Thursday, September 20, 2012

591. ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல? - காணாமல் போன நண்பர்கள் ... 4




*




*





1957-ல் ....
கோடை விடுமுறையென்றால் உடனே பிறந்த மண்ணுக்கு ஓடியது ஒரு காலம். எங்கள் வீட்டைப் போலவே மதுரையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம்; பாளையங்கோட்டையிலிருந்து இன்னொரு பெரியப்பா குடும்பம். ஏறத்தாழ இந்த சமயத்தில் தான் ஊரில் அம்மன் கொடை நடக்கும். அதற்காக பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து ஊரை நிறைத்திருப்போம். மதுரையில் ’பூட்டிக் கிடந்த’ வாழ்க்கை - வீடும் இத்தனூண்டு இருக்கும். மிஞ்சிப் போனால் வெளியே போய் தார் ரோட்டில் விளையாடலாம். ஆனால் இங்கே ஊருக்கு வந்தாலோ ‘திறந்த வாழ்க்கை’! ஊரே நமது என்ற எண்ணம் வந்திருமே. எங்கே போனாலும் உறவினர். அதுவும் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு; கவனிப்பு; விசாரிப்பு. வீடும் பெரிது; ஊரும், காடும் விரிந்தது. எல்லாமே நிறைந்து கிடக்கும் ‘திறந்த வாழ்வு’!

எல்லா உறவினர்களும் சந்திக்கும் நாட்கள். அது பெரியவர்களுக்கு எப்படியிருந்ததோ .. நாங்க .. சின்னஞ்சிறுசுகளுக்கு ஏக சந்தோஷம். விளையாட்டுகளுக்கும் குறைவில்லை. சிறு வயதில் எல்லோரும் சேர்ந்து ஒளிந்து விளையாடி .. பின் வயதாக வயதாக விளையாட்டுகளும் மாறின. பிள்ளையார் பந்து (எறிப் பந்து); குச்சி தூக்கி விளையாடுதல்; தேர்ந்தெடுத்த அகத்திக்குச்சியின் முனையை வெட்டிச் சரிசெய்து ஹாக்கி மட்டை தயார் செய்து, பனங்கொட்டையை பந்தாக்கி விளையாடியது; ஓடைகளில் ஓணானை விரட்டி அடித்து வேட்டையாடியது; கிட்டிப் புள்ளு; கருங்கல்லை தேய்த்து தேய்த்து செய்த குண்டு வைத்து கோலி விளையாட்டு;  புளிய மரங்களில் மரக்குரங்கு விளையாட்டு;  நொங்கில் வண்டி செய்து ஓட்டியது;  விட்டில் பிடித்து சுட்டு தின்பது;  ... அது மட்டுமா, மே மாதம் மாதா மாதம் - அதாவது மேரி மாதாவின் மாதம் - மாலைகளில் அத்தை நடத்திய ஜெபக்கூட்டம்; அது முடிந்ததும் கையில் அரிக்கேன் விளக்கோடு இருட்டுக்குள் வரிசையாக நடந்து கிறித்துவ உறவினர்கள் வீட்டுக்குப் போய், ஜெபம் செய்து விட்டு அவர்கள் தரும் கருப்பட்டிக் காப்பியில் முறுக்கை ஊறவைத்து தின்ற மகிழ்ச்சி ... அடேயப்பா .. Variety was the spice of life then! கொஞ்சம் வயசானதும் காட்டுக்குள் போய் திருட்டுப் பீடி குடித்துப் பழகியது ... இளமையின் ராஜ்ஜியமாக அந்த நாட்கள் கழிந்தன.

வழக்கமாக இப்படி விளையாட்டுகளில் மூழ்கிப் போனாலும் அவ்வப்போது சில இடிகளும் தலை மேல் வந்து இறங்கும். இன்னைக்கு எல்லோரும் வேட்டைக்குப் போவோம்னு நண்பர்களோடு முடிவெடுத்து மதியச் சாப்பாட்டிற்குப் பின் மெல்ல கிளம்பும் போது அப்பா ஆளை நிறுத்தி, ஊரிலிருந்து எடுத்து வந்திருக்கும் Wren & Martin ஆங்கில இலக்கண புத்தகத்தை எடுத்து அதிலுள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது என்னும் போது வரும் கோபம் ... ம்ம் .. அந்தக் கோபத்தையும் வெளியே காண்பிக்கவா முடியும். கடவுளேன்னு படிக்க உக்காரணும்!

ஆனால் ஒரு வருஷம் மிக மகிழ்ச்சியாகப் போனது. என் பாட்டையா அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி நடத்தி வந்தார். ஊருக்குப் பக்கத்தில் நல்லூர் என்ற ஊரில் ஒரு பெரிய பள்ளி; உயர் நிலைப்பள்ளி; ரொம்ப வருஷத்துக்கு முந்தி ஆரம்பித்த பள்ளி. அந்த ஊரிலிருந்து அரைக் கிலோ மீட்டர் தூரம் தான் எங்கள் ஊர் - காசியாபுரம். நல்லூர், கொஞ்சம் அரசியலால் பெயர் வாங்கிய ஆலடி, எங்கள் ஊர் காசியாபுரம் – மூன்றும் ஆயுத எழுத்து மாதிரி அடுத்தடுத்து இருக்கும். நல்லூரில் இருந்த அந்தப் பெரிய பள்ளி .. அடுத்து எங்கள் ஊரில் பாட்டையாவின் பள்ளி. பக்கத்தில் வேறு பள்ளி ஏதும் கிடையாது. அதனால் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் எங்கள் பள்ளிக்கு நிறைய மாணவர்கள் வருவார்கள். அந்தப் பள்ளிக்கு three-wheeler-ல் போய் வண்டியை பள்ளியின் நடுவில் இருந்த வாதமடக்கி மரத்து நிழலில் park செய்து நான் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை அந்தப் பள்ளியில் ‘படித்தேன்’. எனக்கு இருந்த நான்கு அத்தைகளும் அப்பள்ளியில் ஆசிரியர்களாக அவ்வப்போது இருந்தார்கள். ஏன் அந்த வயதிலேயே, மூன்று வயதிலேயே நான் அப்படி மாஞ்சு மாஞ்சு பள்ளிக்கூடம் போனேன்னு தெரியணும்னா அங்கே போய் படிச்சிக்கிங்க.  

அந்தப் பள்ளியில் ஒரு கோடை விடுமுறையில் பெரிதாக ஒரு விழா நடந்தது. இன்னும் சில நிகழ்வுகள் நினைவில் உள்ளன. ஒரு கண்காட்சி, சின்னச் சின்ன விளையாட்டுகள் என்று பகலெல்லாம் நடந்தன. மாலையில் தான் ஒரு பெரிய நிகழ்ச்சி - நாடகம் ஒன்று நடந்தது. நான் தான் ஹீரோ! அடிச்சி தூள் கிளப்பிட்டோம்ல! நாடகம் பார்த்த என் அப்பம்மா  என் ‘உணர்ச்சி மிக்க நடிப்பில்’ அப்படியே அழுதுட்டாங்கல்லா ..! நாடகம் பற்றி இங்கே ஒண்ணும் சொல்லலை.  ஏன்னா அது பற்றி ஏற்கெனவே  சொல்லியிருக்கேன். கண்ணீரையெல்லாம் அடக்கி வச்சிக்கிட்டு நீங்களே அதை இங்கே வாசிச்சிக்கங்கோ ...சரியா?  

வாசிச்சிட்டீங்களா ..? ரொம்ப மனசு கனமா இருக்குமே!  சரி .. அது ஒரு பக்கம் இருக்கட்டும். கண்ணீரையெல்லாம் தொடச்சிக்கிட்டு நம்ம கதைக்கு வருவோம்.  அந்த நாடகத்தில கிளப் முதலாளியா வந்தானே வைத்தியலிங்கம், அவன் தான் இந்த நாடகத்தின் மூலம் எனக்கு நல்ல நண்பனானான். அது வரை எனக்கு அவனைத் தெரியாது. எங்கள் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் உண்டு. ஆனால் கொஞ்சம் பெரிய பையனாக இருக்க வேண்டுமென்பதற்காக எங்கள் பள்ளியில் படித்து முடித்து, பின் நல்லூர் உயர் நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருந்த வைத்தியலிங்கத்தை அத்தை பிடித்து இழுத்து வைத்திருந்தார்கள். மற்ற முக்கால்வாசி கதாபாத்திரங்களைத்தான் டவுன் பிள்ளைகளான நாங்கள் அமுக்கிக் கொண்டோமே..!

நாடகம் முடிந்த அடுத்த நாள் வைத்தியலிங்கத்திடம், ‘ஏண்டா! அப்படி கால் சட்டையையும் கழட்டச் சொன்ன?’ என்று கேட்டேன். இருந்தாலும் எனக்கு மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி. ஏன்னா  அந்த சீன் அப்படி இருந்த்தால் தானே அப்பம்மா  அப்படி அழுதுட்டாங்க! அந்த நாளிலிருந்து அவன் எனக்கு நல்ல ஒரு நண்பனாகி விட்டான். திருநெல்வேலிப் பழக்கத்தில் ‘ஏலே!’ என்று கூப்பிடும் பழக்கம் இருந்தாலும் நான் அந்த வயதில், ஏன் அதற்குப் பிறகும் அப்படி யாரையும் கூப்பிட்டதில்லை. வைத்தியலிங்கமும் நானும் அன்றிலிருந்து  ஒருவரை ஒருவர் ‘ஏலே’ என்று கூப்பிட ஆரம்பித்தோம். நான் அப்படி ’ஏலே’ என்று அன்போடு கூப்பிட்டது அவன் ஒருத்தனைத்தான்.  (இப்போ பேரப் பசங்களை அப்பப்போ ‘ஏலே’ன்னு கூப்பிடுறது நல்லா இருக்கு!)  ஒவ்வொரு விடுமுறைக்கும் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அவன் வீட்டுக்குத் தான் ஓடுவேன். ஊரில் இருக்கும் வரை அவன் கூடவே இருப்பேன். ஆனாலும் என்ன, இந்த மாதிரி இருந்தது ஓரிரு ஆண்டுகள் மட்டுமே.

ஒரு விடுமுறையில் ஊருக்குப்  போனதும் அவன் வீட்டுக்குப் போனேன். அவன் வீட்டில் மட்டுமல்ல ஊரிலேயே இல்லை. அவனை சென்னைக்கு அவன் வீட்டார் அனுப்பி விட்டார்கள். படிக்கிறதாகச் சொன்னார்கள். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவன் படிப்பை விட்டு விட்டு காவல் துறையில் கான்ஸ்டேபிளாகச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள். சில ஆண்டுகள் கழித்து அவன் வீட்டிலும் யாரும் இல்லை. எல்லோரும் சென்னை வாசிகள் ஆகிவிட்டார்கள் போலும்.

நாடகத்தில் என் ‘ட்ரவுசரை உருவிட்டான்’; ஆனால் இப்போ அவனும் அந்தக்கால போலீஸ்காரராக  அரை ட்ரவுசர் சீருடை உள்ள வேலைக்கே போய்ட்டான். என்னே ஒரு  dramatic irony!!! ஜீ பூம்பா போட்டு பழைய ஆட்களைக் கண்முன் கொண்டு வரும் மந்திரம் தெரிந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! வைத்தியை எதிரே கொண்டு வந்து, ‘ஏலேய் வைத்தி! நல்லா இருக்கியா’ல?’ என்று உரத்துக் கேட்டு விடலாமே!



*

இப்பதிவிட்டு சில நாளில் எங்கள் ஊர் பதிவர் வேல்முருகன் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். எங்களூரில் அவரது வீடு வைத்தியலிங்கத்தின் வீட்டிற்குப் பக்கத்து வீடு என்றார். கிராமத்தில் பக்கத்து வீடு என்றால் நிச்சயமாக உறவாகத்தானிருக்கும். அவர் மூலம் முயன்று கடைசியில் வைத்தியைக் கண்டு பிடித்து விட்டேன்.

வேல்முருகன் கொடுத்த ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு அங்கிருந்து வைத்தியின் எண்ணைக் கண்டுபிடித்தேன். அம்புட்டு மகிழ்ச்சி ... உடனே தொடர்பு கொண்டேன். வா .. போ .. என்று பேச ஆசை. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து வைத்தி ரொம்ப மரியாதையாகப் பேசியதால் எனக்கும் வேறு வழியில்லாமல் போயிற்று. வைத்தியின் தம்பி தான் காவல் துறைக்குப் போயிருந்திருக்கிறார். வைத்தி எண்ணூர் அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று சென்னையில் அத்திப்பெட்டு என்னுமிடத்தில் சொந்த வீட்டில் மக்கள். பேரப் பிள்ளைகளோடு இருப்பதாகச் சொன்னார். அவரோடு பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது - போன ஜென்மத்து உறவைப் புதுப்பித்தது போல் இருந்தது. 



காணாமல் போன ஒரு 
நண்பனைக் கண்டு பிடிச்சிட்டோம்ல ...........


*







. *

Tuesday, September 04, 2012

590. ராஜா .. காணாமல் போகலை; இல்லாமல் போய்ட்டான்...3

*





*
”அதீதம்”  இணைய இதழின் ..

செப்டம்பர் முதலிதழில் பதியப்பட்ட கட்டுரை.

*












ராஜா  .. காணாமல் போகலை;  
இல்லாமல் போய்ட்டான்.



1954-ல் ……………..


நாங்கள் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளியிலேயே ‘இங்கிலிபீசு’ மீடியம் என்ற பாடத்திட்டம் ஏதும் கிடையாது. ஆறாம் வகுப்பு - அப்போ அதற்குப் பெயர் I Form - வரும்போது தான் A .. B.. C.. D எல்லாம் சொல்லித் தருவார்கள். ஆனால் நான் படிச்சது ஐந்தாம் வகுப்பு A பிரிவு. நல்லா படிக்கிற பசங்களுக்கான வகுப்பு என்று பள்ளிக்கூடத்தில் பெயர். அதனால் தானோ என்னவோ நாங்கள் ஐந்தாம் வகுப்பின் கடைசியிலேயே எங்களுக்கு A .. B.. C.. D  சொல்லிக் கொடுத்தார்கள். father, mother, brother sister ... இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். நாங்களும் மற்ற க்ளாஸ் பசங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டோம். What is your name? What is your father's name? எம்புட்டு எம்புட்டு படிச்சோம்! மத்த பசங்களுக்கு நிச்சயம் காது வழி புகை வந்திருக்கணும்.

என் ஐந்தாம் க்ளாஸ் வாத்தியார் லூக்காஸ்.  நல்ல உயரம்; பயங்கர ஒல்லி; எப்பவும் சிரிச்ச முகம். தோள்பட்டை லேசா தூக்கி இருக்கும். அதனால் அவர் ரொம்ப வித்தியாசமா தோன்றுவார். என் மேலே அவருக்கு ரொம்ப பிரியம். பசங்களை அடிக்க வகுப்பு ஓரத்தில் ஒரு பிரம்பு வைத்திருப்பார். பசங்களை அடிக்க வேண்டுமானால் அந்த பிரம்பை என்னைத் தான்  எடுத்துத் தரச் சொல்வார். அதுவே ஒரு பெரிய கிரடிட். சில பசங்களுக்கு பொறாமையும் கூட. ஆனால் பிரம்பை எடுத்துக் கொடுக்கும் எனக்கே அந்த பிரம்பாலேயே ஒரு நாள் நல்லா அடிபட்டேன். அப்படி என்ன தப்பு செஞ்சி அடிவாங்கினேன்னு தெரிஞ்சுக்கணுமா ....  அந்தக் காலத்தில டிக்டேஷன் சொல்லுவாங்க .. அத நாங்க எங்க ஸ்லேட்ல எழுதணும். அதுக்குப் பிறகு வாத்தியார் தப்பு திருத்துவார். அப்போ ஸ்லேட்ல ஒரு பக்கத்துக்கு ரெண்டு தப்பு அனுமதி. அதுக்கு மேல இருந்தா பிரம்படி தப்பு எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி அடிக்கணக்கு உண்டு. நான்  இந்த தமிழ் டிக்டேஷனில் அடி வாங்கியது இல்லை. அதனால தான் பிரமபை எடுத்துக் கொடுக்கிற வேலையைக் கூட எங்க வாத்தியார் எனக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நானும் ஒரு நாள் ஓங்கி சில அடிகள் வாங்கினேன். அப்படி ஒரு பெரிய தப்பு ப்ண்ணிட்டேன். என்னது ... என்ன தப்புன்னு தெரியணுமா? அப்போ கொஞ்சம் அங்கே போய்ட்டு வாங்க. விவரம் அங்கதான் இருக்கு! 

சரி .. அடி வாங்கின அந்த ஒரு நாளை விட்டுருவோம். அதைத் தவிர நான் தமிழ் டிக்டேஷனில் தப்பு வாங்கினதில்லையல்லவா ... அதனால் வாத்தியார் பிரம்பை எடுத்துத் தரும் prestigious வேலையை எனக்குக் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பு எடுக்கும் போது சில பகுதிகளை வாசிக்க என்னைக் கூப்பிடுவார். நான் போய் அவர் மேசைக்குப் பக்கத்தில் போய் அந்தப் பகுதிகளை வாசிக்கணும். பசங்க மனசுல இதெல்லாம் ஒரு உறுத்தலா இருந்துச்சோ என்னமோ... ஆனால் ஒரு நாள் ஒரு மாணவன் ஆசிரியருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான்.

அவன் பெயர் ராஜா. பெரிய பையனாக இருப்பான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு குறை உண்டு. அவனது கண் இமைகள் நம்மைப் போல் திறந்து குறுகாது. அவை எப்போதுமே முக்கால் வாசி மூடியே இருக்கும். சிறு பாகம் வழியாகத்தான் அவனால் பார்க்க முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்குப் பார்வையில் கோளாறு ஏதுமில்லை. ஆனாலும் இந்தக் குறையினால் அவனுக்குப் பட்டப் பெயரெல்லாம் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரைச் சொன்னதும் சண்டைக்குப் போவான். பெரிய பையன் என்பதால் எல்லோருக்குமே அவனிடம் ஒரு பயம் உண்டு.  உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பின் ஒவ்வொரு வருஷமும் ’இந்தக் கோடை விடுமுறையில் கண்ணுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன்’ என்று வழக்கமாக பல ஆண்டுகள் சொல்லி வந்தான்.ஆனால் கடைசி வரை அப்படியேதும் செய்யவில்லை.

அவன் ஒரு நாள் லூக்காஸ் வாத்தியாரிடம், ‘ஏன் சார் .. எப்பவும் ஜார்ஜை மட்டும் வாசிக்கக் கூப்பிடுகிறீர்கள்?’ என்றான். துணிச்சல்காரப் பயல் தான்.  

லூக்காஸ்,  ‘அவன் ஒழுங்காக வாசிப்பான்; அதனால் தான்’ என்றார்.  

’நானும் நல்லா வாசிப்பேன். வேணும்னா அவனோடு போட்டி வச்சிக்கிறேன்’. 

‘ஆகா ... வச்சிக்கலாமே’ என்றார் லூக்காஸ்.

அவரே போட்டியும் விதிகளையும் சொன்னார். அவரது மேசைக்குப் பக்கத்தில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டும். நடுவில் அவர் இருந்து ஒரே சமயத்தில் முதுகில் தட்டுவார். ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அவரது அடுத்த தட்டில் வாசிப்பவன் நிறுத்த, அடுத்தவன் வாசிக்க ஆரம்பிக்கணும். நடுவில் திக்கல், தவறுகள் இருந்தால் மதிப்பெண் குறைவு. இந்தத் தப்புகளை முன் பெஞ்சில் சில மாணவர்களை வைத்துக் குறித்துக் கொள்ளலாம் என்றார். யாருக்கு குறைந்த தப்புகள் இருக்கின்றனவோ அவன் தான் வின்னர் என்றார்.

எனக்குக் கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் சரியென்று சொல்லி விட்டேன். ராஜா அதோடு விடுவானா?  போட்டிக்கு நாங்கள் இருவரும்  பந்தயம் கட்டணும் என்றான். அவனே பந்தயப் பணத்தையும் சொன்னான். ஆளுக்கு ஓரணா பந்தயம் என்றான். அப்போ ஒரு அணா அப்டின்னா அது பெரிய காசு. நமக்கேது அம்புட்டு பாக்கெட் மணி. என்னால முடியாதுன்னேன். அப்போ இரண்டு நண்பர்கள். எனக்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். அனேகமாக அவர்கள் பெயர் வெற்றிவேல்,. கதிரேசன் என்று நினைக்கிறேன். வெற்றிவேல் அழகாக, கருப்பாக என் உயரத்தில் இருப்பான். கதிரேசன் ஒல்லியான உயரமான பையன். பாவம் அவர்கள்! வாழ்க்கையில் அப்பவே அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்கள். அவ்ர்கள் இருவரும் எனக்காக ஓரணா ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.

சார் முன் பெஞ்சில் நாலைந்து மாணவர்களை உட்காரவைத்து அவர்களிடம் எப்படி தப்புகளைக் குறிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து தயாராக்கினார். வெற்றிவேல்,. கதிரேசன் இருவரும் ஜட்ஜாக இருக்க்க் கூடாது என்றும் சொல்லி விட்டார்.  வகுப்பே களை கட்டி இருந்தது. போட்டி ஆரம்பித்தது. பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. இருவரும் வாசித்தோம். தவறுகள் குறிக்கப்பட்டன. போட்டி முடிவடைந்தது. ஜட்ஜூகள் ஆசிரியரின் மேசைக்கு பக்கத்தில் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் இடத்திற்கு வந்து விட்டோம். ஜட்ஜுகள் கணக்குப்படி எங்கள் தப்புகள், தடுமாற்றங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டன.
பயத்தோடு இருந்தேன். ஆனாலும் ‘வெற்றி எனக்குத்தான்’ என்று  ஆசிரியர் சொன்னது தெரிந்தது. வகுப்பில் எனக்காக ஒரு கை தட்டல் இருந்தது. அந்தக் காலத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணக் கூட ஆள் இருந்திருக்கு! ராஜா ரொம்ப ஜென்டிலாக முன் வந்தான். எனக்குத் தெரியாத  மரியாதையெல்லாம் அவனுக்குத் தெரிந்திருந்தது. கை கொடுத்தான். பந்தயக் காசு ஓரணாவை வாத்தியாரிடம் இருவருமே கொடுத்திருந்தோம். சார் அதில் ஓரணாவை என்னிடம் ராஜாவைக் கொடுக்கச் சொன்னார். இன்னொரு ஓரணாவை எனது ‘பைனான்சியர்களிடம்’  திருப்பிக் கொடுத்தார். அதிலும் ஒரு சிக்கல் வந்தது. ‘பைனான்சியர்கள்’ என் பந்தயக் காசில் பங்கு கேட்டார்கள். சார் தீர்ப்பு சொல்லிட்டார்: ‘அந்தக் காசு அவனுக்கு மட்டும் தான்’. ராஜாவிடம் சார் கேட்டார்: ‘என்னடா ... இனிமே அவனையே வாசிக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். ராஜா உற்சாகமாக சரி என்றான்.

படிப்பில் நான் ஜெயிச்ச ஒரே நிகழ்வு இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.

அதன் பின் ராஜா ஒரே பள்ளியில் இருந்தாலும் வேற வேற செக்‌ஷன். நல்ல பெரிய உருவமாக வளர்ந்தான். கொஞ்சம் முரட்டுப் பையலாகவே தெரிந்தான். அவன் கண்ணை வைத்துப் பலரும் அவனைக் கேலி செய்வதுண்டு. அவர்களிடம் முரட்டுத்தனமாக இருந்தான்.ஆனால் உண்மையிலேயே அவன் பயங்கர சாப்ட் என்பது எனக்கு 29 வயதிற்குப் பிறகுதான் தெரிந்தது.  அதாவது என் மாமனார் வீட்டிற்கு பக்கத்தில் தான் அவன் இருந்தான். என் மாமனாருக்கு அவன் ஒரு நண்பன் மாதிரி. முரட்டுத்தனமா  ஒரு மீசை வைத்திருப்பான்.பெரிய மீசை. முனைகள் பிரஷ் மாதிரி பெருசா கன்னத்தை மூடியிருக்கும். என் முதல் மகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் கத்தினாள். சில நாட்களில் இருவரும் பயங்கர நண்பர்களாகி விட்டார்கள், மீசையை வைத்தே அவளைச் சிரிப்பு மூட்டுவான். அவளுக்கு அது ஒரு பெரிய விளையாட்டாகிப் போனது.  

அவன் கண்கள் சிறு வயதிலேயே தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டன. பள்ளிப் படிப்பு முடியும் வரை அதிகமாக ஏதும் இல்லை. அதன் பின் பார்வை குறைய ஆரம்பித்து விட்டது. எதையும் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும். கண்ணாடி போட்டுக்கோ என்று எல்லோரும் வற்புறுத்துவோம். ஆனால் கடைசி வரை போட்டுக் கொள்ளவேயில்லை. என் திருமணத்திற்கு முன் நாங்கள் அவ்வப்போது பார்த்துக் கொண்டது உண்டு. ஆனால் அதிகமாக நட்பு பாராட்டியதில்லை. அதன் பின் அடிக்கடி சந்திப்பதுண்டு. எங்கள் போட்டியை எனக்கு முழுவதுமாக நினைவு படுத்தியதே அவன்தான். நாங்கள் அன்று போட்டியில் வாங்கிய மதிப்பெண்களில் என்னைவிட அவன் இரு மடங்கு தப்புகள் செய்ததாகச் சொன்னான். உண்மை என்னவோ .. சும்மா என்னைத் தூக்கி வைப்பதற்காகக் கூட சொல்லியிருப்பான். பயல் அப்படிப்பட்டவன். என் மாமனார் வீட்டில் வைத்து இதைச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்துவது அவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. கொஞ்ச நாள் என்னை கேரம் விளையாட ஒரு கிளப்பிற்கு அழைத்துச் செல்வான். கண் பார்வையில் கோளாறு இருந்தும் அவன் மிக நன்றாக விளையாடுவான். செஞ்சுரி போடுறதெல்லாம் அவனுக்கு எளிது. 

அவன் திருமணமாகாத அக்காவிற்குத் துணையாக இருக்க வேண்டுமென்று திருமணமே வேண்டாமென்றிருந்து விட்டான். எல்லோருக்கும் உதவுவதில் மன்னன். யாருக்காகவும் எங்கே வேண்டுமானாலும் அலைந்து கஷ்டப்பட் தயாராக இருப்பான். என் மாமனாரின் கடைசி காலத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தான். மருத்துவ மனையில் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு இரவில் அவரோடு இருந்து நன்கு கவனித்துக் கொண்டான். அவருக்கும் அவன் இருப்பதே பிடித்தது. மாமனார் காலத்திற்குப் பிறகு எப்போதாவது அவனிடமிருந்து தொலை பேசி வரும். பேசிக் கொள்வோம்.

அறுபதை நாங்கள் எட்டிப் பிடித்த பின் எப்போதாவது பார்த்துக் கொள்வோம். பெரிய உருவம். திடகாத்திரமான உடம்பு. பெரிய மீசை. ஆனால் ஐம்பதுகளிலேயே சர்க்கரை வியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் அவனது பழைய தோரணை ஏதுமில்லாமல் போய் விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் திடீரென்று போய்ச்சேர்ந்திட்டான் என்ற செய்தி சில நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது..
*










*



 

Monday, September 03, 2012

589. THE GNOSTIC GOSPELS ... 5

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 



IV

THE PASSION OF CHRIST AND 
THE PERSECUTION OF
CHRISTIANS



ரோமானிய போன்டியஸ் பைலாத்துவின் உத்தரவின் பேரில் ஏசு சிலுவையில் அறைந்து, தண்டிக்கப்பட்டார் என்பதுவே நாசரேத்துவின் ஏசுவைப் பற்றிக் கூறப்படும் அனைத்திற்கும் ஒரே சாட்சியாகவும், நிரூபணமாகவும் இருக்கிறது.  கி.பி. 55-115 ஆண்டுகளில் இருந்த வரலாற்றாசிரியர் டாசிட்டஸ் (Tacitus) ஏசுவைப் பற்றி ஏதும் கூறாமல் நீரோ சக்கரவர்த்தி (கி.பி.54-58) ரோமில் பல இடங்களைத் தீக்கிறையாக்கியதைப் பற்றிக் கூறுகிறார். இதனோடு இணைந்து,  ஏசுவிற்கு போன்டியஸ் பைலாத்துவின் தண்டனை பற்றிக் கூறுகிறார்.(70)

ஏசுவின் அடியார்களும் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.  முதலில் எழுதப்பட்ட மார்க்கின் விவிலியத்தில் (கி.பி.70-80) யூதாசினால் ஏசு காட்டிக்கொடுக்கப் படுவது, ஏசு கைது செய்ய்ப்படுவது, அவரது சீடர்கள் தப்பி ஒளிவது, அரசை எதிர்க்கிறார் எனக் குற்றம் சாட்டப்படு, போன்டியஸால் சாவிற்குத் தீர்ப்பிற்குள்ளாக்கப்படுவதல் - இவை எல்லாமே கூறப்பட்டுள்ளன.

லூக், யோவான் இருவரும் இன்னும் பல ஆண்டுகள் கழித்தே, ஏறத்தாழ ஒரு தலைமுறை கழித்த பின் (90-110) இச்சம்பவத்தை இன்னும் பல வீர தீரச் செயல்களோடு எழுதியுள்ளனர். ஏசு தன் எதிரிகளை மன்னித்தல், ஜெபம் செய்தல் போன்றவைகள் இதில் உண்டு. ஆனால் நான்கு புதிய ஏற்பாடுகளிலும் அவரது வேதனை மிகுந்த சாவு, அவசரமாக அவர் புதைக்கப்படுதல் போன்றவை கூறப்பட்டுள்ளன.  (71)

Apocalypse of Peter  என்ற Nag Hammadi ஏடுகளில் வேறுவிதமாகக் காணலாம்.  சிலுவையில் அறையப்பட கைகளிலும் கால்களிலும் ஆணிகள் அறையப்படும் ஒருவரையும், சிலுவையில் மகிழ்ச்சியாகவும் சிரித்துக் கொண்டும் ஒருவர் இருப்பதைப் பார்த்து, ஏசுவிடம் கேட்டேன்.  அவர் சிலுவையில் சிரித்துக் கொண்டிருப்பவர்  LIVING JESUS . கீழே  ஆணி அறையப்படுபவர்  ஏசுவின்  சதையாலான உருவம்(FLESHY PART); அவரின்  மாற்றுடல்.  (HIS SUBSTITUE ) என்றார். (72)

The Acts of John - நாக் ஹமாதி பிரதிகள் கிடைப்பதற்கு முன்பே கிடைக்கப்பட்ட பிரதி இது.  இதில் ஏசு ஒரு மனிதனல்ல; அவர் ஓர் ஆன்மீக உருவு  என்று கூறப்பட்டுள்ளது. (73)

The Acts of John-ல் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடல்:

இப்பிரபஞ்சம் முழுமையும் அந்த நடனக்காரரின் சொத்து.   ஆமென்.

நடனமாட முடியாதவனுக்கு நடப்பது என்ன என்பது புரியாது.   ஆமென்.

இப்போது என்னோடு நடனமிட ஆரம்பித்தால், உன்னை என்னிடம் காண்பாய்.   ஆமென்.

நடனமிடும் நீ, நான் என்ன செய்கிறேன் எனபதைக் கவனி ; நான் படும் இன்னல்கள் உனக்காக;    ஆமென்.

துயரங்களை அனுபவிக்கப் பழகு; அப்படியானால் நீ துயரமின்றி இருப்பாய்.      ஆமென். (74)


பழமைக் கிறித்துவர்கள் ஏசு ஒரு மனிதனாகவே பூவுலகிற்கு வந்தார் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
Pope Leo, the Great (கி.பி.442) The Acts of John-ல் சொல்லியிருப்பது முற்றிலும் தவறு; அது போன்ற எழுத்துக்கள் அழிக்கப்பட்டு, எரிக்கப்பட வேண்டும் என்கிறார். (75)

Suectonius என்ற வரலாற்றாசிரியர் (கி.பி.125) நீரோ சக்கரவர்த்தியின் காலத்தில் கிறித்துவர்கள் பெருமளவில் தண்டிக்கப்பட்டுள்ளதைக் கூறுகிறார். (76)


(இதனைத் தொடர்ந்து எப்படி பல கிறித்துவர்கள் ரோமானியப் பேரரசால் கொல்லப்பட்டார்கள் என்று நூல் சொல்லிச் செல்கிறது. சில மணி நேரத் துயரங்கள் மூலம் அவர்கள் பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு மோட்சம் செல்லும் வேதசாட்சிகளாகி விடுகிறார்கள் என்பது பழமைக் கிறித்துவத்தின் நம்பிக்கை.)





V

WHOSE CHURCH IS THE 

"TRUE CHURCH"?



கடந்த இரண்டாயிரம் ஆண்டளவாக பழமைக் கிறித்துவக் கருத்துக்களும், வழி முறைகளும் காக்கப்பட்டு, போற்றப்பட்டு வருகின்றன;  gnostic கருத்துக்கள் பின் தள்ளப்பட்டு விட்டன; அதை விடவும் அவைகள் ஏறத்தாழ அழிக்கப்பட்டு விட்டன. Nag Hammadi  பதிவுகள் கிடைத்த பிறகே மதத்தின் இன்னொரு பக்கம் வெளி வந்துள்ளது.  பழமைக் கிறித்துவம் gnosticகருத்துக்களால் கண்டிக்கப்பட்டு வந்துள்ளது என்பதும் தெரிகிறது.  (102)

கி.பி. 200 பழமைக் கிறித்துவத்திற்கும்,  gnostic கருத்துக்களுக்கும் போராட்டம் ஆரம்பமாகி இருந்தது.  எந்த அமைப்பு உண்மையான கிறித்துவம் என்ற போராட்டம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

gnostic மதம் வெறும் அடையாளங்கள், வேத சாட்சிகளாக மரித்தல் போன்றவைகளைப் போற்றவில்லை. அவர்களது அடிப்படைக் கருத்து: ‘உங்கள் கனிகள் மூலம் நீங்கள் அறியப்படுவீர்கள்’.

ஆனால்  பழமைக் கிறித்துவம் இரண்டாம் நூற்றாண்டிலேயே ஒரு முழு அமைப்பாக மாற ஆரம்பித்து விட்டது. அக்கிறித்துவம் சொல்பவைகளை முழுமையாக நம்புபவர்கள் மட்டுமே  கிறித்துவர்களாக அங்கீக்ரிக்கப்பட்டனர். அறிவு சார் கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு, எளிய, சாதாரண முறைகளில், அதன் கொள்கைகள், பழக்கங்கள், அரசியல் அமைப்புகள் இவைகளை ஒப்புக் கொள்வோர் மட்டுமே உறுப்பினர்கள் என்ற கட்டமைப்பு உருவானது. (104)

பழமைக் கிறித்துவத்தில் கத்தோலிக்க திருச்சபை மட்டுமே முழுமையானது; இதற்கு வெளியே ரட்சிப்பில்லை.  gnostic கிறித்துவத்திலோ மதக் குருக்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் கொள்ளும் நல்லுறவே முக்கியம் என்று சொன்னது. உண்மையான கிறித்துவம் என்பது கடவுளோடும் மற்றவர்களோடும் நாம் கொள்ளும் நல்ல உறவு மட்டுமே என்றது.    gnostic கிறித்துவம்  ’தெய்வீக கிறித்துவம்’ என்பது பற்றிப் பேசும்போது, பழமைக் கிறித்துவம் வெளிப்படையான, சாதாரண தோற்றத்தை மட்டுமே தருகிறது.  (106)

Irenaeus-ன் மாணவரான Hippolytus கிறித்துவ சட்டத்தின்படி மதத்தலைவர்களான பிஷப்புகளின் இருப்பைப் பிரதானப்படுத்துகிறார். (107)

Valentinian-களில் ஒருவரான Heracleon மாற்றுக் கருத்தைக் கூறுகிறார். ’சாதாரண’ பழமைக் கிறித்துவர்களுக்கு கோவில் என்பது  சாதாரணம்;  ஆனால்  gnostic கிறித்துவர்களுக்கு அது ஒரு புனித இடம்; ஆன்மீகம் சார்ந்த இடம் என்றாகி விடுகிறது என்கிறார். (116)





















*

Sunday, August 26, 2012

588. ஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ...

*


சும்மா சொல்லக்கூடாது .. விஜய் தொலைக்காட்சி நல்ல சில விஷயங்களைத் தொடர்ந்து தருகிறார்கள்.

சூப்பர் ஜூனியர் நிகழ்ச்சி .. ரொம்ப ஜவ்வாக இழுக்கிறார்கள். ஆனாலும் கடைசி ஏழு பேருக்கு ஏழு பெரிய இசை விற்பன்னர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அதுவும் கெளதம் பாடியதும் அனைவரும் இசைக்கு அளித்த மரியாதையையும், அந்தப் பாடலைப் பாடிய பையனைப் பாராட்டியதும் (இது ஒரு ரியாலிட்டி ஷோ என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும்) மிக அழகாக இருந்தது.   நல்ல பில்ட் அப் ...

சரவணன் மீனாட்சி .. சும்மா சொல்லக்கூடாது. அழகான கதாநாயகி; விளையாட்டுக்கார கதாநாயகன்; அசத்தலான அப்பா .. நிறைய இளைஞர்களுக்குப் பிடித்த காதல் ...இதையெல்லாம் விட எனக்குப் பிடித்தவைகள் - ஆரம்பத்திலேயே ஜாதகத்திற்கு கொடுத்த அடி ரொம்ப பிடித்தது. எனக்குத் தெரிந்து ஜாதகத்தைத் தூக்கி எறிந்த முதல் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. அதனாலேயே ரொம்ப பிடிச்சிப் போச்சு. அடுத்து வரதட்சணை - அந்த விஷயத்தைக் கையாண்ட வகை பிடிக்காவிட்டாலும் அதையும் அழகர் - இயக்குனர் - ஒரு பிடி பிடித்திருந்தார். ஏமாற்றிய கணவனைத் தூக்கி எறிவது, விவாகரத்து பெற்ற பெண்ணின் அடுத்த திருமணத்தை எளிதான ஒரு நிகழ்வாகக் காட்டியிருப்பது ... எல்லாம் கொஞ்சம் புதிதுதான்.  ஒரு சில சீன்களில் மட்டும் வந்த நண்பன் சுப்பையா, இன்னொரு மீசைக்காரர் ... அசத்தல் நடிப்பு; பாராட்டு.  TRP rating என்பதற்காக இரு பொது நிகழ்ச்சிகளைக் கொண்டாடி சீரியலைப் புது மெருகேற்றியது நல்ல  உத்தி. 

இதையெல்லாம் தாண்டி இப்போது வரும் 7-ம் வகுப்பு C பிரிவு ரொம்ப நல்லா இருக்கு. ஆசிரியர்களும், இளம் மாணவர்களும் கட்டாயம் பார்க்கணும். Sydney Poitier நடித்த TO SIR WITH LOVE படத்தை மிகப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். சரி .. அதைப் பார்த்து ஏதோ உல்டா பண்ணப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயமாக அந்தப் படத்தை விட இந்த சீரியல் நன்றாக இருக்கிறது.

அங்கே தன்னோடு குத்துச்சண்டை போட வரும் மாணவனை ஆசிரியர் குத்துச்சண்டை பழக்குபவனாக ஆக்குவார். ஆனால் இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. நிகழ்வுகளை மிக இயல்பாக வருவதாக அமைத்துள்ள இயக்குனர் ராம் விநாயக்கிற்கு வாழ்த்து. நடிகர்கள் தேர்வும் மிகச் சரியாக உள்ளது. ’இளைய பாரதிராஜா’ மாதிரி வரும் கதாநாயகன் சாதாரணத் தோற்றத்தோடு வந்து, அழகாக, இயல்பாக நடிக்கிறார்.  சரியான  வயதுக்குரிய பிள்ளைகளை நடிக்க வைத்திருப்பது பாராட்டுதற்குரியது. குருவியும், தலைமை ஆசிரியரும் நல்லா செஞ்சிருக்காங்க.  கொஞ்சம் ட்ராமாட்டிக்காக சில காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இப்போது இதுதான்.

வித்தியாசமான, பாராட்டுகுரிய சீரியல். இந்த சீரியலை எடுத்து அளிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டு.





















*