Sunday, July 12, 2026

1380. சண்டையோ சண்டை & தமிழும் வாழ்க ...



இன்னைக்கு அர்ஜென்டினா மேட்ச். ஸ்விட்சர்லாந்து நாட்டோடு போட்டி. கால் இறுதிப் போட்டி. அப்படின்னு சொன்னாங்க சரி காலையில் எழுந்து பார்ப்போம் என்று ஆறு மணிக்கு அலாரம் வச்சேன் பார்த்தா 3 மணிக்கே எழுந்துட்டேன். நான் அந்த மாதிரி எழுகிற ஆளு கிடையாது. தூக்கம் போயிரிச்சு. நல்லாவே முழிச்சிட்டேன். யாருடா நம்மளை இப்படி எழுப்புனான்னு பார்த்தா அது நம்ம மெஸ்ஸி. .பாவம் அவர். நம்ம தமிழ் சினிமாவில வரும் கோர்ட் சீன் மாதிரியே எனக்கு தெரிஞ்சுச்சு. அதுல உத்துப் பார்த்தேன். அந்த கோர்ட்ல குற்றவாளிகள் நிக்கிறதற்காக ஒரு கூண்டு இருக்கும்ல .. அந்த கூண்டுக்குள்ள பரிதாபமா நம்ம மெஸ்ஸி நின்னுட்டு இருந்தார். என்னடா இவர் இங்கே நிற்கிறார் என்று பார்த்தால் கருப்பு அங்கி அணிந்த இரண்டு வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள்.  அது யாருன்னு பார்த்தா, நாங்க ஒரு whatsapp குரூப் வச்சிருக்கோம் அதுல ரெண்டு குரூப்பா பிரிஞ்சி மக்கள் சண்டை போட்டுக்கிட்டு இருப்பாங்க. அந்தச் சண்டைக்கு தலைவரா இருக்கிறவங்கதான். அவங்க பேரு உங்களுக்கு எதுக்கு? இப்படி வச்சுக் கொள்வோம். ஒருவர் பெயர் D. இன்னொருவர் V. முதல் ஆள் இருக்காரே ... அப்படியே உலகத்துல உள்ள புட்பால் பூரா எனக்கு அத்துபடி அப்படின்னு சொல்லுவாரு அவரு கட்சி என்னவென்றால், ரொனால்டோ தான் பெரிய ஆள். அவர் தான் உப்ட்பாலுக்கே ஆடு – அதாவது GOAT – என்பார். இன்னொருத்தர் மெஸ்ஸி ஆளு. அவரே உன்னதமானவர். உயர்ந்தவர் என்பார். இரண்டு பேரும் உலகத்தில் சிறப்பா விளையாடுறது எங்க ஆளுகதான். அந்தந்த அணி மட்டும்தான் கடைசி வரைக்கும் வரும்; வெற்றி பெறும் என்பார்கள்.  அநியாயமா இரு கட்சிகளும் ரொம்ப சண்டை போடுவாங்க. அப்போ நான் ஒண்ணு சொன்னேன். அந்தக் காலத்துல சிவாஜி, எம்ஜிஆர்,  இருவரில் யார் பெரியவர், சிற்ந்தவர் என்று அவரது ரசிகர்களுக்குள் போட்டி நடக்கும். எங்களுக்கு அப்போது பதில் கிடைக்கல. ஆனா இப்ப கிடைச்சிருச்சு சோ காலம்தான பதில் சொல்லணும் மெஸ்ஸியா ரொனால்டோவா யாரு பெரிய ஆளுன்னு காலம் தான் முடிவு பண்ணும்.  இப்ப நீங்க சண்டை போடாதீங்கன்னு சொல்லிப் பார்த்தேன் கேட்கிறது மாதிரி இல்ல. அட போங்கப்பான்னு உட்டுட்டேன்.

 

 சரி இது இப்படி இருக்குன்னா இன்னொரு பக்கம் எரிச்சலான ஒரு விஷயம் அந்த குரூப்ல இருக்கும். எங்க whatsapp குரூப்பில் இருக்குற எல்லாருமே ரொம்ப படிச்ச மக்கள். நிறைய பேரு கணினியில் ஆணி புடுங்குற வேலை பார்க்கிறவங்க. பெரிய பெரிய வேலை பார்க்கிறவங்க. ஒரு நாள் மேட்ச் பாத்துட்டு அந்த குரூப்ல இருக்கேன். ஒருவர் அந்த ஃபுட்பால் நடந்துகிட்டு இருக்கிற மைதானத்தில் இருக்கிறாராம். அவர் அங்க இருந்துகிட்டு இங்க வெப்பம் 20 டிகிரிதான் இருக்கு. இவங்களுக்கு எதுக்கு தண்ணி காட்ற நேரம் அப்டின்னு கேட்கிறார். அதாவது அந்த விளையாட்டு வீரர்களுக்கு எதற்கு HYDRATION BREAK. என்று ஒரு நியாயமான

கேள்வியை முன் வைக்கிறார். இன்னொருத்தார் கல்ஃப் நாட்டில் இருந்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஈரானின் குண்டு வெடிப்பு சத்தமும் எங்கள் பகுதியில் நடக்கிறது என்று வெகு சாதாரணமாகக் கூறிக் கொண்டு விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

அப்போ எல்லோரும் நல்ல படிச்ச ஆளுக. ஆங்கிலமும் தாய்மொழியும் நன்றாகத் தெரிந்த ஆட்கள். படிக்காத பாமரர்கள் யாரும் அங்கில்லை. ஆனால் நான் அந்த க்ரூப்பில் சேரும்போது பொதுவாகப் பலரும் தங்லீஷில் எழுதிக் கொண்டிருந்தனர். இருசக்கர வண்டி ஓட்டிக்கிட்டே போன் பேசும் முட்டாள்களைப் பார்க்கும்போது எனக்கு வரும் கோபம் வரும். முன்பெல்லாம் அந்த மாதிரி ஆட்களைக் கன்னாபின்னாவென்று திட்டுவேன் – அவர்கள் காதில் விழுமளவிற்கு. இந்த விஷயத்திலும் அப்படி ஒரு கோபம்  வருவதுண்டு. அதனால் எல்லோரும் ஆங்கிலம் அல்லது தமிழில் மட்டும் எழுதுங்களேன் என்று ஒரு வேண்டுகோளை வைத்தேன். அதைச் சீந்த யாருமில்லை. தொடர்ந்து தங்லீஷ் தான். தமிழ் app இல்லை என்று ஒரு காரணத்தையோ, phonetic typing தெரியாது என்று

இதற்கெல்லாம் காரணம் சொல்வார்கள். அப்டின்னா ஆங்கிலத்தில் எழுதுங்க .. படிச்சவங்கதான் நீங்க அப்டின்னேன். அவங்க எழுத முடியாதுன்னா .. அப்போ என்ன முடிவுக்கு நான் வரணும்? எனக்கு வந்த முடிவு .. பலருக்கு ஒரு compkex. ஆங்கிலம் தப்பு தப்பா எழுதிடுவோம் என்கிற பயம். அப்போ தமிழில் எழுதணும். அதுக்கு prestige ஒரு தடை. நான் பொதுவா தங்லீஷ் வாசிக்கிறதேயில்லை. இதுல பலரும் தங்கிலீஷ்தான். இதில் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்க் கவிஞர்களும் இருந்தார்கள் என்பதும் ஒரு வேதனையான, வேடிக்கையான உண்மை. நம் தாய்மொழியை அடியோடு அழித்துவிடலாம் என்று தான் படித்த இந்த மக்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களோ? இருக்கும்.

 

பேசாமல் வெளியேறிடலாம்னு நினச்சேன். இந்த க்ரூப் 2022 இருந்தே இருக்கிறது. உலகக்கோப்பைக்கு மட்டும் உயிர்த்தெழும். நம்மையும் விரும்பி சேர்த்தார்களே என்ற எண்ணமும், விளையாட்டின் மீதிருந்த காதலும் தடைகளாக இருந்தன; இருக்கின்றன.

 

சரி ... காலையில் வெகு சீக்கிரமே எழுந்தேனே... ஆட்டம் பார்க்கவில்லையா என்று கேட்பீர்கள். டல்லான முதல் பகுதி ஆட்டம். இரண்டாம் பகுதியில் கொஞ்சம் சூடு ஏறியது. நாளை அது பற்றிப் பேசுவோமே ...

 

ஏன் மெஸ்ஸி கூண்டில் நின்றார் என்றும் கேட்பீர்கள். அதைப் பற்றியும் எழுதணும்.


 

 




No comments:

Post a Comment