Saturday, June 21, 2014

763. மாமன்னர் அசோகர் - சில ஆச்சரியங்கள் - 1





*


 நான் மொழி பெயர்த்துள்ள அசோகரின் வரலாற்று நூலைப் பற்றி எனக்கு ஏதும் தெரிவதற்கு முன்பே இன்னொரு புதினத்தை வாசிக்கும் போது அந்த நாவலில் அசோகரைப் பற்றிய சில செய்திகளைப் படித்த போது மிக ஆச்சரியமாக இருந்தது. அவர் சொல்லிச் சென்ற சில உண்மைகள், இன்று நான் பதிவுகளில் மதங்களைப் பற்றி எழுதும் போது, எதிர்த்துக் குமுறும் சில மதத் தீவிரவாதிகளை நோக்கி அசோகரே சொல்வது போல் சில வாசகங்கள் இருந்தன.

அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அவர் சொன்னது இன்றும் அப்படியே இன்றுள்ள மதத் தீவிரவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் மிக மிகப் பொருத்தமாக இருப்பது கண்டு வியந்தேன்.

 கண்ணதாசன் பாவமன்னிப்பு என்ற படத்திற்காக எழுதிய பாடலில் சில வரிகள் நினைவுக்கு வந்தன.
  மனிதன் மாறி விட்டான் 
 மதத்தில் ஏறி விட்டான்

 அவன் இதிலிருந்து இறங்க மாட்டான் என்பது போல்தான் தெரிகிறது; இது அன்றே அசோகருக்கும் தெரிந்தது தான் விந்தையிலும் விந்தை.

அந்த விந்தையைக் கண்டதும், அந்த புனைவை வாசித்ததும் வலைப்பூ வாசகர்களுக்காக அசோகரது வார்த்தைகளை ஆறு ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் ஏற்றினேன். அசோகரது வரலாற்று நூலை வாசித்ததும் அவரது இன்னும் பல அறிவுரைகள் அற்றைய நாளுக்கு மட்டுமின்றி இன்றைக்கும் மிகப் பொருளுள்ளதாகவும், பொருத்தமுள்ளதாகவும் இருப்பது அறிந்து ஆச்சரியம்.

அதில் சில ஆச்சரியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 கீழேயுள்ள பதிவு ஒரு மீள் பதிவு:


SATURDAY, NOVEMBER 22, 2008


283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்

*

*
நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல் ... அசோகச் சக்கரவர்த்தியிடமிருந்து,


The House of Blue Mangoes நூலை எழுதி, அந்த முதல் புத்தகத்திலேயே புகழ் பெற்ற David Davidar எழுதிய THE SOLITUDE OF EMPERORS புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். அவரது முதல் புத்தகத்தின் முதல் சில பக்கங்களை வாசித்துவிட்டு அப்படியே விட்டு விட்டேன். ஆனால் இது நம் இப்போதைய நாட்டு நடப்போடு, அதுவும் அரசியல் - மதங்கள் என்பவைகளோடு தொடர்புள்ளது என்று பின்னட்டையில் இருந்ததைப் பார்த்து, ஆஹா, நம்ம விஷயமாச்சேன்னு எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை.

நவீனம்தான்; ஆனால் தன்மையில் தன் சுயசரிதை போல் எழுதியிருப்பதால் உண்மையிலேயே அவரது வாழ்க்கைச் சரிதம் தானோ என்றுதான் நினைத்தேன். அந்த அளவு இயற்கையாக விறு விறுப்புடன் ஒரு personal touch-ஓடு நன்றாக இருந்தது. நான் அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லப்போவதில்லை. மூன்று பேரரசர்கள் - அசோகர், பாபர்,காந்தி - இம்மூவர்களின் வாழ்க்கையில் சில பகுதிகளை நம் சிந்தனைக்குத் தருகிறார். அதில் அசோகர் பற்றியுள்ள பகுதி எனக்குப் பிடித்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல்.


அசோகப் பேரரசர்

அவருடைய காலத்தில் உலகத்திலேயே பெரும் பேரரசை ஆண்டிருந்தாலும் அவரைப் பற்றிய குறிப்புகள் வரலாற்றில் மிகவும் குறைவே. 1837ல் ஜேம்ஸ் ப்ரின்செப் (James Prinsep) என்ற ஆங்கிலேயர் ப்ராமி((Brahmi) எழுத்துக்களைப் பற்றிய தன் ஆராய்ச்சியின் நடுவே பியா பியதாசி (Piya Piyadassi) (கடவுளுக்கு மிகப் பிரியமானவன்) என்ற ஒரு அரசரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கப் பெற அதிலிருந்து அசோகரைப் பற்றிய முழு வரலாற்றுச் சித்திரம் உருவாக ஆரம்பித்தது.

மெளரிய பரம்பரையின் மூன்றாவது அரசனான அசோகன் (290 -232 B.C.)சண்டாள அசோகன் என்று அழைக்கப்படுமளவிற்கு பல கொடுமைகளைச் செய்ததாக அறியப்படுகிறார். நம்ம சிவாஜி நடித்த சாம்ராட் அசோகன் பார்த்திருப்பீர்களே, அதே போலவே கலிங்கத்துப் போரில் வெற்றி பெற்ற பின் புத்த பிக்குவால் மனம் மாறி 'அன்பே மகா சக்தி' என்பதைப் புரிந்து இனி வாழ்நாளில் வாளெடுக்க மாட்டேன் என்று சூளுரைத்து, மக்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்று பிரகடனப்படுத்தி சண்டாள அசோகன் என்றிருந்தவர் தர்ம அசோகர் என்றாகினார். புத்த மதத்தைப் பரப்புவதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட அசோகர் கல்வெட்டுக்களில் சமயங்கள் சார்ந்த தன் கருத்துக்களைப் பதிந்துள்ளார். அது எப்போதைக்கும் அதிலும் இந்தக் காலகட்டத்தில் நமக்கும் / எல்லா சமயத்தினருக்கும் பொருத்தமானதாக இருப்பதால் அதை உங்களுக்குத் தர விரும்பினேன். இதோ …

கடவுளுக்கு மிகப் பிடித்தமானவனான ப்யாதாசி மதிப்பது …. எல்லா சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்பதே.

இந்த வளர்ச்சியை பல வழிகளில் செய்ய முடியும்; ஆனாலும் அப்படி செய்யும்போது ஒவ்வொருவரும் தங்கள் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தங்கள் மதத்தை மட்டும் உயர்த்திக் காண்பிப்பதும், அடுத்த மதத்தினை காரணமின்றி தாழ்த்திப் பேசுவதும் தவிர்க்கப் பட வேண்டும். விமர்சனங்கள் உண்டென்றாலும் அவைகளை மென்மையாக அந்த மதத்தினர் வருந்தாத அளவு செய்தல் வேண்டும். ஆனால் அதை விடவும் மற்ற மதங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதனால் உங்கள் மதத்தின் மேல் மற்றவருக்கு மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இல்லாவிடில் உங்கள் மதம் அடுத்தவர் மதம் என இரண்டுக்குமே நீங்கள் கேடு விளைவிக்கிறீர்கள்.

தங்கள் மதத்தின் மேல் உள்ள அளப்பரிய ஈடுபாட்டால் தன் மதத்தை உயர்த்திப் பிடித்து, ‘என் மதத்தை மகிமைப் படுத்த வேண்டும்’ என்ற நினைப்பில் அடுத்த மதங்களைச் சாடும்போது நீங்கள் உங்கள் மதங்களுக்கே கேடு விளைவிக்கிறீர்கள்.  மதங்களுக்குள் சீரான, ஆரோக்கியமான உறவு தேவை. அடுத்த மதத்தினரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காதுகொடுத்துக் கேட்கும் மனமும், அவைகளுக்கு மனமார்ந்த மரியாதை அளிக்கும் மாண்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

மக்கள் எல்லோரும் தங்களின் மாற்று மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும், அறிவுரைகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பதே ப்யாதாசியின் விருப்பம்.




*












 *



3 comments:

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாதன அறிந்தேன்
நன்றி ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

Post a Comment