Thursday, September 15, 2005

49. நான் ஏன் மதம் மாறினேன்...? - 1

*

தொடரின் மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முதலில் பதித்த நாள்: 16.08.05


'மிஸ்ஸியம்மா" படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, 'வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை' என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் - கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'சிடி சினிமா' தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: 'அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?'.


பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பது
நிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை 'மூளைச் சலவை'யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் 'பைபிள்' பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் - அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு...


மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று - with an OBJECTIVE VIEWING - பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து 'அவைகளை' யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.

அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது - பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு - புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு - கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை - மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற - அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு - நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் - விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் - ஈமான் - Fidelity.

நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, - இந்துக்கள் சொல்வதுபோல், 'க்ரஹஸ்தன்'' என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் - மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே - பலத்த தயக்கங்களுக்குப் பிறகே - கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution - a very slow 'blossoming'! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, 'Why I am not a Chrisitian?" என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

'சுயம்பு' என்று வைத்துக்கொள்வோமே!!

இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்... தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை - ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்...*
அடுத்த பதிவுக்குச் செல்ல: 2ம் பதிவுக்கு.


*

13 comments:

inomeno said...

//(அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து 'அவைகளை' 'யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). //

100% உண்மையான வரிகள்.

inomeno said...

//ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே!
சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
//

இது நல்லா இருக்கு.இதை நான் அப்படியே என் வலைபதிவில் உபயோகிக்கலாமா?

தருமி said...

"இது நல்லா இருக்கு."
நன்றி

"இதை நான் அப்படியே என் வலைபதிவில் உபயோகிக்கலாமா"

தாராளமாக; சந்தோஷமாக.

இந்தக் கட்டுரை 'தவறுதலாகப்' பதிக்கப்பட்டு விட்டது; அதை நான் இன்னும் சரியாக ஆரம்பிக்கக்கூட இல்லை; எப்படியோ பதிப்பித்துவிட்டேன்; முழுமையாக
விரைவில் வருகிறேன்.

நல்லடியார் said...

//இந்தக் கட்டுரை 'தவறுதலாகப்' பதிக்கப்பட்டு விட்டது; அதை நான் இன்னும் சரியாக ஆரம்பிக்கக்கூட இல்லை; எப்படியோ பதிப்பித்துவிட்டேன்; முழுமையாக
விரைவில் வருகிறேன்//

'கட்டுரை' என்பதற்குப்பதில் 'நம்பிக்கை' என்று போட்டுப் பாருங்கள் :-)

உங்கள் நம்பிக்கை மாற்றத்திற்கான காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.அன்புடன்,

தருமி said...

நல்லடியார்,
நீங்கள் சொன்னபடி மாற்றிப்போட்டுப் பார்த்தேன்; சரியாக வரவில்லை!!

"உங்கள் நம்பிக்கை மாற்றத்திற்கான காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்"

"ஆவலோடும்..திறந்த மனத்தோடும்" என்று சொல்லுங்களேன்.

நல்லடியார் said...

உங்கள் விருப்பப் படி "ஆவலோடும்..திறந்த மனத்தோடும்"

வசந்தன்(Vasanthan) said...

//மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்;//

100 வீதம் உண்மை.

இவற்றில் எந்த மதம் சரியானது என்ற கேள்வியைப் பார்த்தபோது, 'புரட்சிக்காரனில்' வேலு பிரபாகரன் கேட்கும் கேள்வி ஞாபகம் வருகிறது.
"நீ அவனின் மதம் பொய்யென்கிறாய், அவன் உன் மதம் பொய்யென்கிறான், நானோ இந்த மதங்களே பொய்யென்கிறேன்."

ஆனால் திறந்த மனத்துடன் இருக்கச் சிலரால் முடியாதென்பது இப்போதே தெரிந்துவிட்டது.
நிச்சயம் நல்லதொரு தொடர்.
எழுதுங்கள்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.

inomeno said...

தருமி நன்றிகள்.

"நல்லடியார் said...
உங்கள் விருப்பப் படி "ஆவலோடும்..திறந்த மனத்தோடும்"
"

நானும் ஆவலோடும்..திறந்த மனத்தோடும் :-)

நல்லடியார் said...

//ஆனால் திறந்த மனத்துடன் இருக்கச் சிலரால் முடியாதென்பது இப்போதே தெரிந்துவிட்டது//

வசந்தன்,

யார் அந்த 'சிலர்' என்று குறிப்பிட்டிருக்கலாமமே. மேலும் இது போன்ற விவாதங்கள் வரும்போது கருத்து மோதல்கள் தவிர்க்க இயலாதது. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை கண்ணியமாக சொல்ல உரிமையுண்டு. விவாதத்தின் முடிவு உங்கள் கருத்துக்கு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம். சொல்லப்பட்ட உண்மைகள் இன்றே உரைக்காவிட்டாலும் என்றாவது உரைக்கலாம்தானே. ஆகவே அவரவர் கருத்தை சொல்ல விடுங்கள். திசை திருப்பல் இல்லாவிட்டால் நிச்சயம் பல நல்ல விசயங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். மற்றபடி இப்பதிவை கொண்டு செல்வது தருமி ஐயாவின் விருப்பம். அதுவரை பார்வையாளனாக மட்டும் இருக்கிறேன். நன்றி.

தருமி said...

"அதுவரை பார்வையாளனாக மட்டும் இருக்கிறேன்"

கோபம் வேண்டாம், நல்லடியார்! வசந்தன் உங்களைக் குறிவைத்து சொல்லியிருக்க மாட்டார். உங்கள் வரவை எதிர்பாரிக்கிறேன். வாருங்கள்.

தருமி said...

ஐயாமார்களே, வயது சொன்னால் என் தகுதிக்கு மீறி எனக்கு மரியாதை கிடைக்கலாம்; அது தேவையுமல்ல; பிடிக்கவும் இல்லை; அதனலேயே, வயது, பெயர் எல்லாம் மறைத்தேன். ஆகவே, -- "தருமி" போதும், "தருமி ஐயா" வேண்டாமே, please !!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

வந்திருப்பதாவது? நீங்கள் பதிவுகளை இடக் காத்திருந்து வாசித்திருக்கிறேன். பின்னூட்டம் இட்டதில்லை. மற்றபடி உங்கள் பதிவுளில் அனேகமாக எல்லாவற்றையும் வாசித்திருக்கிறேன்.

தருமி said...

மிக்க நன்றி வித்யாசாகரன்.

Post a Comment