*
சிங்கையில் இறங்கியதும் சில cultural shocks இருந்தது. எல்லாம் நம் கீழை நாடுதானே ... நம்மவர் பலரும் இருக்குமிடந்தானே என்று நினைத்து வந்தால் இங்கே அமெரிக்காவின் சாயலை அப்படியே பார்க்க முடிந்தது. சாலைகள், விரையும் வண்டிகள், சாலை விதிகள், அப்பழுக்கற்று அவைகளைப் பின்பற்றும் மக்கள், நடைபாதைகளின் அழகு, பராமரிப்பு, ரயில், பேருந்துகளின் அழகான நிலை, விரைந்து வரும் மக்களிடமும் காணப்படும் நாகரீகம் -- இப்படி அந்த லிஸ்ட் மிக மிக நீளம்.
ஆச்சரியங்களை அளித்த இந்த வேற்றுமைகளோடு, ஷாக் கொடுத்த இன்னொரு விஷயம் -- மக்களின் ஆடைகள். பலரும், பொதுவாக அனைத்து சீனப் பெண் மக்களும் வயது வேற்றுமையின்றி அணிந்திருந்த ஆடைகள் முதல் இரு நாளில் என்னை வாயைப் பிளக்க வைத்தன. மிக மிகச்சிறிய கால் சராய்கள். மேலே போட்டிருக்கும் ஆடைகளும் எந்த வித fixed style என்றில்லாமல் 'என்னத்தையோ' போட்டுக் கொண்டிருந்தார்கள். உள்ளாடைகளின் நாடாவும், வெளியாடையின் நாடாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்கும். (நம்மூரில் அதற்கு sunday is longer than monday என்றெல்லாம் குழூக்குறிகள் உண்டு; அந்த மக்களுக்கு அந்தக் கவலையே இல்லை.) Wondering whether it was all a "calculated carelessness"?!
இப்படி அரை குறையாக ஆடை அணிந்து செல்கிறார்களே என்று ஆண்கள் யாரும் வாய்பிளந்து நிற்கிறார்களா என்றால் யாரும் இல்லை. முதல் இரு நாளில் எனக்கு இது வேடிக்கையாகவும், விநோதமாகவும் தெரிந்தது - மூன்றாவது நாளிலிருந்து அப்படியில்லை. என்னைப் போலவே ஒரு தமிழ் இளந்தாரி ஒரு நாளில் வாய்பிளந்து பார்ப்பதைப் பார்த்தேன். ஒரு வேளை அவனும் இப்போதுதான் சிங்கைக்கு வந்திருக்க வேண்டும்.
தொலைக் காட்சியில் ஒரு முறை நடிகைகள் ஷ்ரேயா (மிகச்சின்ன கால் சராயைப் போட்டுக் கொண்டு கால் மேல் கால் மாற்றி உட்கார்ந்திருந்தார்.), ரீமா சென் மேலே பட்டை ஏதுமில்லாமல் 'எப்படியோ தொங்கிக் கொண்டிருக்கும்' மேல்சட்டையுடன் இருந்தவைகளைப் பார்க்கும்போது எனக்கே 'என்னடா இப்படி இதுக எல்லாம் சட்டை போடுதுகள்' அப்டின்னு நினைத்தேன். நாலு இடம் பார்த்தாதான் 'இதெல்லாம் சகஜமப்பா' அப்டின்ற நினைப்பு வரும் போலும்.
நம்மூர்ல நடிகைகள் போடும் ஆடைகளை சர்வ சாதாரணமாக இங்கே எல்லா மக்களும் போட்டுக் கொண்டு போவதைப் பார்த்த பின்தான் நாம் தான் காலத்தால் மிகவும் பின் தங்கி விட்டோம் அப்டின்னு தோன்றியது.
அறுபது எழுபதுகளில் 'வாலிப வயசில்' இருந்த அப்போதைய இளைஞர்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள்; அவர்கள் ஆடைகளுக்குக் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரியாதுதான். அப்போதெல்லாம் ரெடிமேட் ஆடைகள் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கென்றுதான் நாங்கள் சொல்வோம் -- விலை அப்படி இருக்கும். எல்லோரும் போடுவதெல்லாம் tailored ஆடைகள்தான். அப்போதெல்லாம் அமெரிக்காவில் பணக்காரர்கள் மட்டுமே tailored ஆடைகள் போடுவார்கள் என்பது எங்களுக்கு ஆச்சரியாக இருக்கும்.
சட்டை போட்டு 'டக்' பண்ணினால், சட்டையின் பின் பக்கம் தோள்பட்டை பக்கம் உள்ள இரு மடிப்புகள் மடிப்பு மாறாமல் நெடுக இருந்து, அதை டக் செய்யணும். ஒரு வேளை ஸ்லாக் சட்டை போட்டால் அதன் முன் மடிப்பு அப்படியே நேராக pants-ன் முன் மடிப்பில் சரியாகப் பொருந்தணும். pants-ன் pleats - மடிப்புகள் நன்றாக தைக்கப்பட்டு, சரியாக iron செய்யப்பட்டு கத்தி மாதிரி இருக்கணும். அட ... ஷூ கூட அவ்வப்போது டிசைன் மாறும். ஒரு தடவை ஊசி மாதிரி .. கொஞ்ச நாளில் ஷூவின் முனை தட்டையாக இருக்கணும். லேடிஸ் ஹை ஹீல்ஸ் செருப்பு மாதிரி கொஞ்ச நாள் ஆண்கள் ஷூவும் உயர்ந்த ஹீல்ஸோடு போட்டோம். (மோகன் - அதாங்க .. மைக் பிடிச்சிக்கிட்டு பாடிக்கிட்டே ஒரு நடிகர் இருப்பாரே, அவரது ட்ரேட் மார்க்கே அந்த டைப் ஷூ தான்!) இந்த பெல்ட் இல்லை ... அது பட்ட பாடு. 65-ம் வருடத்தில் பெல்ட் நம் அரை ஞாண் கயிறு சைசில் இருக்கும். அதிலிருந்து நாலைந்து ஆண்டுகள் கழித்து சரியான பட்டை சைசில் ஆயிரிச்சி. உரித்தெடுக்கும் டைட் pants அறுபதுகளின் கடைசியில். ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் படா பெல் பாட்டம்ஸ்.
எழுபது வரை இப்படி இருந்த 'ஸ்டைல்' தொன்னூறுகளில் முற்றிலும் மாறி விட்டது. ரெடிமேட் ஆடைகளின் காலம் ஆரம்பித்தது. அதுவரை தனித்தனியாக தைத்து போட்ட ஆடைகளில் நாங்கள் காட்டிய நுணுக்கங்கள் காணாமல் போனது. ஜீன்ஸுகள் வந்தன. casual wear என்ற காலம் பிறந்து விட்டது. அறுபதிலிருந்து எண்பதுகளின் கடைசி வரை டைட்ஸ், பெல் பாட்டம்ஸ் என்றெல்லாம் மாறி மாறி வந்த pants அனேகமாக ஒரே "ரூபத்தைப்" பெற்றன. அதன்பிறகு ஆண்களின் ஆடையில் மாற்றங்கள் மிகக் கம்மி.
ஆண்கள் ஆடையில்தான் இந்த மாற்றங்களா என்றால் பெண்களின் ஆடையிலும் தான். தாவணிகள் போய் சூரிதார் வரும்போது மிகவும் அவை மிக மெல்ல மெல்லவே வந்தன. பெண்களுக்கும் தடுமாற்றம். சமூகத்திற்கும் அதை ஒத்துக் கொள்ள காலம் எடுத்தது. ஒரு மாணவி சூரிதார் போட்டு என வகுப்பிற்கு வந்தால் நான் வகுப்பெடுக்க மாட்டேன் என்ற கல்லூரி ஆசிரியர்களும் இருந்தார்கள். தாவணி --> சூரிதார் -- இதற்கெடுத்த காலத்தையும் விட குறைவாகவே சூரிதார் --> pants எடுத்தது. அதிலும் மதுரையை விட சென்னையில் இந்த வேகம் கொஞ்சம் அதிகம். சென்னையை விட பெண்களூரில் இன்னும் வேகம். அதையும் தாண்டி அடுத்த நாடுகளில் வேகம் இன்னும் அதிகம். நமது நாட்டில் pants வரை பெண்கள் வந்து விட்டார்கள். அரைக்கால் சட்டையும் மெல்ல எட்டிப் பார்க்கிறது. சிங்கையில் முழுமையாக வந்து விட்டது.
சிங்கையில் ஒரு வாரம் இருந்து விட்டு விமான நிலையத்தில் கூட்டமாய் காத்திருந்த போது சுற்றிலும் நம்மூர் பெண்கள். எல்லா பெண்களிடமும், சேலை கட்டியோர் தங்கள் முந்தானைகளிலும், சூரிதார் பெண்கள் தங்கள் துப்பட்டாவிலும் மட்டுமே தங்கள் கற்பு 'தொங்கிக் கொண்டிருப்பது' போல் இருந்ததைக் காண முடிந்தது. அது எனக்கு இப்போது வேடிக்கையாக இருந்தது.
நாங்கள் எழுபதுகளில் உடைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் இப்போது பெண்கள் தங்கள் உடைகளோடு ஒன்றிப் போய் விட்டார்கள். ஆனால் சிங்கைப் பெண்கள் அதையும் தாண்டி வந்து விட்டார்கள். அந்த உடைகளில் அவர்களைப் பார்க்கும் போது working women என்ற ஒரு நினைப்பு உடனே வந்து விடுகின்றது. அதில் முதலில் தோன்றிய so called கவர்ச்சி என்று ஏதுமில்லை. மிக சாதாரணமாகத் தோன்றியது. அந்த பெண்கள் ஆடைகளைத் துறந்து விட்டார்கள். ஆடைகளுக்குரிய அதீத முக்கியத்துவத்தைத் துறந்து விட்டார்கள்.
ALVIN TOFFLER ஆடைகளின் fashions மாறி மாறி வரும் என்பது நிதர்சனமான உண்மை என்று தனது நூல் FUTURE SHOCK-ல் கூறுவார். முப்பது வருடங்களுக்கு ஒரு cycle என்பார் அவர். ஆனாலும் அவர் சொன்னதை விடவே இன்னும் வேகமாகவே மாறி வருகின்றன. அந்த மாற்றங்களை எதிர் நோக்குவதும் அதை ஏற்றுக் கொள்வதுமே நமது தகவுடைத்தன்மை என்பார். நாளை நம்மிடத்தில் மெல்ல வரப்போகும் ஒரு மாற்றத்தை திடீரென்று சிங்கை போனதால் பார்த்தேன்.அதனால் முதலில் சிறிதே FUTURE SHOCK !
*
ஒரு வேளை யாராவது இந்த இடுகையை வாசிக்க நேர்ந்து, ஒரு பின்னூட்டமும் போட நினைத்தல் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
'தமிழ்ப்பண்பாடு' என்ற வார்த்தை அதில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அப்படி ஒன்றுமே, எதுவுமே இல்லை. என்னைப் பொறுத்த வரை 'தமிழ்ப்பண்பாடு' என்பது அடிக்கடி சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை.