Thursday, September 15, 2005

64. நான் ஏன் மதம் மாறினேன்...?..5

*

*

தொடர்புடைய மற்றைய பதிவுகள்:

1.
2.
3.
4.
5.
6.
7.
8.


முதலில் பதிந்த நாள்: 07.09.05
இனி நான் சாராத மற்ற சில சமயங்களைப் பற்றி நானறிந்த வரை ஓர் அலசல்:


இந்து மதம்:
'இது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி' - எல்லோரும் சொல்லும் இதற்கு என்ன பொருள் என்று எனக்குப் புரிந்ததில்லை. இந்த மதம் ஒரு 'அவியல்' என்று சொல்லலாம்; ஏனெனில், இங்கு, 'சக்தி'/ ஒளி (energy) வழிபாடு என்று இயற்கையை ஒட்டிய கருத்தும் உண்டு; முப்பது முக்கோடி தெய்வமும் உண்டு. எல்லா உயிரும் ஒன்றே என்ற கொள்கை ஒரு பக்கம்; ஆடு, கோழி பலி என்பது அதன் மறு பக்கம். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கருத்து ஒரு பக்கம்; கடவுள் மறுப்புக் கொள்கையோடு சார்வாகத் தத்துவம் இன்னொரு பக்கம். [It is a religion of conglomeration of different contrasting concepts. `Any attempt to describe Hinduism as one whole leads to startling contrasts. The same religion enjoins self-mortification and orgies; has more priest, rites and images....' (Intro to Asian Religions, Geoffrey Parrinder, pp31) ]


'நான் ஏன் ஒரு இந்து அல்ல?' என்ற காஞ்சா அய்லய்யாவின் நூலைப் படித்த பிறகோ நாம் சாதாரணமாகக் கருதும் இந்து மதம் இரண்டு பட்டுத் தெரிந்தது: ஒன்று, பிராமண(ர்களின்) இந்து மதம்(brahminic hinduism); இரண்டு, மற்றவர்களின் "இந்து" மதம். முதல் வகையில் வழிபடப்படும் கடவுளர்களும் "பெரிய கடவுள்கள்" (High gods). இரண்டாவது வகையில் "சின்னக் கடவுள்கள்" (small gods). அவர்கள் வைத்துக்கொள்ளும் பெயர்கள்கூட இந்த இருவகைப்படும். ஜாதி வேறுபாடுகள் அவர்களின் பெயரிலேயே தெரியும்படி இருக்கும். பெரிய கடவுள்களின் பெயர்கள் 'உயர்ந்த சாதி'க்கும், அடுத்த படியில் சின்னக் கடவுள்களின் பெயரும், மூன்றாவது நிலையில் 'தாழ்ந்த சாதிக்கு' உயிரற்ற பொருட்களின் பெயருமாய் இருந்து வருகிறது. சாதிப்படிகளில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு 'முன்னோர் வழிபாடு'தான் மதமாய், சம்பிரதாயங்களாய் (rituals) இருந்துவருவது கண்கூடு. இதைப் பார்க்கும்போது பிராமணர்களின் மதமான'இந்து'மதமும் ஒரு சிறுபான்மை மதமாகவே எனக்குத் தோன்றுகிறது.


சமய பழக்க வழக்கங்கள் எல்லாவிற்றிலுமே பெருத்த வேறுபாடுகளோடு இருப்பினும் இந்த 'இந்து' என்ற பெயர் மட்டுமே அவர்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்தி வருகின்றது. அவர்கள் ஒன்றுபட ஒருவழி உண்டு. அது, ஜாதியை இந்து மதத்திலிருந்து பிரித்தெடுப்பது. சாதிகள் போனபின் அவர்கள் நடுவே உள்ள சமய வேறுபாடுகள் மறையலாம். ஆனால், இது நடக்கக்கூடிய காரியமா? சாதியை இந்து மதத்திலிருந்து பிரிக்கவே முடியாது. இந்தச் சாதிகள் மக்களை என்றும் பிரித்தே வைத்திருக்கும். 'அவனன்றி அணுவும் அசையாது' என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஓர் இந்து, இந்த சாதிப்பிரிவினையும் கடவுளால் வந்தது; இவன் இன்ன சாதிக்காரனாக இருக்க வேண்டும் என்பது கடவுளின் திருவுள்ளம்; அதை மாற்ற நாம் யார் என்று கேட்டால் - அந்த நம்பிக்கையை யாரால் மாற்ற முடியும்? கடவுள்நம்பிக்கைகளுக்கும் 'பகுத்தறிவு'(rationality)-க்கும் எந்த மதத்தில்தான் தொடர்பிருக்கிறது?

வேதங்கள்: ஏறத்தாழ 1500 - 1200 B.C. என்ற கால கட்டத்தில் மேற்கிலிருந்து இந்தியாவின் வடக்கினில் நுழைந்து, பின் இந்தியாவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் காலூன்றிய ஆரியர்களின் சமய நூலாக எழுதப்பட்ட நான்கு வேதங்கள் brahminic hinduism-த்தின் அடிப்படை நூல்களாக உள்ளன. இந்தியாவின் கொடூரமான,வேதனையான சாதி வேறுபாடுகள் இந்த வேதங்கள் தந்த பரிசு. இந்த வேதங்களில் கூறப்படும் வருணன்,ருத்ரன், இந்திரன் போன்ற தெய்வங்களின் 'மவுசு' குறைந்து காலப்போக்கில் இந்தக்கடவுள்கள் இல்லாமலே போய்விட்டனர்; இதேபோல் வர்ணாசிரமக் கொள்கைகளான சாதி வேறுபாடுகளும் இல்லாதொழிந்திருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்.

உபநிஷத்துகள்:
வேதங்கள் பல கடவுளர்களைப் பற்றிப் பேச, உபநிஷத்துக்கள் ஒரே ஒரு 'பரம்பொருளை'ப் பற்றிப் பேசுகின்றன. உபநிஷத்துகள் 'வேதாந்தங்கள்' (வேதம் + அந்தம்) என அழைக்கப்பட்டன. வாய்வழிச் செய்திகளாக வந்த இவை 800 B.C.யில் எழுத்துருவுக்கு வந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகின்றன. "ஓம்" என்னும் அருட்சொல்லின் பெருமையும், தியானத்தின் அருமையும் உபநிஷத்துக்களின் கொடை. பரம்பொருளும், மனிதனும் இணைந்ததுவே இந்தப் பிரபஞ்சம்; இவ்வுலக வாழ்வு ஒரு 'மாயை'யே. 'கர்ம வினை'தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வினை அறுத்து,இறுதியில் பரம்பொருளோடு 'ஆத்மா' இணைந்து 'முக்தி' பெறவேண்டும். எல்லா உயிர்க்கும் இதுவே அளிக்கப்பட்ட 'விதி'. வேதங்கள் தந்த பல-கடவுள்-தத்துவம், உபநிஷத்துக்களின் மூலம் ஒரு-கடவுள்-தத்துவமாக மாறுகின்றது.

த்வைதம், அத்வைதம்
பின்வந்த ராமானுஜர், சங்கரர் போன்றவர்களால், இதில் சில திரிபுகள் ஏற்பட்டன. த்வைதம் - dualilty- இரட்டை நிலை பற்றிப் பேசுகிறது. உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் தெரியும் ஒரே பிம்பம் போல், உயிர்களில் பரப்ப்ரும்மம் இருக்கிறது; ஆயினும், ஆத்மா ப்ரம்மத்திலிருந்து வேறுபட்டே இருக்கிறது; முக்தி அடையும்போதே 'இரண்டும்' ஒன்றாகிறது.
அத்வைதமோ, ஆத்மாவும், ப்ரம்மும் ஒன்றே; ஓர் அறையினுள் காற்று எங்கும் இருக்கிறது, ஆனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள பானைகளில் உள்ள காற்று தனித்தனி; இருப்பினும், அந்தப் 'பானை' உடைந்து அதில் உள்ள காற்று 'வெளிக்காற்'றோடு ஒன்றுகிறது - என்று சொல்வது அத்வைதம்.

இந்து மதம் என்றால் 'புராணங்களே' நமக்கு முக்கியமாகப் படுகின்றன. ஆனால், அவைகளயும் தாண்டி அதிலுள்ள பல விதயங்களை யாரும் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. எல்லா உயிரையும் ஒன்றாய் எண்ணுவது, semitic மதங்களான கிறித்துவம், இஸ்லாமில் சொல்வது போலன்றி, (eternal punishment) நித்திய தண்டனை என்று ஒன்றில்லாமல் பல பிறப்பு-பின் இறுதியில் முக்தி என்னும் உய்விப்பு, - இவைகள் எல்லாமே மனித நியாயங்களோடு இருப்பதாக எனக்குத் தெரிகிறது. இவைகள் நான் இந்து மதத்தில் பார்க்கும் சில பாசிட்டிவான் கருத்துக்கள். ஆனாலும் இந்து மதம் என்பது இது மட்டும்தான் என்றில்லையாதலால் இம்மதத்தோடும் எனக்கு ஒன்றுதல் இல்லை. அதுவுமின்றி, சாதியமைப்புக்குச் சமயச் சாயம் பூசி, இந்த வேறுபாடுகள் கடவுளிடமிருந்து வந்தவை என்று சனாதன தர்மம் பேசும்போது அந்த மதமே ஒரு எட்டிக்காயாக எனக்கு மாறிவிடுகிறது.


சீக்கியம்:
15-ம் நூற்றாண்டில் இந்து, இஸ்லாம் இரண்டு மதத்தில் உள்ள நல்ல விதயங்களை ஒன்றிணைக்கப் பலர் முயன்றனர். அதில் கபீர் (1440) என்னும் முஸ்லீம், நெய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு கவிஞராக வாழ்ந்தார். இறைவனின் மேல் காதலுற்று, அவன் முன்னிலையில் பரவசப்படுபவதாக அவர் எழுதிய கவிதைகள் இந்து சமயச் சாயலோடு அமைந்தன. இந்தக் கவிதைகளாலும், கபீரின் கருத்துக்களாலும் கவரப்பட்ட நானக் (1469-1538)என்பவர், இந்து மதத்தில் பிறந்தவராயினும் இஸ்லாமின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அவர் கடவுளின் 'தரிசனம்' கிடைத்து, அதில் கடவுளால் ஏவப்பட்டு புதிய மதமாக சீக்கிய மதத்தை உருவாக்கியதாக அம்மதத்தினரின் நம்பிக்கை. குரு நானக்கின் இந்த சீக்கியமதம் இந்து-இஸ்லாம் மதங்களுக்கும் பொதுவானதுவாகத் தோன்றிய புது மதம்.


ஜைன மதமும் புத்த மதமும்
ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய இந்த இரு மதங்களில் பல ஒற்றுமைகள்: இரண்டுமே, கர்மம், ஆன்மா, மறுபிறவிகள், நிர்வாண நிலை - என்ற இந்து மதக்கொள்கைகள் பலவும் கொண்டிருந்தும் 'பரப் ப்ரும்மம்' என்ற கடவுள் கொள்கையில் மாறுபடுகின்றன. இரண்டுமே கடவுள் மறுப்பை சொல்லும் மதங்களாக ஆரம்பிக்கப் பட்டு, பின் அப்படி சொன்னவர்களையே கடவுளர்களாக மாற்றிய 'அற்புதம்' நடந்துள்ளது. இந்தியாவில் பிறந்த புத்தமதம் இங்கிருந்து விரட்டப்பட்டதற்கு முக்கிய காரணம்: இந்து மதத்தில் இருந்த பிராமணீய சாதியக் கொள்கைகளுக்கு எதிராக எழுந்தது புத்த மதம். அதன் காரணமாகவே, இங்கு வேறூன்றியிருந்த இந்து மதத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது புத்த மதம் அது பிறந்த மண்ணிலேயே காலூன்றமுடியாது போயிற்று.


புத்தம், கன்ஃபியூஷனிஸம், தாவோயிஸம்
இந்த மூன்றுமே 'சைனாவின் முக்கிய மூன்று மதங்கள்' (?) என்றே அழைக்கப்படுகின்றன. இந்த மூன்றுமே, 'ஒரே இடத்திற்கு செல்லும் மூன்று பாதைகள்' என்றே கருதப்படுகின்றன. பொதுவாகவே, எல்லா கீழ்த்திசை நாடுகளிலும் 'முன்னோர் வழிபாடு' என்பது நிலவிவருகிறது. அதிலும், சீன சமுதாயத்தில் இது எல்லா சமயங்களிலும் ஊடுறுவியுள்ளது.

குங் ஃபு ட்ஸூ (Kung Fu Tzu - Latinised as Confucius by Western missionaries) - இவரது கொள்கைகள் எல்லாமே சமூகச்சிந்தனை பற்றியதாகவே இருக்கின்றன. "அடுத்தவர்கள் எனக்கு எதைச் செய்யக்கூடாதென்று நான் நினைக்கிறேனோ, அதை நான் அவர்களுக்குச் செய்யக்கூடாது" ( பைபிள் ?)

தாவோயிஸம்: (Tao -என்ற சொல்லின் பொருள்: 'வழி'). தாவோஸித்தின் முக்கிய நோக்கம்: இறுதியில் இறையோடு இணைவது' ( அத்வைதம்?) இந்த மதக்கோட்பாட்டின் 'மூன்று தூயவர்கள்' தத்துவம் (Trinity of Christianity & Hinduism ?) கிறித்துவ, இந்து மதக்கோட்பாடுகளோடு ஒத்துள்ளன. ஜென்(Zen)தத்துவங்கள் இம்மதக் கோட்பாட்டிலிருந்து பிறந்தவையே. கருத்துக்கள் மறைமுகமாகவே வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு உதாரணம்: ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றை கனவில் காண்கிறார். பின்பு, "நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?", என்று கேட்கிறார்.

இந்தக் கீழ்த்திசை சமயங்களைப் பற்றி மட்டும் போதும் என்றே
நினைக்கிறேன். கடைசியாக இஸ்லாம் பற்றி...*

அடுத்த பதிவுக்குச் செல்ல: 6ம் பதிவுக்கு.


*

No comments:

Post a Comment