Thursday, April 06, 2006

150. சோதிடம்…12. ஜாதகம்

Image and video hosting by TinyPic

மற்றைய பதிவுகள்:

1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.


கைரேகை, ராசிக்கல், வாஸ்து, எண்கணிதம் - என்று நான் இதுவரை எழுதி வந்த போது எதிர்க் கேள்விகளோ, பதில்களோ இல்லாமல் என்னோடு இணைந்த ஒத்தக் கருத்துக்களே அதிகம் வந்துள்ளன.

இதிலிருந்து என் முடிவு என்னவெனில்:
(1) நம் பதிவாளர்கள் அதிகம் பேர் என்னோடு இந்த விஷயங்களில் ஒத்தக் கருத்து கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
(2) நம் பதிவாளர்கள் ஏறக்குறைய எல்லோருமே நல்ல கல்வியறிவும், வளர்ந்த சிந்தனைகள் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களது கருத்துக்களும் தெளிவாகவே இருக்கும் என்பதால் நான் ஒன்றும் புதிதாகச் சொல்லிவிடவில்லை; எல்லோருக்கும் தெரிந்த, உடன்பாடான விஷயங்களையே சொல்லி வந்துள்ளேன் என்ற முடிவுக்கே வந்துள்ளேன்.

ஆயினும் இனி சொல்லப் போகும் ஜாதக விஷயம் அதுபோல் பலரின் ஆமோதிப்பைப் பெறுமா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றுதான்….ஏனெனில், நம்பிக்கையிருக்கிறதோ இல்லையோ பலருக்கு ஜாதகம் பார்ப்பது என்பது சமூகத்தாலோ, குடும்பத்தாலோ ஒரு கட்டாயப் படுத்தப்படும், தொன்று தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதை மீறுவதோ, ஒதுக்கித்தள்ளுவதோ பலரால் இயலாத காரியம். பலி ஆடுகள் மாதிரியாவது தலையாட்டி ஏற்றுக்கொள்ளும் காரியமாக பலருக்கும் அமைந்து விடுகின்றது. அதற்காக நான் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டு விடுவதா, என்ன?

* ஜாதகம் என்றதுமே அது ஒரு விஞ்ஞானம், ஒரு கணக்கு என்பவர்களுக்கென்றே பல கேள்விகளை வைத்தாயிற்று. இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல / கேட்க விழைகிறேன். ஒரே ஜாதகத்திற்கு ஆளுக்கேற்றாற்போல் பதில்கள் / பலன்கள் வருமெனில், இதை எப்படி விஞ்ஞானம் / கணக்கு என்ற தலைப்புக்குள் கொள்வது?

* எனக்குத் தெரிந்த வரை ஜாதகம் “கணிக்கப்படும்” போது நவக்கிரஹங்களின் இருப்பிடம் அந்த ஜாதகக்காரரை எப்படியெல்லாம் “ஆட்டி’ வைக்கும் என்பது தெளிவாகக் கணக்கிடப்படுகிறது. இதில், அடிப்படையாக இரு கேள்விகள்:
1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது? இந்த ராது, கேது விவகாரம் வேறு தனியாக இருக்கிறது. பக்கத்தில் இருப்பதால் அதன் பலனும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஒருவேளை நம்பிக்கையாளர்கள் சொன்னால், ஜாதகக் கணிப்பில் அதுவும் ஒரு கோளாகவே கருதப்படுவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு அடிப்படைத் தவறாகக் கருதுகிறேன்.

2. ஒன்பது கோள்கள்; அதில் சந்திரன் ஒரு கோள் அல்ல - இந்த கேள்வி எழும்போதே இப்போது 10வது கோளைக் கண்டுபிடித்து, பெயரும் வைத்தாகி விட்ட பின்பும் (2003 UB313, the 10th planet - இன்னும் பாப்புலர் பெயர் வைக்கவில்லை.) இன்னும் நவக்கிரகங்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வீடு, ஒன்றோடு ஒன்று சேர்ந்து பலன் அளிப்பது என்றால், இந்த 10-வது கோளுக்கு ஜாதகக் கணிப்பில் இடம் உண்டா, இல்லையா? ஒரு வேளை சந்திரன் அருகில் இருப்பதால் அதை எடுத்துக்கொண்டது போல, இந்த புதுக்கோள் விலகி இருப்பதால் அதை விட்டு விட்டதாகக் கூறலாமோ? ஒருவேளை அப்படிச் சொன்னால் இந்த தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

* ஜாதகக் கணிப்பில் இந்தக் கோள்களின் இடத்தைப் பற்றியும், அவைகளின் movements பற்றியும் கூட தெளிவாகவெல்லாம் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்களே என்று ஒரு விவாதம் உண்டு. அது astronomy -லிருந்து astrology ‘லவட்டிக்கிட்ட’ விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.

* மேற்கூறிய கேள்விகள் இந்த ஜாதகமெல்லாம் கணிதம், விஞ்ஞானம் என்று கூறுவதற்கு எதிர்க் கேள்விகளாகக் கேட்கப்பட்டவைகள். அவைகளை கூட விட்டு விடுவோம். நடப்புக்கு வருவோம். ஜாதகப் பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்கள், மற்ற சுப காரியங்களையும் எடுத்துக் கொள்வோம். அவைகளின்றி நடக்கும் அதே போன்ற திருமணங்கள், நல்ல காரியங்களையும் பார்ப்போம். என்ன வித்தியாசம் என்று நம்புவர்கள்தான் கூற வேண்டும். ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்று (மனசாட்சிக்கு விரோதமில்லாமல்/ நெஞ்சில் கைவைத்து…!!!) கூறத்தான் முடியுமா? விஞ்ஞான முறைப்படி பெரிய, ஒழுங்கான, முறையான statistics கூட வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள நடப்புகளை வைத்தே பார்ப்போமே. என் பார்வையில் எல்லாம் ஒரே மாதிரிதான்…நல்லதும் நடக்கிறது; அல்லதும் நடக்கிறது. தனிமனித குண நலன்கள்தான் முக்கியமாய் இருக்கிறதேயொழிய எங்கேயோ உள்ள நட்சத்திரங்களும், கிரஹங்களும் உங்களையோ என்னையோ ‘கண்டுக்கிறதே இல்லை’! அது பாட்டுக்கு அது வேலைய பாத்துக்கிட்டு போகின்றன. நீங்களும் அவைகளை விட்டுவிடுங்களேன் பாவம்!!

ஆனாலும் எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரியும். நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை கைவிடுவது என்பது எளிதல்ல. எத்தனை கேள்விகளை அவர்கள் முன் வையுங்கள். ஒன்று ஏதோ மனசுக்கு வந்த ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முயல்வார்கள்; இல்லை, ச்சீ..இதெல்லாம் விதண்டாவாதம் என்று புறந்தள்ளி தன் போக்கில் போவார்கள். கொஞ்சமாவது இந்தக் கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா என்று பார்ப்போமே என்ற மனநிலை யாரொருவருக்காவது வந்தால் சந்தோஷமே - வராது என்று தெரிந்திருந்தாலும், ஒரு அற்ப ஆசை. என் சந்தேகங்கள் சில நம்பிக்கையாளர்களுக்குக் கூட சந்தேகம் ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் கூட தாங்கள் இதுவரை நம்பி வந்ததைவிட்டு அவ்வளவு எளிதில் வந்துவிட மாட்டார்கள் - question of prestige? அப்படி ஒருவேளை யாருக்காவது பதில் இருந்தால் கூறட்டுமே என்றுதான் இந்தக் ‘கடை பரத்துதல்’! கொள்வார் கொள்ளட்டும் !! நல்லவேளை, மதங்களைப் போல் கேள்வி கேட்பதே தப்பு என்று யாரும் இதற்குக் கூற மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். என்ன செய்வது: தருமி, கேள்விகள் கேட்பதின்று வேறொன்றும் அறியான், வலைஞர்களே !!!
Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 06 2006 03:17 pm | சமூகம் |
54 Responses
Geetha Sambasivam Says:
April 6th, 2006 at 3:49 pm
இதற்கு விரிவான பதிலை நீங்கள் நம்புமாறு ஆதாரத்துடன் கூறவேண்டும். அதற்குக் கொஞ்ச நாள் பிடிக்கும். ஆதார்ங்களைத் திரட்டிக் கொண்டு பிறகு சொல்கிறேன்.

கோபி Says:
April 6th, 2006 at 5:07 pm
//ஒரே ஜாதகத்திற்கு ஆளுக்கேற்றாற்போல் பதில்கள் / பலன்கள் வருமெனில், இதை எப்படி விஞ்ஞானம் / கணக்கு என்ற தலைப்புக்குள் கொள்வது//

ஒரே ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பல்வேறு பலன்கள் இல்லை. இரு ஜோதிடர்களுக்கிடையே ஒரு ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பலன்கள் வருகிறது என்றால் தவறு அந்த ஜோதிடர்களுக்கிடையே.

ஏனெனில் நான் முன்பே கூறியது போல பலன்களும் பல்வேறு Permutations and combinationsகளுடன் அறுதியிட்டு கூறப்பட்டவை.

உதாரணமாக, லக்னத்தில் கேது இருந்தால் ஒரு பலன் (ஜாதகர் சிலகாலம் மனவியாதியால் பீடிக்கப்படுவார்). அதே லக்னத்தில் கேதுவுடன் புதன் இருந்தால் வேறு பலன். லக்னத்தில் கேது இருந்து நவாம்சத்தில் ஒரு குறிப்பிட்ட Combination ல் கிரகங்கள் இருந்தால் வேறு பலன். சில Combinationsல் அடிப்படை பலன்களுக்கு நேரதிராய்க் கூட பலன்கள் அமைவதுண்டு. ஆனால் இவை யாவும் அறுதியிட்டு கூறப்பட்டவை.

தவறான மருந்து கொடுத்தால் மருத்துவ முறையை குறை சொல்வீர்களா அல்லது மருத்துவரை குறை சொல்வீர்களா ?

கோபி Says:
April 6th, 2006 at 5:19 pm
//ஜாதகக் கணிப்பில் அதுவும் ஒரு கோளாகவே கருதப்படுவதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இது ஒரு அடிப்படைத் தவறாகக் கருதுகிறேன்.//

வானியலில் உள்ளதைப் போலவே ஜோதிடத்திலும் 12 ராசிகளை கடக்க சந்திரன் எடுத்துக்கொள்ளும் காலம் இருபத்தொன்பதே கால் நாட்கள். எனினும் சந்திரன், கோள் என்று அழைக்கப்படுவது தவறுதான்.

கோபி Says:
April 6th, 2006 at 5:53 pm
//ஒன்பது கோள்கள்; அதில் சந்திரன் ஒரு கோள் அல்ல//

அதுமட்டுமல்ல Uranus, Neptune, Pluto ஆகியவை கூட இல்லை. இன்றைய கணினி ஜாதகத்தில் இக்கோள்கள் இடம் பெற்றாலும் அதற்குறிய பலன்கள் பழங்கால ஜோதிட நூல்களில் இல்லை. இந்நூல்களில் சனிக்கு அப்பால் மாந்தி(சனியின் பிள்ளை) என்ற ஒன்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன.

//தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?//

இதற்கு, எவ்வாறு கோசார (கோள்களின் சாரம் ‌- Movements) பலன்கள் கணிக்கப்படுகின்றன என்று சற்றே விளக்கமாய் பார்ப்போம்.

நாட்பலன்கள் சொல்ல சந்திரன், புதன் போன்ற குறைந்தகாலத்தில் 12 ராசி மண்டலங்களையும் கடக்கும் கோள்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன

இது போலவே வாரப்பலன்கள் சொல்ல சுக்கிரன், மாதப்பலன்கள் சொல்ல சூரியன், வருடப்பலன் சொல்ல குரு ஆகியனவும், அதற்கு மேற்பட்ட காலங்களின் பலன்களை கணிக்க ராகு/கேது, சனி ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

//அது astronomy -லிருந்து astrology ‘லவட்டிக்கிட்ட’ விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.//

வானியல், சூரியனை எல்லாக் கோள்களும் சுற்றுகிறது என நிரூபித்துள்ளது. சோதிடம், சூரியன் உட்பட எல்லாமே ராசி மண்டலங்களில் பயனிக்கின்றன என்கிறது (பூமியிலிருந்து பார்த்தால் இதுவும் உண்மைதான்).

உதாரணமா 2006 முழுவதும் சனி கடகராசி மண்டலத்தில் காணக் கிடைக்கும் வானியல் சொல்லுது. தமிழ் நாட்காட்டியில் இருக்கும் கோசாரப் பலன்கள்லயும் சனி கடகராசிக் கட்டத்துலதான் இருக்கு.

சம்மட்டி Says:
April 7th, 2006 at 10:52 am
//மதங்களைப் போல் கேள்வி கேட்பதே தப்பு என்று யாரும் இதற்குக் கூற மாட்டார்கள் //
அத அப்படியே விட்டுட முடியுங்களா, மதங்களை தூக்கிப்பிடிப்பவர்கள் தான் இங்கும் நிற்கிறார்கள்.

தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !.
ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணி நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம். ஏன் இதெல்லாம் பார்பானேன் ? பின்னால வேலியில போற ஓனான் கதையாகி, இடைத்தரகர்கள் தான் அதிகம் வாழுகிறார்கள். ஜோசியகாரனுக்கு மட்டும் ஜாதகத்தில் லெட்சுமி கடாச்சம் தான். மொத்ததில் ஜோதிடம் என்பது ஒரு குடும்ம வர்த்தகம் அதில் வியாபாரிகளே அதிகம் பயன் அடைகிறார்கள். இந்த சோதிட கூத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது என்னுமோ பெண்கள். பருவ வயதை தாண்டியும் திருமணமாகத நிலையை பெண்களுக்கு ஏற்படுத்தி முதிர்கன்னிகள் என்ற பட்டம் வாங்கிக் கொடுத்ததில் பெறும் பங்கு இந்த ஜோதிடக்காரர்களையே சாரும் என்றால் அது தவறு அல்ல

தருமி Says:
April 7th, 2006 at 3:50 pm
Geetha Sambasivam,
காத்திருக்கிறேன்.

தருமி Says:
April 7th, 2006 at 4:34 pm
கோபி,

“ஜாதகத்திற்கு முரண்பாடுடைய பலன்கள் வருகிறது என்றால்…”//- ‘ஜாதகம் ஒரு கணிதம்’ என்ற வழக்கமான ஒரு வாதத்திற்குரிய கேள்விகளை ஏற்கெனவே விரிவாக முந்திய பதிவுகளில் கேட்டு விட்டதால், இப்பதிவில் சுருக்கமாகவே கூறியிருந்தேன். மீண்டும் கூறுகிறேன்: கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில். அதே போல சாதகம் கணிதம் என்றால், அந்த கணிதம் வரையறுக்கப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் அதில் முரண்பாடுகளுக்கு வழியே இல்லை.

“தவறான மருந்து கொடுத்தால் மருத்துவ முறையை குறை சொல்வீர்களா அல்லது மருத்துவரை குறை சொல்வீர்களா? “// -
மருத்துவமும், கணிதமும் வேறு வேறல்லவா? மருத்துவத்தில் trial & error வர வழியுண்டு. கணிதத்தில்…? அதோடு வேறு உதாரணம் கொடுங்களேன்; இதே உதாரணத்தைக் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு. தப்பா எடுத்துக்காதீங்க.

“சந்திரன், கோள் என்று அழைக்கப்படுவது தவறுதான்….”//
- கோள் என்று அழைக்கப்படுவது மட்டுமல்லவே! மற்ற உண்மையான கோள்களோடு ஒன்றாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறதே…அப்படியாயின், இது ஓர் அடிப்படைத் தப்பு அல்லவா?

கோள் என்றில்லாவிட்டாலும் நிலவால் நம் உலகில் பல விளைவுகள் நிகழ்வது விஞ்ஞான உண்மை - கடலின் நீர் மட்டம் தாழ்வதும், உயர்வதும் நிலவினால் ஏற்படும் magnetic field-ன் மாற்றங்கள் - இது ‘அருகில்’ இருப்பதால் நடக்கிறது.

எங்கேயோ இருக்கும் மற்ற கோள்கள் எப்படி, அதுவும் தனி மனிதனின் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டவைகளுக்குப்பொறுப்பாகும். இதில் position effect வேறு சொல்லுகிறீர்கள். அதுதான் புரியவில்லை.

“வானியல், சூரியனை எல்லாக் கோள்களும் சுற்றுகிறது என நிரூபித்துள்ளது. சோதிடம், சூரியன் உட்பட எல்லாமே ராசி மண்டலங்களில் பயனிக்கின்றன என்கிறது (பூமியிலிருந்து பார்த்தால் இதுவும் உண்மைதான்).”//
- புரியவில்லை. ராசி மண்டலங்கள்..?

தருமி Says:
April 7th, 2006 at 4:43 pm
தாங்களே ” நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.” ஆமாம், இதை நான் யோசிச்சதே இல்லை
சாதகக் கணிதத்தை நம்புகிறவர்கள் செய்யும் ” சாந்திகள், பரிகாரங்கள், பூசைகள்” எப்படி அந்தக் கோள்களின் தாக்கங்களையே மாற்றுகின்றன? எப்படி இந்த பூசை புனஸ்காரங்களுக்கு ஒரு neutralising effect வருகிறது?

உங்களின் இந்தக் கேள்வி மிக நல்ல கேள்வியாக எனக்குப் படுகிறது. மிக்க நன்றி.

மணியன் Says:
April 7th, 2006 at 5:09 pm
சோதிடம் என்பது மூடநம்பிக்கையை சேர்ந்தது. முக்கியமாக அதிக risk உள்ள காரியங்களில் ஈடுபடும்போது ஒரு கொழுகொம்பு தேவைப் படுகிறது. புதுவணிகத்தில், புதுப் படத்தில் முயலும்போது அது வெற்றி அடையுமா என எழும் மன அழுத்ததிற்கு ஒரு வடிகால்.அவ்வாறு வெற்றியடைய தடைகள் வரும் பட்சத்தில்,அவற்றை நீக்க பரிகாரங்கள். வானியலின் உண்மைகளையும் உள்ளடக்கி மக்களை கவரும் ஓபியம். மற்றபடி ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்வேளையில் வானத்தில் அமைந்திருக்கும் ‘நவகிரகங்க’ளின் துல்லியமான இருப்பிடங்கள். நம்நாட்டு காலண்டர்.

கோபி Says:
April 7th, 2006 at 6:49 pm
//கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில்.//

ஆமாங்க அதே மாதிரி சோதிடம் தெரிந்த யார் கணிச்சாலும் ராசி கட்டங்களும் பலன்களும் ஒன்னுதான். முரண்பாடு வராது.

உதாரணமா பூசம் நட்சத்திரத்தில பிறந்தவங்களுடைய ஜாதகத்தில்(யாரு கணிச்சாலும்) ராசிக் கட்டத்தில் சந்திரன் கீழ இருக்குற மாதிரிதான் இருக்கும்.

——————-
| | | | |
| | | | |
——————-
| | | |
| | | சந் |
—- RASI —-
| | | |
| | | |
——————-
| | | | |
| | | | |
——————-

இதுல எந்த மாற்றமும் கிடையாது.

//வேறு உதாரணம் கொடுங்களேன்; இதே உதாரணத்தைக் கேட்டுக் கேட்டு புளிச்சிப் போச்சு. //

சரிங்க, 2+2=6 ன்னு ஒரு கணக்கு வாத்தியார் சொன்னா அவரு சரியா படிக்கலைன்னு சொல்வீங்களா? இல்ல ஒரு வாத்தியார் 2+2=4 ன்னு சொல்றாரு, இன்னொருத்தர் 2+2=6 ன்னு சொல்றாரு. அதனால கணக்கு பாடமே பொய்யின்னு சொல்வீங்களா?

2+2=6 ன்னு சொல்ற வாத்தியாருகிட்ட எப்படின்னு நிரூபிக்க சொல்லிக் கேப்பீங்க தானே? அதே மாதிரிதான் சோதிடத்திலும் அறுதியிட்டு கூறப்பட்ட வழிமுறைகள் உள்ளன. தப்பா பலன் சொல்றவங்ககிட்ட எந்த விதிமுறைப்படி அப்படி பலன் சொல்றாங்கன்னு நிரூபிக்க சொல்லி கேளுங்க.

//- புரியவில்லை. ராசி மண்டலங்கள்..?//

சில நட்சத்திரக் கூட்டங்கள் அடங்கிய Patternஐ வானியலும் சோதிடமும் “ராசி மண்டலங்கள்” எனக் கூறுகின்றன.

வானியலில் தொலைநோக்கியெல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படுள்ள 88 ராசி மண்டலங்களுள் சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 12 ராசி மண்டலங்களும் உண்டு.

இரண்டுக்கும் என்ன தொடர்புன்னு இந்த சுட்டியில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல நான் முன்பே சொன்னது போல 2006 முழுவதும் சனி கடகராசி மண்டலத்தில் காணக் கிடைக்கும் வானியல் Sky Watching Instructionல் உள்ளது. தமிழ் நாட்காட்டியில் இருக்கும் கோசாரப் பலன்கள்லயும் சனி கடகராசிக் கட்டத்துல இருக்கு.

இதெல்லாம் வானியலுக்கும் சோதிடத்துக்கும் தொடர்பு உண்டுன்னு நான் நம்பறதுக்கான காரணங்கள்.

ஜாதகம் கணிக்க பயன்படும் அறுதியிட்டு கூறப்பட்ட விதிமுறைகளில் பயன்படும் சூத்திரங்கள் கணக்குக்கும் சோதிடத்துக்கும் தொடர்பு உண்டுன்னு நான் நம்பறதுக்கான காரணங்கள்.

அதே சமயத்தில் பரிகாரங்களால் எதையும் மாற்ற முடியாதுன்றது என் நம்பிக்கை.

2+2=4ன்னு தெரிஞ்சதுனால தானே கணக்கு உண்மைன்னு தெரியுது. 2ன்னா என்னான்னே தெரியாத குழந்தை கிட்ட கணக்கு உண்மையா பொய்யான்னு கேட்ட என்ன சொல்லும்?

சோதிடம் பொய்ன்னு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரையில் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.

கமல் Says:
April 7th, 2006 at 7:09 pm
தருமி ஐயா,

தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன்.
சிந்தனையைத் தூண்டும் பதிவுகள்.

தாங்கள் கேட்ட கேள்விகளை நானும் பல நாட்களாகப் பலரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்னும் நம்பும்படியான தெளிவான பதில்கள்தான் கிடைக்கவில்லை. ஒருநாள் சென்னையிலிருந்து ஈரோடு போகும்போது இரயிலில் நான் சந்தித்த ஜோதிடரிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அவர் ஜோதிடப் பாடத்தில் மதுரை காமராஜர் பல்கலையில் பட்டம் பெற்றவராம். உரையாடல் பின்வருமாறு:-

கேள்வி : மற்ற கிரகங்களோடு சூரியனும் சேர்ந்து சுற்றுகிறதே, அது எப்படி?

பதில் : ஜாதகம் கணிக்கப்படுவது பூமியை அடிப்படையை வைத்துத்தான். அதாவது Geo centric. சூரியன் நிலையாக நின்று, அதைப் பூமி சுற்றினாலும், பூமியை நிலையாக வைத்துப்பார்த்தால், சூரியன் சுற்றுவது போலத்தான் இருக்கும்.

கேள்வி : ஜோதிடத்தில் இருக்கும் கோள்களின் வேகம் வானியல் கூறும் அதே வேகமா?

பதில் : ஆமாம். (ஆனால் இதை எப்படிச் சரிபார்ப்பது எனத் தெரியவில்லை. யாராவது விளக்குங்களேன்!)

கேள்வி : பூசை புனஸ்காரங்கள் எப்படி கெட்ட பலன்களைத் தடுக்கின்றன?

பதில் : கெட்ட பலன்கள் முழுவதுமாகத் தடுக்கப்படுவதில்லை. அவற்றின் வீரியத்தை ஓரளவுக்குக் குறைக்கலாம்.

கேள்வி : எந்த அளவுக்கு?

பதில் : அது அவரவர்களின் நம்பிக்கையைப் பொறுத்தது.

கேள்வி : மற்றவர்கள் முன்னேற, ஐந்துக்கும் பத்துக்கும் பலன் சொல்லி அலைந்து கொண்டிருக்கிறீர்களே, ஏன் உங்களுடைய ஜாதகத்தை நீங்களே பார்த்துப் பரிகாரம் செய்து வாழ்வில் முன்னேறக்கூடாது?

பதில் : என் ஜாதகத்தைப் பார்த்தேன். அதில் நான் பிறருக்குப் பலன் சொல்லும் ஜோதிடனாகத்தான் இருக்கவேண்டும் என இருக்கிறது.

கேள்வி : பரந்து விரிந்த மிகப்பெரிய வான்வெளியில் எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் கோள்கள் எப்படி மனிதர்களின் வாழ்வில் பாதிப்பை (நல்லவை, கெட்டவை இரண்டும்தான்) ஏற்படுத்துகின்றன?

பதில் : எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பவுர்ணமி அன்று கடல் கொந்தளிப்பதில்லையா? அது போலத்தான்.

கேள்வி : பவுர்ணமியில் கடல் கொந்தளிப்பது காந்தப் புலத்தின் மாற்றங்களால். எங்கோ இருக்கும் செவ்வாய்க்கும் திருமணம் நின்று போவதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் : இதற்குச் செவ்வாய் மட்டுமே காரணமில்லை. மற்ற அருகிலிருக்கும் கிரகங்களும்தான் காரணம். (ஆனால் எப்படியென்று கடைசி வரை கூறவேயில்லை)

கேள்வி : ஒரே பிறந்தநேரம் மற்றும் இடத்தை இருவேறு ஜோதிடர்களிடம் கொடுத்தால் இரண்டு விதமான ஜாதகங்கள் மற்றும் பலன்கள் வருகிறதே, அது எப்படி?

பதில் : ஒரே பிறந்தநேரத்துக்கு ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரவேண்டும். ஜாதகம் கணிப்பவர் ஒரு விநாடியை விட்டுவிட்டாலும் ஜாதகம் மாறிப்போகும். கம்ப்யூட்டர் ஜாதகத்தில் வேறுவேறு இடங்களில் கொடுத்தாலும் ஒரே மாதிரியான ஜாதகம்தான் வரும். (கம்ப்யூட்டரில் ஒரே இன்புட்டுக்கு எத்தனை தடவை புரோகிராமை இயக்கினாலும் அதே அவுட்புட்தான் வருமென்பது எங்களுக்கே தெரியுமே!)

சில கேள்விகளுக்குப் பதிலே வரவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறுங்களேன்!

1. பிரசவம் என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால், பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால், அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?

2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு ஃபார்முலாக்கள் எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால், இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?

நன்றி
கமல்

premalatha Says:
April 7th, 2006 at 8:20 pm
சிறிது விலகிப்போய், சில facts:

Indian/hindu astrology is lunar-cycle based. Western astrology is solar cycle based.
Historically/anthropologically people believed that sun/moon controlled our lives, as obviously, their food depended on one of these energy sources. Different civilisations followed either solar or lunar calendars. They needed to follow seasons to plan their activities. in many civilisations summer solstice and winter solstice play a very important role and hence they have a very significant place in their belief system. Interestingly sometimes these times coincide with harveting times and hence they are popularly celebrated as religeous festivals.

Brahmins (to others: do not dare to jump on me with caste issues. I am beyond that), should have used a calendar system that followed planets, and that is why they traditionally celebrate a star based date of birth whereas, in the present-day solar calendar the date of birth comes in a different day for them.
Originally Tamil calendar was a lunar-calendar, but it looks like it was adjusted to follow solar-calendar at some point of time.
within the limitation of what I know, to my knowledge, it is only Egyptians (or Mayans?) and Tamils have followed a 60(hexa)-based cycle in counting years. It is a shame we have lost it.. i.e, we all know, 60 sec=1 min, 60min = 1hr, 12hrs=oneday, 7days=week, 30days=month, 12 month=an year, and what? in Tamil calendar, 60 year = one complete cycle. we have 60 names for each year, and it comes in rotation.. we do not know how many cycles our Tamil calendar has completed so far, as we refer them only by name… also, today’s Tamil calendar is adjusted to follow Solar cycle and hence is corrupted:(

my interest in this is, it might have taken a lot of effort to observe and come to a conclusion that the whole thing around us come back to the same location in a hexa-cycle.. wow.

regarding sun’s rotation, it does spin, and the whole solar system does rotate (together).. well, it is a very interesting science..

well, coming back to people’s belief, originally it was out of fear, need for food, etc.. which holds true even today. Today, because of “moral values” thingys added to our lifestyle, believing helps to blame it on somebodyelse. I don’t believe, I am responsible for all my sins. I don’t look for ப்ராயச்சித்தம், I am perfectly capable of running my life.

premalatha Says:
April 7th, 2006 at 8:23 pm
I think I got carried over in my last comment.

ஜாதகம் கணிதம்தான். following stars and calculating their orbital paths/positions…

தருமி Says:
April 7th, 2006 at 8:43 pm
கோபி,

என்னது இது? நீங்கள் கொடுத்த சுட்டி முழுமையாக உங்கள் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கருத்துக்களையும், கேள்விகளையும் கொடுத்து என் பார்வையைச் சரியென்று சொல்வதாக இருக்கிறதே எதற்காக எனக்கு இப்படி உதவ முடிவு செய்தீர்கள்

Excerpts from that article:

Why is it that astrologers never mention the fact that the sun actually passes through fourteen constellations, not twelve?

why weren’t these other two constellations ever added? don’t they influence people’s lives?

these groupings (of constellations) are arbitrary human constructions, how could they possibly have any impact on human personalities and human lives, much less the very specific effects which astrology traditionally attributed to them?

Did astrologers first notice the effects of certain star groups on people ( a real scientific approach; at least now it can be done before courses on ஜோதிடம், ஜாதகம் started!) and then assign those groups names and images which were somehow connected to those personality traits.

ANYWAY THANKS, MR. GOPI

ஞானவெட்டியான் Says:
April 7th, 2006 at 9:43 pm
அன்பு தருமி,
வணக்கம்.
“சோதிடம்” பற்றி அகண்டபாரதம் மடலாடல்குழுவில் நடந்த உரையாடலை கீழ்காணலாம். நீண்ட ஒரு இடுகையாகவிருந்ததால் தனியா இட்டுள்ளேன். ஆங்கிலத்தில் இருப்பது என் பங்களிப்பல்ல. தமிழில் இருப்பது எம் புரிதல்.
http://njaanavelvi.blogspot.com/2006/04/blog-post_114442687832879542.html

ஞானவெட்டியான் Says:
April 7th, 2006 at 9:48 pm
அன்பு கமல்,

//1. பிரசவம் என்பது ஒரு நொடியில் நிகழ்வதல்ல. குறைந்தபட்சம் சில விநாடிகளாவது ஆகும். அப்படியானால், பிறந்த நேரம் என்பது எது? தலை வெளிவந்த நேரமா அல்லது முழு உடல் வெளிவந்த நேரமா அல்லது முதன்முதலில் அழுத நேரமா? மருத்துவர் கூறும் நேரமா? மருத்துவர் கூறும் நேரமென்றால், அவரது கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுகிறது என்பது என்ன நிச்சயம்?//

தந்தையும் தாயும் கூடி விந்து கருவோடு கூடும் நேரமே சரியான நேரம்.

//2. ஜோதிடத்தை ஒரு கணக்கு என்றே வைத்துக் கொண்டாலும், வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இருவேறு ஃபார்முலாக்கள் எப்படி இருக்கும்? இரண்டில் எது சரி? இரண்டுமே சரியென்றால், இரண்டுக்கும் நேரவித்தியாசம் இருக்கிறதே? பலன்கள் வேறுபடாதா?//

வாக்கியப் பஞ்சாங்கத்தில் நேரம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருக்கணிதத்தில், பிறந்த ஊர், longitude, lattitude ஆகியவைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் வேறுபாடு இருக்கும். ஆகையால்தான் திருக்கணிதம் துல்லியமானது என்கிறார்கள்.

நல்லசிவம் Says:
April 8th, 2006 at 10:13 am
என் பங்குக்கு ஒரு குழப்பம்..

//கணிதம் என்றால் அதில் முரண்பாடு எப்படி வரமுடியும்? 2+2=4 என்பதில் என்ன முரண்பாடு வரும்? கணக்கு தெரிந்த யார் கூட்டினாலும் அதே நாலுதான் பதில்.

But here,
3=2 !!

Here it is explained..

-6 = -6
ie, 9-15 = 4-10

adding 25/4 to both sides:
9-15+(25/4) = 4-10+(25/4 )

Changing the order
9+(25/4)-15 = 4+(25/4)-10
(this is just like : a square + b square - two a b = (a-b)square.)
Here a = 3, b=5/2 for L.H.S and a =2, b=5/2 for R.H.S.

So, it can be expressed as follows:
(3-5/2)** 2 = (2-5/2)** 2

Taking positive square root on both sides:
3 - 5/2 = 2 - 5/2

Cancelling - 5/2 on both sides,
3 = 2

thangam Says:
April 8th, 2006 at 10:40 am
Dear Dharumi! i can explain some basic facts about Astrology. A main basic fact was already posted in your blog. It was posted as anonymous since I have no blog account however I had posted my name as thangam. If you can help me in creating a blog for me, will be welcome and appreciated. I am fully aware of computer and software but I can visit blogs and also posting comments as anonymous. Only in English I am posting my comments.If it is in Tamil the terminologies wiil have its correct understanding is easier. This also I expect from you. Thanking you. VAZHGA VALAMUDAN - thangam

thangam Says:
April 8th, 2006 at 10:44 am
Please insert ‘not’ between am and fully which is inadvertantly left out. sorry for inconvenience-thangam

குமரன் (Kumaran) Says:
April 8th, 2006 at 11:03 am
தருமி சார். பதிவைப் படித்துவிட்டேன். உங்கள் கருத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ எனக்குக் கருத்து இல்லை. இப்படி சொல்லாம போயிட்டா எல்லாரும் உங்க கருத்துக்கு ஆதரவா இருக்கிறதா நீங்க நெனைச்சுக்கிடுவீங்கல்ல…அதான் சொல்லிட்டேன்.

நல்லசிவம் Says:
April 8th, 2006 at 11:37 am
எல்லோரும் ரொம்ம்ம்ம்ப சீரியஸா பேசிகிட்டு இருந்திங்களா..ஒரு ‘ரிலீப்’க்காக கூத்துல கோமாளி வேலை முன்ன இட்ட பின்னூட்டம். யாரும் டென்சன் ஆகாதீங்கப்பூ

கோபி Says:
April 8th, 2006 at 1:48 pm
//நீங்கள் கொடுத்த சுட்டி முழுமையாக உங்கள் கருத்துக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான கருத்துக்களையும், கேள்விகளையும் கொடுத்து என் பார்வையைச் சரியென்று சொல்வதாக இருக்கிறதே//

இந்த சுட்டி உட்பட நான் படித்த Critiques எதுவுமே சோதிடத்தில் கணிக்கப் பயன்படும் விதிகள் எப்படி சரியாகும்னு கேள்வி எழுப்புதேயொழிய தவறாகும்னு நிரூபிச்சு சொல்லாததால இன்னமும் சோதிடம் உண்மைன்றது தான் என் நம்பிக்கை.

1+1=10ன்னு சொன்னா சரியா தப்பா? தசமம் மட்டுமே தெரிஞ்சவங்க தப்புன்னு சொல்வாங்க. இரண்டின் அடிமானம்(Binary) பற்றி தெரிஞ்சவங்க சரின்னு சொல்வாங்க.

அது மாதிரி சோதிடம் பொய்ன்னு எனக்கு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரைக்கும் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.

கோபி Says:
April 8th, 2006 at 1:55 pm
இன்னொன்னு கேட்க மறந்துட்டேனுங்க.

ராசிமண்டலங்கள் குறித்து என் பின்னூட்டத்துல வானியலும் சோதிடமும் ஒரே விஷயத்தை சொல்லுதே.. (in 2006 Saturn will be in Cancer constellation) அந்த சுட்டிகளை பார்த்தீர்களா?

muthu(tamizhini) Says:
April 8th, 2006 at 2:21 pm
நல்லசிவம் சூப்பருப்பு

V.Subramanian Says:
April 8th, 2006 at 3:25 pm
ஆன்புள்ள தருமிக்கு தங்கள் தொடரை தொடர்ந்து படித்து வரும் நான் பதிலாக ஒரு விரிவான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் இப்பொழுது சிலவற்றுக்கு (என் கருத்து) இது.

>>>>1. ஜாதகக்கணிப்பில் சந்திரனுக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்திரன் மற்ற கோள்கள் போலன்றி அது ஒரு துணைக்கோளாக இருக்கும்போதும் எப்படி அதுவும் ஒரு கோளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது?

ஜாதகத்தை பொருத்த வரை அதில் உள்ள கோள் என்று சொல்லப்படுவது Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம். அது தரும் பலன் பொருத்தே அதில் சேர்க்கபட்டுள்ளது. நீங்கள் அரசியல் பொருளாதார தன்மை நிலைபெற்ற நாட்டில் வசித்தாலும் உங்கள் பக்கத்து வீட்டுக்கரானோ அல்லது உங்கள் தெருவையே சுற்றி வரும் ஒரு சமூகசேவகராலோ அல்லது ஒரு ரெளடி
யாலோ நீங்கள் இன்பமோ துன்பமோ அடையலாம் அல்லவா அது போலத்தான் சந்திரனின் பலனும்.

>>>>>>> 10-வது கோளுக்கு ஜாதகக் கணிப்பில் இடம் உண்டா, இல்லையா?

எந்த ஒரு கோளும் அது சூரியனை சுற்றும் காலத்தை பொருத்தே அதன் பலா பலன் கூறப்படுகிறது. சனி 30 வருடம் வியாழன் 12 வருடம் என்பது போல். ஆனால் புளுட்டோ போன்ற தூரத்து கிரகங்கள் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒரே கட்டத்தில் இருப்பதால் அதன் பலன் நிரந்தரம் மாறாதது. அதைப்பற்றி யோசித்து பலன் இல்லை.

>>>> இந்த தூரக்கணக்கை எடுத்துக் கொண்டால் மற்ற தூரத்துக் கோள்களை மட்டும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்?

தூரக்கணக்கை எடுப்பதில்லை சூரியனை சுற்றும் காலத்தையே எடுதுக்கொள்கின்றனர். மேலும் சந்திரன் 28 நாளுக்கு ஒரு முறை பூமியை சுற்றிவருவதால் அதன் நிலைப்பாடு தினப்பலன் கூறுவதற்கும் சூரியன் ஒவ்வொரு ராசியின் பார்வையிலிருந்து மாதம் ஒரு முறைதான் இடம் மாறுவதால் அதை மாத பலன் கூறுவதற்கும் உபயோகபடுத்துகிறார்கள்.

நான் ஜோசியத்தின் தரம் பற்றி விவாதிக்க வில்லை. ஆனால் நமக்கு புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது தவறான அணுகுமுறை.

சமீபத்தில் டோண்டு அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி பற்றி தமிழ் மணத்தில் வந்ததால் இதையும் கூறுகிறேன். 60 என்பது வியாழன் சனி கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் வருடங்களின் 12, 30 (LCM)60. என் கணக்குப்படி 58ம் வருடமோ அல்லது 59ம் வருடமோ ஒரு குறிப்பிட்ட நாளில் கணிக்கப்படும் ஜாதக்ம் அவர் பிறந்த போது இருந்த ஜாதகத்துடன் ஒத்துபோகும் என்று நினைக்கிறேன். இது ஒரு HOME COMING போல.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு எதிர் விளைவு உண்டு. நான் முன் குறிப்பிட்ட ஒரு ரெளடியின் தொந்தரவை ச்மாளிக்க நீங்கள் ஒரு போலீசின் துணை நாடலாம் அல்லது வேறு இடத்திற்கு குடி பெயரலாம்.

தருமி Says:
April 8th, 2006 at 4:12 pm
Premalatha,
Either you are a confused lot or you have confused me totally you long comment ends as if you dont believe in horoscopes and all that and sound so confident saying ‘ I run my life’. it really sounded so good. but in the second comment you change - at least that’s how i percieve - track.

60 year = one complete cycle. is there any scientific background to say this?

the whole thing around us come back to the same location in a hexa-cycle.. Is it?

தருமி Says:
April 8th, 2006 at 4:19 pm
Thangam,
i am not an expert but still i want to help you start a blog. for that dont i need your mail id?

premalatha Says:
April 8th, 2006 at 4:38 pm
Dharumi,

ஜாதகம் originated from the idea of கணிதம், என்பதற்கும், என் belief system-க்கும் எந்த சம்பந்தமுமில்லை. I don’t believe. How ஜாதகம்ங்கிற concept develop ஆச்சுன்னு analyse பண்றது ஒரு study.

ஜாதகம் மூலம் மனித குணங்களை மற்றும் விதியை தெரிந்துகொள்ள முடியும்னு நம்புறது - belief system. I don’t beleive one can find out about my charcters/personlaity or my fate through my ஜாதகம்.

I like to study how it all started.. without confusing myself with the belief systems… it helps that I am not a believer, I can stay out of it and can pay unbiased interest to the info I get when I study them.

I don’t know what made them to chose 60 years cycle. but that is what old-tamil-folks did. it is a very unique calendar system. they might have reasons. But the shame is no one knows. not even how many of those cycles Tamil Calendar has completed so far.

I think I have confused you in my previous comment. Hope it is better now. No. I am not a confused lot. (well, most of the time anyway )

premalatha Says:
April 8th, 2006 at 4:53 pm
There is another thing that is completely lost is the Brahmin Calendar. It is planets based. neither lunar, nor solar. It would be interesting to know how many days in a year it had. In my observation, there is a significant difference in number days that consitute an year in their calendar. it is a shame it is lost.

கமல் Says:
April 8th, 2006 at 7:07 pm
அன்புள்ள ஞானவெட்டியான்,

தங்கள் பதிலுக்கு நன்றி. மேலும் சில கேள்விகள்.

1. தந்தையும் தாயும் கூடி விந்து கருவோடு கூடும் நேரமே சரியான நேரம் என்றால், அந்த நேரம் என்னவென்று மருத்துவர்கள் உட்பட யாருக்குமே தெரியாதே! பிறகு எதற்காக ஜாதகம், பலன்கள் எல்லாம்?

2. திருக்கணிதம்தான் துல்லியமானது என்றால், வாக்கியப் பஞ்சாங்கத்தை இன்னும் பலர் பயன்படுத்துவது ஏன்?

நன்றி
கமல்

V.Subramanian Says:
April 8th, 2006 at 10:15 pm
60 is not a magical figure. It is just LCM of Orbital period taken by (Rounded off to nearest year) Mars - 2 years, Jupitor - 12, Saturn - 30. Tamil Years cycle thru 60 years (source http://www.tamilar.org/tamil-calendar.asp). (but I dont see any tamil word in Tamil year names. It looks like more of sanskrit). As per my understanding when you complete 60 years approximately all planets will align to same degree as at the time of birth.

தருமி Says:
April 8th, 2006 at 10:56 pm
கமல், ஞானவெட்டியான்,

கமல், நீங்கள் கேட்ட பிறந்த நேரம் கணிப்பது எப்படி என்பது எனக்கும் ஒரு கேள்வியாக இருந்தது. நல்ல நேரம் என்ற தலைப்பில் உள்ள முந்திய பதிவொன்றில் அதைப்பற்றிக் கேட்டிருந்தேன்.

ஞானவெட்டியான்,
நீங்கள் சொல்வதை வாசித்ததும் எனக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது.
* Have you stopped beating your wife?
* Can God create a stone which he himself cannot lift? - இந்த இரு கேள்விகளுக்கும் ஆமாம், இல்லை என்ற இரு பதில்களையுமே தர முடியாது. (ஆங்கிலத்தில் இதற்கொரு சொல் உண்டு; நினைவில் இல்லை.) அதைப்போலவே உங்களின் கூற்றினால் எனக்குத் தோன்றுவது:

-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?

- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?

தருமி Says:
April 8th, 2006 at 10:59 pm
நல்ல சிவம்,
thanks for the interlude.

தருமி Says:
April 8th, 2006 at 11:12 pm
முத்து தமிழினி,
ரொம்ப பிசியா இருக்கிற நேரத்தில கூட வந்ததுக்கு ரொம்ப நன்றி

குமரன்,
So, வந்திட்டு மெல்ல வாழைப்பழ ஊசி மாதிரி உங்க எதிர்மறைக் கருத்தை மறைந்த கருத்தாக வச்சிட்டுப் போறீங்க…

தருமி Says:
April 8th, 2006 at 11:19 pm
கோபி,

“சோதிடம் பொய்ன்னு எனக்கு நம்பிக்கை வரனும்னா நான் இன்னும் நிறைய படிக்கனுமுங்க. படிச்ச வரைக்கும் சோதிடம் உண்மைன்றதுதான் என் நம்பிக்கை.”

“நான் படித்த Critiques எதுவுமே சோதிடத்தில் கணிக்கப் பயன்படும் விதிகள் எப்படி சரியாகும்னு கேள்வி எழுப்புதேயொழிய தவறாகும்னு நிரூபிச்சு சொல்லாததால இன்னமும் சோதிடம் உண்மைன்றது தான் என் நம்பிக்கை.”

- செம குழப்பமுங்க

தருமி Says:
April 8th, 2006 at 11:21 pm
V.Subramanian

“கோள் என்று சொல்லப்படுவது Planet என்னும் பொருளில் எடுக்கவேண்டாம்.”
- astrology & astronomy ரெண்டுக்கும் முடிச்சி போடறதே நீங்க தான்; நீங்களே அது வேறு இது வேறு அப்படிங்கிறீங்க.

“நமக்கு புரியாத அல்லது விளக்க முடியாத எல்லாமே ஏமாற்று வேலை என்பது தவறான அணுகுமுறை.”
- மிகச்சரியா சொன்னீங்க.
ஆனா நான் என்ன சொல்றேன்னா, மதங்கள், அதனை ஒட்டிய விஷயங்கள் என்பதாலேயே அவைகளை அப்படியே நம்ப வேண்டியதில்லை. நாமளா கொஞ்சம் யோசிச்சும் பார்க்கலாமேன்னு சொல்றென். அவ்வளவுதான்.

“விரிவான கட்டுரை எழுதலாம் என்று இருக்கிறேன்.” - காத்திருக்கிறேன்.

தருமி Says:
April 8th, 2006 at 11:23 pm
premalatha.

“I don’t know what made them to chose 60 years cycle.” - not only you, none knows! right?

“…that is what old-tamil-folks did.” - then how come all the names are in sanskrit?

Somewhere i read that you wrote about your inquisitive mind as a seasoned researcher who would experiment, test,analyse and then only conclude. am i not right?

premalatha Says:
April 8th, 2006 at 11:37 pm


pointஅ புடிச்சீங்க போலருக்கு. இப்போ escape. ஏன்னா இதுக்கு மேல ஒண்ணும் தெரியாது.

you are right about the sanskrit names. sankrit influence in tamil is a long time one. in order to research into that, one needs unbiased reference material which is almost to highly impossibe to get, as most of the material we get are very much sanskrit influenced…

60 years cycle WAS tamil calendar. naming/altered names mights have come from sanskrit. It is similar to lunar cycle based calendar altered to follow solar cycle.. only that the later is much ancient when compared to the former (naming) I donot have (did not save it) references to quote here.

Lack of research. (including myself )

chiththan Says:
April 9th, 2006 at 12:26 am
நம்பிக்கை சம்மந்தப்பட்ட உல்டாவான தலைப்பு!
இரவு-பகல்,உண்டு-இல்லை,கடவுள்-இயற்கை என்பதைப்போல்
உலகம் உள்ளவரை தொடரும்”நெட் வெர்க்” வாழ்க!
ஜோதிடமென்பது மறுஜென்மம் உண்டெனும் கூற்றைப்போல் மனிதனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை,நம்பிக்கையை ஏற்படுத்தினால் சரி!

கமல் Says:
April 9th, 2006 at 6:45 am
V.Subramaniam,

60 வருடங்கள் கழித்து கோள்கள் திரும்ப அதே இடங்களுக்கு வரும், அப்போது ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தால், பிறந்த போது கணித்த ஜாதகத்துடன் ஒத்துவரும் என்கிறீர்கள். அப்படியானால், எனக்கு ஒரே சந்தேகம்.

கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மீண்டும் கோபிசெட்டிபாளையத்தில், அதே மருத்துவமனையில், 5-ஜூன்-2017 16:30:15 க்கு இன்னொரு குழந்தை பிறந்தால், இருவரின் ஜாதகங்களும் பலன்களும் ஒரே மாதிரி இருக்குமா? முதலாமவர் இந்தியாவின் குடியரசுத்தலைவரானால், இரண்டாமவரும் குடியரசுத்தலைவராவாரா?

நன்றி
கமல்

ஞானவெட்டியான் Says:
April 9th, 2006 at 7:02 am
அன்பு தருமி,கமல்,

//-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.

-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.

- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.

- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?//

எனது பின்னூட்டின் இறுதி வரியை ஓர்ந்து நோக்கின் விடை கிட்டும்.

“இந்தக் கல் போடலாமா? இப்படிப் பெயரை மாற்றிக்கொள்ளலாமா? என மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலையவேண்டாம். பணம் எப்போது வரும்? எனும் வினாவுக்குச் சோதிடம் பார்க்கத் தேவையில்லை.
“உடம்பை வளைச்சு நல்லா உழைச்சுப் பாரப்பா
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு” எனும் திரையிசைக்குச் செவி சாயுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

// எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது? //

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை.

கோபி Says:
April 9th, 2006 at 3:10 pm
// செம குழப்பமுங்க //

இதுல குழப்பத்துக்கு ஒன்னுமேயில்லீங்க.

1+1=10 உண்மையா பொய்யான்னு தசமம் மட்டும் தெரிஞ்சவரும் இரண்டின் அடிமானம் தெரிஞ்சவரும் வாதிட்டா என்ன முடிவு கிடைக்கும்? இருவருக்கும் இரண்டின் அடிமான கணக்கு பற்றி முழுமையாய் தெரியும்போது இருவரும் ஒப்புக் கொள்ளும் முடிவு தெரியும்.

அது மாதிரி சோதிடம் உண்மைன்னு சொல்ற அளவுக்குத்தான் நான் சோதிடம் பத்தி படிச்சிருக்கேன். பொய்யின்னு சொல்ற அளவுக்கு இன்னும் படிக்கலை.

தருமி Says:
April 9th, 2006 at 3:50 pm
சித்தன்,
“மனிதனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை,நம்பிக்கையை ஏற்படுத்தினால் சரி! …” //
- தவறான கொழு கொம்பென்றால் அது தேவையா என்பதே என் கேள்வி..

தருமி Says:
April 9th, 2006 at 3:52 pm
கமல்,
“கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ..” பிறந்த அந்த குழந்தை நீங்கள்தானே, கமல்!

தருமி Says:
April 9th, 2006 at 3:53 pm
ஞான வெட்டியான்,
“// எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது? //

அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை. “//
இதுவே எனது கடைசிப் பதிவின் ஆரம்பமாக இருக்கும். நல்ல ஆரம்பம் கொடுத்தமைக்கு சிறப்பான நன்றி.

தருமி Says:
April 9th, 2006 at 3:57 pm
ஞானவெட்டியான்,

““உடம்பை வளைச்சு நல்லா உழைச்சுப் பாரப்பா
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு” எனும் திரையிசைக்குச் செவி சாயுங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”

- இது அக்கட்டுரையின் முடிவுரையாக இருக்கும். மீண்டும் நன்றி

தொப்புளான் Says:
April 9th, 2006 at 5:16 pm
மனுஷனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வரும்போது “எத்தை தின்னாப் பித்தம் தெளியும்”னு ஜோசியர்ட்டப் போறான்.ஜோசியரும் கூடப் பொறந்தவங்க எத்தனை பேருன்ற மாதிரி ஏதாவது ஒண்ணைச் சரியாச் சொல்லிப்புடுராப்புல.(எப்படின்னுதான் தெரியலை?). 1000 சொல்லி அதுல ஏதாவது ஒண்ணு பலிச்சுட்டாலும் பலிக்காத 999ஐ மறந்துறதுதான் மனுஷனோட “பெருந்தன்மை”.

மத்தப்படி மக்கள் நம்பிக்கையைப்பெற அறிவியல் ரீதியான விளக்கம்லாம் தேவைன்றது மூட நம்பிக்கை.யாராவது சும்மா “குறி” சொன்னாலே நம்பிருவாய்ங்க..

எனக்கு ஜோசியம் சொல்லித்தந்த வாத்தியாரு குழந்தை முதல் முதலா அழுத நேரம்தான் அது முதல்ல மூச்சுவிட்ட நேரம். அதைத்தான் ஜாதகம் கணிக்க எடுத்துக்கிறணும் சொன்னாரு.இங்க ஒருத்தரு வேற மாதிரி சொல்றாரு.
ஜாதகம் கணிக்கிற கணக்கு வரைக்கும் சரியாத்தான் சொல்லித்தந்தாப்புல.பலாபலனுக்கு வரும்போது ஒழப்பி ஒண்ணுக்கிருந்துட்டாப்புல.குருவே சரணம்.
பின்னாடி “குடும்ப ஜோதிடம்” புத்தகத்தவச்சு முடிஞ்ச அளவுக்கு எதுவெல்லாம் பொருந்தி வருமோ அதையெல்லாம் எழுதி பட்டமும் வாங்கினோம்.
வாக்கியத்தைவிட திருக்கணிதம் துல்லியம்னு சொல்லிகிட்டு இருந்தவரு அதுக்கப்புறம் பாவக ஸ்புடம் போடணும்னு சொல்லிட்டாரு.அப்ப இது வரைக்கும் படிச்சதெல்லாம் ஒரு குத்துமதிப்புதான் போலன்னு நெனச்சுக்கிட்டோம்.அடிப்படையே தப்பா இருக்கையில அடுக்குமாடியா கட்டி என்னா ஆகப்போகுது?

அப்புறம் இந்த செவ்வாய் தோஷம் விஷயத்தில பாருங்க.நெறயா கொழப்பம்.செவ்வாய் தோஷம் இருக்கு. ஆனா இந்தக் கட்டத்தில இதெல்லாம் சேர்ந்திருக்கதால அதுக்குப் பரிகாரம் ஆகி செவ்வய் தோஷம் இப்ப இல்லைன்னு ஒரே வெளயாட்டு.
செவ்வாய் தோஷத்துக்காரன்ய்ங்களுக்கு எல்லாத்துக்கும் ரத்தம் ஓ நெகட்டிவ்னு ஒரு பொய் சொல்றான்ய்ங்கய்யா.நிரூபிச்சுக்காட்டுன்னு சொன்னா ஒருத்தனும் வர்றதில்ல.

அப்புறம் இந்தக் கல்யாணப் பொருத்தம் பார்க்கறதிலதான் உச்சகட்ட காமெடி.ஆம்பளை நட்சத்திரத்துக்கு பெண் நாய்னு வரும். பொண்ணுக்கு ஆண் குரங்குன்னு வரும்.”யோனி” பொருந்தலைனு சொல்லியிருவான்ய்ங்க.ஏதோ அளந்து பார்த்தாப்புல.
பால் மரமா இருந்தாதான் கொழந்த பொறக்குமாம்.பாலியல் விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பு.

மூல நட்சத்திர நண்பர் ஒருத்தருக்கு பொண்ணுப் பார்க்கப்போனா தகப்பன் இல்லாதப் பொண்ணாப் பாருன்றான்ய்ங்க.க்ளோனிங் பண்ணினாதான் உண்டு.

கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.

இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு.

ஞானவெட்டியான் Says:
April 9th, 2006 at 7:03 pm
அன்பு நண்பர்களே,

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் “இதே பொழப்பா அலையாதீங்க! ஒரு TORCH LIGHT போல பயன்படுத்துங்கள்” என்பதுதான்.

தயிர் சோத்துக்கு ஊறுகாய் அவசியம்தான்; ஆனால் அதுக்காக ஊறுகாய்க்குத் தயிர் சோறு தொட்டுக்கிறது நியாயமா?

உங்கள் எல்லோரையும்போல எழுதிப் பாத்தேன்.

V.Subramanian Says:
April 9th, 2006 at 9:10 pm
கமல் நான் கூறிய 60 வருடத்திற்கு பின் ஒரே ஜாதகம் என்பது கிட்டத்தட்ட என்னும் அளவில் தான். அதாவது ஜாதகம் கட்டம் பார்த்தால் ஒரே மாதிரி கட்டங்களில் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி வியாழன் என்று இருக்கும். ஆனால் அதன் சாய்மானம் (Angle of Tilt) வெவ்வேறாக இருப்பதால் பலன்கள் வேறாக இருக்கும். ஜாதகம் பற்றி நான் கூறுவது எல்லாமே என் கருத்து தானே தவிர அறுதியிட்டு கூறும் அளவுக்கு நான் சோதிடம் பயின்றதில்லை.

ஜாதகம் பற்றிய என் பதிவை பார்க்க
http://yennottam.blogspot.com/2006/03/blog-post.html

கமல் Says:
April 9th, 2006 at 10:26 pm
//“கோபிசெட்டிபாளையத்தில், ஒரு மருத்துவமனையில், 5-ஜூன்-1977 16:30:15 க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ..” பிறந்த அந்த குழந்தை நீங்கள்தானே, கமல்!//



ஐயா, நீவிர் வாழ்க. ஜோதிடராவதற்கான முழுத்தகுதியும் தங்களுக்கு வந்து விட்டது.

நன்றி
கமல்

தருமி Says:
April 10th, 2006 at 4:18 pm
கமல், இதைப்போய் கொஞ்சூண்டு காது மூக்கு வச்சி நாலு பேத்துக்கிட்ட சொன்னீங்கன்னு வச்சுக்கங்க...நம்ம ஊட்டு முன்னால கூட்டம் பிச்சுக்காது...?

தருமி Says:
April 10th, 2006 at 4:37 pm
ஹலோ
ரொம்ப டமாசான ஆளா இருப்பீங்க போலுமே! பேரே சொல்லுத்!

அது என்னங்க குரு ஒருத்தருட்ட போயி, ஜாதகம் படிச்சிருப்பீங்க போலும்; ஆனா, அதையே பயங்கரமா தாக்குறீங்க. அதுவும்,”மூல நட்சத்திர நண்பர் ஒருத்தருக்கு பொண்ணுப் பார்க்கப்போனா தகப்பன் இல்லாதப் பொண்ணாப் பாருன்றான்ய்ங்க.க்ளோனிங் பண்ணினாதான் உண்டு. - எனக்கு வந்த பின்னூட்டங்களில் இந்த அளவுக்கு நான் எதுக்கும் சிரிச்சது இல்லீங்க!
fantastic sense of humour

செவ்வாய் தோஷத்துக்காரன்ய்ங்களுக்கு எல்லாத்துக்கும் ரத்தம் ஓ நெகட்டிவ்னு …// - எனக்குச் சொன்னவங்க rh-ve அப்டின்னாங்களே?

“…..அதையெல்லாம் எழுதி பட்டமும் வாங்கினோம்.”// என்ன பட்டம் வாங்குனீங்க?

எனக்கு டாக்டர் மாத்ருபூதம் ரொம்ப பிடிக்கும். டி.வி. நிகழ்ச்சியில் அவர் அடிக்கிற ஜோக்குகள் …they would just come one after another with such ease.. நீங்க அந்த மாதிரி ரொம்ப சுளுவா ஜோக் அடிச்சிக்கிட்டே போவீங்க போலும். அதனால் எனக்காக, இல்ல..எங்க எல்லாத்துக்காகவும், நீங்க உடனே ஒரு பதிவு ஆரம்பிக்கணும், கட்டாயமா..சரியா

thangam Says:
April 18th, 2006 at 9:23 pm
Dear Dharumi, please find herewith my e-mail id
thangarajan_yoga@dataone.in. Only today I saw your reply to my request. Thank you for reply-thangam.

நவீனன் Says:
May 9th, 2006 at 4:09 am
ஜாதகக் கணிப்பு சரியா பிழையா எனும் வாதம் வேண்டாம், சரியாகக் கற்றவர்கள் யாராவது ஜாதகம் கணிக்கும் முறையை எழுதலாமே, என்னைப் போன்று விளக்கமற்றவர்களும் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை அறியலாமல்லவா? நல்லவை எனின் கற்போம்
தீயவை எனின் தவிப்போம்

9 comments:

சாலிசம்பர் said...

//
கோபி said
1+1=10 உண்மையா பொய்யான்னு தசமம் மட்டும் தெரிஞ்சவரும் இரண்டின் அடிமானம் தெரிஞ்சவரும் வாதிட்டா என்ன முடிவு கிடைக்கும்? இருவருக்கும் இரண்டின் அடிமான கணக்கு பற்றி முழுமையாய் தெரியும்போது இருவரும் ஒப்புக் கொள்ளும் முடிவு தெரியும். //

10 ன் இரண்டுஅடிமான எண் 1+1 கிடையாது.
1+0+1+0 என்பது 10இன் இரண்டுஅடிமான எண்.
1+0+1 என்பது 10இன் மூன்றுஅடிமான எண்
2+2 என்பது 10இன் நான்குஅடிமான எண்.
2+0 என்பது 10இன் அய்ந்துஅடிமான எண்.

1+0+1+0=10 எப்படி என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஜோசியர் 5+2=9 என்பதை எப்படி விளக்குவார்?

தருமி said...

ஜாஜா,
கண்ணைக் கட்டி காட்ல விட்டுட்டீங்களே!
:(

DHANS said...

தங்கள் பதிவை படித்தேன் அனால் அனைத்து பின்னூடங்களையும் படிக்க முடியவில்லை.

ஆனாலும் எனக்கு என்னைப்போலவே கருத்துடைய நண்பரின் பதிவை படித்ததில் மகிழ்ச்சி

கூடுதுறை said...

தங்களீன் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வாத்தியாரின் பதிவுகள் பதில் அளிக்கின்றன...

இப்பதிவுன் மூலமாக சென்று பார்த்து தெரிந்துகோள்ளுங்கள்

http://scssundar.blogspot.com/2008/06/blog-post_28.html

தருமி said...

கூடுதுறை,
//தங்களின் அனைத்து பதிவிற்கும் சுப்பையா வாத்தியாரின் பதிவுகள் பதில் அளிக்கின்றன...//

அப்படியா??!!

ஒன்று செய்யுங்களேன்; நான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அந்தப் பதிவுகளில் உள்ள பதில்களை எடுத்துத் தாருங்களேன், ப்ளீஸ்.
ஏன்னா, நீங்கள் எங்கள் இரு பதிவையும் படித்தவர் மட்டுமல்ல, வாத்தியாரின் பதிவுகளை வரிசைப் படுத்தியிருப்பதிலிருந்து நீங்கள் எவ்வளவு முழுமையாக அவைகளைப் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமென்பது தெளிவாகிறது. ஒரு உதவி..அவ்வளவே.

வாத்தியாரின் பதிவுகள் எனக்குப் புதிதல்ல.

Chandru said...

உங்களது சில கேள்விகளுக்கு எனது வலைத்தளத்தில் அறிவியல் முறைப் படியான பதில் இருக்கிறது. ராகு கேது என்ற தலைப்பில் 4 பாகங்களில் எழுதியுள்ளேன். முதலில் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள்.

http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.html

தருமி said...

//முதலில் அதைப் படித்து புரிந்து கொள்ளுங்கள். //

Yes sir.

சிம்மத்தோன் said...

வணக்கம் தருமி,
கூகுள் தேடலில் உங்கள் பதிவுகளை படிக்கும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் கருஞ்சட்டைகாரராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதான் குண்டக்க மண்டக்க கேள்விகளை போட்டு ஜோதிடத்தை குடைந்தெடுத்திருக்கிறீர்கள்.

”ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை”

நீங்கள் தருமியாக இருப்பதால் கேள்விகள் கேட்பதோடு நிறுத்திக்கொண்டு விட்டீர்கள்.

கேள்விகள் கேட்பது எளிது. ஆனால் அதற்கான பதிலை காரண காரியங்களோடு அறிந்து பிறருக்கு விளக்கி கூறுவதற்கு தான் அறிவு வேண்டும்.

இல்லை என்று கூறுவதற்கு எதுவும் தெரிந்திருக்க வேண்டியதில்லை.

இருக்கிறது என்று நிரூபிப்பதற்கு தான் விளக்கங்களும், அனுப அறிவும், தனிமனித முயற்சிகளும் அதிகம் தேவைப்படும்.

எனவே தருமியாக இருந்து கேள்விகளை கேட்பதோடு நிறுத்திவிடாமல் அதற்கான பதில்களை அறிவதிலும் உங்கள் முயற்சியை செலுத்தினால் உண்மையான பதில்கள் உங்களுக்கு தானாகவே கிடைக்கும். யாரும் உங்களுக்கு எதையும் விளக்கி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.

நாங்களும் உங்களைப் போன்ற நிலைகளை கடந்து வந்தவர்கள் தான் (நாத்திகர்கள்) ஆனால் எங்கள் கேள்விக்கான விடைகளை அறிய தொடர்ந்து தேடலில் ஈடுபட்டதால் நாத்திகனாகவே தொடர முடியவில்லை. வரட்டு பிடிவாதம் பிடிக்க விருப்பமும் இல்லை.

நீங்களும் உங்கள் கேள்விகளுக்கு விடைகளை அறிய முயலுங்கள். அதைவிடுத்து இவ்வாறு குறுக்கு விசாரணை செய்து நோகாமல் நொங்கெடுக்க முயன்றால் எல்லாமே தவறாக மூடநம்பிக்கையாக தான் தெரியும்.

இல்லை எனக்கு அதெல்லாம் செய்ய நேரமில்லை என்று கூறினால் கேள்விகளை கேட்பதும் பகுத்தறிவு வேஷமும் வீண்வேலைகள் தானே.

தருமி said...

மு.சிதறல்கள்,

அரிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Post a Comment