Friday, January 12, 2024

1270 . சென்னைப் புத்தக விழாவில் இரண்டாவது புத்தகம் - சூத்திரர்

இந்த நூலுக்கு “சூத்திரன்” என்றே பெயர் வைக்க விரும்பினேன். அந்தச் சொல்லே சூத்திரர்களைக் குத்தும் என்று நினைத்தேன்; அதையே விரும்பினேன். ஏனெனில், இந்த நூலை வாசிக்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன்.... இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ‘நான்’ ஏன் சுத்தமாக சுய மரியாதை இல்லாமல் இருந்து தொலைத்தேன். (இங்கே நானென்பது என் மூதாதையரையும் சேர்த்து அனைத்து சூத்திரன்களையும் ஒன்று சேர்த்தே சொல்கிறேன்.) சில ஆண்டுகள், சில நூற்றாண்டுகள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த வினாடி வரை கூனிக் குறுகி, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாமல், அறியாமல், புரியாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டே இந்த நூலை வாசித்தேன். நூலில் கொடுத்துள்ள உண்மைகள் அத்தனை வன்மையானவை; உண்மையானவை; உணர்ந்து படிக்க வேண்டியவை.

சூத்திரன் என்று நம்மை ஒதுக்கி வைத்த மக்களும் இதைக் கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஒரு வேளை இத்தனைக் கொடுமையானவர்களா நாம் என்ற கேள்வியும், மனிதத்தன்மையிலிருந்து எவ்வளவு விலகிப் போய்விட்டோம் என்பதை அவர்களும் இந்நூலை வாசிக்கும்போது (ஒருவேளை) உணரலாம்.

கட்டாயம் வாசிப்போம் .... திருந்துவோமா என்பது அதற்கடுத்த நிலை !!!


Wednesday, January 03, 2024

1269. வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ...

வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ... 

 

கடந்த சில மாதங்களாகவே இந்த மூட் நன்றாக வந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது. பற்றாததற்கு ஏற்றாற்போல் பேரா. முரளியின் காணொளி ஒன்றையும்  பார்த்தாகி விட்டது.


 அந்தக் காலத்தில் ஆங்கில தினசரிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.இப்போதெல்லாம் தமிழ் நாளிதழுக்குக் கொடுக்கும் நேரத்தில் கால்வாசி கூட ஆங்கில நாளிதழ்களுக்குக் கொடுப்பதில்லை. ஆங்கில நாளிதழை நிறுத்தி விடலாமாவெனவும் தோன்றுகிறது.

செய்திகளைப் படிப்பதில் எந்த வித அக்கறையும் எடுக்க முடிவதில்லை. உக்ரைன்.. பாலஸ்தீன் ... எல்லாம் சுடச்சுட படித்து சோர்ந்து போயாச்சு. அயல்நாட்டு விவகாரம்தான் இப்படி இருக்கிறதென்றால் உள்நாட்டு விவகாரமும் அலுத்துப் போச்சு. அடுத்தது மோடிதான் என்ற பின் எந்த மனுசனுக்குத் தான் அலுப்பு வராமல் போகும்?

மாநிலத்திற்குள், அடுத்து மகனை அரியணையில் அமர வைப்பதற்காகவே இந்த முறை அதிக ஊழல் இல்லாத அரசு அமையும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் போச்சு. வேற கட்சி ஏதுமிருக்கான்னு தேடின்ன போது பல காமெடியன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அட எடப்பாடி முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்படுறாரா ...சரி .. அவரு பக்கமும் ஆளுக நிக்கிறாங்களேன்னு நினச்சி உட்டுவிடலாம். அது போதாதுன்னு சசிகலா சித்தி, டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். என்றொரு வரிசைன்னா ... புதுவரிசை இன்னொண்ணு ஆரம்பிச்சிருக்கு. அதிலேயும் எனக்கு சரத்குமார் சாரை ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு. ஏன்னா அவருக்கு அந்தப் பதவி மேல ஒண்ணும் ஆசையில்லையாம். ஆனா அவரு wife  ரொம்ப ஆசைப்படுறாங்களாம். அதோடில்லாமல் அவங்க மாமியாரும், ‘மாப்பிள்ள .. நீங்க இன்னும் முதலமைச்சராக ஆகலையா’ன்னு கேட்டு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம். இது பத்தாதுன்னு புதுசா இன்னொரு ஹீரோயின் வந்திருக்காங்க. புருசன் செத்த நாளை ‘இந்த நல்ல நாளில் ...’ அப்டின்னு பேசுறாங்க. எல்லோரும் வாங்க ... நம்ம வீடு புழங்கிரும் ...

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏதும் இல்லாவிட்டாலும் வயது ஒரு அச்சத்தைக் கொடுக்குது. என்ன ... வயசானவங்க எல்லோரும் சிக்கல் இல்லாம போய்ச் சேரணுமேன்னு ஒரு கவலையோடு இருப்பாங்க. அத லிஸ்ட்லயும் சேர்ந்தாச்சு.

வாழ்க்கையைப் பிரிச்சிப் பார்த்தா அர்த்தமே இல்லையோன்னு தோணுது. வெங்காயம் .. பிரிச்சிப் பார்த்தா ஒண்ணுமேயில்லை. (இதோ ..  இன்று .. டிசம்பர் 31. இரவு 12 மணி. மக்கள் வேட்டெல்லாம் போடுறாங்க. சத்தம் காதில் விழுது. கமல்ஹாசன் பாட்டு ஒண்ணும் காதில் இதுவ்ரை விழவில்லை.) யோசிச்சி பாருங்க. நேத்து டிசம்பர் 31. இன்று ஜனவரி 1. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாற்றம்? ஒரு மண்ணுமில்லை. ஆனா ஏன் ஆடுறோம்... பாடுறோம். எதுக்கு? (போன வருஷம் வேட்டுப் போட்டு, பாட்டு பாடினோம்ல ... அதைத் திருப்பிச் செய்யணும்ல!)

மேலே போட்ட காணொளியைப் பாருங்க. பெரிய தத்துவஞானியாம். இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனா அத கேக்குறதுக்கு முந்தியே இதையே அடிக்கடி நினச்சிருக்கேன். ஏதோ எப்படியோ (??) வந்து பிள்ளையா பிறந்தோம் ... வளர்ந்தோம் .. யாரும் வளர்க்காமலேயே – அப்பா, அம்மா சோறு போட்டு வளர்க்கிறதைச் சொல்லலை – நமக்குன்னு ஒரு பண்பியல் – character - நம்மோடு வளர்ந்தது. நாம் நல்லவானா கெட்டவனா வளர்ந்ததற்கு வேறு யாரும் பொறுப்பில்லை... நாம மட்டும் தான் பொறுப்பு. நல்லவனாகவே இருந்து நல்லாவே செத்துப் போனாலும் ... போனபிறகு .. என்னதான் நமக்கு நடக்குது? அட கொஞ்சம் பேரு புகழ் அப்டின்னு ஏதோ ஒண்ணை சேர்த்தாலும்... செத்த பிறகெல்லாம் அதனால் யாருக்குத் தான் லாபம்? ஒண்ணும் புரியலைங்க ... அர்த்தங்கெட்ட வாழ்க்கைன்னு சொல்லுவாங்களே ... அதுவா இது?

உரிக்க உரிக்க வெங்காயம் ... ஒண்ணுமேயில்லாம தான போகும்! இல்ல ...? பற்றின்றி போகணுமோ? அப்படி சிலர் சொல்றாங்க.கட்டுப்பட்ட ஒரு சமூகத்தில் அப்படியும் இருக்க முடியாது.

WHAT DO I MISS? OR, DO WE ALL MISS SOMETHING?


Sunday, December 31, 2023

1268. ஒரு பொன்மாலைப் பொழுது ...

ஓராண்டு ஓடிப் போனதா .. வயதொன்றும் கூடியதா ..? நட்பு ஒன்றிற்கு அதைச் “சீராக” செய்து முடிக்க ஆசை. வரச் சொன்னான்; சென்றேன்.

கொண்டாட வேண்டுமென்றார்கள். கொண்டாடி விடுவோம் என்றான். வரச் சொன்னான் .. ஒன்று வந்தது; இனி அதிகமாக வேண்டாமென்று நினைத்திருந்த ஒரு புத்தாண்டு உறுதியை அன்று மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைக்க நினைத்தேன். ஏனெனில் வந்தது அப்படி ஒரு சிறப்பானதாக இருந்தது. HANNESSY XXO.



பேசிகொண்டிருந்தோம். வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. நண்பனிடம் அதைப் பற்றிக் கேட்டேன், BMW - TWO DOOR M2 என்றான். collectors' choice மாதிரியான வகை அதன் ஜாதகம் என்றான். அதன் சரித்திரம் சொன்னான். ஆடிப் போகுமளவிற்குக் கோடிக் கணக்கியல் விலை சொன்னான். போவோமா என்றான். அதற்குத்தானே கேள்வியையே முன் வைத்தேன் என்றேன். ஆனால் மெல்ல போவோம் என்றேன். ஏனெனில் அது எத்தனை வேகமாகப் போகும் என்று சொல்லியிருந்தான்.
உட்கார்ந்தோம். மெல்லதான் போனோம்; ஏனெனில் வேகத்தடையில் இடிக்குமாம். மெல்ல சென்று, தடை கடந்து பெரிய ரோட்டுக்கு வந்தோம். மெல்லவே ஊர்ந்தோம். மூன்று செகண்ட் எண்ணி முடித்து speedometer-யைப் பார்க்கச் சொன்னான். மூன்று எண்ண ஆரம்பிக்கும்போதே கார் லேசாக மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது போலிருந்தது. மூன்று முடித்துப் பார்த்தேன். நூறில் பறந்தது; அப்பனே! மெல்லப் போ என்றேன். சரிந்தான் மெல்ல. கார் இப்போது மிதந்தது. சிறிது தூரம் மிதந்து, மீண்டும் வீடு செல்ல வளைந்து திரும்பினோம். இன்னொரு 100 கி.மீ. என்று சொல்லி அழுத்த, மூன்று விநாடியில் நூறைத் தொட்டு, பின் மிதந்தது.





மூன்று வினாடியில் நூறைத்தொட்டு சில நிமிடங்களே சென்றாலும் ஏறத்தாழ அந்தக் காலத்தில் சுஜாதா திருச்சி சாலையில் ஒரு நண்பரின் race பைக்கில் பறந்த அனுபவம் பற்றியெழுதியதை நான் வாசித்தது நினைவுக்கு வந்தது. (அது முழுவதும் நினைவில் இருந்திருந்தால் இங்கே பேசாமல் அதையே சேர்த்திருப்பேன்.) எனக்கெதற்கு இந்த வீண்வேலை.
பின்பு மீன்,ஆடு என்று மேய்ந்து விட்டு, குடும்பமாக உட்கார்ந்து கடந்த 40 - 45 ஆண்டனுபங்களைப் பிள்ளைகளோடு மேய்ந்து நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.
All reactions:
Nattarasan Nattarasan, Vaigai Alagar and 11 others



Friday, December 22, 2023

1267. ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?

ஒரு பெரும் புதையல் மீது உட்கார்ந்திருக்கின்றேனோ ....?




நான் இப்போது மொழிபெயர்க்கும் நூல் நம் பண்டைய இந்தியாவின் வரலாறு பற்றியது. இதை எழுதும் போது நினைவில் கீழடி தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. இந்திய வரலாற்றின் ஆரம்பத்தை கீழடியிலிருந்து ஆரம்பித்துத் தொடர வேண்டுமென்று சொல்கிறார்கள். இதுவரை மொழிபெயர்த்த வரலாற்று நூல்களில் தென்னிந்தியப் பகுதிக்கான இடம் இல்லை; அல்லது அதிகமில்லை. மாற்றாந்தாய் மனப்பான்மை வேரூன்றியிருப்பது போலவே தெரிகிறது.

இப்போது எழுதும் நூலில் கங்கைச் சமவெளியில் நடந்த ஆய்வுகளைப் பற்றிய குறிப்புகளில் அப்பகுதியில் பல மண் மேடுகளில் ஆய்வு செய்துள்ளனர். பின்னாளில் நடந்த ஆய்வுகளினால் //19-ம் நூற்றாண்டின் புவியியல் - பண்டைய வரலாற்று வல்லுநருமான ராபர்ட் புருஸ் ஃபூட் (Robert Bruce Foote) என்பவரே  முதல் முதலாக இந்த மேடுகளை ஆய்வு செய்து, அதன் கலாச்சாரங்களை வெளிக்கொணர்ந்தார்.’’//

இவரது ஆய்வோடும், மற்ற ஆய்வாளர்களின் முயற்சிகளுக்குப் பிறகும் இந்த மண்மேடுகள் ‘சாம்பல் மேடுகள்” என்று அழைக்கப்படுகின்றன. பண்டைய மனிதர்கள் கால்நடை மேய்ப்பர்களாக இருந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த கால்நடைகளை ‘தொழுவத்தில்’ வைத்திருந்தனர் என்றும், அவைகளின் சாணியை அவ்வப்போது எரித்து வந்திருக்கின்றனர். அத்தகைய மேடுகளே இந்த சாம்பல் மேடுகளின் பழைய வரலாறு என்று அந்த நூல் மேலும் விவரிக்கின்றது.

இதை வாசிக்கும் போதும் கீழடி நினைவிற்கு வந்தது. அதோடு நான் இருமுறை அங்கு ‘மதுரை இயற்கை நடை’யோடு சேர்ந்து அங்கு சென்று வந்தது நினைவிற்கு வந்தது. அது ஆரம்ப நிலை. கட்டிடங்கள் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளங்களைப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த சிறிது உயரமான ஒரு மேட்டின் மீது ஏறியமர்ந்து இளைப்பாறினேன். நண்பர்கள் அதை ஒரு புகைப்படம் எடுத்திருந்தார்கள். அந்த மேடையில் இந்த வரலாற்று நூல் சொல்வது போல் அப்பகுதிகளில் கருப்பு, சிகப்பு மண்பானை ஓடுகள் குவியலாகக் கிடப்பதையும் பார்த்தேன். அதன் வண்ணம், வழுவழுப்பு, கோட்டோவிய்ங்கள் போன்றவற்றை வைத்து, காலத்தையும், கலாச்சாரத்தையும் கணக்கிடுவது பற்றியும் இந்த நூல் பேசுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நான் உட்கார்ந்த மேடும் ஒரு சாம்பல் மேடாக இருக்குமோ? ஒரு பெரும் பண்டைய கலாச்சார வரலாற்று மேடையாக அது இருக்குமோ? என் கீழே ஒரு பெரும் வரலாற்றுப் பொக்கிஷம் பொதிந்து கிடக்கிறதோ என்ற கேள்வி மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

ஆய்வாளர்களிடம் சொல்லி அந்த மேட்டையும் “ஒரு கை” பார்க்க யாராவது சொல்லுங்களேன், ப்ளீஸ் !!!!

 


Thursday, December 21, 2023

1266. அன்றும் .. இன்றும் .. பெரும் மழை




*

Carbon emission, global warming, nano effect … இப்படி அடுக்கடுக்காய் மனிதன் இயற்கையை எதிர்த்து செய்த பல செய்கைகளால் இப்படிப் பெரு மழை வந்தது. அதனால் பொங்கி வந்த வெள்ளம் ஆங்காங்கே குளம், குட்டை, கண்மாய் அப்டின்னு அங்கங்கே இருந்தவைகளில் கடலுக்குப் போகும் முன் கொஞ்சம் தஞ்சமடையும். ஆனால் அந்த நீர் நிலைகளை நிறப்பி  மாற்றி விட்டோம் கான்க்ரீட் காடுகளாக. தங்குமிடம் காணாமல் போனதால் கண்போன பக்கம் வெள்ளம் ஊருக்குள் பெருக்கெடுத்து நிறப்பி விட்டது.





இப்படிதான் நம்மை நாமே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம். உப்பைத் தின்னா தண்ணி குடிக்கணுமாமே ... அதான் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் பெருக்கெடுத்து வந்து விட்டதே ...அதைக் குடிக்கணுமோ”?! தெரியவில்லை.


அது சரி ... எனக்கு திடீர்னு ஓர் ஐயம். 20.12. 1923 , அதாவது (3 நாள் மட்டும் முன்னப் பின்ன ...), சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் தென்கடைசித் தமிழ்நாட்டில் பெரு வெள்ளம். ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இன்று நடந்த அதே நிகழ்வுகள் பெருமழையால் நூறு  ஆண்டுகளுக்கும் முன்பும் நடந்ததாம். இந்து தினசரி 100 ஆண்டுகளுக்கு முந்திய அந்த வெள்ள நிகழ்வை மீண்டும் இப்போது பதிப்பித்திருக்கிறார்கள்.


ஐயம் என்னன்னா...?  100 வருஷத்திற்கு முன் Carbon emission, global warming, nano effect போன்ற எதுவுமில்லை. குளம், குட்டை, கண்மாயெல்லாம் வெள்ளத்தை வாங்க ஆங்காங்கே இருந்தனவே. பின் ஏன் அப்போதும், இப்போதும் பெரும் மழை; பார்த்தறியாத அளவு வானம் பிளந்த பெரும் மழை. அதனால் யாரும் காணாத அளவு வெள்ளம். அன்றும், இன்றும் ஒரே நடப்பாக நடந்து முடிந்திருக்கிறது. (இது போன்ற இன்னொரு பெருமழை வர இன்னும் 100 ஆண்டுகள் ஆகுமா?)

இன்றைய பிரச்சனைகளுக்குக் கொடுத்த காரணங்கள் இல்லாத அந்தக் காலத்திலும் இதே இயற்கையின் கோபம் அன்றும் இருந்ததே.... எப்படி? ஏன்?