நாயன்மார்கள் = சைவ அடியார்கள்;
ஆழ்வார்கள் = வைணவ அடியார்கள்
தீர்த்தங்கரர்கள் = சமண
அடியார்கள்
வேதசாட்சிகள் = கிறித்துவ
அடியார்கள்
தூதுவர்கள் – இஸ்லாமிய
அடியார்கள்
இப்படி மதத்திற்கொரு வகை
அடியார்களுண்டு. இவர்கள் தங்கள் தங்கள் மதக் கடவுள் மீதான அதீத நம்பிக்கையாளர்கள்.
தங்கள் கடவுளின் மீது மட்டற்ற அன்பு கொண்டவர்கள், ஆகவே அந்தந்த மதக்காரர்களிடமிருந்து பெரும் மதிப்பைப் பெறுகிறார்கள்.
இவர்கள் கண்ணால் காணாத கடவுளைத் தாங்கினார்கள்; நம்பினார்கள்,
தொழுதார்கள்; தங்கள் உயிரையும் கொடுத்தார்கள்.
இதனால் இவர்களுக்கு நாமும் மரியாதை கொடுக்கிறோம். உயரத்தில் வைத்துப் போற்றுகிறோம்.
ஆனால் இப்போது நான் மொழிபெயர்க்கும் நூலில் பேசப்படும் ஒருவர் நம்மோடு இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 12 வயது வரை அமெரிக்க வாழ்க்கை. அவரது தாயாருக்கு டில்லி JNU பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானதால் அவருடன் இந்தியா வந்து, கற்றோர் மத்தியில் பலகலைக் கழகத்தின் வளாகத்தில் வாழ்ந்து, பின் கான்பூர் IIT-ல் முதுகலை முடித்தவர். தன்னோடு பயிலும் மாணவர்களில் பலர் அமெரிக்கக் கனவோடு இருப்பது தெரிந்தும், தொழிலாளர் நலனுக்காக பாடுபடவேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில் தன் அமெரிக்கக் குடியுரிமையை வேண்டாமென்று கொடுத்து விட்டுத் தன் பணியைத் தொடர்ந்தார். தொழிலாளர்களுக்காகப் பணிபுரியும் அவர் அவர்களோடு வாழ்ந்தால்தான் சரியென்று நினைத்து, அதே முகாமில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ள வீட்டில் தங்கிக் கொண்டு, காலைக்கடன் கழிக்க கையில் குச்சியோடு அருகிலுள்ள வெளிப்புறப் பகுதிக்கு செல்ல வேண்டும். வெருட்டி வரும் பன்றிகளை விரட்டுவதற்குத்தான் அந்தக் குச்சி.
தொழிலாளிகளுக்காகவே
வாழும் இந்தப் பெண்மணிக்கு ‘நகரத்து நக்சலைட்” என்று பச்சை குத்தி
நமது அரசு அவரைக் கைது செய்தது. மூன்றரை ஆண்டுகள் கழித்து வெளிவந்த இவர் இப்போது மும்பையில்
தொழிலாளர்களுக்கானத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
என்னால் நம்ப முடியாத அளவு ஒருவர் தன் வாழ்க்கையை முழுவதையும் தன்னைச் சுற்றியுள்ள தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்து விட்டார். இதைத் தான் மனிதம் என்பதா? இல்லை .. அதற்கும் மேல் என்றே தோன்றுகிறது. மேலே சொன்ன கடவுளுக்காகத் தன்னை அர்ப்பணித்த மனிதர்களை விட இவர் எவ்வளவோ மேல் என்றே எனக்குத் தோன்றுகிறது. இவர்களை மனித தெய்வங்கள் என்று சொல்வதே சரி.
அந்த நூலில் இதுபோன்ற மனித தெய்வங்கள்
நிறைய இருக்கிறார்கள். ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும்,
மிகுந்த உணர்வு பூர்வமாக இந்த வேலையைச் செய்ய இவர்கள் தூண்டுகிறார்கள்.
No comments:
Post a Comment