Friday, June 19, 2026

1375. FIFA 26 குட்டியூண்டு நாடுகள்







குட்டியூண்டு நாடுகள்

 

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி முடிவடைந்ததும், அதே போல் உலகக் கால்பந்துப் போட்டி முடிந்ததும் நம்மூரில் வழக்கமான ஒரு குரல் ஒலிக்கும். இத்தனை பெரிய நாடு; அத்தனை பெரிய மக்கள் எண்ணிக்கை. சின்னச் சின்ன நாடுகள் கூட இத்தனைப் பரிசுகளை அள்ளிச் செல்லும் போது நாம் மட்டும் வீசும் கை .. வெறும் கை .. என்று இருக்கிறோமே என்ற பரிதாபக் குரல் தான் அது.  

ஆனால் இந்தக் குரலோடு என் குரலையும் இப்போது சேர்த்து விட்டேன். அதென்னன்னு பாருங்களேன். கால்பந்துப் போட்டியில் முதல் சுற்றில் இரு நாடுகள் .. அந்த நாடுகளின் பெயர்களையே முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். இப்படி ஒரு பெயரில் ஒரு நாடா என்று ஆச்சரியப்பட்ட பின், அந்த நாடுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாமென நினைத்தேன். ஆண்டவரிடம் கேட்டேன்.கொடுத்த விவரங்கள் இன்னும் அதிமாக blood pressure-யைக் கூட்டி விட்டது.

க்யூரா காவோ (Cura cao) என்று ஒரு நாடாம். நெதர்லாந்துக்கு மிக அருகிலுள்ள நாடு. ஒரு காலத்தில் நெதர்லாந்தின் ஆளுமைக்குள் இருந்த நாடு. இப்போது சுயாட்சி பெற்று, இருந்தும் நெதர்லாந்தின் தொடர்பிலுள்ள நாடு. இந்தச் சிறிய நாட்டின் ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்து அறுபதாயிரம் – 1,60,000 – மட்டுமே. அதாவது நம் நாட்டில் உள்ள ஒரு பெரிய கிராமத்தின் எண்ணிக்கையே அந்த நாட்டின் மொத்த எண்ணிக்கை! ஆனாலும் நெதர்லாந்தின் முக்கிய விளையாட்டான கால்பந்து விளையாட்டின் வீச்சு இந்த நாட்டிலும் உள்ளது. இங்குள்ள கால்பந்து வீரர்கள் எளிதாக நெதர்லாந்திலுள்ள கிளப்புகளில் விளையாட முடியும். இருப்பினும் அந்த நாடு தன் நாட்டு வீரர்களை வைத்து விளையாடி, தங்களை உலகக் கோப்பைப் பந்தயத்தில் நுழைந்(த்)து விட்டனர். நெதர்லாந்து உலக அளவில் கால்பந்து விளையாட்டில் 8வது தரத்திலுள்ளது. ஆனால் இந்த நாடு தர நிலையில் கீழே இருந்தும் இறுதியாட்டங்களுக்கு முன்னேறி வந்து விட்டது.

அவர்களது அதிர்ஷ்டம் முதல் சுற்றிலேயே ஒரு பெரிய தரத்தில் மிகவும் மேலேயுள்ள ஜெர்மனியோடு மோத வேண்டியதிருந்தது. ஜெர்மனியும் ஒரு ஒரு கோல் வாங்கி, 7 கோல் போட்டு வென்றது. ஒரு வேளை 7:1 என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்தால், ஜெர்மன் முந்தியொரு உலகக் கோப்பை பந்தயத்தில் ஆனானப்பட்ட ப்ரேசிலுக்கு இதே கோல் கணக்கில் வென்றது. அந்த விளையாட்டைப் பற்றி நான் முன்பு எழுதிய பதிவைக் காண: https://dharumi.blogspot.com/2014/07/773-fifa-14.html

SPAIN – CPV (CAPE VERDE)

CPV (CAPE VERDE) – இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதா? நானும் இப்போது தான் இந்தப் பெயரைப் பார்த்து அதிசயித்து நின்றேன். நாட்டைப் பற்றிப் பார்ப்போமே என்று கூகிள் ஆண்டவரிடம் போனால் அது போர்த்துகல்லின் காலனியாக இருந்த ஒரு நாடாம். ஜனத்தொகை எவ்வளவு தெரியுமா? ஆறு லட்சம் மக்கள் – அதாவது, நம்மூரில் ஒரு சிறிய டவுன் அளவு தான். போர்த்துகல்லின் கலாச்சாரத்தால் இந்த நாடும் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கின்றனர் போலும். இவர்களின் தரம் 67. (நம்முடைய தரம் 138) இவர்கள் அதிர்ஷ்டம் முதல் சுற்றில் இவர்கள் மோத வேண்டிய நாடு இரண்டாம் தரத்திலிருக்கும் ஸ்பெயின்.

எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஸ்பெயின் எளிதாக வென்று வாகை சூடும் என்று நினைத்தால், கதை மாறிப் போனது. 0:0 என்பதுதான் இறுதி முடிவு. ஸ்பெயின் ஆட்டக்காரர்களில் போன போட்டியில் லாமைன் யாமல் என்ற ஆட்டக்காரரைப் பிடித்தது. 

ஒருவேளை ஸ்பெயின் இந்த ஆட்டத்தையும் தங்கள் எதிரணியையும் எளிதாக எடுத்துக் கொண்டதால் முதல் பாதியில் இந்த இளம் வீரர் களம் இறங்கவில்லை. இரண்டாம் பாதியில் உள் நுழைந்தார். ஆனாலும் ஆட்டம் மிகவும் வேகமாக நடந்தது ... ஆனால் கோல் எதுவும் விழவில்லை. பந்து என்னவோ CPV பக்கமே இருந்தாலும் கோல் எதுவும் விழவிடவில்லை. CPV தற்காப்பு ஆட்டம் அத்தனை சிறப்பாக இருந்தது. அதுவும் 40 வயதான கோல்கீப்பர் (நல்ல தமிழில் “கவலி” கோல்=கவல்) வோசின்கா – Vozinha- பத்துப் பன்னிரண்டு தடவைக்கு மேல் தன் கவலைக் காத்து நின்றார். அவரது ஆற்றல் ஆச்சரியமாக இருந்தது.

நல்லதொரு காவல் தெய்வம்!

 

 




Tuesday, May 05, 2026

1374. KOOMAN & A THIEF ON THE RIGHT SIDE



1373. SAMBAVAM ADHYIYAM ONNU - A REVIEW





Tuesday, April 14, 2026

1372. ஜெமினியில் நான்



GEMINI AI  - இதனைப் பயன்படுத்தி ஓரிரு தடவை கொஞ்சம் விளையாடிப் பார்த்தேன். இப்போது மறுபடி இன்னொரு விளையாட்டு.
 
.
                                                           நானே நான்

ஒரு படம் எடுத்து அதை எனக்குப் பிடித்த  ஓவியரான ஆதிமூலம் வரைந்த பாரதியார், மன்னர் ஒருவர் படமும் நினைவுக்கு வந்தன. ஜெமினியிடம் அதுபோல் ஒரு படம்  கேட்டேன்.

அப்படியொரு படம் வந்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் ஓவியரின் பென்சில் கீற்றல்கள் போல் வரவில்லை.

                                                            ஆதிமூலம்

சரி,, இன்னொரு இந்திய ஓவியரான ஹூசைன் நினைவுக்கு வந்தார். ஆனால் அவர் படத்தை வரையச் சொன்னால் நிச்சயமாக அவர் ஒரு குதிரையின் மேல் ஏற்றி வைத்து வரைந்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் ஜெமினி குதிரையை எனக்குப் பின்னால் ஒரு சின்ன சிலையாக வைத்து வரைந்து விட்டது.


                                                          F. M. ஹூசைன்
அடுத்து ராஜாவிடம் போய் விடலாமென நினைத்து ஜெமினியிடம் ராஜா ரவிவர்மாவின் பெயரைச் சொன்னேன். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துப் போனது. சட்டையை டார்க்காக வரைந்து, முகமும் தெளிவோடு வந்தது.

அதோடு நிறுத்தியிருக்கலாம் ...



                                                                                                  ராஜா ரவிவர்மா   

அப்படியே ஐரோப்பிய ஓவியரிடம் சென்று பார்ப்போமே என்று நினைத்து ஜெமினியிடம் ரெம்ப்ராண்ட் ஓவியரின் பெயரைச் சொன்னேன். ஒரு படம் வந்தது. நமக்கு ஓவியத்தைப் பற்றி என்ன தெரியும்? ஏன் இவர் பெயரில் வந்த படம் ராஜா ரவிவர்மாவின் படத்திற்கு ஒரு நெருக்கமான படமாக வந்தது. பின்னால் அந்த குத்து விளக்குகள் ரவிவர்மா படத்திற்கு மட்டும் பொருத்தமாக் அமைந்தன.  ஆனால் ஏன் ஜெமினி அனைத்து ஓவியத்திலும் அதே பின்னணி வைத்தது என்பது எனக்குத் தெரியவில்லை. நானும் உடனே அதை எடுத்து விடு என்று சொல்லியிருந்திருக்கலாம், செய்யாமல் விட்டு விட்டேன். ஆதிமுலம் வரைந்த படத்தைத் தவிர அதே பின்னணியை வைத்து ஜெமினி தன் வேலையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டது போலும்!


                                REMBRANDT
            
                                                                                PICCASO     
அடுத்து பிக்காசோ நினைவுக்கு வந்தார். அவரது கடிகாரப் படம் போல் வரைந்து விடுமோ என்றொரு நினைப்பு வந்தது. சரி என்ன கெட்டுப் போச்சு என்று நினைத்து அவர் பெயரை ஜெமினியிடம் சொன்னேன். ஓரு இரட்டை முகப் படம் வந்தது. பிழைத்துக் கொண்டேன்.

அடுத்தாக நினைவுக்கு வந்தார் வான்கோவ். நிச்சயமாக சூரியகாந்தி பூ வந்துவிடும் என்று நினைத்து அவர் பெயரைச் சொன்னேன், சில வினாடிகளில் அவர் படமும் அந்த மலரின் சாயலோடு வந்தது. பின்புலம் மாறியிருந்தது. சட்டத்திற்குள் ஒரு படமும் வந்தது, அதன் பொருள் எனக்குப் புரியவில்லை.

                                                                

                                                               
                                                                VAN GOGH

இதோடு முடித்துக் கொண்டேன். அதன்பின் அடடா... டாவின்சியை மறந்து விட்டோமே என்று நினைத்து வருந்தினேன். மறுபடி முயற்சித்துப் பார்க்க வேண்டும்,

இன்னொருவர் நினைவுக்கு வந்தார் - மைக்கிள் ஆஞ்சலோ. அவரிடம் ஒரு சிலை செய்யச் சொல்லுவோமா என்று நினைத்தேன். சடாரென்று மனதில் ஒரு பயம், அவரது டேவிட் சிலை போல் என்னைச் செதுக்கி விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அஞ்சி அதை முயற்சிக்கவில்லை.

Wednesday, March 11, 2026

1371. வழுக்கி விழுந்த வயோதிகன் ... :(



பெருசுக எல்லாரும் நடக்கும் போது கவனமாக நடக்கணும்னு சொல்லியிருக்காங்க. நானும் அப்படித்தான் நடந்தேன். ஆனாலும் ஒரு சில மாதத்திற்கு முன் முகம் குப்புற விழப் பார்த்தேன். நல்ல வேளையா விழாமல் தடுமாறிப் பிழைத்தேன். ஆனாலும் ஓரிரு வாரங்களுக்கு முன் நடைபாதியில் புதிதாக முளைத்து மேடாக இருந்த man hole ஒன்றும் தடை போட்டது. மீண்டும் பிழைத்தேன். இருமுறை பிழைத்தேனா ... இப்போது நான்கைந்து நாட்களுக்கு முன் நடக்குமிடத்தில் கையில் காய்கறிப் பையோடு படாரென்று முகம் குப்புற விழுந்தேன். நெற்றி பூமித் தாயை வேகமாக முட்டி விழுந்தேன். ஒருவர் ஓடிவந்து உதவினார். நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். ரத்தக் காயமில்லை. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். தூக்கி விட்டவரும் பார்த்து ஒன்றுமில்லை என்றார். ‘பரவாயில்லை ..hard nut to crack’ என்றேன். பக்கத்தில் தான் லிப்ட். நடக்க உதவி செய்தார். வீடு வரை வருகின்றேன். என்றார். யாருங்க போய் அடி வாங்கிறது .. நான் மட்டும் போகிறேன் என்றேன்.. என் அனுபவம்தான் அவருக்கும் இருக்கும் போலும். சரியென்றவர் லிப்டில் மேலே வந்து, நான் வீடு வரை செல்வதைப் பார்த்து விட்டு சென்றார்..

வீட்டம்மாவிடம் முதலில் சொல்லாமல் மெல்ல சொல்லலாமென நினைத்து உள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும், வீட்டம்மா, ‘கீழே விழுந்திட்டீங்களா?” என்றார்கள். என்னடா இது.. ஏதாவது சாமி ஏதும் வந்து அவங்ககிட்ட சொல்லியிருக்குமோன்னு நினச்சேன். நான் கீழே விழுந்ததை அடுத்த லிப்டில் இருந்தவர் பார்த்திருக்கிறார் அவ்ருக்கு என்னைத் தெரியும் போலும். அவர் லிப்டில் இறங்கியதும் அவர் வீட்டம்மாவிடம் சொல்ல, பல மைல் தொலைவில் இருக்கும் என் இளைய மகளுக்குத் தொலைபேசியில் உடனே சொல்லியிர்ருக்கிறார்கள். அவள் என் மூத்த மகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, உடனே அம்மாவுக்கு ஒரு போன். What a telecommunication! நான் 12 மாடிக்குச் செல்வதற்குள் மூன்றாவது மாடிக்காரர் சொன்ன செய்தி பல மைல்கள் கடந்து, அங்கிருந்து என் வீட்டுக்குள் சேர்வதற்குள் நான் விழுந்த சேதி வந்து சேர்ந்து விட்டது. சும்மா சொல்லக்கூடாது. விஞ்ஞானம் அப்படி வளர்ந்து விட்டது.

விஞ்ஞானம வளர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இரண்டு மூட்டுகளிலும் வலி. சரி .. விழுந்தால் வலிக்கத்தானே செய்யும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் காலையில் கட்டிலிலிருந்து எழுந்து நடக்க முடியவில்லை. இடது முழங்காலுக்குப் பின்புறம் (அந்த இடத்திற்குத் தமிழில், ஆங்கிலத்தில் என்னங்க சரியான சொல்?) சரியான வலி. வீட்டுக்காரம்மாவிற்காக வாங்கிய நடைக் குச்சி – walking stick – கொஞ்சம் உதவியது. இருந்தாலும் நடக்க அத்தனை சிரமம். ஆனால் வீக்கம் ஏதுமில்லாததால் எலும்பில் ஏதும் தகராறு இல்லை என்று தெரிந்து கொண்டேன். கால் வலிக்கு என்ன செய்யலாம்?

அண்மையில் எங்கள் அடுக்குமாடியில் இருந்த நண்பர் ஒருவர் வாட்சப் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். DOCZO – Doctors2home, evening clinic பற்றிய செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். சில மருத்துவர்கள் இணைந்து இதை நடத்துவதாகவும், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் வீட்டிற்கே வந்து மருத்துவம் செய்வதாக அச்செய்தி சொன்னது. வாசித்த அன்று அதை நான் முற்றிலுகாக நமபவேயில்லை. மருத்துவம் வியாபாரமாக மாறிவிட்ட நிலையில் எந்த மருத்துவர்கள் இது போன்ற சேவை செய்யத் தயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இன்று ஒரு trial கொடுப்போமே என்று நினைத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஒரு பெண் பேசினார். எனக்கு என்னப் பிரச்சனை என்று கேட்டார். சொன்னேன். அப்போது காலை 11 மணியிருக்கும். பேசியவர் மிகக் கனிவாகப் பேசியதே ஆச்சரியமாக இருந்தது. 5-9 அவர்களின் உதவி நேரம். மால 4 மணிக்குள் உங்களுக்கு இன்று வரமுடியுமாவென்று சொல்கிறேன். என்றார். வழக்கமாக இல்லை .. முடியாது .. என்று சொல்வதற்குப் பதிலாக நாம் இப்படித்த்தானே சொல்வோம். அதுமாதிரி சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். சரியாக 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புயுள்ளார்கள். 5.30-6 மணிக்குள் வருவோம் என்ற செய்தி. 5.30 மணிக்குத் தயாரானேன். 6 மணியாயிற்று. யாரும் வரவில்லை. ஓரிரு நிமிடங்களில்  தொலைபேசி ஒலித்தது. காலையில் பேசிய பெண் வழி கேட்டார். சொன்னேன். அவர் எங்கள் குடியிருப்புக்கு அருகில் வந்த பிறகே அழைத்திருக்கிறார்.

முப்பதுகளின் கடைநிலையில் இருந்த வாட்ட சாட்டமான மருத்துவர். உடம்பை நன்கு பேணியிருந்தார். அந்தப் பெண்ணுடன் வந்தார். மருத்துவரின் பெயர்: Dr. S. Muralishankar MBBS., DLO., CCEBDM(Diab).,இருவருக்கும் இருக்கை அமைத்திருந்தும் அந்தப் பெண் இறுதி வரை உட்காரவில்லை. மருத்துவர் என்னிடம் பேசிவிட்டு, கால்களையும் சிறு கீறல்களையும் (ஆனாலும் வலித்தது) பார்த்து விட்டு, விழுந்ததால் ஏற்பட்ட வலிதான் என்று கூறி மருந்து எழுதித் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்; அல்லது எங்களிடமும் மருந்து உள்ளது. அவருக்கான கட்டணம் 499 + மருந்துக்கு 500+ ஆக மொத்த்தம் 1054 என்றார்கள்.

அத்தனை ஆச்சரியம். அதை அவரோடு பகிர்ந்து கொண்டேன். .நாங்கள் சில மருத்துவர்கள் இணைந்து இதைச் செய்கிறோம். எதிர்ப்புகளும் பல மருந்தகங்களிடமிருந்து வருகிறது. எங்களோடு முதலில் இணைந்த இரு மருத்துவர்கள் அதனால் இதிலிருந்து விலகி விட்டார்கள் என்றார். ஆனால் மிகவும் ஆச்சரியத்துக்குரிய சேவை என்றேன். அவரும் எங்களுக்கு இது நல்லதொரு திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்றார்.

பாலவனங்களிலும் ஆங்காங்கே சில பூக்கள் மலரத்தான் செய்கின்றன.

மலர்களுக்க்கு என் பாராட்டுகளும், நன்றியும்.

எனக்கு வந்த குறுஞ்செய்தி இதோ:

Good news for our Chennai people!

 

Now, government doctors and a few like-minded fellow doctors from Saraswathi Polyclinic@Ashok Nagar & Mass Polyclinic@Virugambakkam in Chennai have come together with a  service mindset and started a service called

“DOCZO – Doctors2Home”

Evening Clinic @ Your Home for just Rs.499 only

(70% discount from Rs.1600 of home doctor visit)

 

With this initiative, for common health issues like fever, cold, cough, stomach pain, diabetes, BP, etc., patients no longer needed to go to nearby clinic/hospital by inconvenience of travel & its cost, long waiting in clinic and accompanying a relative/ friend to the clinic.

 

Just one phone / watsapp msg r call, your qualified, experienced, friendly MBBS/MD doctors along with a staff nurse will directly come to your home and provide treatment between 5pm to 9pm @ just Rs.499 only.

 

This service is for all patients especially for kids, working people, Elders etc who are finding difficulty to go to nearby clinic/ hospital. It saves not only health complications, but also time and money of the patient family.

All medicines / injections / IV fluids / lab test are given at 10% discount

(If patient needs and available with us)

 

In short, An evening clinic running right inside our home!

 

To avail this new home health service

DOCZO – Doctors2Home

Evening Clinic@ your Home at Just Rs.499 only( 5pm to 9pm)

Call / WhatsApp

📞 7338830305 / 7338830905

(For Enquiry and appointment booking)

 

Areas where your friendly MBBS/MD doctors are currently providing service in Chennai:

Virugambakkam, Valasaravakkam, Ramapuram, KK Nagar, Ashok Nagar, Koyambedu, Arumbakkam, Kodambakkam, Nerkundram, Vadapalani, Anna Nagar, Mogappair, West Mambalam, Ekkattuthangal.

 

If you share (forward) this message to all your whatsapp groups and chennai based friends personally , it might be a big help and useful to someone else….