Friday, February 17, 2006

130. ஜோதிடம்...5: நாடி ஜோதிடம்

ஜோதிடம் தொடர்
மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.


பலரையும் போல நானும் நாடி ஜோதிடம் என்றால் நாடி பார்த்து ஜோதிடம் சொல்லுவார்கள் போலும் என்றுதான் நினைத்திருந்தேன். நாடி பார்த்து வியாதிகள், உடல் நலம் பற்றி கூற முடியும்; இதை வைத்து எப்படி வருங்காலம் உரைப்பார்கள் என்று நினைத்ததுண்டு. பிறகுதான் தெரிந்தது நாடி வந்து ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு, ஏடுகளிலிருந்து பலன் சொல்லுவார்கள் என்று. எது எப்படியோ? நடந்தது எப்படி என்னவென்று கூறிவிட்டு பிறகு மற்ற விஷயங்களுக்கு வருவோம்.

என் நண்பர்கள் இருவர்; வைத்தி, ரவி. இருவருமே ஏறத்தாழ என் கேசு. அதாவது கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக ஏதுமில்லை. அதற்காக என்னைப் போல எல்லாரிடமும் கடவுள் மறுப்புக் கொள்கைகளைப் பெரிதாகத் தண்டோரா போடுவதும் இல்லை. ரெண்டு பேரும் என்னை மாதிரி இல்லாம, ரொம்பவே நல்ல பசங்க; ஆனால் கடவுள், கோயில், சாமி, பூச்சாண்டி என்று ஈடுபாடு எதுவும் கிடையாது. இந்த இரண்டு பேரில் வைத்தி பேரில் உறவினர்கள் நாடி ஜோதிடம் - இதற்குப் பெயர் பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் - பார்த்து, ஒலிப்பேழையில் பலன்கள் பதிந்து கொண்டுவந்து கொடுத்தார்களாம். அதை எனக்குப் போட்டுக் காட்டினான். ஆச்சர்யமாயிருந்தது. கொடுக்கப்பட்டது அவனது பிறந்த நாளும் நேரமும் மட்டுமேதானாம். அவனது குடும்பம், உடன் பிறப்புகள், தாய் தந்தையர் பெயர்கள் என்று 'புட்டு புட்டு' வைத்திருந்தது. இதை பார்த்த பிறகு ரவி தன்னோட கட்டை விரல் கைநாட்டு கொடுத்துப் பார்த்தான். அவனுக்கும் மிகச் சரியான தகவல்கள் தரப் பட்டன. இருவருமே 'பொதுக்காண்டம்' மட்டுமே பார்த்தார்கள். பார்த்தவரை, சொன்னவரை சரியாக இருந்தன. ஆச்சரியம்!!

இது எப்படி? சிலருக்கு இங்கே ஏடு இல்லை; அங்கே போங்கள் என்று கூறிவிடுவார்களாம். அப்படிச் சொல்லப்படும் இடங்களில் இருப்பதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ பார்த்த இரண்டு பேருக்கும் ஜோதிடம் சரியாக இருந்தது.

இதுவரை கூறியுள்ளவைகளில், இரண்டாம் பதிவில் நடந்த அந்த 'கண்கட்டு மாயம்' எப்படி நடந்தது? மூன்றாம் பதிவில் சொன்னது போல, 'குரு உத்தியோகம்' என்பதை மட்டுமே சரியாக அந்த ஜோஸ்யர் சொன்னாரே, அது என்ன குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது மாதிரிதானா? இந்தப் பதிவில் சொல்லியுள்ள நாடி ஜோதிடம் எந்த அளவு சரியாக இருக்கின்றது? sampling error என்பது போல தெரிந்த இரண்டு கேசுகளில் மட்டும் சரியாக வந்த விஷயமா?

இப்படி எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பழக்க தோஷத்தில் தமிழ்மணம் பக்கம் போனால் அங்கே 'தமிழினி முத்து' இந்த நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவைப் போட்டிருக்கிறார். ஏன்யா, மதுரக்காரவுகளுக்குள்ள இந்த போட்டின்னு சொல்லலாம்னு அவர் பின்னூட்டப் பெட்டிக்குப் போனால், அங்கே ஹரி ஒரு புத்தகத்தைப் பற்றி ஒரு பதிவுக்கு லின்க் கொடுத்திருக்கார். இதில் ஹரியின் பதிவில் என் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. அவர் சொல்லும் புத்தகத்தைப் படித்தால் ஒரு வேளை தெளிவு கிடைக்கலாம். தமிழினி முத்துவோ தன் சொந்த அனுபவத்தைப் பேசுகிறார். ஆக, எப்படியோ என் கேள்விகளுக்கு தமிழினி முத்து பதிலளித்து விட்டாரெனவே எண்ணுகிறேன்.

மற்றபடி இந்த நாடி ஜோதிடத்தை நம்புகிறவர்களிடம் கேட்டால், மயிர் கூச்செறியும் கதைகள் சொல்கிறார்கள். படிப்பறிவில்லாமல் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏற்கெனவே நாடி ஜோதிடம் பார்த்த ஒருவரால் தேர்ந்தெடுக்கப் பட்டு, சிக்ஷை பெற்று, அப்படியே ராமாயணத்தை மனப் பாடமாக ஒப்புவித்தார் என்று ஒரு கதை. அகத்தியர் எழுதி, பின் தஞ்சை சரஸ்வதி மஹாலுக்கு வந்து சேர்ந்து, அங்கிருந்து பலருக்கு டிஸ்ட்ரிப்யூட் ஆனதாக இன்னொரு கதை. எனக்குத் தெரிந்த இன்னொருவருக்குக் கல்யாணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த போது அவர் நாடி ஜோதிடம் பார்க்க, அதில் சொன்ன விஷயங்கள் பின்னால் தவறாக ஆனது. இப்படியே முரண்களோடும், ஒருவித ஈர்ப்புடனும் நாடிஜோதிடம் இருந்து வருகிறது.

1 comment:

Aaga said...

நாடி ஜோதிடமா
உஷார்
எனது சோககதையை
http://ulagham.blogspot.com

Post a Comment