Wednesday, July 15, 2026

1383. விளையாட்டுப் போட்டிகளும் புகார்ப் பொட்டிகளும் ...

*

அகில உலக சண்டியரய்யா

***


விளையாட்டுப் போட்டிகளும்

புகார்ப் பொட்டிகளும் ...

 

FIFA  கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டுகளை  போன நூற்றாண்டிலிருந்து – 1986ம்  ஆண்டிலிருந்து – பார்த்து வருகிறேன். எந்த ஆண்டிலும் இப்போது போல் பல்வேறு கசப்பான விவாதங்கள் எழுந்ததில்லை. எந்த அணி வெல்லும், யார் யார் நன்கு விளையாடுகிறார்கள் என்பது போன்ற விவாதங்கள் மட்டும் இருக்கும். இந்த முறையோ கேட்க வேண்டியதில்லை.

முதலில் ரொனால்டோ, மெஸ்ஸி என்ற இருபெரும் கால்பந்து வீரர்களைச் சுற்றி விவாதங்கள் எழுந்தன.  யார் பெரிய வீரர் என்று அந்தக் காலத்து சிவாஜி – எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மாதிரி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். தொலைந்து போகிறது என்று இரு தரப்பினரையும் ரசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை இருவரும் பெரிய ஆட்கள் தான்; இருப்பினும் என் நடுமுள் கொஞ்சம் மெஸ்ஸியின் பக்கம் சாய்ந்திருந்தது. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தேன். ரொனால்டோ விளையாட்டை விட அவரது கொனஷ்டைகள் / dramatic manual gestures அதிகமாகத் தோன்றியது. நிறைய Theatrics; மெஸ்ஸியின் dribbling மிகவும் பிடித்தது. அதில் ஓர் அழகுணர்ச்சி இருப்பதாகத் தோன்றியது. அது ஏனோ.. இந்த வீடியோக்காரர்கள் ரொனால்டோ ஒரு ஃப்ரி ஷாட் எடுப்பதற்குள் அவர் மூச்சு வாங்குவது, உதடுகள் துடிப்பது என்று அநியாயத்திற்கு dead close-up வைத்து நம் உயிரை வாங்கி விடுவார்கள். அவரது dribbling-யை விட அவர் உயரே எழும்பி head பண்ணுவது பிடித்தது. பீலே, R9 என்று சுருக்கமாக, செல்லமாக அழைக்கப்பட்ட ப்ரேசில் வீரர் ரொனால்டோ, அவரை விட அவருடன் விளையாடிய ரொனால்டின்கோ, கார்லோஸ், தியரி ஹென்றி(பிரஞ்சு), மரடோனா (அர்ஜென்டினா) போன்ற பிடித்த பல கால்பந்து வீரர்களின் வரிசையில் மெஸ்ஸியை முதலில் வைத்து அடுத்து ரொனால்டோவைச் சேர்ப்பேன். அதன் பிறகு எம்பாப்பே, யாமல் போன்றோர் வரலாம். இன்னும் பலர் உண்டு. காலப்போக்கில் மறக்கும் விஷயங்களில் இதுவுமொன்று,

ஆனால் இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் பற்பல விஷயங்கள் புதிதாக முளை விட்டிருக்கின்றன. இதில் தலையாய, மிகக் கேவலமான ஒன்று என்னவென்றால் அது நமது அகில உலக சண்டியர்ட்ரம்ப் அவர்களின் ஊடுறுவல்தான். பலோகன் என்ற அமெரிக்க வீரர் பாஸ்னியா என்று ஒரு சிறு நாட்டுடன் விளையாடும் போது செய்த தவறுக்காக சிகப்பு அட்டை பெற்றார். நம்ம சண்டியருக்கு அப்படி ஒரு கோவம் தலைக்கேறியது.. உடனே தன் நண்பரான ஜியானி என்ற FIFA தலைவருக்கு ஒரு போனடித்தார். மடித்து கட்டிய வேட்டியை இறக்கி விட்டுக் கொண்டே ஜியானி போனை எடுத்து, ஐயா சொன்ன ஏவலுக்கு உடனே சரியென்று தலையாட்டி விட்டு, அந்த சிகப்பு அட்டையை அரசியல்வாதிகள் தங்கள் உறுதிமொழிகளிலிருந்து எளிதாக வெளியேறுதல் போல் பலோகன்னுக்கு விடுதலை அளித்து விட்டார்.

இந்த இழிசெயலுக்குப் பிறகு அமெரிக்கா தங்கள் அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்தைச் சந்தித்தது. இந்த அணி சிகப்பு அட்டையைத் திரும்பி வாங்குவதற்க்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து விளையாடினர். நாங்கள் சின்னப் பசங்களாக விளையாடும் காலத்தில் யாராவது விளையாட்டில் கள்ளத்தனம் செய்தால் அதைக் கள்ள ஆட்டை என்போம். அப்போதெல்லாம் நாங்கள் வழக்கமாக ஒன்று சொல்வதுண்டு: கள்ள ஆட்டைக்கு கடவுள் கரியா காட்டிக் கொடுப்பார். அது அன்று உண்மையிலேயே நடந்தது. அமெரிக்காவிலேயே நடந்த அந்தப் போட்டியில் 4:1 என்ற கணக்கில் பெல்ஜியம் வென்று அமெரிக்காவின் மீது கரி பூசியது. ட்ரம்ப்பிற்கு FIFA ஒரு நோபல் பரிசு ... இல்லையில்லை .. வேறு ஏதோ ஒரு பரிசை இந்த ஆண்டு இறுதியில் கொடுக்கப்போவதாக ஒரு செய்தி காற்றில் கறைந்து வந்துள்ளது.


                        BALOGUN - NO RED CARD

FIFA இதைச் சரிக்கட்ட என்னென்னவோ விவாதங்கள் முன் வைத்தன. ஏற்கெனவே போர்ச்சுகல் ரொனால்டோவிற்கும் இதே போல் சிகப்பு அட்டையை திருப்பி வாங்கியுள்ளோம் என்றது. ஆனால் மக்களிடையே “அந்தப் பப்பு வேகாது” என்றே நான் நினைக்கின்றேன்.

அர்ஜென்டினா அதிக எண்ணிக்கையில் பெனல்டி வாய்ப்புகள் பெறுகின்றன என்றொரு குற்றச்சாட்டு:

இந்த அணி 2022,2026 போட்டிகளில் இதுவரை 8 வாய்ப்புகள் பெற்றுள்ளன. அதற்கு அடுத்ததாக இங்கிலாந்து வெறும் 4 வாய்ப்புகள் மட்டும் பெற்றுள்ளன. இது ஒரு பெரும் சலுகை என்ற குற்றச்சாட்டிற்கு இது பலம் சேர்க்கிறது.

நானே ஒரு முறை பார்த்தேன்.மெஸ்ஸி செய்த பவுலுக்கு எந்தவித தண்டனை கொடுக்காததையும் பார்த்தேன். அர்ஜென்டினாவை FIFA ஒட்டு மொத்தமாக ஆதரிப்பதாகப் பலரும், சிறப்பாக போர்ச்சுகல் ரொனால்டோவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை FIFA   மேல் வைத்தனர்.

இதோடு முன்பு நடுவர்கள் தங்கள் கண்களை மட்டும் வைத்துக் கடமையாற்றினர். இப்போது டிஜிட்டல், VAR எல்லாம் வந்து விட்டது. ஆனால் சில சமயம் மட்டும் அதைப் பயன்படுத்துகிறார்கள்  போலும்.. முழுவதுமாக அப்பக்கம் நடுவர்கள் செல்வதில்லை.

ஆனால் அர்ஜென்டினாவிற்குச் சிறப்பிடம் கொடுப்பார்கள் என்பதை என்னால் முழுமையாக ஒப்புக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இது நானகைந்து பேர் செய்கிற காரியமல்ல. ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு நாட்டிலிருந்து நடுவர்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் வகுப்பறை மாதிரி ஒன்றில் வைத்து நாம் எல்லோரும் இணைந்து அர்ஜென்டினாவுக்கு வெற்றியைத் தருவோம் என்றா முடிவெடுக்க முடியும்? எல்லோரும் இணைந்து ஒரு நாட்டிற்கு அனுகூலமாக இருக்க முடியும் என்பது ஒரு non-practicable accusationr. ஆனால் சண்டியர் சொன்னார் என்பதற்காக ஆட்டத்தில் கொடுத்த கார்டை அதன் பிறகு வாபஸ் வாங்குவது அபத்தத்திலும் அபத்தம்; அநியாயத்திலும் அநியாயம். இதொரு தனி மனிதனால், அதாவது, மிகப்பெரும் அமைப்பான FIFAவின் பெருந்தலைவர் ஒருவரால் எடுக்கப்பட்ட முடிவு. இதைத் தனிமனிதத் தவறு என்றும் சொல்லித் தப்பிக்கலாம்.

இது பற்றாது என்பது போல் அர்ஜென்டினா FIFA அமைப்பு முறையற்ற விதமாக அமெரிக்க வணிகச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாகவும் அதை அமெரிக்க உளவமைப்புகள் ஆய்வு செய்வதாகவும் ஒரு செய்தி கசிய விடப்பட்டது.

இந்தச் சூழ்நிலைகள் எல்லாமே இந்த உலகக் கோப்பை சமயத்தில் மாறி மாறி வெளிவந்து பல்வேறு வதந்திகளை கொழுத்திப் போட்டிருக்கின்றன. முன்பெல்லாம் விளையாட்டுப் போட்டிகள் தீப்பிடித்து எரியும்; இப்போது வதந்திகளும், புகார்களும் தொடர்ந்து முளைத்து வருகின்றன.

இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!

 


No comments:

Post a Comment