Monday, January 30, 2006

125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2


originally posted on 30th jan '06


மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.

ரொம்ப காலத்துக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம். ஜோஸ்யத்தோடு முழுவதுமாக சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று வரை பதில் தெரியாத ஒரு கேள்வி மட்டுமல்லாமல் திரும்பிப் பார்க்கையில் கொஞ்சம் interestingஆக இருப்பதால் உங்களோடு பங்கிட்டுக் கொள்ள ஆவல்.

அந்த ‘கனாக்காலம்’- கல்யாணம் எல்லாம் ஆவதற்கு முந்தி, சுதந்திரப் பறவையாக இருந்த போது - அநேகமாக 71-ம் ஆண்டாக இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாள். நண்பன் ஆல்பர்ட்டின் வீட்டில் (தவுட்டுச் சந்தை பக்கத்தில் ஒரு சந்து) யாருமில்லை. எங்கள் ராஜ்யம்தான். ‘கொண்டாடி விடுவோம்னு’ திட்டம். அப்டின்னா, அந்தக் காலத்தில பெருசா ஒண்ணும் இல்லீங்க; மதியம்வரை அரட்டை; மதியம் அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item: pine apple juice; சாயுங்காலம் ஒரு சினிமா (அநேகமா, சிந்தாமணி அல்லது சென்ட்ரல் தியேட்டர்; இல்லைன்னா நம்ம ரீகல் தியேட்டர்!) - வேறென்ன பெருசா அந்த ‘அறியாப் புள்ளைக’ காலத்தில? ஒரே dry period தானே! ம்..ம்ம்..வாழ்க்கையே அப்போ dry தான் போங்க!!

அரட்டை போய்க்கொண்டிருந்தது. வெளியே கைரேகை பாக்கலியான்னு ஒரு சவுண்டு. சும்மா போன சனியன விலைக்கு வாங்கிறது மாதிரி நண்பன் அந்த ஆளை உள்ளே கூப்பிட்டான். ‘வேண்டாண்டா’ என்றதற்கு, ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ அப்டின்னுட்டான். என்ன, அவனுக்கு அப்போ பொண்ணு பாத்துக்கிட்டு இருந்த நேரம்! வந்தவனுக்கு எங்க வயசோ, ஒண்ணிரண்டு கூடவோ இருக்கலாம். பேசிய தமிழ் மலையாளம் கலந்து இருந்தது. இஸ்லாமிய வெளி அடையாளங்கள். தோளில் தூளி மாதிரியான ஒரு பை. கையில் உயரமான குச்சி ஒன்று. தலைப்பாகை. உள்ளே வந்து கைரேகை பார்க்க ஆரம்பித்தான். வழக்கமாய் எல்ல ஜோஸ்யர்கள் சொல்லும் கதைகளை எடுத்து விட்டான். அதற்குத் தட்சணையெல்லாம் ரொம்ப ‘சீப்’தான். அந்தக் காலத்தில் என்ன எல்லாம் ஒரு ரூபாய்க்குள் இருந்திருக்க வேண்டும்.

அது முடிஞ்சது. பிறகு மெல்ல புதுசா ஒரு சரடு விட்டான். ‘உனக்கு வாகனத்தில் ஒரு கண்டம் இருக்கு…அது போகணும்னா..’ என்று ஆரம்பிச்சதும் நான் அவன் முதுகிற்குப் பின்னால் போய் நண்பனிடம் சைகையில் அனுப்பிவிடு என்றேன். நண்பன் என்னைப் பார்த்ததிலிருந்து நான் பின்னால் இருந்து என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு,’முன்னால வா’ என்றான். தோரணையும் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. பேச்சில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குறைய ஆரம்பிச்சது. கண்டம் போறதுக்கு நாகூர் பள்ளிவாசலில் காணிக்கை போடணும்னான். உடனே சுதாரிச்சிக்கிட்டான். ஏன்னா, நம் எல்லார் வீட்டிலும்தான் சுவர் இருக்கோ இல்லியோ சாமி படங்களா மாட்டியிருப்போமே..அதுமாதிரி அங்க இருந்த படங்களைப் பார்த்ததினால், ‘உங்களுக்கு அந்த நம்பிக்கையில்லைன்னா, வேளங்கண்ணி மாதா கோயிலில் காணிக்கை போடணும்னான். நான் ‘அடுத்த மாதம் கூட நாங்க போறோம்; அப்போ போட்டுக்கிறோம்’னு புத்திசாலித்தனமா சொன்னேன். ‘அவன சும்மா பேசாம இருக்கச் சொல்லு; அதான் உனக்கு நல்லது’ அப்டின்னு நண்பனிடம் சொல்ல, ஆல்பர்ட் ‘சும்மா இருந்து தொலை’ அப்டிங்கிறது மாதிரி ஒரு லுக் உட்டான்.

இதற்குப் பிறகு எனக்கு வரிசையா ஆர்டர் போட ஆரம்பித்தான். கொஞ்சம் உப்பு கொண்டா என்றான். ஒரு கை உப்பு. ஒரு துணியை எடுத்து அவனுக்கு முன்னால் விரித்து அதில் குவித்துக் கொண்டான். அடுத்த ஆர்டர்: ஒரு தம்ளரில் தண்ணீர். ‘டாண்’ணு கொண்டுவந்து வைத்தேன். ஒரு மெழுகுதிரி (கி.வீடுகளில் இதற்கா பஞ்சம்?) உடனே பணிந்தேன். எப்படி திடீரென நான் இவ்வாறு சாதுவாக மாறினேன் என்று கேட்கிறீர்களா? உப்பு கேட்பதற்கு முன்பு அவன் செய்த ஏற்பாடுகள் அப்படி என்னை ஆக்கியிருந்தன. முதலில் துண்டை விரித்தானா? அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு. அடிவயிற்றில் ஒரு ‘ஜில்’..இல்ல..இல்ல, ‘ச்சில்’ (chill). அதைவிட அடுத்து எடுத்து வைத்த பொருள் இன்னும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. ஒரு சிறு குழந்தையின் கை - மணிக்கட்டு வரை. காய்ந்த எலும்பும் தோலும் ஜவ்வுமாக…அம்மாடியோவ்..! இந்த ‘செட்டப்’ அவன் செய்ததும் அதுவரை இருந்த rebellious mood எல்லாம் துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடியே போச்சு. தலைவர் சொன்னார்; நான் செய்தேன்…அவ்வளவே!

‘நான் ஒண்ணு பண்றேன்; அதப் பார்த்த பிறகு உனக்கு நம்பிக்கை இருந்தா காணிக்கை கொடு; இல்லாட்டி ஒண்ணும் வேண்டாம்’ அப்டின்னான். உளுக்கு உளுக்குன்னு மண்டைய ஆட்டினோம்; வேற வழி? மெழுகுவர்த்தியை ஏற்றினான். அதை உப்பின் நடுவில் வைத்தான். அப்புறம் ஆல்பர்ட் கட்டியிருந்த வேட்டியின் (அது அவனோட அண்ணனுடையது; புத்தம் புது வேட்டி)நடுவிலிருந்து ஒரு சாண் அளவிற்கு எடுத்து அதைத் திரித்துக் கொண்டான். அடுத்தது நாங்கள் எதிர்பார்க்காதது. அதை அப்படியே நெருப்பில் காட்டி எரித்தான். நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்; நல்லா எரிஞ்சுது. அவன் வேட்டியைப் பிடித்திருந்த இடம் வரை எரிய விட்டான்; அதன் சூடு தாங்காமல் கையை மாற்றி மாற்றிப் பிடித்து வேட்டியை எரித்தான். ஏறக்குறைய ஒரு அடி விட்டத்திற்கு வேட்டியை எரித்திருக்க வேண்டும். மனசுக்குள் ஆல்பர்ட் அவன் அண்ணனிடம் வேட்டிக்காக வாங்கப் போகும் மிதி என் கண்முன்னால் விரிந்தது; அந்தக் காட்சி நல்லாதான் இருந்தது! எரித்தபின் வேட்டியின் முனையை வைத்து எரிந்த பகுதியை உள்ளே வைத்து ஒரு கயிற்றால் கட்டினான். எரிந்திருந்த கரித்தூளை எடுத்து என் கண் முன்னாலேயே அந்த தம்ளர் தண்ணீரில் கரைத்தான். பிறகு கொஞ்சம் அதில் உப்பையும் சேர்த்துக் கரைத்தான். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு dramatic effect-க்கு ஆகத்தான் இருக்கும்; வேறென்ன taste-க்காகவா இருக்கப் போகிறது? ‘மந்திரக்கோலை’ வைத்துதான் கரைத்தான். நடுவில் அந்த மண்டை ஓடு + கை எலும்பு இரண்டையும் வைத்து கொஞ்சம் ‘ஜூஜா வேலை’ காண்பித்தான்.

அதோடு விட்டானா, பாவி. என்னை எழுப்பி, ‘போ; அந்த தம்ளரில் உள்ளதை தெரு முக்கில் கொட்டிவிட்டு திரும்பிப் பாராமல் வா’ என்றான். நாங்களோ அந்த வயதில் இந்த மாதிரி வீட்டுப் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டு போறதெல்லாம் நம்ம தகுதிக்குக் குறைச்சல்னு நினைக்கிற டைப்; அதவிடவும்
நம்ம குதிரையில், அதாங்க நம்ம ஜாவா பைக்கில் அந்த சின்ன சந்தில்’சர்ரு..புர்ருன்னு’ போனவைய்ங்க..ஆனாலும் தல சொல்லியாச்சே .. வேற வழி ஏது; தலைவிதியேன்னு தம்ளரோடு தெருமுனைவரை போய்,ஒரு வழியா அதக் கொட்டிவிட்டுத் திரும்பிவந்தேன். இப்போ கிளைமேக்ஸ்… ‘இப்போ வேட்டியில போட்ட முடிச்சை அவிழ்க்கிறேன். உன் வேட்டி நல்லா இருந்தா கேட்ட காணிக்கையைக் கொடு’ அப்டின்னுட்டு, முடிச்சவிழ்த்தான். நம்பவே முடியலைங்க…வேட்டி முழுசா ஒரு பழுதுமில்லாம இருந்திச்சு. அங்கங்கே கொஞ்சம் கைபட்ட அழுக்கு தவிர வேறு எந்த குறையுமில்லை. அந்த இடத்தைவிட்டு ஆளைக் கிளப்பினால் போதும் என்ற நினைப்பில் கேட்ட காசைக் கொடுத்து அனுப்பினோம்.

இது என்ன மாயம்? ஹிப்னாட்டிசம் / கண்கட்டு வித்தை / black magic - இப்படி என்னென்னமோவெல்லாம் சொல்லுவாங்களே - இதில் இது எந்த டைப்? எப்படி இது அவனுக்குச் சாத்தியமானது? எனக்கு இதுவரை இதற்குப் பதில் தெரியவில்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Jan 31 2006 10:35 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
3 Responses
ramachandran usha Says:
January 31st, 2006 at 10:56 pm e


karthikjayanth Says:
January 31st, 2006 at 11:46 pm e
தருமி sir,

//அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item pine apple juice//
இந்த line கு அப்புரம் பட்டிக்க முடியல்ல.காதுல புகை வருது சொல்லிட்டேன்

India ல இருக்குரப்ப நின்னா, நடந்தால், நினைத்தாலே பிரியானி தான் .அம்சவல்லி, அன்பகம், முனியான்டி விலாஸ், அருளனைதர் மெஸ் (ரசம்) அம்மா மெஸ், road side கடை பரொட்டா, இட்லி&சட்னி, அப்புரம் இன்னும் நிரய்ய கடை எல்லாம் பழைய நினைப்பு

கோபி Says:
February 1st, 2006 at 8:45 am e
//அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு.//

எனக்கும் இப்படி ஒரு அனுபவம் நடந்தது. வீட்ல பாட்டி தொல்லையால வந்தது.

சில்லரை காசு, அரிசி எல்லாம் (கடைசியா திரும்பித்தர்றேன்னு சொன்னதால) வச்சேன். எல்லா வித்தையும் காட்டிட்டு அரிசி, காசு எல்லாம் எடுத்து அவன் பையில போட எடுத்தான்.

“என்னைய்யா திரும்பித்தர்றேன்னு சொன்ன”என்றதற்கு

“மந்திரிச்சிருக்கு தம்பி. இதுல பொங்கி சாப்பிச்சா ரத்தம் கக்கி செத்துருவ”ன்னான்.

ஒருவழியா அவன்கிட்ட சண்டை போட்டு அவன் முன்னாலேயே காசை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து அனுப்பிவைத்தேன்.

சாபம் விட்டுக்கிட்டே போனான். அரிசி என்னாச்சின்னு கேக்கறீங்களா?

ஹி.. ஹி.. நான் இப்ப ஆவியா வந்து எழுதிகிட்டு இருக்கறத பாத்தாவே தெரியுமே..

No comments:

Post a Comment