Thursday, June 10, 2010

400. அமினா - ஒரு திறனாய்வு

*
அமினா பற்றிய முந்திய பதிவு ..... 

*
மதுரையிலிருந்து பேரா. ஜேம்ஸ் என்பவரால் நடத்தப்படும் சிறு மாத இதழ் "மனித நேயம்". வழக்கமாக இவ்விதழில் எழுதி வரும் முனைவர் பேரா.டாக்டர் வின்சென்ட் இவ்வாண்டின் மே மாத இதழில் அமினா என்ற என் மொழிபெயர்ப்பு நூலின் மீது ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். டாக். வின்சென்ட் நைஜீரிய புதின எழுத்தாளர் சினு அச்சிபி்யின் புதினங்கள் மீது Ph.D.க்கான தன் ஆய்வுக்கட்டுரை எழுதியவர். அவரது கட்டுரை:


நூல் :         அமினா 
ஆசிரியர்: முகமது உமர்

தமிழில்: தருமி 
பதிப்பு: கிழக்கு

பக்கம்: 368 
விலை: ரூ. 200

ஆப்ரிக்க நாடுகளின் ஆங்கிலப் படைப்புகள் உலக இலக்கியத்தில் உயர்வாக மதிக்கப்படுபவை. குறிப்பாக நைஜீரிய நாட்டின் வளமான இலக்கியப் படைப்புகள் அரை நூற்றாண்டிற்கு மேல் வாசகர்களையும் திறனாய்வாளர்களையும் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. சினு அச்சிபியும், நோபெல் பரிசு பெற்ற ஓலே சோயிக்காவும் உலகப் பெரும் எழுத்தாளர்கள் வரிசையிலே இடம் பெற்றவர்கள். எனினும் வடக்கு நைஜீரியாவிலிருந்து இப்போதுதான் ஆங்கிலத்தில் படைப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவற்றில் முதன்மையாகக் கருதப்பட வேண்டியது முகமது உமர் எழுதிய அமினா என்ற நூல்.

இந்தப் புதினம் நைஜீரியாவில் இஸ்லாமியர் நிறைந்த பக்காவோ நகரினைப் பின்புலமாகக் கொண்டு இஸ்லாமியப் பெண்களின் அவலநிலையை சிந்திக்கிறது. கதைத் தலைவி அமீனா மாநில மக்களவை உறுப்பினர் ஹமணாவின் நான்காவது மனைவி. படித்தவள். தொடக்கத்தில் தன் அழகு, செல்வம், கணவரின் பதவி தந்த செருக்கில் மிதந்தவள்.  ஆனால் அவளுடைய தோழி பாத்திமா என்ற பெண் விடுதலைப் போராளி அவளைத் தன் பக்கம் ஈர்க்கிறாள்.  ஹருணாவின் வீட்டில் பாத்திமாவின் கூட்டாளிகள் சந்திக்கிறார்கள். முதலில் அவர்களுடைய வழியில் செல்லாத அமீனா, பிறகு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொண்டாள்.  அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் கணவன், அவனுடைய பெண்ணடிமைக் கொள்கையை எதிர்த்துப் போராடும் கூட்டம் என்று அலைக்கழிக்கப்படுகிற அமீனா பெண்கள் இயக்கத்தில் தலைவியாகிறாள். அவளுடைய கணவன் மக்களவையில் கொண்டு வந்த பெண்ணடிமைத் தீர்மானத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்துகிறார், அவள் காப்பாற்றி வளர்த்த பெண் லாராய் துப்பாகிச் சூட்டில் இறக்கிறாள். அமீனாவும் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறாள். வழக்கு மன்றத்தில் அமீனாவே தனக்காக வாதாடுகிறாள். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பாத்திமா அமீனாவிற்கு ஐ.நா. சபை மாநாட்டுப் பத்திரம் தரப் போவதாக அவளுக்குத் தெரிவிக்கிறாள். இந்தப் போராட்டம் தோற்றாலும், அடுத்த போராட்டம் வெற்றி தரும். "ஒளிமயமான எதிர்காலம் கைக்கெட்டும் தூரத்தில் தான்" என்ற் நம்பிக்கைச் சொற்களோடு நாவல் முடிகிறது.

நைஜீரியாவில் பரவி இருக்கும் ஊழல், பதவிப்போர் ஆகியவற்றைப் படம், பிடித்துக் காட்டும் இந்நாவல் இஸ்லாமியப் பெண்களின் அவல நிலையை நெஞ்சுருகச் சொல்லுகின்றது. பலதாரமணம், பெண்களுக்கு மறுக்கப்படும் அடிப்படை உரிமைகள், பெண்களை அடித்துத் துன்புறுத்துதல் முதலியன நைஜீரிய இஸ்லாமிய சமூகம் அங்கீகரித்தவை. மகன் ரஷித்தின் உயிரைக் காப்பாற்றக் கதறியழும் அமீனாவை ஹருணா சந்தேகத்தின் பேரில் கண்மண் தெரியாமல் அடித்துத் துன்புறுத்துவது கொடூரமான சோகம்.

நைஜீரியாவின் பெண்ணடிமைத்தனத்தையும், ஊழலையும் விவரிக்கும் முயற்சியில் உயர்நாவலின் கட்டமைப்பை மறந்து விடுகிறார். பாத்திரப்படைப்பில் அழுத்தமில்லை. எனினும் ஒரு பெண் போராளியின் கதை என்ற முறையில் நைஜீரிய இஸ்லாமிய சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிற புதினம் இது. 'தருமி' என்ற புனைப்பெயரில் எழுதுகின்ற பேராசிரியர் சாம் ஜார்ஜ் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.  ஆற்றொழுக்கான நடை. ஒரு சில இடங்களில் சொற்களில் தடுமாற்றம் இருந்தாலும், கதை சொல்லும் பாணி மிக நன்று. பெண்ணிய ஆர்வலர் அவசியம் படிக்க வேண்டும்.

.................... பேராசிரியர் ச. வின்சென்ட்


*


10 comments:

கோவி.கண்ணன் said...

தங்கள் மொழிப் பெயர்ப்பில் வந்த நூலா....மகிழ்ச்சி

பாராட்டுக்கள் ஐயா

வால்பையன் said...

400 வது பதிவாக அருமையான பகிர்வு சார்!
இன்னும் பால்லாயிரம் எழுதி என்னை போன்ற மாணவர்களுக்கு நிறைய கற்றுதர வேண்டும் என்பது என் வேண்டுகோள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் ஐயா.. அடுத்த புத்தக வேலையைக் கூடிய சீக்கிரம் ஆரம்பிங்க..:-)))

cheena (சீனா) said...

அன்பின் தருமி அண்ணே

சத்தமில்லாமல் தமிழாக்கமா - 400 வது இடுகை சூப்பர் - 200 ரூபாவா - வாங்கிடறேன் - படிக்கறேன் ( சிரிக்காதீங்க - செஞ்சிடுவேன் ) - நல்வாழ்த்துகள் அண்ணே
நட்புடன் தம்பி சீனா

துளசி கோபால் said...

புத்தகத்துக்கு இன்னொரு சிறப்பு வாழ்த்து!!!!!

துளசி கோபால் said...

நா நூறுக்கு வாழ்த்து(க்)கள்.

ஆபிசர் said...

இந்த வேலை எல்லாம் எப்ப ஆர்மிச்சீங்க.சூப்பர்.வாங்கி படிக்க முயற்சி பண்றன்

Baranee said...

Not yet started reading, Hmm..its a reminder for me..

Congratulation for the 4th century...

Regards,
Baranee

மதுரை சரவணன் said...

தருமி அய்யா பல சந்திப்புகளில் இப்புத்தகத்தின் பெயரினை கேட்டு பெற நினைத்தும் மறந்துள்ளேன். தங்களுக்கு தெரியாமலே வெளி வந்து பதிப்புலகில் புதிய அனுபவத்தை தந்த புத்தகம் , இருப்பினும் இம் மாதிரி மதிப்பீடு உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். அடுத்த புத்தகம் விரைவில் உங்கள் எற்புரையுடன் வெளி வர முயற்சி எடுப்போம். புத்தக மதிப்பீடு புத்தகத்தினை வாங்கி படிக்க தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

தருமி said...

கோவீஸ்,
வால்ஸ்,
காபா,
சீனா,
துளசி,
துளசி,
சரவணன்,
ஆப்பீசர்,
பரணி,

................. அனைவருக்கும் மிக்க நன்றி.

Post a Comment