Friday, March 07, 2014

722. பண்ணையாரும் பத்மினியும்


*
 //நம்ம தமிழ்ப்படம் எது புதுசா வந்தாலும் இயக்குனர்கள் வழக்கமா சொல்றது: இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)//

 //படம் பார்க்குறது entertainment-க்குத்தான்; அதனால் படம்னா இப்படித்தான் இருக்கணும் அப்டின்னு மேதாவித்தனமா பேசிட்டு, அந்தப் பக்கம் போய் வெள்ளைக்காரன்னா வெள்ளைக்காரந்தான்யா, எப்படி படம் எடுக்குறாய்ங்க அப்டின்னு சொல்லிட்டு போறோம்.// 

 //நம் படங்களைப் பொறுத்தவரையில் யார் பெரிய மடையர்கள்? நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா?//

 இதெல்லாமே பதிவுலகிறகு வந்த புதிதில் எழுதிய சில எழுத்துகள். மிக மிக மோசமான நிலை என்று நம் படங்கள் பற்றிய என் கருத்து அப்போது. சுருக்கமாகச் சொல்லணும்னா - முட்டாள்களுக்காக, முட்டாள்களால் எடுக்கப்படும் முட்டாள் தனமான படங்கள் என்பதே என் கருத்தாக ஆழமாக மனதிற்குள் பதிந்திருந்தது. இதற்கு விடிவு என்பதே வரப்போவதில்லை என்று மிகவும் ஆணித்தரமாக நினைத்தேன்.

பழைய படங்களின் பட்டியலைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு கோபமும், ஆத்திரமும் வரும். அவைகளில் 99% படங்கள் புராணப்படங்கள். இப்படி எடுக்க ஆரம்பித்ததால்  எல்லாமே மிகுந்த நாடகத் தன்மையோடு இருந்தன. நிஜ வாழ்க்கையிலிருந்து வெகு தூரம் தள்ளிப் போய்க் கொண்டிருந்த படங்களின் வளர்ச்சியும், வரலாறும் அப்படியே நின்று போனது. அதுவும் பின்னாளில் காதல் என்பதைத் தவிர படங்களின் கதைகளில் வேறு ஏதுமில்லாமல் போயிற்று. எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் வாழ்க்கையில். அவை ஒன்றுமே சினிமாவில் வருவதேயில்லை. சினிமா வெறும் entertainment என்ற கருத்தே இது போன்ற காதல் சினிமாக்களால் வளர்ந்து வலுப்பட்டது. ஈரான், ஜப்பான், கொரியா என்று எட்டிப் பார்த்தலே அடுத்த வழி என்றானது.

ஆனால் நல்ல வேளை ....  குறும் படங்கள் வர ஆரம்பித்த போது கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது. last train என்று ஒரு படம் மிகவும் பிடித்தது. அவர் ‘பீட்சா”வாக உருவெடுத்து விட்டார். வரிசையாக சில ‘வித்தியாசமான படங்கள்’ தொடர்ந்து வருகின்றன.

இரு நாட்களுக்கு முன் ‘பண்ணையாரும் பத்மினி’யும் பார்த்தேன். இதனைக் குறும்படமாகப் பார்த்து மிகவும் பிடித்துப் போனது. இன்று அதே கதையை நீள் படமாக எடுக்கிறார்கள் என்ற போது, அதை எப்படி இழுப்பார்கள்; இது தேவையா என்றும் நினைத்தேன். ஆனால் படம் பார்த்த போது படம் மிகவும் பிடித்துப் போனது. ஒரு சின்ன வருத்தமும் எட்டிப் பார்த்தது. நான் பார்த்த வரை இந்தப் படத்தைப் பற்றி நல்லதாக நாலு பேர் பதிவுகள் போடவில்லையோ என்று தோன்றியது.

உள்ளூர் சின்னப் பையனாக இருந்த முதல் சீனில் வரும்  அட்டக்கத்தி கதாநாயகனின் (?) முகம் இப்படக் கதாநாயகனுக்குத் தெரியாத முகமாக இருக்க முடியாதே என்று கடைசி சீனில் தோன்றியது. என்னைப் பொறுத்தவரை படத்தில் இருந்த ஒரே ஒரு ஓட்டை இது மட்டும் என்பேன். இதைத் தவிர படம் பத்மினி மாதிரி மெல்ல அழகாக சென்றது. (நானும் ஒரு ‘பத்மினி’யைச் சில காலம் வைத்திருந்தேன். அந்தப் பாசம் வேறு!!) இதுவரை எந்தப் படத்திலும் வயதான ஒரு ஜோடிகளின் அன்பை, romance-யை இவ்வளவு நேர்த்தியாக பார்த்த நினைவு சுத்தமாக இல்லை. கதாநாயகனை முதலில் காட்டும் போது வரும் சீனை parody என்று எடுத்துக் கொள்ளலாம். எங்கும், எதிலும் overdo என்பதே இல்லாமல், இயல்பான ஒரு படம். பண்ணையாரின் மகள் வீட்டைக் காண்பிக்கும் ஒரே சீனில் அவள் அப்பா வீட்டிலிருந்து ‘ஆட்டை’ போட்ட அனைத்தையும் காண்பித்திருப்பதில் இயக்குனர் யோசித்து படம் எடுத்திருக்கிறார் என்று தெரியும் போது மிக்க மகிழ்ச்சி.

வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களுக்கு என் வாழ்த்துகள். நிறைய தைரியமாக பழைய பாதைகளிலிருந்து விலக ஆரம்பித்து விட்டார்கள்.  
முட்டாள்களுக்காக, முட்டாள்களால் எடுக்கப்படும், முட்டாள் தனமான படங்கள் இனி குறைந்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டு விட்டது.
*

8 comments:

டிபிஆர்.ஜோசப் said...

நீங்க சொன்னது அத்தனையும் உண்மை. ஆனால் என்னுடன் படம் பார்த்த குடும்பத்தாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ரொம்ப ஸ்லோவா போகுதுங்க என்ற அவர்களுடைய புகார் ஓரளவுக்கு உண்மைதான் என்றே எனக்கும் தோன்றியது. கடைசியில் ஓட்டைக் கார் என்று வந்து நிற்கும் மகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் கார் வந்ததே என்று அவளுடைய பெற்றோர் மகிழ்வதும் அவ்வளவு பொருத்தமாக இல்லை. மற்றபடி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல மலையாள, சாரி தமிழ்படத்தைப் பார்த்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சிதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

குறையட்டும்... நம்பிக்கையுடன் இருப்போம்...

எல்லாம் சரி... இந்தப் பணம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறதே...?

வவ்வால் said...

தருமிய்யா,

//நானும் ஒரு ‘பத்மினி’யைச் சில காலம் வைத்திருந்தேன்//

காரைத்தானே சொல்லுறிங்க அவ்வ்!

சொன்னால் நம்பணும், பதிவ பார்த்ததும் ,இப்படி நடுவில ஒரு வசனம் வரும்னு ஒரு பக்‌ஷி கூவுச்சு,கூடவே சில அனுபவ பகிர்வும் இருக்கும்னு நினைச்சேன் ,ஒரே வரியில முடிச்சுட்டிங்களே!

# நமக்கு நல்லா இருப்பது மற்றவங்களுக்கு நல்லா இருப்பதில்லை, மற்றவங்களுக்கு நல்லா இருப்பது நமக்கு நல்லா இருப்பதில்லை அவ்வ்!

ஒரு படத்தின் வெற்றி ,நம்மை காட்சிகளில் கொஞ்சம் ஆச்சர்யப்படுத்துவதில்லை இருக்கு,அடுத்து என்ன காட்சி ,வசனம்னு தெரிஞ்சிட்டா படம் பார்ப்பதில் சுவாரசியமே இருப்பதில்லை, இப்படம் அப்படி இருக்கே?

இயல்பான படம் என எடுத்துக்கிட்டு பார்க்கணும் போல!

என்னம்ம்மா செய்ய்வேஏ..ஏன் ....என்ன்ன செய்ய்வேஏ..ஏன் ... கிளிக்கு ரெக்கை மொளைச்சுடுச்சூ பறந்ந்த்து போய்டுத்த்துதூ... என வசனம் கேட்டே நம்ம ரசிகர்கள் வளந்துட்டாங்க அவ்வ்!

#//முட்டாள்களுக்காக, முட்டாள்களால் எடுக்கப்படும், முட்டாள் தனமான படங்கள் ,இனி குறைந்து விடும் என்ற நம்பிக்கை துளிர் விட்டு விட்டது.//

கண்டிப்பா அப்படிலாம் நடக்காது, சினிமா ஒரு வியாபாரம் ... போட்டது போல நாலு மடங்கு வசூலானால் தான்... போட்டே காசே எடுக்க முடியும் அவ்வ்!

உயர்வாக பேசும், ஜப்பானிய,கொரிய இரானிய படங்களில் ,நம்ம ஊரை விட மொக்கையாக நூற்றுக்கணக்கில் வருது,நமக்கு சல்லடைப்போட்டு நல்லப்படங்கள் மட்டுமே இங்கே வருவதால் ,அங்கே எல்லாம் நல்லப்படங்களாக எடுக்கிறாங்கனு நினைச்சுக்கிறோம்.

ஒரு கொரியப்படத்தில ,கொலைக்காரனே ,நான் நாலைஞ்சு கொலைப்பண்ணியிருக்கேன்னு போலீசில சொல்லுறான்,போலீஸ் ஆபிசர்ஸ் அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுக்குலாம் சாட்சி கண்டுப்பிடிக்கிறது கஷ்டம் ,நீ கிளம்புனு அனுப்பிடும் அவ்வ்!

அது காமெடி சீனா ,சீரியஸ் சீனானே புரியலை,ஆனால் படத்துல கொலையா அவன் பண்ணிட்டு இருப்பான் ,கடைசில என்னாச்சுனு பார்க்கும் பொறுமையும் இல்லை அவ்வ்!

கொரிய ,சப்பாணிய பேய்ப்படங்கள்லாம் பாருங்க ,இன்னும் காண்டாகிடுவீங்க, ஆனால் ஒரு சில நல்லாவும் இருக்கு.

இணையத்தில இது போல பல கொரிய ,சப்பானிய படங்களைப்பார்த்து கடுப்பாகி இருக்கேன் , நம்ம ரசனைக்கு சில படங்களே தேறும் போலனு நினைச்சுக்கிட்டேன்.

வேண்டுமானால் இப்படி சொல்லலாம், நம்ம ஊரில வரும் நல்ல படங்களின் எண்ணிக்கையை விட அம்மொழிகளில் வரும் நல்லப்படங்களின் எண்ணிக்கை கூட இருக்கலாம்.

தருமி said...

என்ன சொல்லுங்க .. நம்ம படத்தில் முட்டாள் தனம் கொஞ்ச நஞ்சமில்லை. அடிச்சா 20 அடியா தள்ளிப் போய் பறந்து போய் விழுவாங்க. பண்ணையார் படம் மாதிரி பார்த்து பழகிட்டா அந்த முட்டாள் தனத்தை மக்கள்ஸ் புரிஞ்சுக்க மாட்டாங்களா? இப்படிஒரு நப்பாசை. அதற்கேற்றாற்போல் இப்போது வரும் படங்களின் கதைத் தரம் கூடியிருப்பதுகண்டு ஒரு நம்பிக்கை. ’அவ்வ்’வளவே .......

தருமி said...

//காரைத்தானே சொல்லுறிங்க அவ்வ்!//
பத்மினி கதை கொஞ்சம் சொல்லலாம்னு நினச்சேன். ... ஆனா செய்யலை ...

Anonymous said...

இப்போ எல்லாம் இளம் இயக்குநர்கள் மசாலா தடவாத படங்களை தலைக்கணம் இல்லாத புது நடிகர்களை வைத்து எடுத்து அசத்திவிடுகின்றார்கள்.. உதா. பீட்சா, நேரம், வெண்ணிலா கபடிக் குழு, பண்ணையாரும் பத்மினியும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் எனப் போகுது..

பண்ணையாரும் பத்மினியும் இன்னும் சுருக்கி இருக்கலாம், 2 மணி நேரத்தில் முடித்து இருக்கலாம்,.

தமிழ் செல்வா said...

ஆரண்ய காண்டம், ந.கொ.ப.கா, பண்ணையாரும்...
எல்லாமே நீங்க சொன்ன மாதிரி நல்ல அறிகுறிகள்தான். ஆனா, 70 களின் கடைசியில் சமூகம் சார்ந்து வந்த படங்களை ஒழிச்சு கட்ட முரட்டுகாளை, சகலகலா வல்லவன் கிளம்புன மாதிரி, மெகா பட்ஜெட் காரர்கள் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்களே. எனக்கென்னமோ டாஸ்மாக் இருக்கிறதுக்கு பின்னாடி ஒரு அடிமைப்படுத்தும் அரசியல் இருக்கிறமாதிரி திரைத்துறையிலயும் ஒரு அரசியல் இருக்குன்னு படுது.

Unknown said...

படத்தை இன்னும் பார்க்கவில்லை ..இன்று பார்க்க வேண்டும்

மற்றவர்களின் விமர்சனத்தை விட தங்களின் பதிவை வாசிக்கும் போது திரை படம் ஒன்றை பார்க்க வேண்டிய கண்ணோட்டம் அகல் விரிவானது என புரிகிறது ...விமர்சனத்துக்கு நன்றிகள்

Vijay

Post a Comment