*
மார்ச் 31,2013 ... நீயா .. நானா ..?
காதல் திருமணங்களும் அவைகளுக்கான எதிர்ப்பும் என்ற தலைப்பில் ஆரம்பித்தது. இந்நிகழ்ச்சிக்குரிய விளம்பரத்தில் ‘கெளரவம்’ என்ற படத்தினரும் இருந்தனர். இது ஒரு புதிய விளம்பர யுத்தி என்று நினைத்தேன். ஏனிப்படி இந்தப் படத்திற்கு மட்டும் இப்படி ஒரு தனியிடம் என்று நினைத்துக் கொண்டேன்.
**************************
வழக்கமான பாணியில் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் ஒரு இளம் தாய் தன் மிகச் சிறு குழந்தையுடன் தன் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதும் சில விஷயங்கள் வெளிப்படையாக வந்தன. இதில் சாதி வேற்றுமைகள் என்பதை விட, தலித்துகள் ஒரு புறமும், மற்ற சாதியினர் அனைவரும் இன்னொரு பக்கம் என்பது வெளிப்படையாக வெளி வந்தது. அந்த தாய் தன் குழந்தை ஒரு தலித்தின் குழந்தை; அதற்காகவே அதை வாழவிடக்கூடாது என்று தன் உறவினர்களே கூறுவதாகக் கூறினார். வெகு பச்சையான உண்மை.
இதற்குப் பின் வந்த கருத்தோட்டங்கள் அனைத்துமே தலித் vs மற்ற சாதியினர் என்ற கூறுபாட்டைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. கெளரவக் கொலைகள் பற்றிய பேச்சு தொடர்ந்தது. இதே போன்ற ஒரு நீயா நானா நிகழ்வில் ஒரு தகப்பன் தன் மகள் சாதி மாறிக் கல்யாணம் செய்தால் அவளை வெட்டிக் கொல்லுவேன் என்று மூன்று முறை அந்த மனித மிருகம் சொன்னதை ஒருவர் இங்கு நினைவூட்டினார். எனக்கு அந்த நிகழ்வைப் பார்த்த அன்றே அந்த வெறிப் பேச்சுக்காக அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாதா என்று தான் தோன்றியது. இப்படிப் பேசுவதைப் பெருமையாக மக்கள் நினைப்பதை இயக்குனர் சேரன் வருத்தத்தோடு கூறினார்.
எனக்கென்னவோ எல்லா சாதியினருமே தலித்துகளை ஒதுக்கி வைப்பதாக இருந்தாலும் நம் தமிழகத்தின் வடக்குப் பக்கம் உள்ள வன்னியர்களும், தெற்குப் பக்கம் உள்ள தேவர் இனத்தவரும் இன்னும் தங்கள் புத்திகளை வளரவிட்டு, சாதித் திமிரைக் குறைத்தால் சமூகத்தில் இன்னும் விரைவில் நிலைமை மாறும் என்றே நினைக்கிறேன். சில விஷயங்களை மூடி போட்டுப் பேசுவதை விட்டு விடுவது எல்லோருக்கும் நலம். நாம் எல்லோருமே சாதி விஷயத்தில் மிகவும் மோசமென்றாலும் பலரும் உள்மனத்துக்குள் தங்கள் எண்ணங்களை ஒளித்து வைத்துக் கொள்கிறோம். ஆனால் நான் சொன்ன இரு சாதியினரும் இதில் வெளிப்படையாக இருப்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.
ஊடகங்களில் இன்னும் மேல் சாதி / caste hindus / ஆதிக்க சாதி போன்ற சொல்லாக்கங்களைத் தவிர்த்தலும் கட்டாயமே.
*****************************
இன்னும் சேரி மக்கள் ஆண் நாய்களை வளர்க்கக் கூடாது என்ற கட்டமைப்பு இன்னும் நமது ஊர்களில் இருப்பது அறிந்து, அர்த்தம் புரிந்து அதிர்ந்தேன். அடப் பாவிகளா ...! நாத்தம் பிடித்த பிறவிகள் !
*****************************
பேசிய ஒரு சமூகவியலாளர் சாதி ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தீண்டாமை கடந்த கி.பி.500-லிருந்து தான் இருக்கிறது என்றார். ஆனாலும் புராணக் கதைகளிலேயே சாதியும், தீண்டாமையும், தாழ்வு நிலையும் சொல்லி இருக்கிறதே என்று நினைத்தேன். எனக்கு நந்தன் கதையும் நினைவுக்கு வந்தது.
*****************************
கமல் ஹாசன் தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களை எடுத்து ஒரு சாதியினரைத் தூக்கிப் பிடிப்பது பற்றி பலரும் எழுதியாயிற்று. தேவர் மகனில் தேவர் சாதி பற்றிய பாடலை முதலில் கேட்ட போது அது சிவாஜி கணேசனுக்காக எழுதியது என்று தான் நினைத்தேன். ஆனால் அது முத்துராமலிங்கத்துக்காக எழுதியது என்பது பின்புதான் புரிந்தது. அதுவும் நான வாழும் பகுதியில் இந்த இனத்தவர் அதிகம். இதே பகுதியில் உள்ள ஒரு தலித் வேறு ஒரு ரிசர்வ்டு தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார். அவர் தன் பெற்றோரைப் பார்க்க எங்கள் பகுதிக்கு வரும்போதெல்லாம் பயங்கர உச்ச சத்தத்தில் இந்தப் பாடல் திரும்பத் திரும்ப போடப்படும். வக்கிரமம் தான்; வேறென்ன..?
கமல் இந்த சாதிக்கு இன்னும் கொடி கட்டுவதை விட்டு விட்டால் நலம். கமலின் விஷ்வரூபம் பிடித்தது. ஆனாலும் எடுத்த கருத்து எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்தது. நிச்சயம் அப்படம் இஸ்லாமியர் மீது ஒரு அச்சத்தையோ, ஐயத்தையோ உண்டு பண்ணக்கூடிய படம். கமல் இதைப் போன்ற துவேஷ சிந்தனை தரும் படங்களை எடுப்பதை விட அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
***********************************
கெளரவம் படம் எடுக்க என்ன காரணம் என்று கேட்ட போது பிரகாஷ்ராஜ் கொடுத்த பதில் இதமாகவும், இனிமையாகவும், பெருமையாகவும் இருந்தது. எங்கும் விரவிக்கிடக்கும் சாதியக் கொள்கைகளுக்கு இவ்வளவு நேர்மையாக எதிர்ப்பு தெரிவிக்கும் அவரது மனது வாழ்த்துக்குரியது. பணத்தைப் பற்றி நினைக்காமல் தான் வாழும் சமூகத்திற்கு தான் கொடுக்கும் ஒரு வேண்டுகோளாக இப்படத்தை எடுப்பதைக் குறிப்பிட்ட போது அவர் மேல் இதுவரை இருந்த மரியாதை மிக அதிகமாயிற்று. வாழ்க ... வளர்க ...
********************************
நீயா நானா பரிசளிக்கும்போது சமூகத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விழியற்ற இருவருக்கும், அந்த இளம் தாய்க்கும் கொடுத்தது மனதைத் தொட்டது. அந்த தாய் பரிசை வாங்கும்போது அவரது குழந்தையை இயக்குனர் பாலாஜி வாங்கி தூக்கி வைத்துக் கொண்டதில் மனித நேயம் மிளிர்ந்தது. பரிசு வாங்கும்போதும் கூட முகத்தில் உறைந்திருந்த சோகத்தோடு அந்தப் பெண் நின்றது வேதனையாக இருந்தது. அவருக்கு உதவிட மகளிர் உதவிக் குழுக்களோடு மற்றோரும் உதவினால் நன்றாக இருக்கும்.
********************************
கெளரவத்திற்கு இப்படி ஒரு விளம்பரமா என்று முதலில் நினைத்தது தவறு என்பது புரிந்தது. நல்ல ஒரு கொள்கையுடன் எடுக்கப்பட்ட ஒரு படம். இதற்கு இப்படி ஒரு வரவேற்பும், விளம்பரமும் கொடுப்பது தவறல்ல என்றும் புரிந்தது.
ஆனாலும் தேவர்மகனில் ‘போங்கடா .. போய் பிள்ளைகளைப் படிக்க வைங்கடா ...’ என்ற புத்திமதி யார் மனத்திலும் விழுந்து, விளைந்து, முளைத்ததாக நான் பார்க்கவில்லை. இப்படத்திற்கும் அப்படிப்பட்ட முடிவு இல்லாமல் இருக்க ஆசைப்படுகிறேன்.
******************************
அந்த இளம் தாயின் சோகம் காண்க ....
*


