Tuesday, June 26, 2012

576. ஹதீஸ் - சில குறிப்புகளும் ஒரே ஒரு கேள்வியும்.




 *


பிறப்போடு ஒட்டிப் பிறந்த மதங்களிலிருந்து நம்மை நாமே பிரித்தெடுப்பது மிகவும் கடினமான பிரச்சனை. எந்த மதத்தில் பிறக்கிறோமோ அந்த மதம் நம்மை முழுமையாக ஆட்கொள்வதும் மிகவும் சாதாரணமாக நடப்பதே. அதிலும் கிறித்துவனாகப் பிறந்த எனக்குச் சிறு வயதிலிருந்தே தொடர்ந்த மதப் பாடங்களும் பயிற்சிகளும் வீட்டிலும், கோவிலிலும், பள்ளியிலும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டேயிருக்கும். இளம் வயதில் விதைக்கப்படும் அந்த விதைகள் வேரூன்றி ஆழமாக வளர்வதும் இயல்பே. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகள், அச்சமூட்டல்கள், அறிவுரைகள் என்று இவைகள் தொடர்ந்து கிடைக்கின்றன. இவைகளிலிருந்து நாம் பொதுவாக விடுபடுவதில்லை. 

ஆனாலும் அங்கங்கு சில விதிவிலக்குகள் உண்டல்லவா? அது போல் என் நாற்பதுகளில் சில ஐயங்கள் .. சில கேள்விகள் .. சில பதில்கள் என்று ஆரம்பித்த நிலை, என் ஐம்பதுகளில் சில முடிவுகளை எனக்குத் தந்தன. அந்த முடிவுகளை ஏற்கத்தான் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது. என் முடிவுகள் எனக்கே அந்நியமாகப் பட்டன. காலத்தின் நீட்சியில் என் முடிவுகளுக்கு என்னை நானே பழக்கப்படுத்திக் கொண்டேன். ’உண்மையிலேயே கடவுள் என்று ஒன்று இல்லை என்கிறாயா?’ என்று யாரும் அழுத்தி ஓங்கிக் கேட்டால் ‘ஆமாம்’ என்று சொல்லவே பல ஆண்டுகள் பிடித்தன. 

பதிவுலகம் வந்ததும் மதங்களைப் பற்றிய மாறிய என் மன நிலையை எழுத ஆரம்பித்தேன். கிறித்துவ நம்பிக்கைகளைப் பற்றிய என் கேள்விகள் என எழுதி முடித்த பின் மற்ற மதங்களைப் பற்றிய என் கேள்விகளையும் தொகுத்தேன். அது மதங்களில் என் ஆரம்பக் கல்வியாக இருந்தது. கிறித்துவம் பற்றியெழுதும்போது என் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக வெகு சில கேள்விகளே வந்தன. இந்து மதம் பற்றியெழுதிய போது எழுந்த கேள்விகள் இந்து சமயம் – சாதிப் பிரிவினை என்ற அடிப்படையில் மட்டுமே அதிகமாக இருந்தன. ஆனால் இஸ்லாமியம் பற்றிய கட்டுரைகள் ஆரம்பித்த போதே பல ஆக்ரோஷமான கேள்விகளும் எதிர்ப்புகளும் பீறிட்டு வந்தன. ஆனால் நாட்கள் கடந்து செல்ல இஸ்லாமியப் பதிவர்களுக்குள் இருந்த கட்டுப்பாடு நன்கு புரிந்தது. ஒரு நேரத்தில் ஒரு பதிவர் மட்டும் தொடர்ந்து விவாதம் நடத்துவார். அதன் பின் அடுத்தவர் ஒருவர் வருவார். தொடர் சங்கிலியாக ... அவர்களுக்குள் ஏதோ ஒரு நேர்த்தியானக் கட்டுப்பாடு இருக்கும் போலும்.

இன்னொன்றும் புரிந்தது. இஸ்லாமியத்திற்கு எதிரான பதிவுகளை நோக்கி அவர்களது விவாதங்கள் வரும் ஆனால் அவர்களிடம் முறையான பதில் இல்லாத பொழுது அப்பதிவுகள் பக்கமே யாரும் வரமாட்டார்கள். சான்று 1: இங்கே வந்து பாருங்கள். ஒரு இஸ்லாமிய பதிவரும் எதிர்ப்பு ஏதும் சொல்லவில்லை.  சில பதிவுகளில் எவ்வளவு சான்றுகள் / விளக்கங்கள் கொடுத்தாலும் அதில் எதையும் ஒத்துக் கொள்வதில்லை. என் முயலுக்கு மூன்றுகால் தத்துவம் தான். சான்று 2: இங்கு வந்தால் தெரியும். சில பதிவுகள் பக்கமே அவர்கள் வருவதில்லை. (இப்பதிவும் அப்படிப்பட்ட ஒரு பதிவாக இருக்கலாம்!) இதற்கான சான்றிற்கு இங்கு வாருங்கள். 

கிறித்துவனாக வளர்க்கப்பட்ட போது தொடர்ந்து ஒரே மாதிரியான “கதைகள்”,. விவாதங்கள், விசுவாச நம்பிக்கைகள் என்று தொடர்ந்து இருந்து வந்தன. இவைகள் சிலருக்கு ஒரு வயது வரையும், பலருக்கு வாழ்க்கை முழுமையும் இந்த தொடர் நம்பிக்கைகள் வாழ்வோடு பின்னிப் பிணைந்து நிற்கின்றன. இந்த நம்பிக்கைகளில் பலத்த தீவிரம் இருப்பதும் உண்மைதான். ஆனால் இஸ்லாமியத்தில் இளம் வயதில் ஏற்படும் தீவிர நம்பிக்கைகள் எப்படி இந்த அளவு மிகத் தீவிரமாக அவர்கள் பலரின் முழு வாழ் நாள் முழுவதும் நிரம்பி நிற்கிறது என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு கேள்விதான். 

கிறித்துவத்தில் சொல்லித் தரப் படும் நம்பிக்கைகள், கேட்கப்படும் கேள்விகளுக்குத் தரப்படும் பதில்கள் எங்கும் எப்போதும் ஒரே மாதிரியாகவே உள்ளன. கானான் தேசத்துப் பெண்ணிடம் ஏசு ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டார் என்று கேட்டால், அந்தப் பெண்ணின் விசுவாசத்தை வெளிக்கொணரவே அவ்வாறு கேட்டார் என்பதுதான் ஒருமித்த பதிலாக இருக்கும். (இந்த நிகழ்வு பற்றி அதிகம் அறிய இங்கே   வாருங்களேன்!) தலைகால் புரியாத தமத்திரித்துவம் – holy trinity – என்பது பற்றிக் கேட்டால், இஸ்லாமியத்தில் ‘விதி’ என்பதற்கான விளக்கம் கேட்டால் கிடைக்குமே அதே பதில் – இது மனித மூளைக்கு அப்பாற்பட்ட விஷயம். இது புரியாது. புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு - என்ற பதில்தான் வரும்.
என் புரிதலில் இஸ்லாமியக் குழந்தைகளுக்கும் இதே போன்றுதான் மதங்களைப் பற்றிய கற்பித்தல் இருக்கும் போலும். ஏனெனில் இம்மத்த்திலேயும் சிறுவர் முதல் பெரியவர் வரை சில கோட்பாடுகளை எல்லோரும் ஒரே மாதிரி ‘அச்சுக் கோர்த்த்து போல்’ சொல்வார்கள். 


எனக்குத் தெரிந்த சில கோட்பாடுகள் இவை: 
·          இஸ்லாம் ஒரு அமைதியான மதம்.
·          இஸ்லாம் தன் ஏகத்துவத்தால் உலகம் எங்கும் பரவியது; வாளால் பரவியதாகச் சொல்வது தவறு.
·          1400 ஆண்டுகளாக பல எதிர்ப்புகளுக்கு நடுவில் வளர்ந்து வந்துள்ளது.
·          எல்லாக் கேள்விகளுக்கும் எங்கள் மதத்தில் பதில் உண்டு.
·          குரானின் கோட்பாடுகள் எல்லாம் அறிவியலோடு இணைந்தவை.
·          நபி எல்லாவற்றிற்கும் மேலானவர்.
·          என் தாய் தந்தை எல்லோரையும் விட நான் நபியை நேசிக்கிறேன்.
·          நபி மனிதருள் மாணிக்கம்.
·          நபி நட்த்திய போர்கள் எல்லாமே தன்னையும் தன் கூட்டத்தையும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவே நடந்தது.
·         முந்திய நபிகளுக்கு அல்லா கொடுத்தவைகள் எல்லாம் மனிதக் கரங்களால் மாற்றப்பட்டு திரிக்கப்பட்டு விட்டன.
·         முகமதுவிற்குக் கொடுத்த குரான் மட்டும் மனிதக் கரங்களால தீண்டப்படாமல் பாதுகாக்கப்பட்டு, அல்லாவின் வார்த்தைகளாகவே உள்ளன.
·         முகமது வஹி பெற்றதிலிருந்து தாஷ்கண்ட் குரான் வரை நடந்தவைகளை ஒரு கதை போல் ஒரு எழுத்தும் மாறாமல் ஒரு வரலாறு. (ஏறக்குறைய எல்லா குழந்தைகளும் இதை மனனம் செய்து விடுவார்கள் போலும். வேறு எந்தக் கருத்தை யார் சொன்னாலும் இந்தக் கதைக்குள் அவை நுழைய முடியாது.)
·         யார் முயற்சித்தாலும் குரானின் மொழி நடை போல் இனி யாரும் எழுத முடியாது.. 

– இப்படி பல ..........................


ஆனால் இந்தக் கோட்பாடுகளைத் தாண்டி பலருக்கும் தங்கள் மதத்தின் எல்லா பக்கங்களும் தெரிவதில்லை. என்னுடன் வேலை பார்த்த, இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றும் நல்ல இஸ்லாமிய நண்பரிடம் நாலைந்து வருடங்களுக்கு முன் முகமதுவிற்கு எத்தனை மனைவியர் என்று கேட்டேன். நான்கு என்றார். மஜீத் பாய், அவருக்கு ஒன்பதோ பத்தோ என்றேன். நம்ப மாட்டேன் என்றார். அவருக்கும் வயது அப்போது கொஞ்சமல்ல .. 70+  பழைய மாணவி ஒருவர் எங்கள் மதத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு என்றார். மற்ற மதங்களைப் பற்றி என்ன தெரியும் என்றேன். ஒன்றும் தெரியாது; எங்கள் மதம் பற்றித்தான் தெரியும் என்றார்; அப்படியென்றால் எப்படி எல்லாக் கேள்விகளுக்கும் எங்கள் மதத்தில் பதில் உண்டு என்கிறீர்கள் என்றேன். பதிலில்லை. இன்னொரு பழைய மாணவர் என்னிடம் விவாத்த்திற்கு வந்தான். நீங்கள் எழுதியதைக் கொடுங்கள் என்றான். கொடுத்தேன். அதன்பின் என்னிடம் பேசுவதைத் தவிர்க்க நினைத்தான். என்னப்பா .. படிச்சிட்டியா என்றேன். படிக்கவில்லை என்றான். ஏனென்றேன். நீங்கள் நபியைப் பற்றிச் சொல்லும்போது உடனே அடைப்பானுக்குள் peace be upon him என்றெல்லாம் போடவில்லை. அதனால் அதனை நான் வாசிக்க மாட்டேன் என்றான். நல்ல பிள்ளை!

இதில் இன்னொரு சிக்கல். இஸ்லாமில் குரான் மட்டுமின்றி ஹதீஸுகளும் நிறைய உண்டு. பல இஸ்லாமியருக்கு எது குரானில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளை; எது ஹதீஸிலிருந்து கொடுக்கப்பட்ட கட்டளை என்பது தெரியாது என்பது வெளிப்படை உண்மை; சான்றாக, விருத்த சேதனம் செய்வது குரானில் சொல்லப் படாத ஒன்று. ஆயினும் பல இஸ்லாமியர் அதுவும் குரானில் சொல்லப்பட்ட, விலக்கப்பட முடியாத ஒரு கட்டளை என்று நினைக்கின்றனர். இஸ்லாமியர் அனைவரும் விருத்தசேதனம் செய்வதை ஒரு தெய்வீகக் கட்டளையாகத்தான் நினைக்கின்றனர்.


இந்நிலையில் இஸ்லாமியக் கோட்பாடுகளில் ஹதீஸுகளின் நிலைபற்றிப் பேசவே இக்கட்டுரை.
·          
*   அல்லா தன் வார்த்தைகள் மட்டுமே முக்கியம் என்றார். ஆனாலும், ஹதீஸுகள் கிளைத்துள்ளன.

*        முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.


ஹதீஸ்களைப் பற்றிய தகவல்கள்;

இஸ்லாமியரோடான விவாதங்களின் போது அவர்களது விவாதங்கள் வெறும் குரானிலிருந்து  மட்டுமின்றி ஹதீஸுகளிலிருந்தும் மேற்கோள்கள் வரும். பல  வேளைகளில் ஹதீஸுகளில் குறை சொன்னால், இந்த ஹதீஸ் குறைபாடுள்ளது என்று வரையறுக்கப்பட்டுள்ளது என்ற பதில்கள் வருவது வழக்கமே. இப்படிப்பட்ட ஹதீஸுகள் எப்படி வழக்கிற்கு வந்தன என்றால் ஹதீசுகள் வரையறுக்கப்படும் வரலாற்றைச் சொல்வதுண்டு.  அந்த ஹதீஸுகள் குறைபட்டது என்றால் ஏன் இன்னும் வழக்கில் உள்ளது? அவைகள் வழக்கிலிருந்து எடுபட்டிருக்க வேண்டாமா என்று கேட்டால் முறையான பதில்கள் வருவதில்லை. 

 
ஹதீஸ் என்றால் ’உரையாடல்’ என்று பொருள். இவைகள் முகமது தன் வாழ்வில் கூறியவைகளின் தொகுப்புகளே. முகமதுவோடு இணைந்திருந்தோர்களிடமிருந்து தொகுத்த இவைகள் எண்ணிக்கையில் பலவாக இருந்தாலும் ஸ்ஹீஹூல் புகாரீ, சுனன்ன் அபூதாவூத், ஸ்ஹீ முஸ்லீம் போன்ற ஆறு தொகுப்புகளே முக்கியமானவை. 

ஹதீஸுகளைப் பலவாறாகப் பிரிக்கிறார்கள். ஹதீஸ் குத்ஸி என்பவை முகமது, அல்லாவே சொன்னதாகச் சொல்லும் வசனங்கள்; ஆனால் இவை குரானில் இடம் பெற்றிருக்காதவை. ஸ்ஹீஹ் என்பவை முதல் தரம் (!) என்று அழைக்கப்படும் ஹதீஸுகள். குறைபாடுள்ளவைகள் லயீப் என்றழைக்கப்படுகின்றன; பொய் வசனங்கள் எனக் கருதப்பட்டவைகள் மல்லூஉ என்றழைக்கப்படுகின்றன. 

தொகுப்புகள் வகை வகையாக இருந்தாலும் முகமது, அல்லா தனக்குச் சொன்னதாகச் சொல்லும் வசனங்களைத் தவிர தான் சொல்லும் வசனங்களைத் தொகுக்கக் கூடாதென முகமதுவே சொல்லியுள்ளார்.  

Ibn Saeed Al-Khudry என்ற முகமதுவின் தோழர், “நான் சொல்வதில் குரான் வசனங்களைத் தவிர வேறெதையும் எழுதி வைக்காதீர்கள்; எழுதியவைகளையும் அழித்து விடுங்கள்” என்று முகமது சொன்னதாக [Ahmed, Vol. 1, Page 171, and Sahih Moslim, Zuhd, Book 42, Number 7147] – ல் குறித்துள்ளார். முகமதுவின் வசனங்களை உடனிருந்து தொகுத்த Zayd Ibn Thabit முகமது இறந்து 30 ஆண்டுகள் கழிந்த பின், Khalifa Mu'aawiyah என்பவரிடம் முகமதுவின் வாழ்க்கைக் குறிப்பொன்றைக் கூறினார். அதனை எழுதி வைக்கும்படி Mu'aawiyah சொன்ன போது Zayd மறுத்து விட்டார். ‘குரானைத் தவிர வேறெந்த ஹதீஸுகளையும் குறித்து வைக்க வேண்டாமென முகமது கூறியுள்ளார்’ என்றார். 

அல்லாவே நேரடியாக வந்து ஹதீஸுகளை எழுத வேண்டாமென்று சொன்ன நிகழ்வு ஒன்றை Ibn Al-Salah எழுதிய மிகவும் பிரபலமான "Ulum Al-Hadith" என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. "Taq-yeed Al-Ilm", என்ற நூலில் அதன் ஆசிரியர் Abu Saeed Al-Khudry கூறுவது: ’முகமதுவின் கூற்றுகளை எழுத உத்தரவு கேட்ட போது, அவர் மறுத்து விட்டார்’. 

முகமது தன் இறுதிப் பிரசங்கத்தில் கூறிய ஒரு சொற்றொடர் சுன்னி, சியா பகுதியினரால் வெவ்வேறாகக் கூறப்படுவதிலிருந்தே ஹதீஸைப் பற்றிய வேற்றுமைகள் புரியும்.  

1-Second version, " I left for you what if you hold on to, you will never be misguided, the book of God and my Family. Moslim 44/4, Nu2408; Ibn Hanbal 4/366; darimi 23/1, nu 3319.
இது சியா பிரிவினரின் வசனம்.
2-Second version, "I left for you what if you hold on to, you will never be misguided, the book of God and my Sunnah" . Muwatta, 46/3
இது சுன்னி பிரிவினரின் வசனம்.
3- Third version, "I left for you what if you hold on to, you will never be misguided, the book of God." Moslim 15/19, nu 1218; Ibn Majah 25/84, Abu dawud 11/56.
இது சியா, சுன்னி இருவருக்கும் பிடிக்காத பிரிவினரின் வசனம்!


ஹதீஸுகளின் வரலாறு:
குரான் ஒரு முழுமையான,சிறப்பான, விளக்கமான நூல் (Quran is a complete, perfect and full detailed book.) என்பதற்கான குறிப்புகள் 6:19,38,114,115; 50:45, 12:111 என்ற வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. 6: 115 –ல் ’உம்முடைய இறைவனின் வாக்கில் உண்மையும் நீதியும் முழுமையாக உள்ளன. (பிறகு எதற்கு ஹதீஸ்?)


முகமதுவிற்குப் பின் வந்த நான்கு கலிபாக்களும் குரானின் முழுமைத் தன்மையை நம்பினார்கள். 6:114 ‘எவர்களுக்கு நாம் வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இவ்வேதம், உம்முடைய இறைவனிடமிருந்து சத்தியத்துடன் இறங்கியிருக்கின்றது என்பதை நன்கறிவார்கள்’ என்கிறது. முகமது இறந்த இரு நூறு ஆண்டுகள் வரை இந்தக் கட்டுப்பாடு முழுமையாக இருந்து வந்துள்ளது. 

முகமதுவோடு இணைந்திருந்த அபு பக்கர் தான் எழுதிவைத்த 500 ஹதீஸுகளை எரித்துப் போடும் வரை தூக்கமின்றி இருந்தாராம். Omar Ibn Al-Khattab முகமதுவின் தோழர்கள் ஹதீஸுகளைக் கூறுவதைத் தடை செய்தார். ஓமர் முகமதுவின் வசனங்களை எழுதி வைக்க ஆவல் கொண்டிருந்தும், அவைகள் இஸ்லாமியரால் குரானை விடவும் மேலாகக் கருதப்பட நேரிடலாம் என்ற அச்சத்தால் அப்படியேதும் எழுதாதிருந்தார். மேலும் அவர் Abu Hurayra என்பவரை ஒரு பொய்யர் என்று கூறி அவரை அவரது தேசமான ஏமனுக்கு அனுப்பிவிடுவதாகப் பயமுறுத்தினார்; ஆனால் ஹுரைய்ரா ஓமர் இறந்த பிறகு தன் ‘வேலையை’த் தொடர்ந்தார்; பல ஹதீஸுகளை எழுதித் தள்ளினார்! 

Jami' Al-Bayan 1/67 என்பவர் ‘நானும் சில நூல்களை எழுத எண்ணினேன். ஆனால் அவைகளால் கடவுளின் நூல் கைவிடப்படலாம் என்பதால் எழுதவில்லை; கடவுளின் நூலை மாற்றுவிக்கும் எந்த நூலையும் எழுத மாட்டேன்’ என்கிறார்.

இவ்வளவு கட்டுப்பாடு இருந்தாலும் பின்னால்  Khalifa Omar Ibn Abdel-Aziz ஹதீஸுகளையும் சுன்னாக்களையும் எழுத அனுமதியளித்தார். அதுவரை அல்லாவின் வார்த்தைகள் என்றிருந்த கட்டுப்பாடு தகர்க்கப்பட்டு, அல்லாவாலும், முகமதுவாலும் தடைசெய்யப்பட்ட ஹதீஸ், சுன்னா இவைகள் முக்கிய இடம் பெற்றன.


எத்தனை ஹதீஸுகள்? 

Malik Ibn Anas -- 500 ஹதீஸ்கள்.
Ahmed Ibn Hanbal -- 700,000 ஹதீஸ்களிலிருந்து 40,000 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன; அதாவது  94% விழுக்காடு பொய்யான, திரிக்கப்பட்ட ஹதீஸுகளாகக் கருத்தப்பட்டுள்ளன. 
Bukhari -- 600,000 ஹதீஸ்களிலிருந்து 7275 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன;, 99%  தவறானவை.
Moslem --  300,000 ஹதீஸ்களிலிருந்து 4000 ஹதீஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன;,  99%  விழுக்காடு தவறானவை. 

இதில் உள்ள குளறுபடிகள்:

Abu Hurayra  முகமதுவோடு இரு ஆண்டுகள் மட்டுமே உடனிருந்தவர். ஆனால் இவரது ஹதீஸுகளின் எண்ணிக்கை: 5374.  இவை ”Aahad" என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், இவை எழுதியவர் மட்டுமே இந்த ஹதீசுகளுக்கு சாட்சி. முகமதுவோடு பலகாலம் இருந்த அவரது மனைவி ஆயிஷா ‘பெயர் வாங்குவதற்காகவே’ ஹுரைய்ரா இத்தனை ஹதீஸுகளை எழுதியுள்ளார் என்று சொல்லியுள்ளார். 

ஹதீஸ்கள் எழுதிய பலரோடு ஹுரைய்ராவை ஒப்பிடுதல்:  
Abu Hurayra  -- 5374  -- 2 ஆண்டுகள் மட்டுமே முகமதோடு இருந்தவர்.
Aysha  --  மனைவி -- 2210
Umar Ibn al-Khattab -- 537
Ali Ibn Abi Talib  -- 536
Abu Bakr al-Siddiq -- 142  -முகமதுவோடு 23 ஆண்டுகள் இருந்தவர். 

ஹூரைய்ரா, ஓமரின் இறப்பிற்குப் பின் தொடர்ந்து ஹதீஸுகளை “உருவாக்கினார்”. ஓமருக்குப் பின் வந்த கலிஃபா Mu'aawiyah ஹூரைய்ரா போன்ற சிலரை முகமதுவின் உறவினரான Ali Ibn Abu Talibக்கு எதிராக பல ஹதீஸுகளை எழுத ஊக்குவித்தார் என்பது வரலாறு. ஹூரைய்ரா எழுதிய சில ஹதீஸுகளில், கலிஃபா Mu'aawiyah-வை அல்லாவிடம் கீழ்ப்படிதல் செய்வது போல் கீழ்ப்படிய வேண்டும் என்று ஹதீஸுகளை உருவாக்கினார். இது குரானுக்கு நேர் எதிர்மறையான புரட்டு. இதையெல்லாம்  எழுதும்போது ஹுரைய்ரா கலிஃபாவின் அரண்மனையில் சுகவாசம் செய்து வந்தார். 

.முகமதுவின் மனைவி ஆயிஷா ஹுரைய்ரா புதுப்புது ஹதீஸுகளை எழுதுவதாகக் கண்டித்தார். 
அல்லா, குரான் மட்டுமே ‘சிறந்த ஹதீஸ்’ என்று சொல்கிறார்.
39:23 – ”அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை”. 
7:185-ல் ”இந்த எச்சரிக்கைக்குப் பின் வேறு எந்த அறிவுரையின் மீது தான் இவர்கள் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள் ?”
6:112-113-ல் இதுபோன்ற ‘திருவிளையாடல்கள்” நடந்தேறும் என்றும் அல்லா கூறுவதாகக் குரானில் உள்ளது.
25:30-ல் ”என் இறைவா! என் சமூகத்தைச் சார்ந்த மக்கள் இந்தக் குரானை நகைப்புக்குரியதாக்கிக் கொண்டிருந்தார்கள்.”

இன்றையக் கிறித்துவம் பால் எழுதிய குழப்பவாதத்தால் மாறியது போலவே,  சுன்னி இஸ்லாமியராலும், புகாரி போன்றவர்களாலும் இன்றைய இஸ்லாம் திரிந்து விட்டது. 

இஸ்லாமியர்கள் ஹதீஸிற்காகவும் சுன்னாவிற்காகவும் தங்கள் உண்மையான மதத்தைத் திரித்து விட்டார்கள். இப்போதுள்ள இஸ்லாமியம் Bukhari, Moslem, Nesaay, Termethy, Abu-Daoud போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் மதமாக மாறிவிட்டது. அல்லா முகமதுவிற்குக் கொடுத்த இஸ்லாமியம் இல்லை அது. 

புகாரி Ali Ibn Abu Talib போன்ற தனது அரசியல் வெறுப்பாளர்களை வைத்தே எந்த ஹதீஸை சேர்க்கலாம் .. விலக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அவர் இணைத்துள்ள சில ஹதீஸுகள் குரானுக்கு விரோதமான, ஏற்கெனவே கூறப்பட்ட ஹதீசுகளுக்கு விரோதமான, அல்லாவை கேலிக்குள்ளாக்கும், முகமதுவை இழிவாக்கும், அவரது மனைவியரை இழிவாக்கும் ஹதீஸுகளாக உள்ளன.  புகாரி, நம்பகத்தன்மையற்றவர்கள் என்று Moslem என்ற அறிஞரால் ஒதுக்கப்பட்ட 434 பேரின் ஹதீசுகளை ஏற்றுக் கொண்டுள்ளார். .


முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள்:
சில சான்றுகள்:
முகமது ஒரே இரவில் தன் ஒன்பது மனைவியரிடமும் இரவிலோ பகலிலோ கலவி கொள்வார். அவருக்கு 30 மனிதர்களின் புணரும் சக்தி இருந்தது. – இது எந்த வகையில் முகமதுவிற்குப் புகழ் சேர்க்கும்?

சாஹிஹ் (Sahih) நூல்கள் குரானுக்கு மாறான சில சட்டங்களைத் தருகின்றன. சான்றாக, அல்லா கொடுக்காத ஒரு தண்டனையை முகமது தருவதாக உள்ளது. பாலியல் கள்ளத் தொடர்பிற்கு அல்லா 100 கசையடிகள் என்ற தண்டனை தர (24:2), முகமது கல்லாலெறிந்து கொல்ல வேண்டுமென்கிறார்.( Moslim Book 17, Number 4192) ஆனால் இதிலொரு வேடிக்கை! குரானிலும் கல்லாலெறிந்து கொல்ல வேண்டுமென்ற சட்டம் இருந்ததாகவும், ஆனால் அதை ஒரு ஆடு அதைத் தின்று விட்ட்து என்றும் அதனால் அச்சட்டம் இப்போது குரானில் இல்லையென்றும் சொல்லப்படுவதுண்டு. (அல்லா காப்பாத்தணும்னு நினச்சதை ஆடு தின்னுடுச்சே!) அல்லாவையோ, முகமதுவையோ, வஹிகளையோ இதைவிட மோசமாகக் கேலி செய்யவோ, தரம் தாழ்த்தவோ முடியாது. 

முகமதுவின் “கனிந்த” உள்ளத்தை இன்னொரு ஹதீஸ் காட்டுகிறது. புகாரி Vol 8, நூல் 82, எண் 796 –ல் Oreyneh, Oqayelh என்ற இடங்களிலிருந்து வந்த சிலர் இஸ்லாமிற்குள் சேர முகமதுவிடம் அனுமதி கேட்கிறார்கள். முகமது அவர்கள் எல்லோரையும் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்க ஆணையிடுகிறார். அவர்கள் பிறகு முகமதுவின் ஆடு மேய்ப்பாளரைக் கொன்று விடுகிறார்கள். முகமது அவர்களைப் பிடித்து, கட்டி வைத்து, கண்களை நோண்டியெடுத்து, அவர்கள் கை கால்களை வெட்டி வனாந்திரத்தில் தண்ணீருக்கும் வழியின்றி இருக்கச் செய்து சாக விடுகிறார். முகவதுவின் கருணை வெள்ளத்தை இதைவிட எந்த ஹதீஸ் தெளிவாகக் காண்பிக்கும்?

Vol 7 , நூல் 62, எண் 52-ல் Jabir bin 'Abdullah, Salama bin Al-Akwa இருவருமாகச் சொல்லும் ஹதீஸ்: போராட்டக் களத்தில்  ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்தால் அவர்கள் Mut'a (தற்காலிகத் திருமணம்) செய்து கொள்ளலாம் என்கிறார் முகமது. இது மூன்று இரவுகளுக்கு மட்டும் உரிய கல்யாணம். அதன்பின் அவர்கள் விரும்பினால் திருமணத் தொடர்பை வைத்துக் கொள்ளலாம் அல்லது விட்டு விடலாம். இதில் சில குழப்பங்கள்: 1. முகமது தானாகவே ஒரு புதிய சட்டத்தைத் தருகிறார். 2, இச்சட்டம் அல்லாவின் 6:114, 66:1 சட்டங்களுக்குப் புறம்பானது. 3. திருமணத்தை ஒரு புதிய கோணத்தில் இச்சட்டம் பார்க்கிறது. Muta-திருமணங்கள் என்பதற்கான பொருளே ‘காமத்திற்கான கல்யாணம்’ என்பதாகும். உண்மையில், விபச்சாரத்தின் மறுபெயராகவே முடா-திருமணங்கள் உள்ளன.

குரானில் முகமது தானே வலிந்து எந்தவித அதியச் செயல்களைச் செய்ததாக இல்லை. ஆனால் புகாரி Vol:5, நூல் 58, எண்:208 – ல்  Anas bin Malik என்பவரின் ஹதீஸ்: மெக்கா மக்கள் முகமதுவிடம் ஒரு அதிசயச் செயலைச் செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். முகமது நிலைவை இரண்டாக உடைத்து, அதன் இடைவெளி வழியே ஹிராம் மலையைக் காண்பிக்கிறார்.

அல்லாவை நிந்திக்கும் ஹதீஸ்:
மோசே தான் கடவுளைப் பார்க்க வேண்டுமென்று சொல்ல  மனிதர்கள் தன்னைப் பார்க்க முடியாது என்கிறார் அல்லா. (7:143)  ஆனால், அல்லா தன்னை நம்புவர்களுக்கு முழு நிலவு போல் காட்சி தந்தார் என்று புகாரி Vol: 9, நூல்: 93, எண்: 529-ல் கூறுகிறார்.
Moslem Book:1, எண்: 349-ல் அல்லா மனிதனைப் போல் சிரிக்கிறார் என்கிறது!

வேறு சில விந்தையான ஹதீஸ்கள்:
 
Sahih Moslem, நூல் 23, எண் 5017:- நின்றுகொண்டு நீர் அருந்தாதே. அப்படி நின்று கொண்டு நீர் அருந்தி விட்டால், ஹுரைய்ரா அந்த நீரை வாந்தி எடுக்க வேண்டும் என்கிறார்.
 
Sahih Moslem, நூல் 2, எண் 522–ல் நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதே! (முகமது நின்று கொண்டு சிறுநீர் கழித்த்தாகவும், இல்லையென்றும் (Hanbel) ஹதீஸ்கள் உள்ளன.)
ஆதாம் 60 கைகள் அளவு உயரத்திலும், 7 கைகள் அளவு அகலத்திலும் இருந்தார். (ஆக, ஆதாம் மிக மிகப் பெரியவன்!) ஹூரைய்ரா, Sahih Moslem இருவருமே ஆதாமைப் பற்றி இப்படிக் கூறுகிறார்கள். 


வேறு சில கேவலமான ஹதீஸ்கள்: 

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருப்பது ஹராம். அப்படி தனித்திருக்க வேண்டுமானால் அந்தப் பெண் அந்த ஆணுக்குத் தன் முலைகளைச் சப்புவதற்குக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் உறவு ஹலால் ஆகி விடுகிறது.!!!!!!!!!!!!!!!

இதற்கான சான்று:
 Sahih Muslim Book 008, Hadith Number 3426.
Sahih Muslim Book 08. Marriage

Chapter: Suckling of a young (boy).

Ibn Abu Mulaika சொன்னது: ‘ஆயிஷா, Sahla bint Suhail b. 'Amr என்பவர் முகமதுவிடம் வந்து சலிம் என்ற சுதந்திரம் கொடுக்கப்பட்ட அடிமை எங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறான். அவன் இப்போது வயதுக்கு வந்து விட்டான். அவனுக்கு பாலியல் பற்றிய அறிவு வந்து விட்டது என்றார். அதற்கு முகமது, அவனை உன் முலைகளைச் சப்புவதற்கு அனுமதி. இதனால் அவன் உனக்கு ஹலால் ஆகி விடுவான்.’

இந்த ஹதீசை ஓராண்டு வரை நான் யாரிடமும் பயத்தினால் சொல்லவில்லை. அதன் பின் al-Qasim-இடம் இதைச் சொன்னேன். அவர் இதை ஆயிஷா கூறியதாக எல்லோரிடமும் சொல்லச் சொன்னார்.

http://en.wikipedia.org/wiki/Rada_%28fiqh%29- என்ற விக்கிப்பீடியாத் தளத்தில்: ’Radāʿ or ridāʿa’ என்ற சொல் சுன்னி இஸ்லாமியச் சட்டச் சொல்லாகும். முலை சப்புவதால் திருமண உறவுகள் தடையாக்கப்படுகிறது என்பது அதன் பொருள்.

இக்கருத்து ஆங்கிலத்தில் இங்கே:
Ibn Abu Mulaika reported that al-Qasim b. Muhammad b. Abu Bakr had narrated to him that 'Aisha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail b. 'Amr came to Allah's Apostle (May peace be upon him) and said: Messenger of Allah, Salim (the freed slave of Abu Hudhaifa) is living with us in our house, and he has attained (puberty) as men attain it and has acquired knowledge (of the sex problems) as men acquire, whereupon he said: Suckle him so that he may become unlawful (in regard to marriage) for you He (Ibn Abu Mulaika) said: I refrained from (narrating this hadith) for a year or so on account of fear. I then met al-Qasim and said to him: You narrated to me a hadith which I did not narrate (to anyone) afterwards. He said: What is that? I informed him, whereupon he said: Narrate it on my authority that 'Aisha (Allah be pleased with her) had narrated that to me.
 

 Radāʿ or ridāʿa  is a technical term from Sunni Islamic jurisprudencve meaning "the suckling which produces the legal impediment to marriage of foster-kinship".(http://en.wikipedia.org/wiki/Rada_%28fiqh%29)

இதுபோல் இன்னும் நிறைய ...


மீண்டும் – இரு குறிப்புகளும் ஒரு கேள்வியும்:
இரு குறிப்புகள்:
·         அல்லா தன் வார்த்தைகள் மட்டுமே முக்கியம் என்றார். ஆனாலும், ஹதீஸுகள் கிளைத்துள்ளன.
·         முகமது தன் உரையாடல்களை எழுதி வைக்கத் தடை விதித்தார். ஆனாலும் அவை ஹதீஸாக எழுதப்பட்டு இன்றும் நடைமுறைபடுத்தப் படுகின்றன.


ஒரே கேள்வி: 

·         பின் ஏன் ஹதீஸ்?






இதைப் பற்றிய இன்னும் ஒரு  கட்டுரை;    

http://www.quran-islam.org/articles/part_1/history_hadith_1_%28P1148%29.html





































*

Friday, June 22, 2012

575. ’அவாளுக்கு’ மட்டும் !



*


இன்று - 22.6.21 - இந்து தினசரியில் ஒரு கடிதம்.

இந்துவின் ‘Property Plus’ supplement (April 7, 2012)-ல் ஒரு விளம்பரம். வீடுகள் விறபனைக்கு வந்த விளம்பரத்தில் “only Brahmins” என்றிருந்திருக்கிறது. இது சட்டப்படி தவறானது; முறையற்ற விளம்பரம் என்று இனியன் இளங்கோ என்று ஒருவர் எழுதியுள்ளார்.

Your ‘Property Plus’ supplement (April 7, 2012) carried an advertisement for the sale of flats with a caption stating “only Brahmins,” excluding non-Brahmin castes, Dalits and religious minorities such as Muslims, Christians, Jains, Buddhists, Sikhs, etc., from buying or residing in the flats, thus discriminating against people on the basis of caste and religion, thereby violating the letter and spirit of Articles 15 and 17 of the Constitution. Excluding Dalits from buying the advertised flats can only be construed as an expression of untouchability against them.

Excluding people based on caste or religion from the sale, rental or residence of housing facilities is a blatant act of bigotry and oppression that causes great distress to the victims apart from leading to social balkanisation of our nation due to caste segregation and religious polarisation. Such advertisements and business practices which exclude people on the basis of caste or religion should be proscribed.

Iniyan Elango, Chennai

இந்துவும் இது தன் தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளது. எங்கள் பார்வையையும் மீறி வந்த விளம்ப்ரம் என்று சொல்லியுள்ளது.

 இந்த தொல்லையெல்லாம் இல்லாமல், சாதிப் பிரிவினைகள் இல்லாமல் நம்ம நாடு மாறாதா ...? எல்லோரும் மனுஷங்க தான்னு எல்லோரும் எப்போ உணரப் போகிறோம் என்றெல்லாம் மனசு கொஞ்சம் நினச்சிது. பகலில் இந்த நினைவில் இருந்திருந்தேன்.

சரவணா மீனாட்சி சீரியல் பார்த்ததும் வழக்கமாக தொலைப்பெட்டியிலிருந்து ஓடி வந்து விடுவேன். சூப்பர் சிங்கர்னு ஒரு வருஷமா ஒரு போட்டி நடக்குமே ..பாவிகளா .. இப்படியா இழுப்பாங்கன்னு நோகணுமே .. அந்த காட்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தியே இடத்தைக் காலி பண்ணிடுவேன். அப்படிப் போன பிறகு தங்ஸ் அந்த நிகழ்ச்சி பார்த்துட்டு போங்கன்னு கூப்பிட்டாங்கன்னு போய்ப் பார்த்தேன்.

அடப் பாவமே .. ஈஷ்வரா ... எல்லோருமே ‘அவாளா’ மாறிண்டிருந்தா. பாடரவா எல்லோரும் அவா மாதிரி ட்ரஸ் பண்ணிண்டிருந்தா... compere  பண்றவாளும் அப்படித்தான் ... அந்தப் பொம்மனாட்டி ஒண்ணு இருக்குமே .. லோகத்தில எல்லா மனுஷ மூஞ்சையும் உத்துப் பாத்தா சில மிருகங்களோட மூஞ்சு மாதிரி தெரியும்னு சொல்லுவா .. தெரியுமோ? அது மாதிரி அந்தப் பொம்மனாட்டியைப் பாத்தா ஒரு ஒட்டகம் மாதிரி எனக்குத் தோணும். நடக்கிறப்போ கூட ஒட்டகம் நடக்குறாப்ல தான் தோணும். இன்னைக்கி மூஞ்சு பூரா பவுடரை ஈஷிண்டு, மூக்குல பில்லாக்கு மாட்டிண்டு அலைய்றப்போ ஒரு  ஒட்டகம் அசமஞ்சமா பில்லாக்கு போட்டு நடக்குறது மாதிரி நேக்கு தெரிஞ்சது. அதுவும் அந்த அம்பி இருக்கானோ இல்லியோ .. அவன் பரட்டையா குடுமி, தாடி வச்சுண்டு ... அப்டியே அபிஷ்டு மாதிரி இருந்தான். காணச் சகிக்கலை .. அடுத்து... ஜட்ஜஸ் எல்லோரும் மாமி மாதிரி, மாமா மாதிரி வந்திருந்தா ... இம்புட்டுதான் நினச்சிண்டிருந்தேன். ஆனா பாருங்கோ ... சின்னப் புள்ளைகளோட தோப்பனார், அம்மா எல்லோரும் அதே மாதிரி ‘அவாளா’ வந்திருந்தா ... அதுக்கு மேல பார்க்க தோணலை... என்ன பாடினாளோ ... என்ன பண்ணினாளோ தெரியலை.

சும்மா சொல்லப்படாது ... விஜய் டிவி நல்ல நிகழ்ச்சியெல்லாம் கொடுப்பா. ஆனா ஏனிப்படி ஒரு  நிகழ்ச்சி பண்றான்னு புரியலை. இன்னொரு புதுசா ஒரு நிகழ்ச்சி தர்ரா ...’ ஆஹா!’ன்னு ஒண்ணு.... ஏன்னு நேக்கு தெரியலை .. அதுவும் அப்படியே அவாளோட நிகழ்ச்சி. நேக்கு என்ன தோண்றதுன்னா ...’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. . இருந்தும் ஆளாளுக்கு இப்படி நடத்துறாளே .. ஏன்?  யாருக்காக இப்படில்லாம் பண்றா? இப்படிப் பண்றவா எல்லோரும் அவாளும் கிடையாதுன்னு நான் நினச்சுண்டு இருக்கேன். பின் ஏன் இப்டி பண்றா...?


ஒரு வேளை அடுத்த வாரம் சூப்பர் சிங்கரை வன்னியருக்கு ..அதுக்கடுத்த வாரம் முதலியாருக்கு ... அதுக்கடுத்த வாரம் தலித்துக்கு, தேவருக்குன்னு பிரிச்சு கொடுப்பாளோ என்னவோ ... யாராவது தெரிஞ்சவா இருந்தா கொஞ்சம் கேட்டு சொன்னேள்னா ரொம்ப நன்னியாருக்கும்.

சொல்றேளா ....?



*
பி.கு. (10.7.12):
வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலருக்கு இது தவறு; சிலருக்கு இது சரி. ஆனால் மதுரை திடீர் நகர் - நகரின் சுத்தம் பேணுவோருக்கான வீடுகள் - பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஒரே சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அதாவது அந்தக் குடியிருப்புகள் ஒரு சாதியினருக்கே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. . ஆனால் இதில் யாருக்கும் வருத்தமோ கோபமோ ஏதுமில்லை ! எல்லோருக்கும் அது சரியாகவே படுகிறது !!






*

Friday, June 15, 2012

574. THE GNOSTIC GOSPELS ... 2

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 


THE CONTROVERSY OVER CHRIST'S  RESURRECTION:

HISTORICAL EVENT OR SYMBOL?



ஏசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதுவே - orthodox Christians - பழமைக் கிறித்துவத்தின் மிக முக்கியமான, அடிப்படையான நம்பிக்கை. (3)

கி.பி. 190 வருடத்து அறிஞர் டெரூலியன் (Terrullian) இதைப் பற்றிச் சொல்லும் போது, ‘இது மிகவும் முட்டாள் தனமானது; ஆனாலும் இதை நம்பியேயாக வேண்டும்'  என்கிறார்.

ஆனால் heretics என்றழைக்கப்படுவோர் இதனை நம்புவதில்லை. இதைப்பற்றிச் சொல்லப்படுவதையெல்லாம் அப்படியே எழுத்துக்கு எழுத்து நம்ப வேண்டியதில்லை என்பர்.  Gnostic Christians இந்நிகழ்வை பல்வேறு விதமாக உருவகப்படுத்துவார்கள். இதை ஊனோடும் உயிரோடும் தொடர்புபடுத்தாது, ஆன்மாவோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் டெரூலியன் இந்த நம்பிக்கையில்லாதவர்கள் கிறித்துவர்களாக இருக்க முடியாது; அவர்கள் எல்லோருமே பதிதர்கள் என்கிறார்.(5)

லூக, மார்க் இருவரும் ஏசு வேறு உருவத்தில் தங்களிடம் வந்ததாகச் சொல்கிறார்கள். ஜானின் கூற்றும் இவ்வாறேயுள்ளது. மரி மக்தலேனா கல்லறையின் முன் ஒரு தோட்டக்காரர் இருப்பதாகத்தான் முதலில் நினைக்கிறார். பால் ஏசுவின் குரலை கேட்டது இருவேறு விதமாகக்  கூறப்படுகிறது. பால், ஏசுவின் மீள் உயிர்ப்பு ஒரு மர்மம் ( a mystery) என்கிறார்.

புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களுக்கு உரியதாக இருந்தும், ஏன் பழமைக் கிறித்துவர்கள் (Orthodox Christians) அவைகளை ஒரு புறம் தள்ளி, ஏசு மீண்டும் உயிர்ப்பித்தார் என்பதை மட்டும் வலியுறுத்துவது ஏன்? இக்கேள்விக்கு என்னால் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இருப்பினும் இது நிச்சயம் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று சொல்ல முடியும்.  பீட்டர் போன்றவர்கள் கிறித்துவத் தலைமைக்கு உரிமை கோர வழி வகுக்கும் அரசியல் காரணத்திற்காகவே இந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். (6)

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவத் தலைமை இன்றுவரை நீடிப்பதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். Gnostic Christians இந்த நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதால் அவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வழிகள் அடைபடுகின்றன. அவர்கள் பழமைக் கிறித்துவர்களோடு (Orthodox Christians) போட்டியிட்டாலும், அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் - heretics - என்றே கருதப்படுகின்றனர்.

அரசியலும் மதமும் இணைந்தே முதலிலிருந்து செயல்பட்டு வந்துள்ளன. வெவ்வேறு விதமான கிறித்துவம் கிளைத்திருந்திருக்கின்றன. ஒருகுழு மற்றொரு குழுவைத் தாக்கி வந்துள்ளன. (7)

மரிய மக்தலேனா  உயிர்த்தெழுந்த ஏசுவை முதலில் பார்த்தார். இருப்பினும் பீட்டரே முதலில் பார்த்ததாகத்தான் இன்றுவரை பழமைக் கிறித்துவர்களும், சில பிரிவினைச் சபைகளும்  தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஏனெனில் பீட்டர் முதல் பிஷப் (போப்) ஆவதற்கான அடிப்படையே ஏசுவை முதலில் அவர் பார்த்தார் என்பதே ஒரு காரணமாகப் போயிற்று. இரண்டாம் நூற்றாண்டில் ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ் முதலில் ஏசுவைப் பார்த்தார் ( மரிய மக்தலேனா அல்ல.) என்று சொல்லப்பட்டது. (8)

கார்ல் ஹோல் - "Karl Holl - என்ற ஜெர்மானிய அறிஞர் உயிர்த்த ஏசுவைப் பார்த்தவர்கள் பட்டியலே மத ஆளுமைக்குக் காரணமாயிற்று என்கிறார். இந்தக் காரணம் இந்த 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் சொல்கிறார். பழமைக் கிறித்துவர்கள் இதில் மிகவும் தொடர்ந்த ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். இன்றைய போப் தான் ஏசுவை முதலில் பார்த்த பீட்டரின் வாரிசு என்ற உரிமையோடு உள்ளார். (10)

ஆனால் Gnostic Christians இந்த நம்பிக்கையில்லாமல் இருப்பதோடன்றி, இந்த நம்பிக்கையை ‘முட்டாள்களின் நம்பிக்கை’ -faith of the fools - என்கிறார்கள். ஏசு உயிர்த்தார் என்பதை ஆன்மிகப் பார்வையில் பார்க்க வேண்டும். அதை உடல் தொடர்பாக நினைக்கக் கூடாது.

நாக் ஹம்மாதி கண்டுபிடிப்புக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட Gospel of Mary என்ற gnostic பிரதிகளில் ஏசுவின் உயிர்ப்பு கனவில் அல்லது வலிப்பின் பிரம்மையில்  - visions received in dreams or in ecstatic trance - கிடைத்தவைகளே என்று சொல்லப்பட்டுள்ளது. (11)

நாக் ஹம்மாதி பிரதிகளில் ஒன்றான பிலிப்பின் விவிலியம் ஏசுவின் உயிர்ப்பை நம்பும்  கிறித்துவர்களைக் கேலி செய்கிறது. (12)

பழமைக் கிறித்துவர்களின் ஒரு பெருந்தலைவர் ஐரீனியஸ் - Irenaeus  -  நான்கு விவிலியங்களும் அந்தந்த ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டது என்று நம்புகிறார். ஆனால் மாத்யூ, மார்க். லூக், ஜான் இவர்களைப்பற்றிய வரலாறு  ஏதும் நமக்குத் தெரியாது. (17)

gnostic பிரதிகளின் ஆசிரியர்கள் பன்னிரண்டு சீடர்களைத் தாண்டியுள்ள மற்றவர்களையே அதிகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்கள் - பால், மேரி மக்தலேன், ஜேம்ஸ். இவர்கள் பீட்டரையும் சேர்த்த அந்தப் பன்னிருவருக்கும்   gnosis கிடைத்ததாகக் கருதுவதில்லை.

Gospel of Mary சீடராகக் கூட கருதப்படாத மேரி மக்தலேனாவிற்கே கடவுளின் காட்சி கிடைத்ததாகவும், பீட்டரை விட இவருக்கே அதிக ஞானம் கிடைத்ததாகவும் கூறுவர். Dialogue of Savior நூலில் இவருக்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. மற்ற சீடர்களை விடவும் இவரே மிக மேம்பட்டவர் என்றும் கூறுகிறது.  இவர் ‘எல்லாம் தெரிந்தவர்’ என்று - " woman who knew the All
"  அழைக்கிறது. (22)

Gnostic கருத்துக்களில்  ‘ஆன்மா’ ஒரு மனித உடலில் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதுண்டு. உடல் ஒரு கருவியாக இயங்குகிறது. இந்தக் கருத்துக்கள் கிரேக்க தத்துவ வழக்கங்களுக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதப்படுவதுண்டு. அதோடு, இந்து, புத்த வழக்கங்களுக்கும் மிக அருகாமையில் இருப்பதாகக் கருதுவதுண்டு. (27)












 *

Monday, June 04, 2012

573. கிறித்துவம்


கிறித்துவம் 16-ம் நூற்றாண்டில் கத்தோலிக்கம், பிரிவினைச் சபை என்று இரண்டாகப் பிரிந்தன. ஆனாலும் அதற்கு முன்பேயே கிறித்துவம் பல பிரிவுகளாகவும் இயங்கி, ஒன்றோடு ஒன்று இயைந்தும் வந்துள்ளன. ஆனால் 16-ம் நூற்றாண்டு ஏற்பட்ட பிரிவு இம் மதத்தை இரு தனிக்கூறுகளாகப் பிளந்தன - கத்தோலிக்கம் & பிரிவினையாளர்கள் (protestants) என்று பிளவு பட்டன. தலைமைகளும் பிரிந்தன. வேறு பல வேறுபாடுகளும் கிளைத்தெழுந்து இரு 'அணிகளும்' இனியும் ஒன்றாக இணையாது என்ற நிலைக்கு வந்துள்ளன. ஏனெனில் அடிப்படையில் சில முரண்பாடுகள் .. வேற்றுக் கருத்துகள்...   கத்தோலிக்கத்தில் புனிதர்கள் (saints), மேரியன்னை, ஏசு, பிதா என்று வகை வகையாகக் கும்பிடுவார்கள். ஆனால் பேச்சளவில் மட்டும் புனிதர்களையும், மேரியையும் கும்பிடுவதில்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனாலும் தனிப்பட்ட புனிதர்கள், மேரியன்னை மேல் மிகுந்த பக்தி கொண்டோர் அதிகம். கடவுளை மூன்று  ஆட்களாக, ஆனால் ஒரே தெய்வமாகக் கருதும் ஒரு விநோதம் உண்டு. Holy Trinity என்பார்கள். இதை யாரும் விளக்க முடியாது. இஸ்லாமில் ‘விதி’ விளக்கப்பட முடியாதது என்பார்கள். அது போல், புனித அகுஸ்தினார் போன்ற புனிதர்களின் பெயரைச் சொல்லி, இதை மனித மூளையினால் புரிந்து கொள்ள முடியாத ஒரு “தேவ ரகசியம்” என்று சொல்லித் தப்பிப்பதுண்டு.


இந்த Holy Trinity-ல் கத்தோலிக்க மரபில் ஏசுவிற்குத்தான் முதலிடம். பரிசுத்த ஆவி எனப்படும் Holy Ghost பிரிவினைச் சபைக்காரர்கள் முக்கிய இடம் கொடுத்த பின் கத்தோலிக்கர்களும் இப்போது ஏறத்தாழ இருபது முப்பது ஆண்டுகளாக அவர்களும் சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். பொதுவாக, கடவுள், கர்த்தர் போன்ற வார்த்தைகளுக்கு ஏசு மட்டுமே உரித்தானவராகத்தானிருந்தார். இப்போது கொஞ்சம் வேறுபாடுகள் வந்துள்ளன. பரிசுத்த ஆவிக்கும் கத்தோலிக்கத்தில் இப்போது தனிச் சிறப்பும் சேர்ந்துள்ளது. 


இப்பத்தியில் நான் கூறியிருப்பது எல்லாமே இத்தனை ஆண்டுகளாகக் கத்தோலிக்கத்தைப் பின்பற்றிய எனது அனுபவத்தின் மேல் கூறப்பட்டவையே. எனது சிறுவயதில் பரிசுத்த ஆவிக்கு ஜெபங்களில் அதிக சிறப்பிடம் இருந்ததில்லை. பிரிவினைக்காரர்கள் தாங்கள் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் தான் நான் அதிகமாக இந்த பரிசுத்த ஆவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவிக்கு சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்ததை கடந்த 30 ஆண்டுகளில் தான் அதிகம் பார்க்கிறேன்.


பிரிவினைக்காரர்கள் புனிதர்களின் பெயர்களை வைத்துக்கொள்வது, புனிதர்களில் பெயர்களில் ஆலயங்களைக் கட்டுவது இதோடு சரி. அவர்கள் மேல் தனிப்பட்ட ஜெபங்களோ, நம்பிக்கைகளோ வைப்பதில்லை. அதே போல் மரியன்னை மீது கத்தோலிக்கர் வைத்துள்ள ஈடுபாடு இங்கில்லை. ஏசுவின் அன்னை என்பதோடு அவர்கள் மரியாதை நின்றுவிடும். அவரை நோக்கி ஜெபங்கள் ஏதும் செய்யும் பழக்கம் கிடையாது. பிரிவினைக்காரர்களுக்கு சுதனும் (அதாவது, ஏசுவும்) பரிசுத்த ஆவியும் மிக முக்கியமானவர்கள். நாட்கள் ஆக ஆக என் வாழ்வில் நான் பார்த்தது என்னவெனில், பிரிவினைக்காரர்களுக்குப் பரிசுத்த ஆவி மேல் அதிக பக்தியும் நம்பிக்கையும் உண்டு. இவர்களது ‘சத்தமான’ கோஷத்தால் ஈர்க்கப்பட்ட கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவி மேல் இப்போது அதிக ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.


பழைய ஏற்பாட்டில் ’பிதா’விற்குத்தான் முக்கிய இடம். புதிய ஏற்பாட்டில் ஏசுவிற்கே முக்கிய இடம். சில இடங்களில் மட்டும் ‘பரிசுத்த ஆவி’ பற்றிப் பேசப்படும். ஆனால் இதையும் தாண்டி ‘யெஹோவா’ என்றோரு சின்ன அமைப்பும் உண்டு. இவர்கள் யூத வழி போல், பிதாவை மட்டுமே கடவுளாகக் கொள்பவர்கள். இவர்களிடம் சுதன், பரிசுத்த ஆவி இருவருக்கும் இடமில்லை!
 ‘யெஹோவா’க்காரகளும், பெந்தகோஸ்தே சபையினரும் மதத் தீவிரவாதிகள் என்பது என் கணிப்பு. பெந்தகோஸ்தே சபையினர் பரிசுத்த ஆவி மேல் அதிக நம்பிக்கையுள்ளவர்கள். அதோடு இதிலும் சிலர் தாங்கள் நோய்வாய்ப்பட்டாலும் மருந்து ஏதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சாமி கொடுத்ததை சாமியே எடுக்கட்டுமே என்ற நம்பிக்கை. நோய்வாய்ப்பட்ட சிலரைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்,. வலி நீங்குவதற்குக் கூட இவர்கள் மருந்து ஏதும் எடுக்க மாட்டார்கள்.  புண்ணைக் கொடுத்தவர் மருந்தையும் கொடுத்திருக்கிறாரே என்றாலும் பிடிவாதமாக ம்ருந்தை ஒதுக்கி விடுவார்கள். உடைகளிலும் தனித்து விளங்குவார்கள். பாரதி ராஜா ஸ்டைலில் புனிதப் புறாக்கள் மாதிரி உடை! இவர்களைப் பார்க்கும்போது  சிரிக்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்! 


யெகோவா சபைக்காரர்கள் ஏறத்தாழ இஸ்லாமியமும் யூதமும் சேர்ந்த ஒரு கலவை மாதிரி போலும். ஏக இறைத் தத்துவம் - அதாவது பிதாவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். Holy Trinity தத்துவம் இங்கு கிடையாது. ஆனால் பிதாவிடம்/கடவுளிடம் போவது ஏசுவின் வழியாக மட்டும். ஏசு சொன்னது போல் அவரே பிதாவிடம் போகும் வழி. பரிசுத்த ஆவி ஒரு கடவுளாக or at least part of Trinity or part of a god ஆக மதிப்பிடப்படுவதில்லை. It is just an 'energy' and not an entity.


இவர்களிடம் ஒரு வினோதம்! ரத்தத்தின் மேல் இவர்களுக்கு ஒரு பகைமை! ‘மாம்சத்தை அதன் உயிரான ரத்தத்தோடே புசிக்க வேண்டாம். (ஆதி.9: 3,4) ‘உங்களில் ஒருவனும் ரத்தம் புசிக்க வேண்டாம். (லேவி: 17:11,12) இவர்கள் எந்த நிலையிலும் ரத்த தானத்திற்கு எதிரானவர்கள். எந்த நிலையிலும் ரத்த தானம் கொடுப்பதை, பெறுவதை மறுக்கிறார்கள். (இதற்கு அறிவியல் விளக்கமும் அவர்கள் தருகிறார்கள்!!)ம்மொத்தம் 75 லட்சம் பேர் இதில் இருப்பதாகக் கூறினார்கள்.
Seventh Day Adventists (SDA) என்றொரு குழுவும் உண்டு. இவர்களும் பெந்தகோஸ்தே மாதிரி ஆட்கள் தான். ஆனால் இவர்கள் குழு ஆரம்பித்த வரலாறு கொஞ்சம் (எனக்கு) வேடிக்கையாக உள்ளது.

William Miller என்பவரே 1831-ல் இக்குழுவை ஆரம்பித்தவர். இவர் மார்ச் 21, 1843 -லிருந்து மார்ச் 21, 1844-க்குள் இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றார். இன்னொரு முக்கிய நபர் Ellen G. White. சிறு வயதிலேயே தலையில் அடிபட்டுச் சிரமப்பட்டவர்.தனக்கு கடவுளின் தரிசனம் கிடைத்ததாகவும் அதன் மூலம் கிடைத்த செய்திகளையும் அளித்துள்ளார். அவருக்குக் கிடைத்த ‘தரிசனம்’ தலையில் பட்ட அடியால் கிடைத்த post-traumatic experience என்று கருதப்படுகிறது. இந்த இருவரும் வளர்த்த குழு இன்று Seventh Day Adventists (SDA) என்றிருக்கிறது.


கிறித்துவத்தில் கடந்த நூற்றாண்டில் நடந்த இரு பெரும் தற்கொலைகள் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் மட்டுமின்றி அச்சத்தையும்,  அருவருப்பையும், கவலையையும் தருகின்றன.
HEAVEN GATE என்றொரு குழு Marshall Applewhite 1970-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு U.F.O. RELIGION. இவர் தனக்கும் ஏசுவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று கூறி வந்துள்ளார். மார்ச் 26, 1997 தேதியில் 39 நபர்கள் இவர்களது இடத்தில் தற்கொலை செய்து மடிந்துள்ளார்கள்.


The People's Temple என்ற பெயரில் இன்னொரு பெரும் குழு. James Warren (Jim) Jones - இதன் தலைவர். இங்கிருந்து வேறொரு கிரகத்திற்குப் போவதாக அவர்களது நம்பிக்கை. காவல் துறை இவர்களது தங்குமிடத்தில் மொத்தம் 914 : 638 பெரியவர்கள் & 276 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததைக் கண்டு பிடித்தது.

 
இவ்வாறு பல வகையில் பகுக்கப்பட்ட கிறித்துவத்தில் இப்போதோ மத வளர்ச்சி என்ற பெயரில் மூலைக்கொரு சபையும், முக்குக்கு ஒரு சபையும் கிளர்ந்துள்ளன. முன்பு ஏதாவது கொள்கை அடிப்படையின் பெயரில் சபைகள் பிரிந்தன. ஆனால் இப்போது 'மத வளர்ப்பு'’ ஒரு தொழிலாக முன்னேறி விட்டது. தனி நபர்கள் தங்கள் தங்கள் சபையை உருவாக்குகிறார்கள். ஒரு மாடி வீட்டின் மூலையில் நாலைந்து பேருடன் ஒரு சபை ஆரம்பிக்கப்படும். கூட்டம் பெருகும். Public address system ஒன்று வாங்குவார்கள். இன்னும் கூட்டம். காணிக்கையும் சேரும். சபை ஆரம்பித்த 'குரு' முதலில் தனக்கொரு நல்ல வீடு கட்டிக் கொண்டு. அதன்பின் சேரும் காணிக்கையில் பக்கத்திலேயே ஒரு shed கட்டி அதில் தன் ஜெபக்கூட்டங்களை நடத்துவது தான் இப்போதைய வழமை. அதன் பின் அந்த shed வளர்ந்து .. கிளைப்பது .. குருவின் ரீச்சைப் பொறுத்தது. so many business tactics. MNCக்கள் தோற்றுவிடும். இப்போது இவை export & import என்று பெரும் தொழில் வளர்ச்சி கண்டுள்ளன. 


மலை வாழ் மக்கள் என்றெல்லாம் போய் “ஊழியம்” செய்கிறார்கள். ‘ஊழியத்தோடு” நின்றால் பரவாயில்லை; “பிரதி பலனாக’ மத மாற்றங்கள் நடக்கின்றது. நான் நம்பிக்கையோடு இருந்த காலத்தில் என்னிடம் நன்கொடை வசூலிக்க வந்தவரைப் பார்த்த போது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது.ஏனெனில் எங்கோ தமிழ் நாட்டில் பிறந்த இவர் seven sisters எனும் கிழக்கு மாநிலங்களின் ஒன்றில் காடு மேடு என்று பாராமல், அறிவியல் தொடாத இடத்தில் உள்ள மக்களுக்கு ‘ஊழியம்’ செய்கிறார். என்ன செய்வீர்கள் என்றேன். SOAP, SOUP & SOUL என்றார். அப்படியென்றால் என்ன என்றேன். SOAP - சுகாதாரம் கற்றுத் தருகிறோம்; தடுப்பூசி கொடுக்கிறோம். SOUP - நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம். SOUL - எங்கள் மதத்தைக் கற்றுத் தருகிறோம் என்றார். 


எனக்கு ஒரு கேள்வி. வயத்துக்கு இல்லாதது கிட்ட நல்லது பண்ணினால் போற இடத்துக்கு நல்ல புண்ணியம்தான். ஆனால் அந்த மனுசங்க மனசு மாறி கிறித்துவத்திற்கு மாறுவது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் உணவுக்கும், மருந்துக்கும் தானே?  விவாதித்து, தங்களது பழைய மத வழக்குகளை விட இந்த மதத்தில் பெரிய தத்துவங்கள், உண்மைகள், வரலாறுகள் இருக்கின்றன என்று பார்த்தா மதம் மாறுகிறார்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் தானே அவர்களுக்கு! இதை அவரிடம் கேட்டேன். ’ஆக  நீங்கள் பணம் செலவு செய்து, பணத்தை விடவும் வேறு எதையும் விட பெரிதான ஆன்மாவை வாங்கி விடுகிறீர்கள். இது சின்னப் பிள்ளையிடம் மிட்டாய் கொடுத்து அதன் கழுத்திலிருக்கும் தங்க செயினை ஏமாற்றி வாங்குவது போல் தானே’ என்று  கேட்டேன். ’உங்கள் நன்கொடையே வேண்டாமென்று’ சொன்னார். மனசு கேக்காமல் இதையெல்லாம் பேசுவதற்கு முன் நான் நினைத்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். கடவுளோ, மதமோ ஏதோ ஒன்றை வைத்து இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்ற நினைப்பில் அதைக் கொடுத்தேன்.


இது மாதிரி கஷ்டப்பட்டு மதம் மாற்றுவோர் ஒரு பக்கம் என்றால் இருந்த இடத்திலிருந்தே பெரும் “ஊழியம்” செய்வோர் பெரிய புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  யார் கேட்டாலும் கடவுளுக்குக் காது கேட்கணும். கடவுளுக்கு மட்டும் selective ears இருக்கிறதா என்ன? ஆனால் கிறித்துவர்களில் பெரும்பான்மையோர் ‘அவர் ஜெபித்தால் நடக்கும்; இவர் கேட்டால் சாமி கொடுக்கும்’ என்ற தவறான நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள். பிரசங்கிகளுக்கு இது நிறைய வசதியாகி விட்டது. என் பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் நான் என் பிள்ளைகளுக்காக கடவுளிடம் வேண்டினால் அது சரி; ஆனால் காசு கொடுத்து ஒரு பிரசங்கியை ஜெபம் செய்யச் சொல்கிறார்கள். உங்களுக்குத் தலைவலி. நீங்க சாமிட்ட கேளுங்க. எதுக்கு Xக்கும்  Yக்கும் காசு கொடுத்து, உங்க தலைவலிக்கு  அந்த ஆளிடம் போய் ஜெபிக்க சொல்றீங்க? எப்படியோ கிறித்துவ நம்பிக்கையாளர்களின் இந்த weakness-யைப் பயன்படுத்துகிறார்கள் இந்தப் பிரசங்கிகள். அவர்களில் காட்டில் இப்போவெல்லாம் ’ஜோ’ன்னு எப்பவும் மழைதான்!  shedகள் எல்லாம் இப்போது வளர்ந்து மாட மாளிகைகள் ஆகி விட்டன. தினந்தோறும் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ... இதில் நம்பிக்கையுள்ளவர்களின் முட்டாள்தனத்திற்கு (gullibility) இன்னொரு சின்ன உதாரணம்: இந்தப் பிரசங்கிகள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் இந்தப் பிரசங்கிகள் எவ்வளவு கேவலமான குரலில் பாடினாலும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த ஒலிநாடாக்கள், குறுந்தகடுகளை வாங்கி ‘ஆஹா .. என்னே பாடல்!’ என்று வாங்கி அதைக் கேட்பதைப் பார்க்கும்போது நம்பிக்கைகளுக்கு கண்ணில்லை என்பதோடு இல்லாமல் .. காதும் இல்லையென்றுதான் தோன்றுகிறது. 

-----------
எனக்குப் பதில் தெரியாத ஒரு கேள்வி. பதிலிருப்போர் விளக்கவும்.

http://pagadhu.blogspot.in/2012/07/blog-post.html என்ற பதிவில் சொல்லப்பட்டவை:

//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?


Saturday, June 02, 2012

572. இன்றைய தினசரியில் சில நல்ல சேதிகள் ...




*


நம்ம லல்லு - ஜப்பான் ஜோக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பீஹார் இன்று இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலமாம். வளர்ச்சி விகிதம் 13.1% இது இந்த ஆண்டு மட்டுமல்ல, சென்ற ஆண்டும் முதல் இடத்தில் இருந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டை எண்களில் வளர்ச்சி. பஞ்சாபைத் தாண்டி விட்டதாம். 6-வது இடம் நமக்கு. நமக்கு அடுத்த இடம் அதிகமாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வரும் குஜராத்!

.................................

அதே பீஹாரில் ... ரன்விர் சேனா தெரிந்திருக்குமே ... பணக்கார, ‘உயர்சாதி’ விவசாயிகளின் ஆட்கொல்லும் படை. இதன் தலைவன் 70 வயது தாண்டிய ப்ரம்மேஷ்வர் சிங். டிசம்பர் 2006-ல் 61 தலித்துகளைக் கொன்றொழித்த இவன் மேல் போட்ட வழக்கில் விடுதலையாகி இந்த ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்கிறான். போயே போய்டான். வழக்கம் போல் அடையாளம் தெரியாத குழு ஒன்று அவனைச் சுட்டொழித்திருக்கிறது.

இப்போது. இவனுக்குத் தேவையான பாதுகாப்பு காவல் துறை கொடுக்கவில்லை இப்போது அங்கே கலகங்கள் ...தீ வைப்புகள்.

 ................................

ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தெற்காசிய குழந்தைகள் அமெரிக்காவின் spelling bee போட்டியில் வென்று வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையும் வென்றது நம் நாட்டுக் குழந்தைகள். ஆந்திர மாநில ஸ்னிக்தா முதல் பரிசு பெற்றுள்ளார். இரண்டாம் பரிசு பெற்ற ஸ்துதிக்கு இந்தியும், ஒரியாவும் தெரியும் மற்ற மொழிகள். மூன்றாம் பரிசு பெற்ற அர்விந்துக்கு தெலுகு, ஸ்பானிய மொழி தெரியுமாம்.

நல்ல பிள்ளைகள் ... வளரட்டும்.

(spelling bee பற்றிய திரைப்படம் ஒன்று பார்த்தேன். எவ்வளவு கடின முயற்சி எடுக்கிறார்கள். அந்தத் தேர்வுக்குத் தயாராவது பற்றி அந்த படம் நிறைய சொல்லியது.)

.................................

என்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பங்கு மார்க்கட் விவகாரங்கள் எதற்கு? ஒரு காலத்தில் ஒரு சில பங்குகள் வாங்கி, ஹர்ஷத் மேத்தா வந்து ‘உழுதுட்டு’ போய்ட்டார். அந்த பங்குகள் குப்பையாக இருந்தது. இப்போ இதோ இந்த வருடம் 20000 ஆயிரத்தைத் தாண்டும் என்றார்கள். அப்படி சொல்லி நாலைந்து வருஷமாச்சு. இப்போ 16000க்கு தடுமாறுது. எல்லாமே சந்தோஷ செய்திகளாக இருக்க வேண்டாமென இச்செய்தி. :-(

 ...................................

 சந்தோஷம்னா அப்படி ஒரு சந்தோஷம். நம்ம குடியரசுத் தலைவிக்கு அடுத்த மாதத்தோடு பதவிக்காலம் முடியுதாம். வீடு மாத்த ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். அப்பாடி .....!

 ...................................

மோடி தான் அடுத்த பிரதமர் அப்டின்னு ஒரு கூட்டம் கூடு கட்டுது. அத்வானிக்கு செம கடுப்பு. ஒவ்வொரு தலைவரும் கட்காரியை ஆளுக்கொரு பக்கம் இழுக்கிறார்கள். இன்றைக்கு கமல் சந்தேஷ் அப்டின்னு ஒரு ஆளு மோடிக்கு இப்போ என்ன அவசரம் என்று சைரன் ஊதியிருக்கிறார்.

(பி.ஜே.பி. வேண்டாம். காங்கிரஸ் வேண்டாம். இரண்டும் தனித்தனியாக வர முடியாது. இரண்டுமே குதிரை ஏறித்தான் வரணும். போற போக்கைப் பார்த்தா நம்ம ‘மம்மி’க்குக் கூட சான்ஸ் வரலாமோ. நம்மள கடவுள் தான் காப்பாத்தணும்.)

...................................

மம்மி செஸ் வீரர் ஆனந்துக்குக் இரண்டு கோடி ரூபாய் பரிசளித்துள்ளார்.

ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.

நேற்று புட்டின் அடித்த ஜோக் நன்றாக இருந்தது. ஆனந்த் தான் இளம வயதில் சென்னையில் ரஷ்ய நாடு நடத்தும் வகுப்புகளில் செஸ் படித்ததாகச் சொல்லியுள்ளார். புட்டின், ’அட! எங்க தலையில நாங்களே இழுத்து விட்டுக் கொண்டோமோ’ன்னு சொல்லியிருக்கிறார்.

 ...................................

 ‘பத்து வினாடி முத்தம்’ என்று எழுதினார் சுஜாதா. அந்தப் பத்து வினாடியெல்லாம் இப்போ பறந்து போய்க்கிட்டே இருக்கிறது. உசைன் போல்ட் தன் ஓடும் நேரத்தை மீண்டும் மீண்டும் குறைத்து வருகிறார். கடைசியாக நூறு மீட்டருக்கு எடுத்த நேரம்: 9.76 வினாடிகள். அம்மாடி!

ஒலிம்பிக்ஸில் இன்னும் எவ்வளவோ! ஆனாலும் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலில் வரும் இவருக்கும் அடுத்தவருக்கும் எவ்வளவு தொலைவு வித்தியாசம் ... மன்னன்! ..............................





*