Thursday, June 17, 2010

402. FIFA - 2010 --- ஒரு புதிய விளையாட்டிற்கான இணையப் பக்கம்

 *

உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பார்ப்பது என்னவோ ஒரு தவம் மாதிரி ஆகிப் போச்சு. சென்ற கோப்பையில் ஆங்கிலத்தில் 'எனக்கு நானே' என்பது மாதிரி சில குட்டி குட்டிப் பதிவுகள் போட்டு ஆற்றிக் கொண்டேன்.
இந்த வருடம் புதிய பதிவு ஒன்றை உலகக் கால்பந்து கோப்பைக்காகவே ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. ஆனால் அதில் நாம் மட்டும் "தனியாக" உட்கார்ந்து எழுதி,  நான் மட்டுமே அதனைப் படித்து - இங்க கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் வைத்து யார் எழுத, வாசிக்கப் போவது -  என்ற நினைப்பில் விட்டு விட்டேன். அதை என் பதிவொன்றில் படித்தவர் ஒரு பின்னூட்டத்தில் தன் இணையப் பக்கம் பற்றிக் கூறி வரவேற்றிருந்தார். எட்டிப் பார்த்தேன்.


தமிழ் ஸ்போர்ட்ஸ் நியூஸ் என்ற ஒரு வலைப்பக்கம். எல்லா விளையாட்டுப் போட்டிகள், அதிலும் இப்போது உலகக்கோப்பைக்கான சிறப்புச் செய்திகள் என்று கொத்து கொத்தாக பல கட்டுரைகள். படங்களும் மிக அழகாகக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆஹா .. ஆசைப்பட்டதற்கு மேல் நல்ல ஒரு இணையப் பக்கம் இருக்கிறதே ... அதுவும் உலகக்கோப்பைக்கு இத்தனை சிறப்பான இடமா என்ற மகிழ்ச்சி. நண்பருக்கு ஒரு வாழ்த்துச் செய்தி சொன்னேன். அவரோ நீங்கள் கூட இதில் கட்டுரை எழுதலாமே என்று சொல்லி விட்டார்; போதாதா நமக்கு .. உடனே ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன், இன்று காலை அதுவும் வந்து விட்டது.  ஒரே கல்லில் பல மாங்காய். விளையாட்டிற்காக ஒரு நல்ல இணையப் பக்கம். நண்பரின் தீராத தாகமாம் அது. இந்த இணையம் நன்கு வளர்ந்து செழிக்க என் வாழ்த்துக்கள்.

இதன் ஆசிரியர் குமரன்  இரு வாரத்திற்கு முன்பும், இந்த வாரமும் ஆ.வி.யில் உலகக்கோப்பை பற்றிய தன் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இவ்வார ஆவியில் "கால்பந்து ஜூரத்தை டிகிரி டிகிரியாக உச்சத்துக்கு ஏற்றும் தளம்" என்று ஆ.வி. வரவேற்பறையில் அவரது தளத்தைப் பற்றி வந்துள்ளது.

கால்பந்திற்கான அவரது படைப்பிற்காக அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி.

அவர் இணையத்திற்காக நானெழுதியதை இங்கே மீண்டும் தருகிறேன்.

அர்ஜென்டினா,பிரேசில்,ஸ்பெயின் ஆட்டங்கள்-மதுரை தருமி விமர்சனம்(உலக கோப்பை கால்பந்து போட்டி துவங்கும் முன் பீலே ஆதரவளித்தால்,அந்த அணி தோற்கும் என்ற தலைப்பில் தமிழ்ஸ்போர்ட்ஸ்நியூஸ்.காம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரைரை பற்றியும் தற்போது பிரேசில்,ஸ்பெயின்,அர்ஜென்டினா அணிகளின் விளையாட்டு குறித்தும் மதுரையை சேர்ந்த நமது வாசகர் தருமி என்பவர் அனுப்பிய கட்டுரையை இங்கே வெளியிட்டுள்ளோம்.)


 பந்தயங்கள் தொடங்கி 5 நாட்களாகி விட்டன. ப்ரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின் மூன்று நாடுகளின் விளையாட்டுகளை தவற விடக்கூடாது  என்று நினைத்திருந்தேன். அதே போல் முதலில் அர்ஜென்டினா நைஜீரியாவுடன் விளையாடியதைப் பார்த்த போது நைஜீரியாவின் கோல்கீப்பர் மிகவும் பிடித்தது. அர்ஜென்டினாவிற்கு இன்னும் ‘சூடு’ பிடிக்கணும் என்றே நினைக்கிறேன். எதிர்பார்த்த விறுவிறுப்போ வேகமோ அர்ஜென்டினாவிடம் பார்க்கவில்லை.

  சரி! அர்ஜென்டினா இப்படி ஆகிப் போச்சே என்று ப்ரேசில் ஆட்டம் பார்க்க உட்கார்ந்தேன். காலை 12.30 மணிக்கு ஆட்டம். வீட்டில் ‘சண்டை போட்டு’ அந்த இரவு நேரத்தில் விளையாட்டை முழுசுமாகப் பார்த்தேன். (காலையில் வழக்கம்போல் எழுந்து ஷட்டில் காக் விளையாடப் புறப்பட்டால், தங்ஸ் மண்டையில் தட்டி தூங்கச் சொல்லி விட்டார்கள்!)  சும்மா சொல்லக்கூடாது … அவர்கள் விளையாட்டு தனி அழகுதான். போட்டி ஆரம்பித்த முதல் சில நிமிடங்களிலேயே -ராபின்ஹோ என்று நினைக்கிறேன் - பந்தை அழகாக dribble செய்ததை – காலும் பந்து ‘விளையாடியதை’ – தொலக்காட்சியில் தனியாகப் பிடித்திருந்தார்கள். இந்த அழகை ரொனால்டோவிடம் பார்த்த நினைவுண்டு.

 ஆனாலும் ப்ரேசில் பந்தைத் தங்களோடு அதிகமாக வைத்திருந்தாலும் வட கொரிய அணியின் தடுப்பாட்டத்தால் அவர்களால் கோல் ஏதும் போட முடியவில்லை. இரு அணிகளும் கொரியாவின் கோல் ஏரியாவிலேயே அதிகமாக இருந்தன. இதுபோன்ற ஆட்டங்களில் பந்து ஒரு முனையிலேயே இருக்கும்போது திடீரென்று பந்து எதிர்த்திசைக்குச் சென்று எளிதாக கோல் அடிக்கும் நிகழ்வு சாதாரணமானதுதான். அதே மாதிரி இன்றும் நடக்கப் போகிறது என்று பயந்து கொண்டிருந்தேன். எப்படியோ ப்ரேசில் இரு கோல்கள் போட்ட பின்பு, நான் நினைத்தது நடந்தது. 2:1 என்ற கோல்கணக்கில் வென்றாலும் முதல் ஆட்டத்தில், தரவரிசையில் மிகவும் கீழே இருக்கும் வடகொரியாவிடம் ப்ரேசில் இவ்வளவு ‘தண்ணி குடிக்கிறதே’ என்று நினைத்தேன்.நினைவில் கொள்ள வேண்டிய விதயம் என்னவென்றால் ப்ரேசின் முதல் கோல் மைக்கான் என்பவரால் நினைக்க முடியாத கோணத்திலிருந்து அடித்த பந்துதான். கடைசி அவுட் ஆகும் நேரத்தில் இருந்த பந்தை அடிக்க, அது வளைந்து கோலுக்குள் நுழைந்தது அருமை.

 அர்ஜென்டினா, ப்ரேசில் இப்படி என்றால் நிரம்பப் புகழப்படும் ஸ்பெயின் ஆட்டம் எப்படி இருந்தது? பாவம்தான். நான் முன்பு சொன்னது போல் பந்து என்னவோ ஸ்பெயின்காரர்களிடம்தான் இருந்தது. ஆனால் ஏதும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. விளையாட்டு இழுத்துக் கொண்டே போனது. இறுதியில் கோல் விழுந்தது ஸ்பெயினுக்குத்தான். அதன் பின் கடைசி 15 நிமிடங்களில் அவர்கள் விளையாடியது நன்கிருந்தது. அந்த வேகம் ஏன் முதலில் இல்லாமல் போனதோ தெரியவில்லை. நம்ம ஊரு கதாநாயகர்கள் மாதிரி முதலில் கோல் வாங்கினால்தான் ஸ்பெயினுக்குச் சூடு ஏறுமோ என்னவோ தெரியவில்லை.எப்படியோ ப்ரேசில், அர்ஜென்டினா, ஸ்பெயின் மூன்று நாடுகளின் விளையாட்டுகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. போகப் போக நன்றாக விளையாடினால் நன்றாக இருக்கும். அப்போதுதான் எதிர்பார்ப்புகள் வீணாகாது முனைப்போடு பந்தயத்தைத் தொடர்ந்த் பார்க்க முடியும்.

 எனது பழைய கேள்வி ஒன்று. ஏன் தெற்காப்பிரிக்க கிரிக்கெட் அணியில் வெள்ளைத்தோல்காரர்கள் மட்டும் இருக்கிறார்களே என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் இப்போது இன்னொரு கேள்வியும் சேர்ந்து கொண்டது. அது எப்படி கால்பந்து விளையாட்டில் அந்த அணியில் அனேகமாக முழுவதும் கருப்பினத்தவர்கள் மட்டுமே விளையாடும்போது, கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளைத் தோல்காரர்கள் அதிகமாக இருப்பதன் அரசியல் என்னவோ? தெரிந்தோர் சொன்னால் கேட்டுக் கொள்வேன்.


7 comments:

உமர் | Umar said...

//ப்ரேசின் முதல் கோல் மைக்கான் என்பவரால் நினைக்க முடியாத கோணத்திலிருந்து அடித்த பந்துதான். கடைசி அவுட் ஆகும் நேரத்தில் இருந்த பந்தை அடிக்க, அது வளைந்து கோலுக்குள் நுழைந்தது அருமை.//

அதற்கான யூட்யூப் சுட்டி

உமர் | Umar said...

இன்னும் சிறப்பான ஆங்கிளில்

நாகை சிவா said...

அண்ணாச்சி... ஸ்பெயின் எங்கு கோல் போட்டது? சுவிஸ் அல்லவா ஒரு கோல் போட்டது.... பால் என்னவோ 80 % ஸ்பெயினிடன் தான் இருந்தது. இது கதைக்கு ஆகாது போல... நீங்கள் இரு அணிகளும் எனக்கு பிடித்தவை அது கூட ஸ்பெயின் னை தூக்கி விட்டு ஜெர்மனி யை சேர்த்தாச்சு, அவர்களின் முதல் ஆட்டத்தை பார்த்த பிறகு :)

தருமி said...

இல்லீங்களே நாகை அண்ணாச்சி .. //இறுதியில் கோல் விழுந்தது ஸ்பெயினுக்குத்தான்// சரியாத்தானே சொல்லியிருக்கேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அப்படி இபடின்னு ஐயாவோட ஆசை நிறைவேறியாச்சு.. நல்லது.. பார்ப்போம் ஐயா.. நம்மளால ஏதாவது செய்ய முடியுதான்னு பார்க்குறேன்.. வாய்ப்பு கிடைக்குமா?

தருமி said...

//வாய்ப்பு கிடைக்குமா?//

கூப்பிட்டுக்கிட்டு இருக்கிறாரே ...

ஆபிசர் said...

see invictus movie.it shows why football is ver popular among blacks

Post a Comment