்ருந்து இந்தப் பதிவுக்கு வந்தேன். இளவஞ்சியின் பதிவைப் பார்த்துவிட்டு அந்த வேகத்தில் இப்போது எழுதிய பதிவு இங்கே : http://agaramuthala.blogspot.com/2007/07/blog-post.html

நானும் மதுரை சந்து பொந்துலல்லாம் யெஸ்டில சுத்திருக்கேன். வண்டியை விக்க மனசில்லை. இப்போது ஸ்ரீரங்கத்துல நிக்குது.

நன்றி.

cheena (சீனா) said...

அய்யா தருமி அவர்களே !! ( என்னை விட நிச்சயம் வயதில் மூத்தவராகத் தான் இருக்க ண்டும்).

வணக்கம் - நான் புதியதாக இங்கு பதிவு தொடங்கி
உள்ளேன். தேன்கூடு - முத்துக்குமரன் -இளவஞ்சி - வழியாக தங்கள் ஜாவா பற்றி அறிந்தேன். டார்லிங் டக் என்ற கண்ணகி பிரிந்து 15 ஆண்டுகள் சென்ற பின்னரும் நினைவுகள் இன்னும் ஆழ் மனதில் அழியாச் சுவடுகளாக இருப்பது
தங்களுக்கும் கண்ணகிக்கும் உள்ள உறவினைச் சுட்டிக் காட்டுகிறது.
நான் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப் பள்ளியில் மூண்றாண்டு காலம் படித்த போது கல்லூரிக்கும் சில தடவைகள் வந்து சென்றதுண்டு -
அருமையான பதிவு - நன்றி.

தருமி said...

சீனா,
43 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையின் தெருக்களில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தீர்களே, அப்போது நானும் அப்படி ஊர் சுற்றியிருந்திருக்கிறேன்.கல்லூரிக்கும் போய்வந்து கொண்டிருந்திருக்கிறேன். (கணக்கு சரிதானே..?!)

Unknown said...

வற்றாயிருப்பு சுந்தர்,
உங்கள் ஜாவா கதை நல்லா இருந்தது.எனக்கு என்னவோ yezdi-ல் ஜாவாவின் அந்த அழகு streamlined body போய்ட்டதாக நினைப்பு.

உங்கது 84 மாடல் - இன்னும் வச்சிருக்கீங்க. என்னுடையது 66 மாடல். 70 -92 என்னிடம் இருந்தது.

ம்ம்...ம் ..அதெல்லாம் ஒரு காலம் ...

cheena (சீனா) said...

அய்யா தருமி அவர்களே !!

தங்கள் பதிலுக்கு நன்றி. - அந்த 43 ஆண்டுகள் என்பது எனக்கு ஒரு திகைப்பை உண்டு பண்ணியது. என்ன கணக்கு இது என்று. பிறகு தான் நினைவு வந்தது - அந்த எண் எனது ஒரு பின்னோட்டத்தில் நான் கொடுத்த எண் தான் என்று.

சரி என்னுடைய வலைப்பூ ( சரியான
தமிழாக்கமா - பிளாக் என்ற சொல்லுக்கு)

பாருங்களேன்

http://cheenakay.blogspot.com

நன்றி

பாவூரான் said...

JAWA வுக்கு horn இல்லாதது ஒரு குறையா?

எங்க பெரியப்பா ஒரு JAWA வச்சிருந்தார், அவர் பாவூர்சத்திரம் வந்துட்டர்ங்கிற விசயம் கீழப்பாவூருக்கும் , குறும்பலாபேரிக்கும் தெரியும்.

தருமி said...

இன்றைய குறும்பலாப்பேரிக்கு நாலு சக்கரத்தில் இப்போது போனேன். என்ன வித்தியாசம்...!

Post a Comment