Sunday, June 26, 2005

23. எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க..

காஞ்சி பிலிம்ஸ்காரர் செய்தது கொஞ்சங்கூட நல்லாயில்லை. அவர்பாட்டுக்குக் கடையை இழுத்துப்பூட்டிக்கிட்டு, போற இடமும் சொல்லலை-பின்னூட்டம் கொடுக்கிறதுக்கு. இது நியாயமாகவும் தெரியலை; ஆனா என்ன ப்ண்றதுன்னும் புரியலை.

இது ரொம்பவும் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்;
எல்லோரும் இதை சும்மா விட்ராதீங்க.

Friday, June 24, 2005

22. ஒரு GK test...?

To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation which is the soul of the caste system. The hereditary principle is an eternal principle. To change it is to create disorder."

எங்கே, இது யார் சொன்னதுன்னு கண்டுபிடிங்க, பார்க்கலாம். உங்கள் பதில்/ஊகம் சரிதானா என்று
இங்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

பி.கு. தெரியலைன்னா எதுக்கும் நம்ம 'காஞ்சி பிலிம்ஸ்'காரர்ட்ட ஒரு வார்த்தை கேளுங்க.

21. நனி நாகரீகம்...ரொம்ப தூரம்.

இன்றைய (25.06.'05 வெள்ளிக்கிழமை) இந்து செய்தித்தாளைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது - வந்திருந்த புகைப்படத்தில், நடுவில் சோனியா காந்தி இருக்க இருபுறமும் லல்லுவும் பஸ்வானும். எல்லோர் முகத்திலும் சிரிப்பு. தில்லியில் பஸ்வானின் மகள் திருமணத்தில் எடுத்த படம்.

பொதுவாகவே நமது அரசியல்வாதிகள் மத்தியில் பரஸ்பர உறவுகள் அவர்களின் கட்சி அரசியலைப் பொறுத்தே இருக்கும். இன்றிருக்கும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்ததே இன்றைய உறவுகள்; நேற்று வரையிருந்த உறவுகளைப் பற்றி எந்தவித கவலையுமின்றி இன்று அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்குத் தலை சுற்றுவது வழக்கம். இன்றைய 'அம்மையார்' நேற்று 'சகோதரி'யாக இருந்திருக்கலாம்; நேற்றைய 'கொலைகாரன்; இன்றைக்குத் 'தம்பி'யாக இருக்கலாம்; நாமும் அது 'காலத்தின் கோலம்' என்று தலையிலடித்துக்கொண்டு நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருப்போம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்து இப்போது எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு அரசியல்வாதிகள் தமது அரசியல் மாச்சரியங்களை மறந்து ஒருவர் வீட்டு திருமணத்திற்கு அடுத்தவர் வரும் இந்த நல்ல பண்புக்காக அவர்களை வாழ்த்தத்தான் வேண்டும்.

அவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் நம்மூர் அரசியல்வாதிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுமே "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்". யார் வீட்டுக் கல்யாணமாயினும் இவர்களுக்கு அவை கட்சி மேடைகள்தான். திருமணநாள் இரு வீட்டாருக்கும் எவ்வளவு முக்கியமான, மகிழ்ச்சிகரமான் நாள்; அன்று எதற்கு அங்கு அரசியல்? அழைப்பவர்களைக் குறை சொல்வதா; அழைக்கப்பட்டவர்களைச் சொல்வதா; இதை ஒரு வழக்கமாக்கிவிட்ட திராவிடக்கட்சிகளைக் குறை கூறுவதா, தெரியவில்லை. (மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது; நாம் பெற்ற பிள்ளைக்கு, காலமெல்லாம் நாம் நம் பிள்ளைகளைக் கூப்பிடுவதற்குரிய பெயரை யாரோ அவசர அவசரமாக வைத்துவிட்டுப் போகும் அவலத்திற்கு யாரை நொந்துகொள்வது?)


இந்த விஷயங்களில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையொன்றாலும், புரட்சித்தலைவி காலத்தில் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் சமூகப்பண்புகள் மிகவுமே நீர்த்துப்போய்விட்டன. சுனாமி மீட்பு நிதியாக தன் தந்தையின் பங்கு என்று ஸ்டாலின் பணவோலையுடன் முதலமைச்சரைக் கண்டபோது, கலைஞருக்குத் தன் வாழ்த்துக்களைச் சொன்னதாக வந்த பத்திரிக்கைச்செய்தி ஒன்று மட்டுமே நான் இதுவரை நம் முதலமைச்சர் சாதாரணமாக நம்மைப்போன்று நடந்துகொண்டதாக அறிகிறேன். மற்றபடி அவருக்கும் இதுபோன்ற சமூகப்பண்புகளுக்கும் (etiquettes)வெகு தூரம் என்பது மட்டுமின்றி அவரது கட்சிக்காரர்களுக்கும் அவைகளை வெகு தூ.....ரமாக்கிவிட்டார். நடந்து முடிந்த காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் தோற்ற தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளருக்குக் கை கொடுத்து வாழ்த்தியதாகச் செய்தித்தாள்களில் வாசித்தது சந்தோஷமாக இருந்தது. நிச்சயமாக அதற்காக தி.மு.க. தலைமையிடம் அவரைத் தண்டித்திருக்காது. தண்டிக்காது என்பதால்தான் அவர் அந்த நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார். ஆனால், ஒருவேளை அ.தி.மு.க. தோற்று அவர் எதிராளிக்குக் கை கொடுத்திருந்தால் ... ? இங்கே, கட்சி வேறு வேறாக இருந்தால் அப்பா-பிள்ளைகளாக இருந்தாலும் அடித்துக் கொண்டால்தான் அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த லட்சணம் சாவு வீடு வரை வந்து விடுவதுதான் மிகவும் வேதனை. பழைய நண்பரோ,மாஜி கட்சிக்காரரோ - யாராயிருந்தாலும், செத்தால் அங்கே போய் மாலை போட்டால் நாளைக்கு நமக்கு 'என்ன' கிடைக்கும் என்று பயப்படவேண்டிய நிலையில் உள்ள நமது அரசியல்வாதிகளைப் பார்த்து சிரிப்பதா; அழுவதா?


நனி நாகரீகம் பற்றி அய்யன் சொன்னதை எல்லாம் மேற்கோள் காட்டும் நமது அரசியல்வாதிகள் இன்னும்
கொஞ்சம் பண்போடு இருக்க முயற்சிக்கலாமே. ம்ம்ம்..இப்போதைக்கு முடியாதுதான்.

Tuesday, June 21, 2005

20. 'அந்நியன்' என்ன ஆனான்?

26 கோடி செலவு..27 கோடிக்கு காப்பீடு...அது இதுன்னு ஒரே build up. படம் என்ன ஆச்சு, ஆகப்போகுதுன்னு தெரியலை. ஆனால் பார்த்தவர்களிடமிருந்து கிடைத்த துண்டுச்செய்திகளும், பார்த்த சின்னத்திரை விளம்பரங்களும் தரும் சேதிகள் அப்படி ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. ஒரே க்ராஃபிக்ஸ் மயம்தான் என்பதுதான் கெட்ட & கேட்ட சேதி.

ஷங்கர் படத்தைப் பற்றி பெரிதாக எனக்கு எப்போதும் நல்ல எண்ணம் ஒன்றும் கிடையாது. கொஞ்ச நஞ்சம் இருந்ததும் 'பாய்ஸ்'- ஓடு போயே போய் விட்டது. சுஜாதாவுக்கும் அது ஒரு கண்திருஷ்டியாக போய் விட்டது. அவரை மாதிரி யாராவது ஷங்கரிடம் கொஞ்சம் சொல்லலாம் - இந்த க்ராஃபிக்ஸ் எல்லாம் - நம்ம 'காஞ்சி ப்லிம்ஸ்'காரர் மாதிரி - க்ராஃபிக்ஸ்னா க்ராஃபிக்ஸ் மாதிரியே தெரியக்கூடாது; அதுதான் உண்மையான, திறமையான ரசிக்கக்கூடியதுன்னு. உதாரணமா, பாம்பே இல்லாம ஆனா தத்ரூபமா பாம்பு மாதிரி (Anaconda), பொம்மைகளை வைத்தே பயங்காட்டுற (Jurassic Park) மாதிரி இல்லாம, கிறுக்குத்தனமா தண்ணீரில நடக்கிறது, வானத்தில பறக்கிறதுன்னு ஒரு சீனப்படம் - crouching tiger... - ஆஸ்கார் பரிசு வாங்கிச்சே, அதுதான் க்ராஃபிக்ஸ்னு ஷங்கர் நினைச்சுக்கிட்டார்னு நினைக்கிறேன். அப்படி எப்படி ஒரு சின்னப்பிள்ளைத்தனமான படத்திற்கு பரிசு கொடுத்தார்களோ, அது ஒரு கேவலம்.

நம்ம ஆளு என்னன்னா, ரொம்ப ரொமான்டிக்கான சீன்களில் கூட கதாநாயகன் திடீரென்று கழுதையா, புலியா மாறுவார். ரொம்ப சிம்பாலிக்கா காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு பலதலைப் பாம்பு - draw a lebelled picture-ன்னு தேர்வுல கேட்பார்களே அது மாதிரி -எழுத்துக்களோடு வரும். aesthetics-னா வீசை எவ்வளவுன்னு கேட்கிறது மாதிரிதான் இதுவரை ஷங்கரின் படத்தில் க்ராஃபிக்ஸ் பார்த்ததாக நினைவு. இந்த படமும் அதே மாதிரிதான் போலும்.

சுஜாதா சார், நீங்களாவது கொஞ்சம் சொல்லக்கூடாதா?

19. மன்னிக்கணும்..மன்னிக்கணும்..

மன்னிக்கணும்..மன்னிக்கணும்..பல பேர் என் வலைக்குவந்து புதிய பதிவுகள் இல்லாம
ஏமாந்து திரும்பியதாக தகவல். (லஷ்மி/ அவ்வை..இது எப்படி?) மன்னிக்கணும்..மன்னிக்கணும்.

இதுக்குத்தாங்க, என்னைமாதிரி கம்ப்யூட்டர் கத்துக்குட்டிகளுக்காகவே ஒரு correspondence course நடத்திட்டு அதுக்குப்பிறகுதான் வலையில் சேரணும்னு - முடிஞ்சா ஒரு entrance exam வச்சு, அதுக்குபிறகு அதை cancel பண்ணிட்டு, ஒரு/பல சாரள முறையில் நேர்காணல் வைத்து... - முடிவு பண்ணனும். ஏன்னா இப்ப பாருங்க, எங்க ஊரை விட்டு சென்னைமாநகரம் வந்தேன் (ஐயோடா, தருமி பற்றி கொஞ்சம் சொல்லித்தொலைச்சிட்டேனே..) . மகள் வீட்டுக்கு (மறுபடியும், தப்பா வயசு சொல்லிட்டேனே, போகுது போங்க) கம்ப்யூட்டரில் எனக்குத் தெரிந்தவரை முட்டி மோதி நானும் என்னென்னவோ பண்ணிப்பார்த்தேன். ஹு..ஹும்..என் பாச்சா பலிக்கலை. சரி, ஆபத்பாந்தவா அப்டின்னு திரு. பத்ரிக்கு ஒரு மெயில் அடித்து, அவர் செல் எண் வாங்கி, காரில் போய்க்கொண்டருந்தவரைப் பிடித்து, ஒரு tinkle கொடுத்தேன். சும்மா சொல்லக்கூடாது...ஒவ்வொன்றாக சொன்னார். நல்ல பொறுமை. எனக்கே புரியும்படி சொல்லிக்கொடுத்தார்னா பார்த்துக்கங்களேன். (மறுபடியும், மிக்க நன்றி பத்ரி).

ஆனாலும், மீண்டும் XP-க்காகக் காத்திருந்து...இப்போதான் ஒருவழியா மறுபடியும் என் வலைக்குள் மீண்டும் நுழைகிறேன். ( அது யாரு அங்கே, 'கஷ்டம்டா, சாமி'ன்னு'
சொல்றது? இதான வேண்டாங்றது.)

பி.கு. இந்த இடைப்பட்ட வேளையில் ஒரு வாரத்திற்கு முன்பு எப்படியோ தட்டுத் தடுமாறி 'விருந்தினர் வரவு எண்ணிக்கையை' உள்ளே சேர்த்துவிட்டேன். அப்படியே ஒரு கடிகாரத்தையும் சேர்க்க முற்சித்தேன். இதுவரை முடியவில்லை. பார்ப்போம்..