Monday, July 27, 2026

1384. FIFA '26 - அரையிறுதிப் போட்டிகள்


THE GREAT KING, PULIKESI XXV அதாவது, பெரு மன்னனான 25ம் புலிகேசி தன் மங்குனி அமைச்சருக்குச் சொன்ன ஒரு பெருமொழியை நினைவு கூர்கிறேன்: “வரலாறு மிகவும் முக்கியம், அமைச்சரே!”.

 FIFA ’26 போட்டி பற்றித் தொடர்ந்து எழுத முடியாமல் போய் விட்டது. வயதைக் காரணமாகச் சொல்வதா: அல்லது அர்த்தராத்திரியில்  போட்டி நடப்பதைக் காரணமாகச் சொல்வதா; அல்லது உண்மையிலேயே என் சோம்பேறித் தனத்தைச் சொல்வதா? சரி .. விடுங்கள் ... ஏதோ ஒண்ணு. ஆனாலும் பெருமன்னன் புலிகேசி சொன்னது போல் வரலாறு மிக முக்கியமில்லையா? FIFA ’1986 லிருந்து தொடர்ந்து இப்போட்டி பற்றியெழுதியதைத் தொடர வேண்டும் என்ற நப்பாசை மட்டும் மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அப்பாடா .. ஒரு வழியாக எழுத ஆரம்பித்து விட்டேன்.

சென்ற 22 ஆண்டின் போட்டியில் பேரா. இராமகி ஐயா அவர்கள் இரு புதிய சொற்களைக் கற்பித்தார்கள்.  goal = கவல், goal keeper = கவலாளி என்ற சொற்கள் அவை. அவைகளை  இந்த ஆண்டு முறையாக இதுவரை பயன்படுத்தவில்லை. இப்போதாவது ஆரம்பிக்கின்றேன்.

அரையிறுதிப் போட்டிகள்

FRANCE  -  SPAIN

சென்ற உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிற்கு முதல் பாதியில் இரண்டு கவல்கள் விழுந்து முன்னணியில் இருக்க, பரவாயில்லையே நாம் ஆதரிக்கும் மெஸ்ஸியின் அணி வெ\ன்று விடும் என்ற நினைப்பில் இருக்கும் போது எம்ப்பாப்பே என்ற பிரான்ஸ் அணியின் வீரர் பத்தே நிமிடங்களில் இரு கவல்களையும் சமன் செய்து 2:2 என்ற நிலைக்குக் கொண்டு வந்தார், அப்போது அதற்காகக் கவலைப்பட்டாலும் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தார் அந்த வீரர். அதனால் இந்த ஆண்டு நடந்த போட்டியில் அவரே நம் ஆதர்சன வீரராக இருந்தார். ஆகவே இந்த அரையிறுதியில் அவரது அணி வெற்றி பெறும் என்ற நினைவில் இருந்தேன். ஆயினும் போன உலகக் கோப்பையில் ஸ்பெயினுக்காக விளையாடிய ஒரு சிறுவனும் அப்போதே மனதைக் கவர்ந்திருந்தார். எம்ப்பாப்பேக்கு அடுத்த படியாக இந்த ஆண்டு இவர் மனதைக் கவர்ந்த இரண்டாம் வீரராக இருந்தார். இந்தப் போட்டியில் அவர் பெயர் லஷ்மி அம்மாள் என்றாகிப் போனது. டி ஷர்ட் விற்கும் சென்னா ஆயா ஒருவர் அவருக்குத் தெரிந்த முறையில் அனைத்து முக்கிய அணி வீரர்களையும் இதுபோல் திரிந்த பெயராக உச்சரித்து அதனால் அவர் பிரபலமானார். லாமின் யமல் என்ற பெயரை அவர் லஷ்மி அம்மாள் என்று மாற்றி விட்டார்.

ஆக பிடித்த இரு வீரர்கள் விளையாடினர். அதில் இரண்டாம் நிலையிலிருந்த வீரரின் அணியான ஸ்பெயின் வென்றது.

முதல் 20 நிமிடத்திலேயே ஸ்பெயின் ஒரு கவல் அடித்து அதே நிலையில் தன் அணியை வைத்துக் கொண்டிருந்தது. வெகு காலத்திற்குமுன் இதே போல் ப்ரேசிலின் ரொனால்டோவின் ஆட்டத்தைப் பார்க்க ஆவலாக இருந்த போது அவர் சரியாக விளையாடாமல் ப்ரேசில் தோற்றது இப்போது நினைவுக்கு வந்தது. ஏனெனில் இந்தப் போட்டியில் நான் அதிகம் எதிர்பார்த்த எம்ப்பாப்பே ஆட்டம் ஏதும் பயனளிக்கவில்லை. இரு அணிகளும் தீவிரமாக விளையாடியும் ஸ்பெயின் அணி 2:1 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

  

ARGENTINA  -  ENGLAND

 

முதல் பாதியில் கவல் ஏதும் விழவில்லை. இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கவல் போட்டு முன்னணி எடுத்தது. ஆயினும் பந்து அர்ஜென்டினாவின் கை வசமே ... இல்லையில்லை ... கால் வசமே சிறிது அதிகமாக இருந்தது. 85வது நிமிடத்தில் பந்தை வலது பக்கம் எடுத்து வந்த மெஸ்ஸி மிக அழகாக இடது பக்கத்திலிருக்கும் பெர்னாண்டஸிற்கு பாஸ் செய்ய, அவர் சிறப்பாக அதை ஒரு கவலாக மாற்றினார். சமமான அளவில் இருந்த கவல் நிலவரம் 92வதுநிமிடத்தில் அர்ஜென்டினா கவலடித்து வெற்றி பெற்றது. மெஸ்ஸி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டினார்.

 








No comments:

Post a Comment