Thursday, July 18, 2013

669. அது போன மாசம் .. இது இந்த மாசம் ...! - 2





தருமி பக்கம் - அது போன மாசம் .. இது  இந்த மாசம் ...! - 2



*






*



சென்ற வாரம் அழகர் கோவிலுக்கு ஒரு விசிட். ஏற்கெனவே அங்கு சென்று வந்த நண்பன் நிறைய பட்டாம் பூச்சிகளைப் பார்த்தேன். படம் எடுக்கலாம் என்றான். சென்றோம் .. படம் எடுத்தோம். பறந்து பறந்து போன பட்டாம் பூச்சிகளை ஓடி ஓடி படம் எடுத்தோம்.

 படம் எடுக்கும்போது கொஞ்சம் ரீவைண்ட் ....’எங்க காலத்தில’ அதாவது முப்பது வருஷத்துக்கு முந்தி இதே மாதிரி படம் எடுத்திருப்போம். மிஞ்சிப் போனால் அழகர்கோவில் பட்டாம்பூச்சி புராஜெக்ட் என்ற கணக்கில் ஒரு ரோல் படம் என்று பட்ஜெட் போட்டிருப்போம். அதாவது 35 படங்கள் .. 35 mm. நடுவில் குரங்கு, மனுஷன் அப்டின்னு நாலைந்து ப்ரேம்களை ஒதுக்கியிருந்தால் மீதி 30 ப்ரேம்கள். இதில் எத்தனை எத்தனை படம் ஒழுங்காக வந்திருக்கும்? இப்போ மாதிரி ஓடி ஓடி எத்தனை படம் எடுக்க முடியும்? எடுக்கும் படத்தில் எத்தனை படம் ஒழுங்காக போகஸ் ஆகியிருக்கும்? எத்தனை ஒழுங்கான ஒளியோடு படமாகி இருக்கும்? இதையெல்லாம் தாண்டி நெகடிவை டெவலப் செய்யும் போது அதில் எத்தனை குளறுபடி? ஆனால் இப்போதோ ... நினைத்ததை, பார்த்ததை அப்படி அப்படியே தொடர்ந்து கிளிக்கிக் கொண்டு இருக்கிறோம். இப்படி நினைத்துக் கொண்டிருந்தவன் படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போதே  ‘டிஜிட்டல் காமிரா கண்டுபிடித்தவன் வாழ்க’ அப்டின்னு சத்தமா ஒரு சவுண்டு கொடுத்தேன்! எல்லாம் ஒரு நன்றிக் கடன் தான்!

வாழ்க்கை தான் எப்படியெல்லாம் மாறிப் போச்சு ...

நிறையவே வாழ்க்கை மாறிப் போச்சு. அதை என் மாதிரி வயசான ஆளுகளுக்கு எவ்வளவு நிதர்சனமாகத் தெரிகிறது. எங்கும், எதிலும் மாற்றங்கள். சின்ன வயதிலிருந்து நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.

பள்ளிக்குப் போகும் சிறு குழந்தைகளில் பாதிக்கு மேல் அழுதுகொண்டே போகும் காட்சிகள் தான் அப்போதெல்லாம் நிறைய. இப்போது அப்படியேதும் பார்க்க முடிவதில்லை. அதே போல் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பள்ளிக்குப் போவதும் வருவதும் தாங்களே  என்றுதான் இருந்தோம். இப்போது பல பிள்ளைகளுக்கு பஸ் வரை தாய்மார்கள் பிள்ளைகளின் புத்தகப்பைகளையும் தூக்கிக் கொண்டு துணைக்கு வருகிறார்கள். பெற்றோர்கள் இப்போது அப்படி பிள்ளைகளைப் ‘பொத்தி’ வளர்த்து வருகிறார்கள் போலும். தூக்க முடியாத பொதி சுமையை நாங்கள் பள்ளிக்குத் தூக்கிச் சென்றதில்லை. படித்த பாடங்களும் இத்தனை அதிகமுமில்லை; இவ்வளவு ஆழமுமில்லை. தப்பிப் பிழைத்தேன்!


என் சிறு வயதில் நிறைய அயல்நாட்டுக் கார்கள் இருக்கும். தூரத்தில் பார்த்து அது என்ன கார் என்று கண்டுபிடிப்பது எங்களுக்கு ஒரு விளையாட்டு. அதன் பின் மூன்றே கார்கள் - Ambassodor, Fiat, Standard. இப்போது வகை வகையாக கார்கள். அந்தக் கால கார்கள் இரண்டே வண்ணத்தில் வரும் - கறுப்பு, வெள்ளை. இப்போது வண்ண வண்ணமாகக் கார்கள். பைக்குகளும் மூன்று தான் - Bullet, Java, Rajdoot. இப்போது சொல்லி மாள முடியுமா? ஒரு ஸ்கூட்டர் வாங்க  பிரிமியம் கட்டி அதன் பின் ஆறு வருடம் காத்திருக்க வேண்டும். இப்போது ரோட்டின் ஓரத்தில் கூறு கட்டி பைக் விற்கிறார்கள்!

வீட்டில் ரேடியோ இருப்பதுவும், அதில் சிலோனிலிருந்து ஒலிபரப்பப்படும் பாட்டுகளைக் கேட்பதுவும் பெரிய அதிர்ஷ்டம். எல்லோர் வீடுகளிலுமா ரேடியோ இருந்தது? அதுவும் வெள்ளிக்கிழமை இரவு 10 -10.30 வரை திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்படும் சினிமாப் பாட்டுகள் மீது எங்களுக்கு எத்தனை வாஞ்சை. வீட்டு விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு ரேடியோவின் டயல் விளக்கு மட்டும் தெரிய, வீட்டில் யாரும் சத்தமிடாமல் பாட்டுக் கேட்ட காலங்கள் ...

எல்லாவற்றிலும் தொலைத்தொடர்புகள் வளர்ந்த விதம் மிகவும் ஆச்சரியம். ஒரு வேளை ராஜிவ் காந்தி செய்த ஒரே நல்ல காரியம் - Sam Pitroda-வை தொலைத் தொடர்புகளுக்காகத் தேர்ந்தெடுத்ததாக இருக்குமோ? நேரில் பார்த்த ஒரு நிகழ்வு. நண்பன் ஒருவன் போன் பூத் வைத்திருந்தான். அவன் கடையில் ஒரு இரவில் தம்மடிக்க உட்கார்ந்திருந்தோம். மணி 10 இருக்கும். ஒரு வயதானவர் வந்தார். போன் பண்ணலாமா? என்றார். அவர் நண்பனுக்கு நன்கு தெரிந்தவர். சரி என்றான். உள்ளே போனவர் கொஞ்சம் பத பதைப்போடு  இருந்தார். டயல் செய்து மிக உன்னிப்பாக காது கொடுத்துக் கேட்டார். அங்கிருந்து சத்தம் வந்ததம் மிக வேகமாக, ‘நான் தான் அப்பா பேசுறேண்டா’ என்று சொல்லிவிட்டு டக்கென போனை வைத்து விட்டார்.  வெளியே நின்ற நண்பன் விளக்கம் சொன்னான். அவரின் பையன் அமெரிக்காவில் இருக்கிறான். பூத் காலியாக இருக்கும் வேளை வந்து போன் செய்து தன் இருப்பைக் காட்டிக் கொள்வார். ஓரிரு நிமிடங்களில் பையனிடமிருந்து போன் வரும்; பேசுவார் என்றான். அவர் இங்கிருந்து சில வினாடிகள் பேச சில ரூபாய்கள் ஆகிவிடும். இப்போது என்னடாவென்றால், போன் மட்டுமா .. video chat... அது இதுன்னு என்னென்னமோ வந்து விட்டது. எங்கள் வீட்டுக்கு போன் வர நாங்கள் காத்திருப்பது ஐந்தாறு வருடங்கள் வரை. இப்போ ஐந்து நிமிடத்தில் கைத் தொலைபேசி ....

இப்போது தான் தந்தியை ஒழித்து விட்டதாக செய்தி வந்தது. அந்தக் காலத்தில் தந்தி அனுப்புவதோ, அதை போஸ்ட் மேனிடமிருந்து வாங்குவதோ ஒரு தனி அனுபவம். தந்தி என்றாலே பயம் தான். ட்ரங்க் கால் பேசுவதும் இன்னொரு தனி அனுபவம். காத்திருந்து .. காத்திருந்து  ... கத்திக் கத்தி பேசுவதெல்லாம் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதென்னவோ .. அந்தக் காலத்தில் நூத்துக்குப் பத்துப் பதினைந்து ‘ராங் நம்பர்’ என்றிருக்கும். பதினான்கு பதினைந்து வயதில் நான் முதல் முதல் ’பேசிய’  என் போன் கதை ஒண்ணு இருக்கு. வாசித்துப் பார்த்துக்குங்க ...!

காலம் எப்படி மாறிப் போச்சு .. இன்னும் எப்படியெல்லாம் மாறிக்கிட்டு இருக்குன்னு என்ன இப்படி நினைக்க வச்சது  பதிவர் மணிகண்டனின் இடுகை தான். ரோபோ பற்றி எழுதியிருக்கிறார். உளவாளிகளுக்கு ஏதுவான ரோபோக்கள் பற்றிச் சொல்லிவிட்டு நம் உடம்புக்குள்ளே போய் ‘செப்பனிடும்’ ரோபோக்கள் வந்து விட்டன என்று சொன்னதைப் படித்ததும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்த ஒரு கதைப் புத்தகமும் - A  Fantastic Voyage - அதை சினிமாவாக எடுத்த படத்தை மதுரை பரமேஸ்வரியில் மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்த்த அனுபவமும் நினைவுக்கு வந்தது. விஞ்ஞானி ஒருவரின் மூளையில் உள்ள ரத்தக்கட்டியை உடைக்க ஆட்களை மிகச் சிறிதாக்கி அவர் உடலினுள் செலுத்தி குணமாக்குவார்கள். ஒரு சீனில் அவர்கள் காதின் உட்புறம் செல்வார்கள். ஏதாவது சத்தம் கேட்டால் அது செவிப்பறையில் மூலம் பெரிதாக்கப்பட்டு அவர்கள் தூக்கி எறியப்படலாம் என்று இருக்கும். கதையிலும், படத்திலும் மிக அழகாக அதைச் செய்திருப்பார்கள். சத்தமே இருக்கக்கூடாது என்றால் இங்கே தியேட்டரும் பயங்கர அமைதியோடு உறைந்து இருந்தது. இது கதை - 30 வருஷத்திற்கு முன். இன்று அது ஏறத்தாழ உண்மையாகி விட்டது. நம் உடம்புக்குள்ளும் ஒரு ரோபோ. கதையில் வருவது போன்ற சிகிச்சை.



இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து ‘உங்கள் வீட்டில் எத்தனை வேலைக்காரர்கள்?என்று பணக்காரர்கள் கேட்டுக் கொள்வதிற்குப் பதில் ‘உங்கள் வீட்டில் எத்தனை ரோபோக்கள்?என்று கேட்கும் காலம் வந்து விடலாம். Homo sapiens-களுக்கு உதவ  Robo sapiens வந்தாச்சு!



அட .... நாம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறோம். இன்னும் என்னென்ன மாற்றங்களோ ... என்னென்ன ஆச்சரியங்களோ ...! பழைய விஞ்ஞானக் கதைகளில் மனித உறுப்புகளைச் செய்து அதை வேண்டிய ஆட்களுக்குப் பொருத்துவது போல் கதை எழுதுவார்கள். ஆனால் இன்றைய செய்தி ஒன்றில் Stem cells-களிலிருந்து மனித ஈரலைச் செய்து, அதை எலியில் பொருத்தி அது மிகச் சரியாக மனித உடலில் செய்யும் பணிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதாம்!  சீக்கிரம் மால்களில் புதிய கடை போட்டிருப்பார்கள். அங்கே மனிதர்களுக்கு வேண்டிய உறுப்புகளை நேரடியாகக் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்!

Future Shock எழுதிய Alvin Toffler கூட இது போன்ற ஆச்சரியங்களை எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ ... நீங்களும் காத்திருங்கள்.

YOU WILL ALSO BE SHOCKED ONE DAY LIKE ME ...!



*




*

4 comments:

இராய செல்லப்பா said...

Really interesting article. As you said the world has certainly improved now than what it was those days. Would like to read all your writings soon.

டிபிஆர்.ஜோசப் said...

பழசை அசைபோடறது தொடருது போல? முந்தி (ரொம்ப காலத்துக்கு முன்னால இல்ல 1985லதான்) STD போடற வசதி என்னோட பிராஞ்சில இல்ல! பிராஞ்சிக்கு பக்கத்துலருக்கற BSNL (அப்ப வேற யார் இருந்தா?) தந்தி ஆஃபீசுக்கு போயி நம்பர சொல்லிட்டு காத்திருந்து பேசிட்டு வந்ததையும் இப்போ மலேசியாவுலருக்கற பொண்ணுக்கிட்ட இன்னைக்கி என்ன குழம்புன்னு ஆரம்பிச்சி நிமிஷக்கணக்கா (மணிக்கணக்கா பேச முடியாதுல்ல?) வீட்டம்மா சாவகாசமா பேசறத கேட்டா மலைப்பாத்தான் இருக்கு.

தருமி said...

//Would like to read all your writings soon. //

தலவிதி !!!!

ஜோதிஜி said...

தலையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் தலைவிதி என்பது பெரிதா?

Post a Comment