Saturday, June 19, 2010

403. FIFA - 2010

*

முனிசாமி, ஆண்டிச்சாமி, அழகர்சாமி, குழந்தை சாமி, கோட்டைச் சாமி, ராமசாமி, இப்படி சாமி பேருகளையா வச்சிக்கிட்டு ஒரு டீம் இருக்குதுன்னு வச்சுக்குவோம்.
அந்த டீம் விளையாடுற விளையாட்டை யாரும் நேர்முக வர்ணனை செய்தால் எப்படி பெயர்களை நினைவில் வைத்து விளக்குவார்களோ தெரியாது. அதே மாதிரி இன்று ஸ்லோவேனியாவின் வீரர்களின் பெயர்களை வைத்து வர்ணனையாளர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ .. ஒரே ஆச்சரியம்தான். அவர்கள் பெயர்களில் சில: Handanovic, Mavric, Filekovic, Radosavljevic, Stevanovic,Ljubijankic, Novakovic.


பெயர்கள் எப்படியோ? அமெரிக்கவுடனான அவர்கள் விளையாட்டு நன்றாக இருந்தது. முதல் பாதியில் இரு கோல்கள் போட்டார்கள். இரண்டாவது பகுதியின் முதலில் அமெரிக்கா முயற்சித்தும் முடியாதது போலவே இருந்தது. சரிதான் .. அமெரிக்கா தோற்கப் போகிறது என்ற நிலையில் டோனோவேன் தொலைவிலிருந்து அடித்த பந்து, ஸ்லோவேனிய கோல் கீப்பரை அசையாமல் நிலை நிறுத்தி விரைந்து சென்று கோலானது. அடுத்து கடைசி நேரத்தில் ப்ராட்லி அடுத்த கோலை அடித்தார். மீதியுள்ள கடைசி 10 நிமிடங்களும் இரு தரப்பும் வெறியோடு ஆடியும் ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

*** ***

ஆஸ்த்ரேலியாவை நான்கு கோல்கள் போட்டு வென்ற ஜெர்மன்காரர்கள் கீழ் ரேன்க் உள்ள செர்பியாவிடம் ஒரு கோல்வாங்கித் தோற்றுப் போனது. ஆட்டத்திலும் நிறைய fouls (தமிழில் ..? தப்பாட்டம்!) ஜெர்மன் குழுவில் இருந்தது. முதலிலேயே சொல்ல நினைத்த ஒரு விதயம்; ப்ரேசில் வடகொரியாவுடன் ஆடிய ஆட்டம் மட்டுமே இதுவரை மிகக் குறைந்த தப்பாட்டங்களோடு இருந்தது. வெற்றி பெறும் நிலையில் கருதப்படும் ஜெர்மனி இனி என்ன ஆகுதோ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*** ***


1986-ல் முதல் முறையாக தொலைக்காட்சியில் உலகக்கோப்பை விளையாட்டுக்களைப் பார்த்த போது ரீவைண்ட் காட்சிகள் கூட மிக ஆச்சரியமாகத் தோன்றின. அப்போதைக்கு அவை மிகவும் புதிது. அதன் பின்னும் கிரிக்கெட் ஆட்டங்களில் spin view என்று பந்தை மட்டும் ‘கவர்’ செய்யும் காட்சிகளைப் பார்க்கும் போது ஆச்சரியம்; அது எப்படி முடியுமென்று கேட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இப்போதும் அது போலவே எத்தனை காமிராக்கள்; எப்படியெல்லாம் அவை இயங்குகின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக உள்ளன. மேலிருந்து சில காமிராக்கள் தரை வரை வந்து மீண்டும் உயரச் செல்வது அவைகளின் சில நிழல்களிலிருந்து தெரிகின்றன. மேலே இருந்து எடுக்கப்படும் காட்சிகள் எப்படி படமெடுக்கப்படுகின்றன என்பது ஆச்சரியமே. அந்தக் காமிராக்கள் மேலே எத்தனை உயரத்தில் இருக்கின்றன; மைதானம் முழுமையையும் எப்படி ஆக்கிரமிக்கின்றன. தேசியப்பாடல்கள் பாடும்போது வளைந்து தரையிறங்கி, பின் வீரர்களின் முகம் காண்பித்து மீண்டும் மேலே செல்லும் அந்தக் காமிராக்கள் அதிசயம்தான்.


***

*






2 comments:

உமர் | Umar said...

//மேலிருந்து சில காமிராக்கள் தரை வரை வந்து மீண்டும் உயரச் செல்வது அவைகளின் சில நிழல்களிலிருந்து தெரிகின்றன. //

ஜிம்மி ஜிப் கிரேன் என்னும் கருவியில் அக்கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மேலதிக தகவல்களுக்கு

கையேடு said...

அர்ஜெண்டினா - கீரீஸ் ஆட்டம் பார்க்கவில்லையா.. அதைப் பற்றி எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.

Post a Comment