*
வாழ்க்கையில் இதுவரை மும்முறை வாசித்த நூல்கள் இரண்டே இரண்டு. முதல் நூல்: கல்கியின் பொன்னியின் செல்வன். இரண்டாவது: LEON URIS எழுதிய EXODUS. ஒவ்வொரு முறையுமே இரண்டு கதைகளுமே புதியதாய்த் தோன்றின. இரண்டுமே வரலாற்றை வைத்து புனையப்பட்ட நவீனங்கள்.
முதல் நூலை முதலாவதாக வாசித்தபோது பள்ளிப் பருவத்தின் இறுதி நிலை. நானும் வந்தியத்தேவனைத் தொடர்ந்து அவர் பின்னாலேயே இன்னொரு குதிரையில் சென்றேன். ஆழ்வார்க்கடியானும், பூங்குழலியும், பொன்னியின் செல்வரும், எல்லாரையும் விட குந்தவியும் மிகவும் பிடித்துப் போனார்கள். நந்தினியையும் பெரிய பழுவேட்டரையும் பார்த்து கொஞ்சம் பயந்ததும் உண்மை. மூன்றாம் பாகத்தின் நடுவில் என்றுதான் நினைக்கிறேன்; சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை குந்தவி சந்தித்து உரையாடும் இடம், அதற்கு மணியம் வரைந்த ஓவியம் .. ம்ம்.. எல்லாமே மிகவும் ருசித்தது. அந்தக் காலத்தில் பிறக்காமல் போனோமே என்று வருந்த வைத்த கதை.
இரண்டாம் முறையும் உருகி உருகி வாசித்து மகிழ்ந்தது முதலில் வேலைக்கமர்ந்த இடம் தஞ்சை அருகில் உள்ள ஒரு கல்லூரி. வாசம் தஞ்சாவூர். அவ்வப்போது பெரிய கோயிலுக்கும், சிவகங்கை தோட்டத்துக்கும் செல்லும்போதெல்லாம் கூடவே வந்தியத்தேவனும் குந்தவியும் வருவதுபோல் நினைத்துக் கொண்டதும் உண்டு. அந்தப் பெரிய கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் ராஜராஜனின் காலத்தை நினைத்துப் பெருமூச்சு விட்டதும் உண்டு. அந்த கோபுரத்தின் உச்சியில் இருக்கும் அந்தப் பெரிய கல், அதனை எப்படி மேலே ஏற்றியிருப்பார்கள் என்ற கேள்வியும், சாரப்பள்ளம் என்ற ஊரிலிருந்து சாரம்கட்டி ஏற்றினார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதை வைத்து ஆழ்ந்த பிரமிப்பில் இருந்து வந்திருந்தேன். அந்த பிரமிப்பு ஓகை எழுதிய கப்பிப்பயல் வலைப்பதிவு வாசிப்பது வரை நீடித்தது.
இஸ்ரேல் என்ற நாடு உருவான நிகழ்வை வைத்து, உண்மையான மனிதர்களைக் கதை மாந்தர்களாக வைத்து புதினமாக எழுதப்பட்ட Exodus வெவ்வேறு இடங்களில் கண்ணீரை வரவைத்த வரலாற்று நவீனம். ஹிட்லரின் வெஞ்சினமும் யூதர்கள் ghetto-க்களில் பட்ட வேதனைகளும், kibbutz-களில் யூத இளைஞர்களின் வாழ்க்கையும் எல்லாமே கற்பனை என்ற சுவடே இல்லாதபடி நேரில் கண்முன் விரிவதுபோல் நகரும் கதை. இஸ்ரேல் என்றொரு நாடு உருவாவதற்கு U.N.O.- வில் ஓட்டெடுப்பு நடந்த பகுதியை வாசிக்கும்போது மூச்சை இறுக்கிப் பிடித்துதான் வாசிக்க வேண்டியதிருந்தது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பான்மையாக ஆதரித்து ஓட்டிட இந்தியாவும் இன்னும் சில கீழ்த்திசை நாடுகளும் எதிர்த்து ஓட்டுப் போட,பத்து நாடுகள் ஓட்டு போடாமல் "நடுநிலை" வகிக்க, 33:10 என்ற கணக்கில் இஸ்ரேல் ஒரு புதிய நாடாக அங்கீகரிக்கப் படும்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது.
இந்தப் புத்தகத்தின் தாக்கத்தால் Leon Uris எழுதிய மற்ற நாவல்களையும் தொடர்ந்து வாசித்தேன். எல்லாமே இஸ்ரேல் நாட்டின் அல்லது யூதர்களின் இரண்டாம் உலக யுத்த காலத்தை ஒட்டிய கதைகளே. வாசிக்க வாசிக்க யூதர்களின் மேல் ஒரு ஈர்ப்பு. அதோடின்றி அதன் பின் படித்த சில நூற்கள், அதிலும் முக்கியமாக 90 minutes at Entebbe. ஓ! இஸ்ரேயலர்கள் மேல் ஒரு பாசமே பிறந்துவிட்டது. கடைசியாகச் சொன்னது கதையல்ல; நடந்த ஒரு நிகழ்வு. சினிமாவாகவும் வந்தது. இடி அமீனின் ஆட்சிக்காலத்தில் உகண்டாவிலுள்ள Entebbe விமான நிலையதிற்குக் கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த ஏறத்தாழ 150 யூதர்கள் மட்டும் பிணைக்கைதிகளாக வைக்கப் பட மூன்றே நாட்களில் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயமும் முன்பாகவே திட்டமிடப்பட்டு 53 நிமிடங்களில் இரவோடிரவாக அனைவரும் காப்பாற்றப் படுகிறார்கள். யூதர்களின் பக்கம் உயிர்ச்சேதம் - கமான்டோக்களைத் தலைமை ஏற்றுச் சென்ற இளம் வயது Netanyahu மட்டுமே. கதையை வாசிக்கும்போதே நம்மை அது முழுமையாக ஈர்த்துவிடும்.
இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின் அதன்பிறகு 1967-ல் நடந்த 'ஆறு நாள் யுத்தம்' - Six days war - அதில் அவர்கள் நடத்திய வியூகங்கள் எல்லாமே ஆச்சரியமாக இருந்தது மட்டுமில்லாமல் இப்போதுள்ள 'அகண்ட இஸ்ரேலுக்கு' அந்தப் போர்க்களமே வித்திட்டது. இது பற்றாது என்பது போல் உலகத்தில் இதுவரை அறிவுக்கூர்மைக்கு யூதர்கள் போல் வேறு எந்த race-ம் இணை இல்லை என்பதாக - உதாரணமாக, இதுவரை நோபல் பரிசுகள் வாங்கியவர்களில் 60 விழுக்காடு அவர்கள்தானாம்; மார்க்ஸிலிருந்து ஸ்பீல்பெர்க் வரை எந்த துறையிலும் அவர்கள் பெயர்களே; அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாவல்கள் நன்றாகவே வாசித்ததுண்டு.அது Irving Wallace ஆக இருக்கட்டும் இல்லை Arthur Hailey ஆக இருக்கட்டும் அமெரிக்கர், கனடாக்காரர் என்று நினைத்துக் கொண்டிருப்போம்; பார்த்தால் யூதராகவே இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்து ஒரு பிரமிப்பு.
EXODUS வாசிக்க ஆரம்பித்து யூதர்களின் அபிமானியாக ஆகிப் போனேன். இந்த நிலை முற்றிலும் இப்போது மாறிவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும் பாலஸ்தீனப் பிரச்சனையில் அவர்களின் விடாப்பிடியும், எந்த சமாதான உடன்படிக்கைக்கும் வராத சண்டித்தனத்தையும் பார்க்கும்போது பிரமிப்பையும் தாண்டி எரிச்சல்தான் வருகிறது.
இந்த நேரத்தில் நினைவுக்கு வரும் இன்னொரு விதயம்: எனக்கோ EXODUS வாசித்து இப்படியான பிரமிப்பு உண்டானது. கதையும் மிகவும் பிடித்துப் போக சில நண்பர்களிடம் இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்திருக்கிறேன். அதில் இருவர் என்னால் இதை வாசித்தார்கள். ஆனால் எனக்கு வந்த பிரமிப்பும் பச்சாதாபமும் அவர்கள் இருவருக்கும் ஏற்படவேயில்லை. அதிலும் ஒருவர் நல்ல கிறித்துவர்; அவருக்கு ஏசுவை சிலுவையில் அறைந்து கொன்றது யூதர்கள்தானே என்ற வெறுப்பு! (அவருக்கு அடுததாக Holy Blood; Holy Grail வாசிக்கக் கொடுக்கணும்; அதில் ரோமர்கள்தான் ஏசுவைக் கொன்றார்கள்; யூதர்கள் அல்ல என்று எழுதியிருக்கிறார்கள்.)இன்னொருவருக்கு இந்த யூதப் பசங்க எப்பவுமே இப்படிதான்; very cunning .. dubious .. undependable என்று adjectives-ஆக அடுக்கினார்.
ஒரே புத்தகம்தான்; ஆனால் எனக்கு ஏற்பட்ட தாக்கம் அவர்கள் இருவரிடமுமில்லை. perspectives - நாம் பார்க்கும் பார்வைகள்தான் எவ்வளவு ஆளாளுக்கு வேறு படுகின்றன!
பி.கு.
எனக்கு யூதர்களோடான ஒரு first hand experience: வியாபாரம் செய்வதில், பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள் என்பது ஒரு பரவலான செய்தி.
அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு டிஜிட்டல் கேமிராவை நியூயார்க்கின் பெரிய போட்டோ கடை ஒன்றில் வாங்கினேன். அது ஒரு யூதர்களின் கடை. அதோடு வைத்திருந்த Nikon SLR காமிராவிற்கு ஒரு குளோசப் ரிங் வாங்க நினைத்தேன். ஒன்றைக் காண்பித்தார்கள். பிசிக்கி பிசிக்கி செலவு செய்த எனக்கு அவர்கள் சொன்ன விலை அதிகமாயிருந்தது. யோசித்தேன். அதற்குள் விற்பனையாளன் இந்த ஒன்று மட்டும்தான் இருக்கிறது என்றான். கடைசி piece .. அதனால் விலை குறைத்து கொடுக்கலாமே என்றேன். ஒரே piece .. அதனால் விலை கூடத்தான் சொல்லவேண்டும் என்றான் சட்டென. ராசா, நல்லா பேசுறப்பா என்று நினைத்துக் கொண்டு வந்துவிட்டேன்.
*





