Wednesday, October 01, 2014

791. JIHADI COLLECTION (11) - அத்தைக்கு மீசை முளைத்தால் .... !!!*

ஆங்கில இந்து நாளிதழில் வழக்கமாக எழுதும் ஒரு இஸ்லாமியக் கட்டுரையாளர் எழுதிய சமீபத்தியக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. அக்கட்டுரையில் உள்ள சில பகுதிகளின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

பல உயர்ந்த கருத்துகளை உள்ளடக்கிய இம்மதத்தில் உள்ள ‘ஜிகாதி’ என்ற சொல்லின் உண்மையான பொருள், ஆனால் நம் வழக்கில் அச்சொல்லுக்கு உள்ள பொருள், பெண்களுக்கு எதிராக மதம் இருப்பது, பொறுமையைப் போதித்துக் கொண்டு தீவிரவாதத்தைக் கைக் கொண்டிருப்பது, குரானிலும் ஹதீசுகளிலும் உள்ள குழப்பங்கள்  -- இவைகளைப் பற்றி அக்கட்டுரையில் கூறுகிறார்.

இதைவிட, வாளால் மதத்தைப் பரப்புவது எல்லா மதங்களிலும் நடப்பதுதான். ஆனால், உதாரணமாக கிறித்துவத்தில், இந்த நிலையை அடுத்து அந்த மதங்கள் தங்களை மாற்றிக் கொண்டன. தாங்கள் கொண்டிருந்த பழைய நிலைப்பாடை மாற்றிக் கொண்டன. இது போல் இஸ்லாமும் தங்கள் குரானை முறையாக வரிசைப் படுத்தி, எந்த வித ஐயமும் இல்லாமல் அவைகளை முறைப்படுத்தி புதியதாக வெளிக் கொணர வேண்டும் என்பது அவர் கருத்து. அக்கருத்தினை கீழே சிகப்பு வண்ணத்தில் கொடுத்துள்ளேன்.

பதிவுலகில் கிடைத்த அனுபவங்களின் படி,  சிகப்புப் பகுதி அடிப்படைவாதிகளான வஹாபிகளுக்கு முற்றும் பொருந்தாத ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். என் இந்தக் கருத்து தவறெனில் மகிழ்ச்சியாக மாறிக் கொள்வேன்.                ......... தருமி.

இதனாலேயே தலைப்பை இப்படி வைத்தேன்.


Islam and its interpretations 

HASAN SUROOR

the hindu

உங்கள் சமயத்தில் உள்ள உயர்ந்த விஷயங்களைச் சொல்லுங்கள் என்று ஒரு இஸ்லாமியரிடம் கேட்டால் அவர் கீழே உள்ளவைகளை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போவார்.
--  சமுக வாழ்க்கையின் உயர்வு
--  ஜாதி, ஏழை-பணக்காரன் என்ற வேற்றுமைகளை முற்றாக புறந்தள்ளுதல்
--  கேள்வி ஞானத்தின் உயர்வு
--   உலகின் எந்த சக்திக்கும் தலை வணங்காமை
--  எளிமையான தூய வாழ்வு
--   தன் கீழுள்ளோருக்கு உதவும் தனித்துவமான  மாண்பு
--  பொருளாதார, சமுகச் சுரண்டல்களை முற்றிலும் வேரறுப்பது

’அமைதி’ என்ற பொருள் கொண்ட மதம்; ஆனால் கொடூரத்தை எப்போதும் கையில் எடுத்திருக்கும் மதம். பெண்களுக்குக் கண்ணியத்தையும், மரியாதையையும், சமத்துவத்தையும் தரும் மதம் என்று கூறப்படும் மதம். ஆனால் பெண்ணின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சிய மதிப்பில் பாதி என்று மட்டும் கருதும் மதம்.

அறிவுத் தேடல் முக்கியம் என்று சொல்லும் மதம்;  ஆனால் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கொல்லும் தீவிரவாதம் உள்ள மதம். சகிப்புத் தன்மையையும், இணைந்து வாழ்தலையும் உரத்துச் சொல்லும் மதம்; ஆனால் வெறுப்பையும், பொறுமையின்மையையும் கைக்கொள்ளும் மதம்.

மித இஸ்லாமியர்கள் மிதமாகச் சொல்லும் வாதங்களுக்கு மாற்றாக மிகக் கொடூரமான பொருள் கொடுக்கும் தீவிரவாதிகள்.

இவ்வாறு தங்கள் நிலைக்கேற்ப மாறி மாறி பொருள் கொடுக்கும் இந்த நிலைக்குக் காரணம் இஸ்லாமியத் தத்துவமே! குரானே இரு பொருள் நிறைந்த ஒரு எரிமலை. யார் யாருக்கு எப்படி எப்படி வேண்டுமோ அந்தப் பொருளைக் கொள்ளும்படி உள்ள வசனங்கள்; அவைகளை வைத்து அவரவர் தங்கள் கருத்துக்கு வலு சேர்த்துக் கொள்கிறார்கள். இஸ்லாமிய செயல்களுக்கு வலு சேர்க்கும் ஹதீசுகளும் இதைப் போலவே மாற்றுப்பொருள் தர ஏதுவாக உள்ளன.

பல ஹதீசுகளை இடம் பாராது பொருத்துதலாலும், தவறான பொருள் கொடுப்பதாலும் பல தவறுகளுக்கு வழிகோலுகிறது.

’ஜிகாதி’ என்ற சொல்லே மிகவும் வன்முறையான சொல்லாகக் கருதப்பட்டு வருகிறது. ‘காஃபிர்கள்’ என்ற சொல்லும் இதைப் போலவே கருதப்படுகிறது.

தங்கள் மதத்தைப் பரப்ப முயலும் எந்த மதமுமே தங்கள் வரலாற்று ஏடுகளில் வன்முறைகளைக் கையாண்டிருப்பார்கள் என்பது உண்மை. பெரும் ராஜ்ஜியங்களைக் கட்டமைத்து அதன் வழியே வன்முறை மூலம் தங்கள் மதங்களைப் பெருக்கியிருப்பார்கள் என்பதும் உண்மை. ஐரோப்பாவில் பழம் மதங்களை அழித்து கிறித்துவத்தைப் புகுத்தியது அமைதியான முறையில் இல்லை; வன்மம் மிகுந்து இருந்தது.  மரண விசாரணைகள், சிலுவைப் போர்கள் மூலம்  ரத்த ஆறுகள் தொடர்ந்து ஓடின.

இப்போராட்டங்களில் கிறித்துவம்  தனது ஆரம்ப காலத்து வன்முறைகளைக் கைவிட்டு வளர்ந்தது போல் இஸ்லாம் தங்களது இறையியலை செப்பனிட்டு மாறாமல் தன் பழைய நிலையிலேயே நின்று, தன் பழமையோடு ஒன்றி நின்று விட்டது. கிறித்துவத்தில் எழுந்த மறுமலர்ச்சி, புத்துயிர்ப்பு போன்றவைகளின் நிழல்கூட படாமல் இஸ்லாம் வரலாற்று வளர்ச்சி ஏதுமற்று தேங்கி நின்று விட்டது. 

இஸ்லாமிற்கு இன்னொரு ஒழுங்கற்ற முகமும் உண்டு. தாலிபன் இன்னும் இது போன்று அவர்களோடு இணைந்து செல்லும் சில குழுக்கள் நடத்தும் போதனைகளும் இஸ்லாம் தான். அவர்களும் மற்ற இஸ்லாமியர்கள் போலவே குரானையும், ஹதிசுகளையும் மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை முன் வைக்கின்றனர். இது ஒரு பெரும் குழப்பமான ஒரு சூழல். தீவிரவாதிகளும், அவர்களை எதிர்க்கும் மிதவாதக் குழுவும் குரானையும் ஹதிசுகளையும் வைத்தே மோதிக்கொள்ளும் நிலையே நீடிக்கின்றது.


கிறித்துவத்தில் இருக்கும் புதிய ஏற்பாடு போல் இன்னொரு நூலே இக்கடினமான சூழலில் இருந்து இஸ்லாம் விடுபடுவதற்கான வழி. இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்று கூடி குரானில் உள்ள ஒவ்வொரு ‘ஆயத்’துகளையும், ஹதிசுகளையும் எந்த வித குழப்பமுமில்லாமல், நேரடி பொருள் தரும்படி தொகுக்க வேண்டும். இந்த நூலே எல்லோருக்குமான பொதுவான நூலாக, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கான ஒரே நூலாக இருக்க வேண்டும்.

=======================

இஸ்லாமியத் தீவிரவாதம் என்றெல்லாம் பேசும் போது இஸ்லாமிய மதம் மட்டும் தனித்து ஒரு குற்றவாளிக் கூண்டில் வைத்து பேசப்படுவதே வழக்கம். ஆனால் ‘தூத்துக்குடியிலிருந்து ஒரு குரல்’ என்ற வலைப்பூ ஒன்றில் நான் சமீபத்தில் கண்ட கருத்து மிகச் சரியாக இருந்தமையால் அதனை அப்படியே ஒற்றெடுத்து இங்கே பதிவிடுகிறேன். (பதிவரின் அனுமதியை இதனைப் பதிவிட்ட பிறகே கேட்க உள்ளேன்.)
--------------------------------------------
தீவிரவாதத்தின் ஆணிவேர்

ஒசாமாக்களையும் உசேன்களையும் உருவாக்கிவிடுவது, 
பின்னர் 'தீவிரவாதத்தை அழிப்போம்' என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுவது,
போர் என்னும் பெயரில் அப்பாவிகளை கொன்றுகுவித்து விட்டு, எண்ணைய்க் கிணறுகளை தன் வசப்படுத்துவது,
அரபு நாடுகளின் ஆசியோடு அவர்கள் மண்ணில் தன் ஆதிக்கத்தை நிலைக்க செய்வது.
இதுதான் காலம்காலமாக அமெரிக்கா நடத்தும் செயல்.
(இன்னும் 10000 அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் உள்ளனர். ஆப்கனில் அமெரிக்காக்காரனுக்கு என்ன புடுங்குற வேலை??)

தீவிரவாதத்தின் ஆணிவேரைத் தேட முயற்சித்தால் அந்த தேடல் அமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையில் சென்று முடிவடையும்.


1 comment:

Post a Comment