Sunday, March 23, 2014

733. கிறிஸ்துவர்களின் கண்களுக்கு ... 3


*


 போப்பாண்டவரின் தவறா வரம் என்று ஒன்றுண்டு. அவர் கூறுபவை அனைத்தும் மிகச் சரியானவை; அவரிடும் கட்டளைகள் என்றும் தவறாக இருக்காது என்பது கத்தோலிக்க மக்களின் நம்பிக்கை. ஆனாலும் போப் சொல்லும் கருத்துகள் என்பதற்குப் பதில் திருச்சபையின் magisterium – கர்தினால்கள் அடங்கிய உயர்ப் பெருங்குழு – கொடுக்கும் கட்டளைகள் மட்டுமே அப்படிப்பட்டவை.

இந்த தவறா வரம் முதல் வத்திக்கான் பேரவையில் 1869-1870 ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. முக்கியமாக ஒன்பதாம் பயஸ் என்ற போப் 1854-ம் ஆண்டு இயற்றிய மேரி மாதாவின் கன்னித் தன்மை, பன்னிரண்டாம் பயஸ் 1950-ம் ஆண்டில் மேரி மாதா பரலோகத்திற்கு ஆரோகணம் செய்தது என்ற இரு கொள்கைகளை நிலை நாட்டியது இந்த கட்டளை.

 பல கேள்விகள் இதைப் பற்றி எழுந்துள்ளன. வரலாற்று நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நிலைப்பாடுகள் இவைகளையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்த தவறா வரம் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே.

 http://en.wikipedia.org/wiki/Papal_infallibility
http://www.catholic.com/tracts/papal-infallibility

*************


 கடவுள் எனக்குக் காட்சி தந்தார் ... என்னோடு பேசினார் ... என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது கடவுள்களின் பிரசன்னத்தை உணர்த்த அல்ல; தங்களை உலகிற்குக் காட்டிக் கொள்வதற்காகவே இத்தகைய காட்சிகள் “உருவாகின்றன”. அதிலும் இது கிறித்துவ மதத்தில் கொஞ்சம் அளவிற்கு அதிகமாகவே காணப்படுகிறது. இங்கேயும் ஒரு கத்தோலிக்க கிறித்துவருக்கு மாதாவோ அல்லது வேறு யாரும் புனிதர்களோ தரிசனம் தருவார்கள். ஏனைய கிறித்துவர்களுக்கு ஏசுவே வருகிறார். அல்லது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சம்மனசு – தேவ தூதர் - வருகிறார் - அதுவும் ஏனென்றே தெரியவில்லை; தேவ தூதர் என்றால் அனேகமாக அது காப்ரியல்/ ஜிப்ரேல் தான் !

சில சான்றுகள்: 

Our Lady of Medjugorje 

முன்பு யூகோஸ்லோவிய நாடாக இருந்த நாட்டின் இப்போதைய போஸ்னியாவிற்கும் மேற்கேயுள்ள ஹெர்ஸ்கோவினா பகுதியிலுள்ள மெட்ஜுகோர்ஜே என்ற ஊரில் மேரி மாதா ஆறு பேருக்குக் காட்சி தந்ததாகவும், அவர்களுக்கு அவர் பத்து ரகசியங்களைச் சொல்லப் போவதாகவும் சொல்லியுள்ளார். இவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் மாதா அவர்களைத் தேடிச் சென்று ரகசியங்களைக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆறில் நால்வருக்குப் பத்து ரகசியங்களும் சொல்லி முடித்தாயிற்றாம்; ஆனால் இன்னும் இருவருக்கு மீதி ரகசியங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதைப் பற்றிய காணொளி இங்கே -

 //என்ன மெசேஜ் .. எதும் . .. .அதிசயமான விஷயம் சொல்றாங்களா அப்டின்னு கேட்டேன். போற போக்குல CERN .. NEUTRINO ... இப்படி பெரிய அறிவியல் விஷயங்கள் சொன்னா கேட்டுக்கலாமேன்னு நினச்சேன். ஆனா .. ”எப்படி ஏசுவிடம் பிரியமா இருக்கணும்னு என்பதை மட்டும் மாதா சொல்றாங்க .. அடுத்தவங்களுக்காக எப்போதும் ஜெபம் பண்ணணும் .. உங்களுக்காக கடவுளிடம் ஒண்ணும் கேக்க கூடாதுன்னு’’ அதில சொன்னதாகச் சொன்னார்கள்.

இந்த ரகசியப் பரிமாற்றம் 1991ம் ஆண்டு ஆரம்பித்தது; இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏன் இத்தனை வருஷமாக நடந்த்து என்பதற்கு எனக்குத் தோன்றிய காரணம் என்னவெனில், //ஒரு வேளை முகமதுவுக்கு 23 வருஷமா தொடர்ந்து ஜிப்ரேல் வந்து ‘சேதி’ சொல்லியிருக்கார். அதை ‘பீட்’ பண்றதுக்காக மாதா இன்னும் இழுத்து இத்தனை வருசம் தாண்டியிருப்பாங்களோன்னு தோணிச்சி!//

இந்த புதுமைகள் மீது வத்திகானின் Vatican’s Congregation for the Doctrine of the Faith-ன் the apostolic nuncio அமெரிக்க பிஷப்புகளுக்கு ஒரு அறிக்கை விடுத்துள்ளார். ”இதில் கத்தோலிக்க மக்கள் இந்த புதுமைகளை நோக்கிச் செல்லக் கூடாது என்று தடுத்துள்ளது. மெட்ஜுகோர்ஜேவில் நடக்கும் மாதாவின் அற்புதத் தோற்றங்கள் நம்ப முடியாதவை”.

2014ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மாதா மெட்ஜுகோர்ஜேவில் கொடுத்த காட்சியின் போது உலகிற்குக் கொடுத்த செய்தி:

அன்பான குழந்தைகளே! பலரின் உள்ளங்களிலே கடவுள் இல்லை என்ற எண்ணமே உள்ளது. அவர்களுக்கு கடவுள் தேவையில்லாமல் போயிற்று; அவர்கள் ஜெபிப்பதில்லை; அவர்களிடம் சமாதானமுமில்லை. ஆனால், நீங்கள் ஜெபிக்க வேண்டும்; கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். முதலில் இருந்தே நீங்கள் என் அழைத்தலுக்குச் செவி சாய்த்தீர்கள். கடவுளின் இருப்பையும், என் பிரசன்னத்தையும் நீங்கள் சாட்சி சொன்னீர்கள்.

குழந்தைகளே! நான் உங்களுடனேயே இருக்கிறேன்; உங்கள் நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களை நான் அனுதினமும் என் மகனாகிய ஏசுவிடம் ஒப்படைக்கிறேன். என் அழைப்பை ஏற்றதற்கு நன்றி.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் தேதி மிர்ஜானா என்ற இடத்தில் விசுவாசமில்லாதவர்களுக்காகக் கொடுத்த செய்தி : 

அன்புக்குரிய குழந்தைகளே! நான் உங்களிடம் ஒரு தாயாக வருகிறேன்; நீங்கள் என்னிடம் அமைதியையும், ஆறுதலையும் பெற முடியும். ஆகவே என் குழந்தைகளே! நீங்களே என் அன்பை எடுத்துச் செல்லும் சீடர்கள்; ஜெபியுங்கள்; மிகுந்த தாழ்ச்சியான பக்தியோடு ஜெபியுங்கள். விண்ணகத்திலிருக்கும் தந்தையிடம் நம்பிக்கை வைத்து ஜெபியுங்கள். நான் உலகத்திற்கு ஆசீரைக் கொண்டு வருவேன் என்பதை நான் நம்பியது போல நீங்களும் நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து, உதடுகளிலிருந்து, ‘உமது சித்தம் நடந்தேறட்டும்’ என்ற வார்த்தைகள் எதிரொலிக்கட்டும். நம்பிக்கையோடு நீங்கள் ஜெபிக்கும் போது நான் உங்களுக்காக கடவுளிடம் உங்களுக்கு மோட்ச பாக்கியம் தரவும், உங்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பவும் வேண்டிக் கொள்வேன். கடவுளை அறியாதவர்களுக்கு உதவ அப்போது தான் முடியும். நீங்களும் அன்பின் சீடர்களாக கடவுளை ‘தந்தாய்’ என்று நம்பிக்கையோடு அழைத்து உங்கள் மேய்ப்பரின் புனிதக் கரங்களில் உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள். நன்றி. 


http://en.wikipedia.org/wiki/Medjugorje
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2veBf5Ey8
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2veBf5Ey8
http://www.ncregister.com/daily-news/vatican-advises-u.s.-bishops-about-medjugorje-apparitions/#ixzz2vlxW3y1j***********

குடலூபே கன்னி மேரி 

குடலூபே கன்னி மேரி மெக்ஸிகோ அருகில் குடலூபே என்ற இடத்தில் 1531-ம் ஆண்டு ஒரு சிறு பெண்ணாக ஜுவான் டியகோ என்பவருக்குக் காட்சி கொடுத்து, தனக்கு இங்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கேட்டதாக ஒரு நிகழ்வு கொடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நிகழ்ந்ததற்கு நிரூபணம் கேட்ட போது, அந்த ஜுவான் டியகோ அருகிலிருந்து மலையின் உச்சியில் சில மலர்களைக் கொய்ய மாதாவினால் உத்தரவிடப்பட்டாராம். 

அது டிசம்பர் மாதம். அந்த மாதத்தில் வழக்கமாக பூக்காத Castilian roses-களைப் பறித்தாராம். தன் மேலாடைக்குள் வைத்து அவைகளைக் கீழே கொண்டு வந்து பிஷப்பிடம் காட்ட தன் மேலாடையைத் திறந்த போது மலர்கள் கீழே விழுந்தன. மேலாடைக்குள் மாதாவின் உருவம் பதிப்பிக்கப் பட்டிருந்ததாம். 

http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe#Pontifical_pronouncements http://en.wikipedia.org/wiki/Our_Lady_of_Guadalupe 

*************


 ‘சோகங்களின் மாதா’ 


 ருவாண்டாவில் கிபிஹோ என்ற இடத்தில் கருப்பு மாதா காட்சி கொடுத்தார். அங்குள்ள பிஷப் 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதியும் அதன் பின் பல சனிக்கிழமைகளிலும் காட்சியளித்தார். இந்த மாதாவிற்கு ‘சோகங்களின் மாதா’ என்ற பெயரிடப்பட்டது. 

1984-ம் ஆண்டு மாதா 1994ம் ஆண்டு பெரும் போர் ஒன்று நடக்கும் என்று தீர்க்க தரிசனம் அளித்தார். 1980-81 ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள். பல இடங்களில் மாதாவின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாதாவை மக்கள் எல்லோரும் மறந்திருந்த காலம் இது. 

முதல் காட்சி அல்போன்சைன் மும்ரெகே என்ற 17 வயது பள்ளி மாணவிக்கு நடந்தது. படங்களில் பார்ப்பது போல் மாதா வெள்ளையாக இல்லை; கருப்பாக இருந்தார். அழகாக இருந்தார். 

ஒரு முறை சில ஜெபமாலைகளை மாதாவின் முன் வைத்து ஆசீர் வாங்க முயற்சித்த போது அதில் சில ஜெபமாலைகள் மிகுந்த கனமாக இருந்தன. அந்த கனமான ஜெபமாலைகள்  இந்தக் காட்சிகளை நம்பாதவரின் ஜெபமாலையாக இருந்ததாம். 

 மாதா தன் காட்சி ஒன்றில் மோட்சம், நரகம், உத்தரிக்கிற ஸ்தலம் போன்றவைகளைக் காட்டினாராம். முக்கியமான காட்சி: கிபிஹோவில் நடந்த பல காட்சிகளில் சில சமயங்களில் மிக விநோதமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. சூரியன் மேலும் கீழுமாய், அங்குமிங்குமாய் சில வினாடிகளுக்கு நடனமாடியது. சூரியன் மறைந்து பச்சை வண்ணத்தில் நிலவு காட்சி கொடுத்தது. பிரகாசமான வானத்தில் நட்சத்திரங்கள் நடனமாடின. 


1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 19ம் தேதி அளித்த ஒரு காட்சியில் ’ரத்த ஆறு ஓடியது; மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தனர்; எங்கும் சிதறிக் கிடந்த பிணக்குவியல்; மரங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன; தலையற்ற உடல்கள் குவிந்துகிடந்தன’. 1994ம் ஆண்டு இந்நாட்டில் நடந்த பெரும் போரைப் பற்றிய தீர்க்க தரிசனமாக இது இருந்தது. இந்த தீர்க்க தரிசனம் முதலில் நம்ப முடியாததாக இருந்தது. ஆனால் 12 ஆண்டுகள் கழித்து வந்த உள்நாட்டுப் போராட்டத்தில் இவை எல்லாம் நிகழ்ந்தன. மூன்றே மாதத்தில் ஐந்து லட்சம் பேர் மாண்டனர். தலையற்ற உடல்கள் க்கியா என்ற ரத்த ஆற்றில் – Kagea River (river of blood) வீசியெறியப்பட்டன. 

 மாதா கிபிஹோவில் நடக்கும் பாலின முறை கேடுகள் பற்றி எச்சரித்தார். அப்போது AIDS என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 1994ல் உலகத்தின் AIDS நோயாளிகளில் 75 விழுக்காடு இந்த நாட்டில் மட்டும் இருந்தது. இரண்டரைக் கோடி ஆப்ரிக்க மக்கள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு இருந்தனர். 


http://www.michaeljournal.org/kibeho.htm 


இன்னும் இது போல் மிகப் பல காட்சிகளைப் பற்றியவிவரங்கள் youtube-ல் நிறைய காணக் கிடைக்கின்றன. நம்புக்கையுள்ளோருக்கே இவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நம்புவது கொஞ்சம் சிரமமான செயல் என்றே நினைக்கிறேன். ! 

அதே போல் ஏற்கெனவே மேற்கோள் காட்டிய ஒன்றை மறுபடியும் நினைவு படுத்துகிறேன்: 

"If you talk to God, you are praying; 
If God talks to you, you have schizophrenia”. ...... Thomas Szasz (இம்மேற்கோளை  பயன்படுத்த வேண்டிய அவசியமும், கட்டாயமும்  அடிக்கடி வாய்க்கிறது !!!)
*5 comments:

டிபிஆர்.ஜோசப் said...

மத நம்பிக்கையே இல்லாத நீங்கள் அதை நிருபிப்பதற்காகவே மிக ஆழமாகவே மதங்களை ஆய்வு செய்கிறீர்கள் போலிருக்கிறது!

தருமி said...

நம்பிக்கை வைக்கிறதுக்குக் கூட சும்மா கண்ணை மூடிக்கிட்டு போகலாம். ஆனால் அதெல்லாம் சும்மா டுபாக்கூர் அப்டின்னு சொல்லணும்னா முழுசா நல்லா கண்ணைத் திறக்கணும்லா ...!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

schizophrenia-நிச்சயம் இவர்களுக்கு பீடித்திருப்பது இதுவே,தானே தீர்ந்தால் உண்டு.
அடிக்கடி இத்தாலிக் கிராமங்களில் மாதா சிலையில் கண்ணீருக்குப் பதில் குருதி வடிகிறதென , இங்கே தொலைக்காட்சியில் காட்டி அதை வாசிப்பவர் ,நமட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.
பிள்ளையாருக்கு மோதகம் பிடிக்கும், ஆனால் அவர் பால்குடித்தார் என வேடிக்கை காட்டி உண்டியலை நிரப்பியது போல், படத்தில் தேன் வடியுது, திருநீறு கொட்டுது என ஒரு கூட்டம் காட்டும் கூத்து என
இந்த மனப் பிரள்வு எங்குமுண்டு.

DEVAPRIYA said...

http://www.dailymail.co.uk/news/article-2095540/Christian-group-banned-claiming-heals-sick-street-prayer-sessions-outside-Bath-Abbey.html
http://vaticaninsider.lastampa.it/en/world-news/detail/articolo/angleterra-inghilterra-england-ateismo-miracoli-miracle-atheism-13069/
கத்தோலிக்க மேஜிக்குகளை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் ஏற்பதில்லை.

ஆனால் ஆட்களை வைத்து நடிக்க வைக்கும் பெந்தகோஸ்தே பித்தலாட்டங்களை பிற கிறித்துவர்கள் ஏற்பதில்லை.
ஆனால் ஏசுவை இன்றைய மனிதனால் நல்லவர் என ஏற்க முடியுமா
http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_9.html
இயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே?
http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_21.html

வேகநரி said...

//கத்தோலிக்க மேஜிக்குகளை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் ஏற்பதில்லை.
ஆனால் ஆட்களை வைத்து நடிக்க வைக்கும் பெந்தகோஸ்தே பித்தலாட்டங்களை பிற கிறித்துவர்கள் ஏற்பதில்லை. //
பிசாசு தொல்லைகளளில் இருந்து விடுதலை நோயை சுகமாக்குதல் இப்படி தமிழகத்தில் செய்வதெல்லாம் ப்ரோட்டஸ்டண்ட்டு குழுக்கள் தான். வெளிநாடுகளில் கூட தென்னிந்திய திருச்சபை தமிழர்களுக்கு இந்தியர்களுக்கு நிறைய மேஜிக்குகள் காட்டுது.

Post a Comment