Monday, September 25, 2006

177. சில நேரங்களில் சில பதிவர்கள்.


பதிவர்: 1


வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட 'ஜூஜா' தான் என்றார்!

அவ்வளவு 'ஆட்டோக்களா' இருக்கு நம்ம ஊரில...?

"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல"

பதிவர்: 2

அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, 'என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா' அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே 'உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?' என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு 'எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க' அப்டின்னு கேட்டேன்.
'இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்' என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. 'ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு' கேட்டேன். அதுக்கு அவர்: 'அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு' அப்டின்னார்.

அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !

Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive - அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.

பதிவர்: 3

நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!

பதிவர்: 4

அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.

நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து 'நொறுங்க தின்னா நூறு வயசு'ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.

அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.

பதிவர்: 5

மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி 'மிஸ்' பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை 'மிஸ்' செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. 'சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது' என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் - ""அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" - அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை...சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.

ஆனா ஒண்ணு...'வாட்டர்' பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு 'இதுக்காக' இப்படி 'ரூட்' உடுறது. லொல்லலாங்காட்டி... 'வாட்டர்' போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி 'வாட்டர்' பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது 'வாட்டர்' பத்தி பேசுறேனா, என்ன?

Monday, September 18, 2006

176. மாங்கா மடையர்களா...?

இன்று (18.08.'06) மதியம் ஒன்றரை மணி சன் டிவி செய்திகளில் ஒன்று: சென்னையில், விமான நிலையம் அருகில் விளம்பரப் பலகைகளுக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் மின் விளக்குகள் விமானப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக விமான நிலையம் கொடுத்த புகாரில், அந்த விளக்குகளுக்குத் தொடர்புகள் மாநகராட்சியால் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் விளம்பரதாரர்களால் போடப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதுவரைகூட சரி. இரண்டு பக்கம் கேட்டு நீதி வழங்க வேண்டியதுதான்.

ஆனால், அதுவரை விளக்குகளைத் துண்டிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்துமுள்ளது.

விளக்குககளைத் துண்டிப்பதற்கான காரணம்: அதிகப் படியான ஒளியால் ஏற்படக்கூடிய குளறுபடியை நீக்க; விமானப் பாதுகாப்பிற்காக. இதைக்கூட எண்ணாமல் தற்காலிகத் தடைவிதிக்கிறது நீதி மன்றம் என்றால், அந்த மாதிரி தீர்ப்பு வழங்கும் மேதாவிகளைத் தலைப்பில் சொன்னது போல் சொன்னால் என்ன தப்பு...? நான்கு நாட்கள் விளம்பரங்கள் விளக்கில்லாமல் இருந்துவிட்டால் என்ன குடிமுழுகிப் போகும்?
ஒருவேளை இந்த விளக்குகளின் அதீத வெளிச்சத்தால் ஏதும் அசம்பாவிதம் நடந்தால்...? Cann't these judges fix up priorities first?

இந்த நீதிமன்றங்களும், அங்கிருந்து வரும் இது போன்ற தீர்ப்புகளும் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Thursday, August 31, 2006

174. IF I WERE THE .... .... ?

நம் மாநில முதலமைச்சர் கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் என்ற கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் தேர்தல் என்னும் கேலிக்கூத்துக்களை மனதில் கொண்டு, அந்த கிராமங்களில் ஒழுங்கான தேர்தல்களும், தலித்துகளின் முழுமையான அரசியல் பங்கேற்பும் நடை பெறும்வரை அவைகளின் 'ரிசர்வ்டு' நிலை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆயினும் இதனால் எல்லாம் அங்குள்ள பெருவாரியான தேவர்(கள்ளர்?)சாதி மக்கள் மனம் தளர்ந்து விடப் போகிறார்களா என்ன? அவர்கள்தான் ஆளமட்டுமே பிறந்தவர்களாச்சே! அவர்கள் விட்டுக் கொடுத்தோ, அவர்களை விட்டுக் கொடுக்க வைத்தோ தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த சாதியைச் சேர்ந்த சிலரோடு பேசிப் பார்த்ததிலேயே இந்த உண்மை புரிகின்றது. விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் கதைதான். அந்த பெருவாரியான சாதியினர் கொடாக் கொண்டான் என்றால் அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கங்களும் விடாக் கொண்டான் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரசாங்கம் தன் முழு பலத்தோடு இறங்கினால்தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும். ஓட்டுக்களில் கண்ணை எப்போதும் வைத்திருக்கும் எந்த சனநாயக அரசும் அந்த முடிவுக்கு வராது. எப்போதும் போல 'தேர்தல் நாடகங்கள்'தான் நடந்தேறும்.

தலித் தலைவர்களும், தலித் கட்சிகளுமாவது இதில் முழு முனைப்போடு இருக்கிறதா, இருக்குமாவெனில், அதுவும் இல்லை. இந்த நிலையில் தலித் மக்கள் முழு வீச்சில் புரட்சியில் எழ முடியுமாவென்றால் அது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமல்ல; அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெருவாரிச்சாதியினரை அண்டிப் பிழைக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது. தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்.

இந்த நிலையில் என்னதான் நடக்கும்; நடக்க முடியும்?

கனவுகள்..கனவுகள்... IF I WERE THE -------


IF I WERE THE C. M. OF TN....

எளியோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் இந்த நான்கு கிராமங்களில் முதலில் நடக்கும். ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்பதைவிடவும் அந்த ஒவ்வொரு கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள், அரசாங்க விவசாயத்துறையின் நேரடி மேற்பார்வையும், உதவியும், முக்கியமாக எல்லாவகை பாதுகாப்பு, - இவைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் செய்து தந்து இந்த மக்கள் தலை நிமிர, வயிற்றுப்பாடு முற்றிலும் தீர, மக்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவடைய எல்லாமும் செய்யப்படும்.

IF I WERE THE COLLECTOR OF THAT DISTRICT .....

இந்த நான்கு கிராமங்களில் நிச்சயமாக தலித்துகள் தனியாக ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு தனிச் சேரிகளில்தான் வாழ்வார்கள். அந்தப் பகுதி மட்டும் மாவட்ட அதிகாரிகளின் தனிக்கவனம் பெறும். அவர்களுக்கு வேண்டிய தண்ணீர், சாலை, பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்களும், அங்கு இந்த சாதிவெறி இல்லாத காவல் துறையினரும், மாவட்ட அதிகாரியினால் முழுமூச்சில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் விரைந்து அளிக்கப்படும். முக்கியமாக இடுகாடுகளும் அதற்குச் செல்ல தனிச் சாலைகளும் (!) அமைத்துத் தரப்படும். wantonly all the basic amenities will be DENIED to the other "high" caste. they have to wait for those things till the next elected panachyat is formed. obstinance has to be paid back by utter obstinance.

IF I WERE ONE AMONG THE MAJORITY CASTE ...

(நான் மட்டும் விதி விலக்காகவா இருந்திருக்கப் போகிறேன்?)

காலங்காலமாய் எங்க காலடியில் கிடந்ததுகள், நாங்க சொன்னதக் கேட்டுக்கிட்டு இருந்ததுகள், ஒரு வாய் சோத்துக்கு எங்கள விட்டா நாதியில்லாததுகள் ... இதுக பிரசிடெண்டா இருந்து எங்கள ஆளன்னும்னு நினச்சா அது முடியுமா? அவங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? எங்கள ஆளணும்னு நினச்சாலே அவங்கள உண்டு இல்லன்னு பாத்துற மாட்டோமா..? சும்மா உட்ருவமா, என்ன? "நாங்க" யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? எவன் என்ன பண்ண முடியும்னு பாத்துருவோம்....

IF I WERE ONE AMONG THOSE DALITS ....

ஊர்ல உலகத்துல எல்லோரும் என்னமாவது சொல்லிட்டுப் போயுறுவீக..இங்கன நாங்க எங்க தினசரி பொழப்ப பார்க்கணுமே. வீம்புக்கு தேர்தல்ல நின்னு அவங்கள எதுத்துக்கிட்டு நிக்கணும்னா எங்களுக்கு என்ன பலம் இருக்கு? யாரு சப்போர்ட்டுக்கு இருக்கா? ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க'ய்யா...என்ன தேர்தல் ..என்ன தலைவர் பதவி ... மொதல்ல உசுரோட இருக்கணுமே!

... மனுசனுக்கு உசிரு மேல ஆச இருந்து தொலையுதே, இந்த கேடு கெட்ட சாதியில பொறந்த பிறவும்... என்ன பண்ணச் சொல்றீக.. சொல்லுங்க ... எங்கள விடுங்க .. வெந்தத தின்னுட்டு விதி வந்தா போய்ச் சேரணும்ங்கிறது எங்க தலையெழுத்தாகிப் போச்சு..

====================

ஒரு நடந்த கதை:

கல்லூரியில் முதல் தலைமுறையினருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் ஒரு தலித் மாணவன் சொன்னது:
இன்றைக்கும் அவர் பஸ் விட்டு இறங்கி தன் சேரிக்குச் செல்லும்போது அந்தப் "பெரிய"சாதிக்காரர்களின் பகுதியைத் தாண்டித்தான் போகவேண்டும். அப்படிப் போகும்போது தங்கள் காலணிகளைக் கையில் எடுத்துத்தான் செல்ல வேண்டுமாம். நல்ல வேளை சட்டையைக் கழட்டச் சொல்வதில்லை அந்தக் கிராமத்தில்!

மாணவனிடம், சரி, உங்களைப் பார்க்க நானே வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்னையும் அப்படி எதிர்பார்ப்பார்களா என்று ஆசிரியர் கேட்ட போது நிச்சயமாக என்றார் மாணவர். அப்படியே அந்த வரைமுறை தெரியாமல் நீங்கள் என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் போனபிறகு என்னைக் கூப்பிட்டு 'ஊர் கட்டுமானத்தைச் சொல்லிப்பிடு; அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்கக் கூடாது' என்று சொல்வார்கள் என்றார்.

நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!

ஜெய்ஹிந்த்.

another naked truth of casteism has been shown here in this post in all its rawness.

Wednesday, August 30, 2006

173. ஹைக்கூ தெரியும்; சினிகூ...?

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் - ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் "திரைக்கதை" கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் - ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் - zoom - ஒரு ஆணும் பெண்ணும் - ஆண் பெண்ணை நெருங்க...
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் - குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் - zoom - அப்பா,
அம்மா, குழந்தை - சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் - முத்தம் தரும் குழந்தை ஒன்று - zoom - இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

Saturday, August 19, 2006

172. இடப் பெயர்ச்சி

மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் - எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!

அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு - ஒரு மனுசிதான் - மதிக்கு நன்றி - வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.

ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் 'பே'ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் 'பே'ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.

இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.

போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா...அம்மாடி...நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க...அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல... இது அதையும் தாண்டி... அந்த நேரத்தில வலியில 'ஓ, ஜீசஸ்'அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்...ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே 'அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்' அப்டின்னேன். 'அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது' - இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி...எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க...பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.

நல்ல வேளையா, ஒரு 'கவைக்கு' இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy 'n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு - பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.

கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்...அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)

சரி...எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை - வெப்லாக்ஸை - இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா...!