Tuesday, October 13, 2026

1405. என் கதை - NOBLE CHELLADURAI



வணக்கம் சார். 

 

உங்கள் "என் கதை"யைப் பற்றி எனது பதிவு இது. 

முதல் ஏழு அத்தியாயங்கள் வரை வாசிப்பு மிக மெதுவாக சென்றது. இருதய அறுவை சிகிச்சை, கொரானா சிகிட்சை அனுபவங்கள் ஆரம்பித்தவுடன் தோன்றிய விறுவிறுப்பு இறுதி வரை வாசகனோடு இருந்தது. 

11ஆம் அத்தியாயத்தில் நண்பர்களைபற்றிய நினைவுகள் சிறப்பாக இருந்தன.

 Manikondan Thambi தமிழ் இதழ்களைப்பற்றி சொன்னது உண்மை. நானும் மலையாளம் வாசிப்பவன். 

இரண்டு வயதிலிருந்து (1946இலிருந்து) உங்கள் வாழ்க்கையை மீட்டு எடுத்துள்ளீர்கள். வாழ்த்துகள். 

அமெரிக்கன் கல்லூரியில் ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியும், அந்தக் கல்லூரியைப் பற்றிய உங்கள் வரைவுகள் மிகக்குறைவே, நீங்கள் கல்வி கற்ற  தியாகராஜர் கல்லூரியைப் பற்றிய பதிவுகளை ஒப்பிடும்போது.சொன்னது சொல்லல் சில இடங்களில் வருகிறதே என்று நினைத்தேன். பிறகுதான் இது வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட Blogspot கட்டுரைகளின் , முழுவதும் கால வரிசைப் படுத்தப் படாத தொகுப்பு என உணர்ந்தேன். 

சம வயது பெண்களைப்பற்றி இனி எழுதப்போகும் நூல்களில் எழுதலாம் என்று ஒதுக்கிவிட்டீர்கள் போலும்.

கல்லூரியில் படிக்கும்போது மாணவியர் அமரும் இருக்கைகளில் அழுக்குப்படுத்திய  நிகழ்ச்சி அதிர்ச்சி அளித்தது. வாழ்க்கையில் எதையும் ஒழிவு மறைவு இன்றி கொடுத்திருக்கிறீர்கள் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

13.1 அத்தியாயத்தில் பக்கம் 313இல், நண்பிகளுக்கு நேர் எதிராகப் பார்வையாளர் வட்டத்தில் என்பது கதை நாயகனின் காதல் இலைமறைவு காய் மறைவாகக் சொல்லப்பட்டு இருக்கிறது. 

அய்யனாரும் நானும் என்ற அத்தியாயத்தில் தங்க்ஸ் எனப்படுவர் மனைவியாக இருக்கவேண்டும். 

"என் கதை" தந்த வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி. 

உங்கள் ' என் கதை ' எழுப்பிய நல்லூர் நினைவுகளைப் பற்றி பிறகு எழுதுகிறேன். 

நன்றி. 

ஜே பி  நோபிள் செல்லத்துரை.

போடிநாயக்கனூர்.