Wednesday, September 23, 2015

867. மதங்களும் சில விவாதங்களும் --- என் கேள்விக்கென்ன பதில்?



 D.Samuel Lawrence

*


 ஆசிரியர் தருமியின் உண்மையான தேடல் பல நிலைகளைக்கடந்து இன்று நாத்திகவாதியாக தன்னை வெளி உலகிற்கு தெரிவித்துக் கொள்ளுமளவிற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும்கொடுத்திருக்கிறது. அவருடைய உண்மை, நேர்மை, துணிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

 ****************

அந்த நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. விடை காணா சில கேள்விகள் இன்னும் மனதில் இருந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பள்ளிப் பருவத்தில், மணல் மேட்டில் படுத்துக்கொண்டு, இரவு வேளையில் வானத்தைப் பார்த்துக்கொண்டு, எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பது என்னுடைய பழக்கம். சில வேளைகளில் கேள்வி மேல் கேள்வி மனதின் விளிம்பில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். அதே நிலை இப்போதும் தொடர்கிறது.
காரணம், தருமியின் புத்தகம்.

 *************

வானத்தில் நிலா, விண் மீன்கள் போன்றவை எல்லாம் மறைந்து போய்விட்டால், ஒன்றுமே இல்லாமல் சூனியமாகி விட்டால் எப்படி இருக்கும்? வானம், பூமி, கடல், மலை, எதுமே இல்லாமல் வெறுமையாகிவிட்டால் எப்படி இருக்கும்?

கடவுள் எங்கேஇருக்கிறார்? படைப்பின் காரண கர்த்தா அவர் என்றால், அவரைப் படைத்தவர் யார்? படைத்தவரைப் படைத்தவர் யார்? அவர் அல்லது அது எது? அதை இயக்குவது எது? இப்படியே கேட்டுக்கொண்டே போனால், இந்த பிரபஞ்சத்தை யாரோ அல்லது சக்திதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கிறது. கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கின்ற யாவற்றையும் உருவாக்கியுள்ள கடவுள் அல்லது சக்தி எங்கிருந்து எப்படி வந்தது? தெரியவில்லை.

 கடவுளை உருவகப்படுத்திப்பார்க்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே மதங்கள் தோன்றி பிரிவினைகள். சண்டைகள் ஆகியவற்றிக்கு வித்திட்டன என்று சொல்லலாம். மனதில் எழுகின்ற எண்ணற்ற கேள்விகளுக்கு உறுதியான, தெளிவான, முழுமையான பதில் கிடைக்காமல் மனிதன் தத்தளிக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்பதுதானே உண்மை. இப்படி இருக்கலாம் என்று சொல்ல முடிகிறேதே தவிர, இப்படித்தான் என்று சொல்லமுடியவில்லையே.

இந்த இயலாமையை அல்லது அறியாமையை வைத்துத்தானே பல மதங்கள் உருவாகியிருக்கின்றன.

அறிவு, பகுத்தறிவு, ஞானம் இவை எல்லாம் மனிதனுக்குக் கொடுத்தது யார் அல்லது எது ? மற்ற படைப்புகளுக்கு பகுத்தறிவு, ஞானம் போன்றவை கிடையாது என்று நாம் நம்பினால் அவைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? மனிதன்தான் படைப்பின் சிகரமா? படைப்பின் சிகரம் படைப்பையே அழிக்கக் காரணம் என்ன?

இன்னொன்று: மோட்சம், நரகம் எல்லாம் கற்பனைதானா? நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இறந்தபின் என்ன நடக்கிறது? எதற்குமே முழுமையான பதில் இல்லை. இன்னும் இருளில்தான் இருக்கிறோம்.இப்படி, விடைகாணமுடியாத கேள்விகள் பல இருக்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அப்படியென்றால், இது தேவையற்ற தேடல் என்று சொல்லலாமா? 

கடவுள், மதம் என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைவிட நல்ல விழுமியங்களை மனதில் கொண்டு, எல்லோருடனும் அன்பைக் கடைப்பிடித்து, நீதிக்காக போராடி நேர்மையான வாழ்வு வாழ்வது ஆயிரம் மடங்கு நல்லதுதானே!





*


 

13 comments:

தருமி said...

லாரன்ஸ்
கேள்வி எனக்கு மட்டுமல்ல ... என் பாதையில் செல்லும் பலருக்கும். அவர்களில் யாராவது கூட பதில் சொல்லலாம்.

G.M Balasubramaniam said...

இந்த மாதிரி பல கேள்விகள் எழுந்து அதன் தாக்கத்தில் அவ்வப்போது பல பதிவுகள் எழுதி இருக்கிறேன் இருப்பு இல்லை இவை இரண்டையும் தாண்டி தெரியவில்லை என்ற ஒன்றும் உண்டு என்பதே என் முடிவு.

சார்வாகன் said...

//1.வானத்தில் நிலா, விண் மீன்கள் போன்றவை எல்லாம் மறைந்து போய்விட்டால், ஒன்றுமே இல்லாமல் சூனியமாகி விட்டால் எப்படி இருக்கும்? வானம், பூமி, கடல், மலை, எதுமே இல்லாமல் வெறுமையாகிவிட்டால் எப்படி இருக்கும்?//

மனித மையக் கேள்வி. அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டது என்னும் சிந்தனையே இத!!!!

வின்மீன்கள் தோன்றுவதும் மறைவதும், அறியாத விடயமா?
http://science.howstuffworks.com/star6.htm
Several billion years after its life starts, a star will die. How the star dies, however, depends on what type of star it is.

ஆகவே நம்மை வாழ வைக்கும் சூரிய விண்மீன் அழியும் போது ,(இதுக்கு புத்த்க வசனம் எல்லாம் வருது இப்போ வேண்டாம்!!!) கவலைப் படலாம்
..
//2.கடவுள் எங்கேஇருக்கிறார்? படைப்பின் காரண கர்த்தா அவர் என்றால், அவரைப் படைத்தவர் யார்? படைத்தவரைப் படைத்தவர் யார்? அவர் அல்லது அது எது? அதை இயக்குவது எது? இப்படியே கேட்டுக்கொண்டே போனால், இந்த பிரபஞ்சத்தை யாரோ அல்லது சக்திதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கிறது. கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கின்ற யாவற்றையும் உருவாக்கியுள்ள கடவுள் அல்லது சக்தி எங்கிருந்து எப்படி வந்தது? தெரியவில்லை.//

தெரியவில்லை என்பது இருக்கிறது,இல்லை என்பனவ்ற்றின் நடுநிலை. அவ்வளவுதான்.எதற்காக இருக்கிறது/இல்லை என்ற நிலைக்கு செல்ல வேண்டும். இந்த நிலைப்பாடு வரலாற்று சான்று இல்லாத மத புத்தக மதங்களை மறுதலிக்க போதுமானது.
இப்போ
??.....‍-3,-2,-1,0,1,2,3,4,....??
இங்கே பாருங்கள்.இந்த எண் வரிசைக்கு முதலிலும் ,இறுதியிலும் முடிவிலி மட்டுமே.
முடிவிலி என ஒன்றைப் பற்றி தெரியாமல் கணக்கு படிக்க மாட்டேன் என்றா சொல்கிறோம்??
***
(contd)

சார்வாகன் said...

//3.அறிவு, பகுத்தறிவு, ஞானம் இவை எல்லாம் மனிதனுக்குக் கொடுத்தது யார் அல்லது எது ? மற்ற படைப்புகளுக்கு பகுத்தறிவு, ஞானம் போன்றவை கிடையாது என்று நாம் நம்பினால் அவைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? மனிதன்தான் படைப்பின் சிகரமா? படைப்பின் சிகரம் படைப்பையே அழிக்கக் காரணம் என்ன?//
மீண்டும் மனித மைய சிந்தனை. கடவுள் ஆதம் ஏவாளைப் படைத்து, அனைத்தும் உங்களுக்கே, நான் சொலவதை மட்டும் கேளூ,ஆனா அந்தப் பழத்தை மட்டும் சாப்பிடாதே , என சிறுவயது முதல் பதிந்த சிந்த்னையின் வெளிப்பாடு மட்டுமே!!. மனிதன் விலங்கில் இருது பரிணமித்தவன் என்பதை பல படித்தவர்களும் நம்புவது இல்லை என்பது வியப்பான விடயம்தான்.

//4.இன்னொன்று: மோட்சம், நரகம் எல்லாம் கற்பனைதானா? நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இறந்தபின் என்ன நடக்கிறது? எதற்குமே முழுமையான பதில் இல்லை. இன்னும் இருளில்தான் இருக்கிறோம்.இப்படி, விடைகாணமுடியாத கேள்விகள் பல இருக்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அப்படியென்றால், இது தேவையற்ற தேடல் என்று சொல்லலாமா? //

வயிறு நிறைந்தால், இபடி எல்லாம் தேடல் வரும்.மனித மனம் தன்னை உயர்வாக கருத கடவுளை உருவாக்கியது, அறியாக் கேள்விகெல்லாம் ஆண்டவனே காரணம் என தான் உருவாக்கிய விடயத்தையையே விதந்தோம்புகிறது.
வாஉம் மனித சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வையோ, சுற்று சூழல் அழிக்கும்இயற்கை சுரண்டலையோ சிந்திக்க விடாமல் கடவுள் நம்பிக்கை தடுக்கிறது என்பதால், ஆள்வோர் மத ந‌ம்பிக்கை ஊக்குவிக்கிறான்.
முதலில் வாழும் மனிதன் அனைவருக்கும் நல்ல உனவு, உடை,இருப்பிடம்,கல்வி, மருத்துவம் கிடைக்க சிந்திப்போம்!!!மனிதனை நினை!! கடவுளை மற!!!

இதுதான் மிக அருமை!!!
//கடவுள், மதம் என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைவிட நல்ல விழுமியங்களை மனதில் கொண்டு, எல்லோருடனும் அன்பைக் கடைப்பிடித்து, நீதிக்காக போராடி நேர்மையான வாழ்வு வாழ்வது ஆயிரம் மடங்கு நல்லதுதானே!//

நாம் சொன்னா யார் கேட்கிறார்?.நலம்.எழுத நேரம் இல்லை. மேலும் ஆர்வமும் குறைந்து விட்டது.

பின்னூட்டம் மட்டும் இடலாம் என எண்ணி உங்கள் தளத்தில் முதல் போணி.
வாழ்க வளமுடன்!!!
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

கடவுள், மதம் என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைவிட நல்ல விழுமியங்களை மனதில் கொண்டு, எல்லோருடனும் அன்பைக் கடைப்பிடித்து, நீதிக்காக போராடி நேர்மையான வாழ்வு வாழ்வது ஆயிரம் மடங்கு நல்லதுதான்

Unknown said...

அன்பாகவும்,நேர்மையாகவும் வாழும் மனிதன் உண்மையில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழத் தெரிந்தவன்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல விழுமியங்களை மனதில் கொள்வதும், அன்பை கடைபிடித்து நேர்மையான வாழ்வு வாழ்வதும் நல்ல ஒரு சமுதாயம் அமைய உதவும் என்பதைக் கூறிய விதம் நன்று.

தருமி said...

//எழுத நேரம் இல்லை. மேலும் ஆர்வமும் குறைந்து விட்டது.//

முதல் விஷயம் சரி (என்று சொல்லித் தொலைக்கலாம்; இரண்டாவதை ஒத்துக் கொள்ள முடியாது.)

ஐயா... என்னய்யா ஆச்சு? எம்புட்டு தேடினேன் உங்களை.... இப்படியா காணாம போவது. தலைய காட்டிக்கிட்டு இருங்க. என் புத்தக தொடர்பாக ரொம்ப தேடினேன்.........

புத்தகம் வெளி வந்து விட்டது.

தருமி said...

சார்ஸ் ... கடைசியாக எழுதியது April 29, 2014

TOO BAD

வேகநரி said...

சகோ சார்வாகன்,நலமா, குறைந்தது மதம் ஒரு அறிவியல், பகுத்தறிவு பதிவுகளாவது சமரசம் உலாவும் இடமே யில் எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன்.1 ½ வருடம் சென்று பகுத்தறிவு பின்னேட்டத்துடன் இங்கே உங்களை காண்பது கூட ஓரளவு மகிழ்ச்சியே.

Mohamed Meeran said...

\\இன்னொன்று: மோட்சம், நரகம் எல்லாம் கற்பனைதானா? நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இறந்தபின் என்ன நடக்கிறது? எதற்குமே முழுமையான பதில் இல்லை. இன்னும் இருளில்தான் இருக்கிறோம்.இப்படி, விடைகாணமுடியாத கேள்விகள் பல இருக்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அப்படியென்றால், இது தேவையற்ற தேடல் என்று சொல்லலாமா? \\
ஏன் பிறந்தேன் என்று யோசிப்பதற்கு பதிலாக, நான் பிறப்பதற்கு முன்பு எப்படி இருந்தேன் என்று சிந்தனை செய்து பாருங்கள் உண்மை புரியும்.

velvetri.blogspot.in said...

கடவுள் மதம் என சண்டையிட்டுக் கொள்பவன், மதங்களை படைத்தவன்.

நாத்திகன் இந்த மக்களின் மீது அன்பு கொண்டவன், அதனால்தான் மதங்களை ஏற்றுக் கொண்டவனிடம் மதங்களால் மாயாதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்

வேகநரி said...

// மறுக்க முடியாது மாட்டு கறி உண்டதிற்காக மனிதனை கொன்றதும் மதம் கடவுள் சார்பான நம்பிக்கையே//
மறுக்க முடியாது.மாட்டு கறி உண்டதிற்காக மனிதனை கொன்றதும், மதம் கடவுள் சார்பான நம்பிக்கையே. மத்திய கிழக்கில் பல லட்ச மக்களை கொலை செய்தும்,அகதிளாக்கியதும் மதம் கடவுள் சார்பான நம்பிக்கையே. ஈரானில் பர்தா அணிய வேண்டிய பெண்கள் ஊதைபந்தாட்டம் பார்க்க கூடாது என்று தடை போடுவதும் இதே மதம் கடவுள் சார்பான நம்பிக்கையே.ஆனால் பர்தா அணிந்த ஈரானிய அடிமை பெண்கள் அணியில் ஆண்களும் பர்தா முக மூடி அணிந்து விளையாடி வெற்றி பெற்று கொடுத்ததும் மதம் கடவுள் சார்பான நம்பிக்கையை நிலை நிறுத்தும் ஈரானிலேயே நடைபெற்றது.

goo.gl/wyZUCS

Post a Comment