Wednesday, March 19, 2014

730. இந்து மதம் எங்கே போகிறது? --- 5
*****  ***இந்து மதம் எங்கே போகிறது?

அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

*****

அதர்வண வேதம் சொல்லும் அறிவுரை.
 “மக்களே ஒன்று கூடுங்கள். கடவுள் ஒருவன் தான். அவனை யார் கூப்பிடுகிறார்களோ அவர்களின் வீட்டுக்கே அவன் போவான். அவன் பழமைக்கும் பழமையானவன். புதுமைக்கும் புதுமையானவரன். கடவுள் ஒருவன் என்றாலும் அவனை வழிபடும் வழிகள் லோகத்தில் பல்வேறு பட்டதாக உள்ளன. அவனை வழிபடும் முறைகள் பல்விதம் என்றாலும் எல்லாம் சரியே. அதனால் அவன் பெயரால் யாரும் யாரையும் தூஷிப்பதோ, நிந்திப்பதோ கூடாது. (231)

சுமார் 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்துக்கு அருகிலேயே உள்ள நாச்சியார் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் அதிகாரிகள் தமிழில் அர்ச்சனை பண்ண்ணும்னு முடிவெடுத்திருக்கிறோம். அதனால் தமிழில் எப்படி எப்படி அர்ச்சனைகள் செய்யலாம்னு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள். தமிழில் எப்படி எப்படி என்று மொழிப்போர் நடத்த ஆரம்பித்தார்கள் சில பட்டாச்சாரியார்கள். (233)

 மற்றவர்கள் மறுத்த போது நான் எழுதி வைத்திருந்ததைக் கொடுத்தேன்.

உயர்வு அற உயர் நலம் உடையவன் போற்றி ... 
மயர்வு அற மதி நிலம் அருளினன் போற்றி ... 
அயர்வு அற அமரர்கள் அதிபதி போற்றி ... – இப்படியாக நாராயணனைப் போற்றும் நாமங்கள் 108 எழுதிக் கொடுத்தேன். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தொடங்கி சில பாசுரங்களை ‘சஹஸ்ரநாமம் பாணியில்’ எடுத்துக் கொடுத்ததுதான். (234)

பகவானின் ஆயிரம் பெயர்களைக் கூறி அவரைப் போற்றிச் சொல்வது தான் சஹஸ்ரநாமம். இதைப் படித்த பார்த்த அதிகாரிகளுக்கு பரம இன்பம்.

தமிழில் இவ்வளவு இனிமையான கருத்து அடர்த்தியுள்ள பக்தி கானங்கள் இருக்கும்போது ஏன் சமஸ்கிருத பாஷையைக் கட்டிக்கொண்டு நாம் அழ வேண்டும்?

இதுபோல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தரும் ‘நல்ல தமிழ் சொற்கோவைகளுடன்’ தமிழிலேயே இறை பூஜைகள் செய்யலாமே என்றனர்.

அதன்படி ஆழ்வார்களின் அருளிச் செயல்களின் அடிப்படையில் நான் எழுதிக் கொடுத்த 108 தமிழ் நாம வழிபாட்டு மொழிகள் அப்போதே அர்ச்சகர்களின் எதிர்ப்போடு, 30-40 வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சாரங்க பாணி பெருமாள் கோவிலில் அரங்கேற்றப்பட்டது. (235)

ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப்பாட்டுகளை திவ்யம் (தூய்மை)+ பிரபந்தம் (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால் தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.

இனிமேலாவது ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பது தான் இந்தப் புனித நூலுக்கு தமிழ்ப்பெயர்.

சமஸ்கிருதம் எப்படி தமிழைக் கட்டிப் போட்டது? (236)

ஆகமக்காரர்களின் ஆதிக்கம் அவர்கள் முழு முதல் சமஸ்கிருதக்காரர்கள். ஆனதால் தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ்ப் பூக்களைத் தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.

இப்படி ’சமஸ்கிருத சர்க்கார்’ நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் தான் ... நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக, ஆங்காங்கே ஆழ்வார்கள் தோன்றினார்கள்.

5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் 12 ஆழ்வார்கள் தோன்றினார்கள். (239)

தினம் தினம் கேட்கும் சமஸ்கிருத சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். இனிய தமிழில் ’திருப்பள்ளியெழுச்சி’ என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்’ புத்தகத்தில் 917 முதல் 920 வரையிலான பாடல்கள் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன். (241)

 ”கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து 
அணைந்தான்; கனை இருள் அகன்றது 
காலை அம் பொழுதாய் 
மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம் 
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி 
எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த 
இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும் 
அதிர்தலில் அலை கடல் போன்றுவிது எங்கும் 
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே ..’ (242)

இந்தத் தமிழ்ப்பாடலுக்கு என்ன குறைச்சல்....?

ஆனால் நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். (243) 

சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ்ப் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா? (244)

திருப்பாணாழ்வாரின் தமிழைக் கேட்பதற்காக ஆளனுப்பி அரங்கத்துப் பெருமாள் அவரை மரியாதையோடு தூக்கி வரச் செய்ததாக கதை உண்டு.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இது எப்படி நடக்கும் என்றால் … மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழில் கேட்கக் காத்திருக்க … உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்திற்கு தூக்கி வருவார்கள். அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்ற பெயர். இது முடிந்த பிறகு … அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள். ஆக தமிழ் உள்ளே போகக் கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கி வருகிறார்கள்! (246)

வைணவத்தில் இப்படி. சைவத்தில் எப்படி?
’தென்னாடுடைய சிவனே போற்றி 
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி’ 

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார். 

திருமறைக்காட்டு சிவன் கோயில் மணி வாசல் வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்ட கதவை சிவனடியார்கள் திறக்க முடியாமல் கஷ்டப்பட்ட போது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிக் கதவைத் திறந்தார்கள். பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ் பாடி திறக்க வேண்டும் என்ற கருத்துருவே நமக்குப் போதும்.(248)

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவ பெருமானுக்கு கோயிலில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் என்ன நிலைமை?

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழே இருக்காது; சமஸ்கிருதம் தான்.(249)

தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது. சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்ச பாஷை பேசியவர்கள் தோற்றார்கள். மிலேச்ச என்றால் non Aryan என்று பொருள்.*


2 comments:

”தளிர் சுரேஷ்” said...

தமிழ் அர்ச்சனை வரவேற்க வேண்டிய ஒன்று!

Ganesan said...

அருமையான தொடர். அறிய தந்தமைக்கு நன்றி தருமி சார்.

இவர் சொல்லியுள்ள பல கருத்துகள் (உங்களின் பகுதி 5 ஐ மட்டும் சொல்லவில்லை, இது வரை வந்த அனைத்தையும் சேர்த்தே) என் எண்ணங்களுடன் ஒத்து போகிறது. இவர் பின்புலம் அறியும் ஆவலில் இணையத்தில் தேடி பார்த்ததில், வேத விற்பன்னர் என்றும், தள்ளாத வயதிலும் வேத காரியங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அறிய முடிகிறது. இப்படிபட்ட பின்புலத்தில் வரும் பல இளைஞர்களே இறுகிய எண்ணங்களுடன் ஒரு வட்டத்தை தாண்டி சிந்திக்காமல் இருப்பதை பார்க்கும் போது, இவர் மேல் மரியாதை கூடுகிறது. இவரின் நேர்மை வியக்கவைக்கிறது. ஆச்சர்யமான மனிதர் தான்.

Post a Comment