Saturday, March 11, 2006

142.சோதிடம்..8: நேரம்,நாள்..

ஜோதிடம் தொடர் - முந்திய பதிவுகள்:
1*,
2*,
3*,
4*,
5*
6*,
7*.

பிந்திய பதிவுகள்:

9.
10.
11
12.
13.



நம்ம நாட்டுல நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறது சர்வ சாதாரணமா இருக்கு. ஏறத்தாழ பார்க்காதவர்களே இல்லைன்னு சொல்லலாம். இதில் கிறித்துவர்கள்,இஸ்லாமியர்கள் எல்லாருமே அடக்கம்

சில நாட்களை நல்ல நாட்கள் என்றும், சில நாட்களை கரி நாளென்றும் வகுத்தது யார்? அந்த வகுத்தலுக்கு அடிப்படைக் காரணங்கள் ஏதுமுண்டா? ‘செவ்வாய் வெறுவாய்’ என்பதற்கோ, ‘பொண்ணு கிடச்சாலும் புதன் கிடைக்காது’ என்பதற்கோ ஏதாவது காரணம் உண்டா? ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் நிகழ்ந்துள்ள ஒரு விஷயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் சந்தோஷமாக இருக்கு. என் சிறு வயதில் பலரும் ஊருக்குப் போகணும்னா, தெற்கே சூலம், வடக்கே சூலம் அப்டின்னு அதுக்கு ஏற்ற மாதிரி தங்கள் பயண நாட்களை மாற்றிக் கொள்வதுண்டு. இப்போது இந்த அவசர உலகத்தில் அது குறைந்து போனதாகத் தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் இருக்கவே செய்கிறது - பெளர்ணமி, அமாவாசை, அப்புறம் என்னவெல்லாமோ சொல்வார்களே - பிரதோஷம்… இவைகள் எல்லாம் ஜே..ஜேன்னு போகுது.

இதில் கிறித்துவ மக்கள் இதிலும் ஒரு தனிவழியில் போவதுண்டு. கத்தோலிக்கக் கிறித்துவர்களிடம் சனிக்கிழமை மாதா நாள், செவ்வாய் அந்தோனியார் நாள் என்று சில நாட்களைச் சிலருக்கு ‘அலாட்மெண்ட்’ செய்திருப்பார்கள். அவர்கள் கேட்டார்களா; இவர்களா கொடுத்தார்களா என்று எனக்குத் தெரியாது. அவைகளின் பின்னால் உள்ள ‘தாத்பர்யம்’ எனக்குத் தெரியாது. இன்னொரு வகைக் கிறித்துவர்கள் ’sabath’ என்று ஒரு நாளை - சிலர் அதை ஞாயிற்றுக் கிழமையாகவும், அட்வெண்டிஸ்ட் ஆட்கள் சனிக்கிழமையாகவும் ‘ஃபிக்ஸ்’ பண்ணியிருப்பார்கள். இந்த நாளில், கடவுள் ஆறு நாட்களில் தன் படைப்புத் தொழிலை முடித்துவிட்டு, அக்கடா என்று ‘ஓய்வு’ எடுத்த நாள் என்றும், நாமும் கடவுள் போலவே அன்று ஓய்வு - முழு ஓய்வு - எடுக்க வேண்டும் என்று மிகவும் தீவிரமாக இருப்பார்கள். யூதர்கள் தங்கள் வீடுகளில் எந்த வேலையும் செய்யாமல் முழுமையான ஓய்வில் இருப்பார்கள் என்றும், அன்று வீட்டில் மாலை விளக்கேற்றுவதற்குக் கூட வேலையாள் வைத்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இதில் எனக்கு இரண்டு ஐயங்கள்: எல்லாவற்றையும் படைத்தக் கடவுள் அந்த 6 நாட்களில் செய்தது என்ன களைப்பைத் தரும் உடல் உழைப்பா? (manual labour?) என்ற ஐயம் முதலாவது. வானமும் பூமியும் வா என்றால் அதுபாட்டுக்கு வந்துவிட்டுப் போகிறது. இதில் என்ன தேவை ஓய்வு - அதுவும் கடவுளுக்கு. சின்னப் பிள்ளைகளுக்குச் சொன்ன கதை போல இருப்பதை வைத்துக் கொண்டு மக்கள் இவ்வளவு தீவிரமாக இருப்பது எனக்கு வேடிக்கைதான். இரண்டாவதாக, சரி கடவுள் ஆறு நாட்கள் தன் படைப்புத் தொழிலைச் செய்து விட்ட களைப்பில் ஓய்வெடுத்தார் என்றே கொள்வோம். இருந்து விட்டுப் போகட்டும். அதனால் நாமும் ஏன் ஓய்வெடுக்க வேண்டும். ஒருவேளை இதற்குப் பதில் சொல்ல வருபவர்கள், ‘இந்த நாள் ஓய்வுக்காக அல்ல; கடவுள் நம்மைப் படைத்ததை நினைவு கூறவும், அதோடு ஜெபம், தவம் என்று இருக்கவே அது ஓய்வு நாளாகக் கடைப்பிடிக்கப் படுகிறது’ எனலாம். அப்படிச் சொன்னால் என் பதில்: அப்படியே நன்றி சொல்ல அந்த ஒரு நாள் மட்டும்தானா; வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும்தானே என்பேன்.

இதில் அவர்கள் -முக்கியமாக ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்கள் - அந்த ஓய்வு நாளில் (சனிக்கிழமைகளில்) எந்த வேலையும் செய்ய மாட்டோம் என்பார்கள். அந்த நாட்களில் இருந்தது என்பதால் தேர்வுகளைக் கூட எழுதாத மாணவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். (அது எங்கள் இஷ்டம்; நன்மையோ தீமையோ அது எங்கள் சாய்ஸ்; இதில் பிறர் சொல்ல என்ன இருக்கிறது? - இப்படியும் கேட்கலாம்!)

சரி, நாள் விஷயம் இப்படி என்றால் ‘நேரம்’ இன்னொரு முக்கியமானது. நிறைய பெயர்கள் உண்டே…யம கண்டம், அது இதுன்னு. இந்த ‘டைம் டேபிள்’ போட்டது யார்? எந்த அடிப்படையில்? பத்து மணினா நல்லதில்லை; பத்து ஐந்து என்றால் எல்லாம் சரியாகி விடுகிறதே எப்படி?

இதில் பிறந்த நேரம் மிகவும் முக்கியமாம். என் நண்பர் an orthodox hindu - பிராமணர் என்று சொல்ல வேண்டியதில்லை - தன் தங்கைக்குக் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறினார். சிஸேரியன் என்று மருத்துவர் கூறி விட்டு, எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று இவர்களிடமே கேட்டாராம். இவர்கள் வீட்டில நல்ல நாள், நேரம் எல்லாம் பார்த்து சொல்ல, அதே சுப யோக நேரத்தில் குழந்தை ‘பிறப்பிக்கப்’ பட்டதாம். நண்பர் இதைக் கேலி செய்து, ஜாதகம் எழுதுவதைக் கேள்வி கேட்க, ‘உனக்கு சேர்க்கையே சரியில்லை; அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறாய்’ என்றார்களாம்.

ஒரே நேரத்தில் எத்தனை எத்தனைக் குழந்தைகள் பிறக்கின்றன. அதைவைத்து ராசி, நட்சத்திரம் என்று சொல்லும்போது - எடுத்துக் காட்டாக, பரணி நட்சத்திரத்தில் பிறந்தால் தரணி ஆள்வார்கள் (நம்ம மு. அமைச்சரின் நட்சத்திரம் அதுதானாமே, அப்டியா?) என்று சொல்கிறார்கள். அந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை தரணியும் ஆளலாம்; ரோட்டு ஓரத்தில் பிறந்திருந்தால் பிச்சையும் எடுக்கலாம். பரணியில பிறந்து, ஒரு முதலமைச்சருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா இருந்தா நம்மளும் ஒரு நாள் மு. அமைச்சராகலாம்; இல்லாட்டி மிஞ்சிப்போனா என்ன, ஒரு வலைப்பதிவு வச்சிக்கிட்டு ஏதாவது மனசில தோண்றத எழுதிக்கிட்டு இருக்கலாம்!

சரி..சரி..இதெல்லாம் உங்க நேரம் - இதையெல்லாம் வாசிக்கணும்னு உங்க தலைவிதி’ங்க !








Pathivu Toolbar ©2005thamizmanam.com


Mar 11 2006 09:06 am | சமூகம் | | edit this
28 Responses
துளசி கோபால் Says:
March 11th, 2006 at 9:47 am e
உங்களுக்கு இப்ப நேரம் சரியில்லை போலெ

மு.அமைச்சரின் நட்சத்திரம் ‘மகம்’ன்னு கேள்விப்பட்டேன். மகம் பிறந்த மங்கை! மகம் ஜெகத்தை ஆளும்!

இந்த நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் சூரிய உதயம் , சூரிய அஸ்தமனம் இது ரெண்டுக்குள்ளேதான் இருக்கும்.
பொழுது சாஞ்சுருச்சுன்னா இதெல்லாம் இல்லை.
அதேமாதிரி, ராசி பலன் பாக்கறப்ப நல்லதாச் சொன்னா அது எனக்கு. தீமையா இருந்தா அது வேற யாருக்கோதான்.
இப்ப என்னென்னா நாளும் நேரமும் பாக்கறப்ப, அது கெட்ட நேரமா(!) இருந்தா அமெரிக்காவுலே, இல்லே வேற இடங்களிலே
இப்ப இந்த டைம், அது நல்ல நேரம்தான்னு பார்த்துக்கிட்டுப் போகவேண்டியிருக்கு.

பாண்டிபஜார்லே போய்ப் பாருங்க. ஜனங்க கெட்ட நேரம் நல்ல நேரமுன்னு பார்க்காம நகையும், துணியுமா
வாங்கிக் குவிக்கிறாங்க.( எல்லாம் அனுபவம்தான்)

டி.பி.ஆர். ஜோசஃப் Says:
March 11th, 2006 at 10:50 am e
அடடா என்ன மாதிரியேதான் இருக்கீங்க நீங்களும்.

நீங்க சொன்னா மாதிரி அந்தோணியார் நாள், மாதா நாள்ங்கறதுக்கு பின்னால ஒன்னு இருக்கு. கத்தோலிக்க தேவாலயங்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு புனிதர்களை பேட்ரனாக வைத்துதான் இருக்கும். அந்தோணியார் கோவில்களில் அப்புனிதருக்கான நவநாள் செவ்வாய் அன்றும் அன்னை மரியாளுடைய நவநாள் அக்கோவில்களில் சனியன்றும், சூசையானால் புதன் கிழமை என்றும் நடப்பது காலந்தொட்டு நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்து வருகின்றன.

ஆனால் நல்ல நாள் கெட்ட நாள் பார்க்கும் பழக்கம் கத்தோலிக்கர்களிடத்தில் இருந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் காலங்காலமாய் என் போன்றவர்களிடத்தில் நான் அதைக் கண்டதில்லை. மற்றபடி திருமணம் போன்ற வைபவங்களை முகூர்த்த நாள் பார்த்து வைக்கும் பழக்கம் இருக்கிறது.

ஆனால் சாதாரண விஷயங்களுக்கு வெளியே கிளம்பிச் செல்வதற்குக் கூட எமகண்டம், ராவு காலம் பார்க்கும் பழக்கம் நிச்சயம் கத்தோலிக்கர்களிடத்தில் நான் அறிந்து இல்லை. எனக்கு தெரிந்த ஒருவருடைய குடும்பத்தில் வீட்டில் இருக்கும் பீரோவை திருப்பி வைப்பதற்குக்கூட ஜோசியரிடம் கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள்..இத்தனக்கும் அவர் என்னுடைய முன்னாள் மேலதிகாரி!

நான் முன்பே ஒரு முறை என் பதிவில் இதைப் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறேன். என்னுடைய கிளைதிறப்பு விழாவில் பங்கு பெற்ற என்னுடைய சேர்மன் அன்று இரவே மரித்துப் போனார். அதற்கு நான் நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து வங்கியின் திறப்பு விழாவை நடத்தாததுதான் காரணம் என்று என் வங்கியின் அப்போதைய அதிகாரிகள் (கிறிஸ்துவர்கள் அல்ல) என்னைக் குற்றப்படுத்தினர்!

இதனை எழுதுவதன் மூலம் நான் யாரையும் குறை சொல்ல வரவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

dharumi Says:
March 11th, 2006 at 3:45 pm e
துளசி,
“மகம் ஜெகத்தை ஆளும்!” சரி, என் பதிவில நம்ம மு.அமைச்சரின் ராசி நட்சத்திரம் மகம் என்றே வச்சுக்குவோம். (எதுன்னாலும் நம்ம argument அப்டியே நிக்குது; இல்லீங்களா?)
அதென்ன மகம் ஜெகத்தை ஆளும்; பரணி தரணி ஆளும்….அப்டின்னா என்ன மாதிரி ஆளுக யாருக்கும் இந்த நட்சத்திரம் இருக்காதா.. டாப் ஆளுகமட்டும்தான் இந்த நட்சத்திரத்தில பிறந்திருப்பாங்களா…இல்ல, டாப் ஆளுகளா ஆனா இந்த மாதிரி சொல்லுவாங்களா?
இதுக்காகவாவது இந்த நட்சத்திரம் பற்றிப் படிக்கணும்; படிச்சி தெருவில போற நாலு பாவப்பட்ட ஜன்மங்களுக்கும், நம்ம மு. அ., பில் கேட்ஸ், லஷ்மி மிட்டல், டாடா இவங்களுக்கும் ஒரே நட்சத்திரம் இருக்குன்னு நிருபிச்சிரலாம்.

தருமி Says:
March 11th, 2006 at 10:01 pm e
ஜோசஃப்,
இந்த புனிதருக்கு இந்த நாள் என்ற பழக்கம் எப்படி, ஏன் என்பதுதான் என் கேள்வியே.

“எமகண்டம், ராவு காலம் பார்க்கும் பழக்கம் நிச்சயம் கத்தோலிக்கர்களிடத்தில் நான் அறிந்து இல்லை”//-

- ஆமாம் ஜோசஃப், அந்த அளவு ‘மோசமில்லைதான்:

தருமி Says:
March 11th, 2006 at 10:05 pm e
துளசி,
“இப்ப என்னென்னா நாளும் நேரமும் பாக்கறப்ப, அது கெட்ட நேரமா(!) இருந்தா அமெரிக்காவுலே, இல்லே வேற இடங்களிலே
இப்ப இந்த டைம், அது நல்ல நேரம்தான்னு பார்த்துக்கிட்டுப் போகவேண்டியிருக்கு” // - இது நல்ல டெக்னிக்கா இருக்கு பாத்தீங்களா, உலக மக்கள் எல்லோரும் ஒரு குடும்பம் அப்டின்றது எவ்வளவு வசதியா இருக்கு இதத்தான் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” அப்டின்னு சொல்லியிருக்கா

kozhundu Says:
March 11th, 2006 at 10:54 pm e
தருமி சார்

கூப்பிட்டீங்க போல இருக்கு. நானும் கொஞ்சம் சொல்றேனே! சோதிடத்தோட அடிப்படை என்னன்னா மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவனோட சாதகம் அமையுது. இங்கே, புண்ணியம்ங்கிற்து, கோவிலுக்குப் போகிற்து மட்டுமில்ல, மனிதன மனிதனா நடத்தும் போதும் புண்ணியம் சேக்கிறோம்.அன்ன தானம், அறிவு தானம், இரத்த தானம், எல்லாமே புண்ணியம்
சேர்க்குது. சோதிடமும், ம்றுபிறவி, முற்பிறவி எல்லாம் சேர்ந்து வர கருத்துக்கள். ஒரே நட்சத்திரதுல பிறந்தவங்களுக்கெல்லாம், ஒரே பலன் கிடைக்காது. செல விசயங்கள்தான்
ஒத்துப் போகும். இதனாலதான் செய்தித் தாள்ல வர ராசி பலனெல்லாம் சரியில்ல. மும்பைல பிறக்கிற பிள்ளைக்கும் கொல்கொத்தாவில பிறக்கிற பிள்ளைக்கும், ஒரே நேரத்துல பிறந்திருந்தாலும், இட மாற்றத்த கணக்குல எடுத்துக்கிறதால சாதகம் வேற மாதிரி அமையும்.

அது என்ன அந்த பச்சை ஸ்மைலி என்னோட கொள்கைக்கப்புறம்?:))

அன்புடன்
சாம்

தருமி Says:
March 11th, 2006 at 11:55 pm e
மனிதன் செய்கிற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவனோட சாதகம் அமையுது.”// -
- அட கிரஹாச்சாரமே, என்ன சாம், ஏதோ கிரஹங்கள் எல்லாம் ஒவ்வொரு ‘வீட்ல′ இருக்கிறதுனால சாதகம் அமையுதுன்னுதானே சொல்லுவாங்க…

“இட மாற்றத்த கணக்குல எடுத்துக்கிறதால சாதகம் வேற மாதிரி அமையும்”// -
- சரி, ஒரே ஊர்ல ஒரே ஆஸ்பத்திரியில ஒரே நட்சத்திரத்தில பிறந்திருந்தா ஒரே மாதிரி அமையுமா?

“அது என்ன அந்த பச்சை ஸ்மைலி என்னோட கொள்கைக்கப்புறம்?:))”// - இது புரியலையே..

துளசி கோபால் Says:
March 12th, 2006 at 1:12 am e
தருமி,

பரணி-தரணி
மகம்-ஜெகம்

எல்லாம் ஒரு ரைமிங்கதான். எதுகைமோனையிலே நம்மாளுங்க படுகெட்டியாச்சே.

‘நாளும் கிழமையும் நல்லவர்கில்லை’ என்பது என்னோட புதுமொழி.

வசந்தன் Says:
March 12th, 2006 at 4:49 am e
//சனிக்கிழமை மாதா நாள், செவ்வாய் அந்தோனியார் நாள்//
உங்கயும் உந்தக் கதைதானோ?

அதுசரி, பரணியிற் பிறந்திட்டு, தரணியாளாமல் இருந்தால் எப்படி? என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு அந்த யோகம் வந்தது, நீங்கள் தான் தவற விட்டுவிட்டீர்கள். ஞாபகமிருக்கா உங்கள் சிறை மீள்வு?
இப்போது கூட உங்கள் “வகுப்புத் தோழனை”ப் பிடித்து முயற்சித்துப் பார்க்கலாமே?

kozhundu Says:
March 12th, 2006 at 7:41 am e
தருமி சார்

உங்க கேள்விக்கு விடை இருக்கு. கொஞ்சம் விரிவாவே விடை சொல்றேனே!
நாளைக்கு மயில் அனுப்புகிறேன்

அன்புடன்
சாம்

Sam Says:
March 13th, 2006 at 7:36 am e
தருமி சார்

என் நட்சத்திரம் அவிட்டம்
‘அவிட்டம்னா தவிட்டுப் பானையெலாம் பொன்னாம்’. எங்கிட்டே தவிட்டுப் பானை இல்லை. ஒரு தவிட்டுப் பானை வாங்கினா பொன் வருமோ என்னமோ?

உங்க கேள்விக்கு பதில் சொல்லுமுன்னாடி சில விசயங்களை முதல்ல சொல்லணும். சாதகம் எப்படி கணிக்கிறாங்க?

சாதகம் எழுதியிருக்க காகிதத்தை பார்த்க்தீங்கன்னா அதுல இரண்டு படம் இருக்கும். ஒன்னு ராசி, இன்னொன்னு நவம்சம். இரண்டுலேயும், பன்னிரண்டு கட்டங்கள் இருக்கும். ஒன்னுலெயிருந்து பன்னிரண்டு வறையிலான கட்டங்களை வீடுன்னு சொல்வாங்க. முதல் வீட்டைப் பார்த்து
சாதகரோட மனசு, உடம்பு, பெர்சனாலிட்டி, இரண்டாம் வீட்டைப் பார்த்து அவரோட குடும்பம், பேச்சு, இப்படின்னு, எல்லா வீட்டையும் பார்த்து பலன் சொல்லலாம். குழந்தை பிறக்கிறப்போ, கிழக்கில உதயாமயிருக்கிற நட்சத்திரக் கூட்டம்தான் சாதகத்தில, ராசி சக்கரத்தில முதல் இடம். குழந்தை பிறந்த இடத்திலுருந்து, நெட்ட நெடுவா, வெர்டிகலா, ஒரு கற்பனை வட்டம் வரைஞ்சு, அதை பன்னிரண்டா பிருச்சீங்கன்னா, ஒவ்வொன்னும், ராசி சக்கிரத்தில வர ஒரு இடம். இந்த பன்னிரண்டுலயும், மேசம், ரிசபம், மிதுனம், மகரம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், கடகம், கும்பம், மீனம்ன்னு, ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் இருக்கும். அடுத்து, அந்த நட்சத்திரக் கூட்டத்திக்கு முன்னாடி
என்னென்ன கிரகங்கள் இருக்குன்னு பஞ்சாஙக்த்த பாத்து குறிச்சுக்குவாங்க. கணினியில வர ஒரு பஞ்சாங்கம், நம்ம ஊர் பஞ்சாங்கத்த விட சரியா இருக்கு. முத தப்புக் கணக்கு இங்க ஆரம்பிக்குது

சரி, நட்சத்திரத்தை விட்டு வேறு எதை எதையோ சொல்றேன்னு பார்க்கிறீங்களா? வந்துட்டேன் விசயத்துக்கு. நட்சத்திரம் மொத்தம் இருபத்தேழு. ஒவ்வொரு நட்சத்திரத்தையும், நாலு பகுதியாப்
பிறிச்சு, பாதம்ன்னு சொல்றாங்க. ஒவ்வொரு ராசி கட்டத்திலேயும் ஒன்பது பாதம் வரும். முதலல பரணின்னு சொன்னீங்கன்னா என்ன பாதம்ன்னு பாக்கணும்.சந்திரன் எந்த ராசிக் கட்டத்தில எந்த பாதத்தில வருதோ, அதுதான், சாதகரோட நட்சத்திரம், பாதம். இப்ப சந்திரன் எந்த வீட்டில இருக்கும்ன்னு பார்க்கணும். அஞசாம் வீட்டில இருக்கிறதுக்கும், எட்டாம் வீட்டுல இருக்கிறதுக்கும்
வித்தியாசம் நிறைய இருக்கு. அதோடு பகைக் கிரகமான ராகு சேர்ந்துக்கிச்சுன்னா இன்னும் பலன் மாறும். அடுத்து நவாம்சத்துல சந்திரன் எந்த வீட்டுல இருக்குன்னு பார்க்கணும். இப்படி நிறைய
விதிகள் இருக்கு. இப்படி பரணி நட்சத்திரமா இருந்தாலும் பலன்கள் மாறுபடும்

ராசி, நவம்சத்தோட, இன்னும் இருபத்தியோரு சக்கரங்கள் தயாரிக்கலாம். இந்த ஒவ்வொன்னும் வெவ்வேற விசயங்களை, சொல்லும். ஒன்னு குழந்தைகளைப் பத்திச் சொல்லும். ஒன்னு நம்ம பார்க்கப் போர வேலையப் பத்திச் சொல்லும். சில வினாடிகள், சில நிமிடங்கள், மாறிப் போனாலும், இதல்லாம்
மாறிப் போகும். அதனாலத்தான், இரட்டையர்களா இருந்தாலும், வாழ்க்கை வேற மாதிரி இருக்கும்

ஒரே மருத்துவமனையில ஒரே நிமிடத்தில, ஒரே வினாடியில பிள்ளைகள் இரண்டு பிறக்க வாய்ப்பே
இல்லை. படைப்பு என்னைக்குமே ஏமாறாது. நமக்குன்னு, உள்ளது நமக்கு என்னைக்குமே உண்டு.
இன்னும் பிறக்கப் போற குழந்தைக்காக் எதாவது அதிகமா செய்யணுன்னு நினைச்சா, கோயிலுக்குப் போகலாம், மத நம்பிக்கை இல்லைன்னா தான தருமங்கள் செய்யலாம். ஒரு வாய், ஒரு வயிறு, ஒரு மனசு குளிர்ந்தாலும் அந்தப் பலன் குழந்தைக்கும், பெத்தவங்களுக்கும் போகும். நம்ம ஊர்ல தர்மம் தலை காக்கும்ன்னு சும்மாவா சொல்றாங்க?

சோதிடம் வட மொழி வேதத்தில ஒரு பகுதி. தமிழில கோளறு பதிகம்ன்னு ஒன்னு இருக்கு. அதைப் பத்தி எனக்கு ஒன்னும் தெரியலை. நண்பர் குமரன் அதைப் பத்தி எழுதப் போரார். அங்கயும் வந்து பாருங்களேன்.

சரி, உங்க ஊரில தவிட்டுப் பானை கிடைக்குமா? கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்? )))

அன்புடன்
சாம்

துளசி கோபால் Says:
March 13th, 2006 at 10:03 am e
சாம்,

நீங்க பொண்ணா இருந்தாத்தான் இந்தத் ‘தவிட்டுப்பானை’ டயலாக் செல்லும்.

தாணு Says:
March 13th, 2006 at 3:29 pm e
தருமி
இந்த நாள் நட்சத்திரம் எல்லாம் ஹம்பக்தான். நேரம் குறித்துவைத்து சிசேரியன் செய்யச் சொல்லுவார்கள், ஆனால் குழந்தை பிரந்த நேரம் உள்ளே உள்ள மருத்துவர் சொல்வதுதானே! ஆப்பரேஷனில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது சில மணித்துளிகள் முன்னே பின்னே சொல்வதெல்லாம் சகஜம்.
எனக்கு சிசேரியனுக்கு நாள் குறிக்கப்பட்டபோது என் தம்பியும், அண்ணனும் உடனிருக்கும் வேளை( Rh negative ரத்தவகை நாங்கள் மூவரும்) அஷ்டமி அன்று ஏதோ கெட்ட நேரம், அது பேர் கூட மறந்துடுச்சு, அப்போதான் பிக்ஸ் பண்ணப்பட்டது. ஆனா பாருங்க அறுவை சிகிச்சை செய்யப்போற மருத்துவ நண்பர் ரொம்ப நாள் நட்சத்திரம் பார்க்கிறவங்க, ஒரே சண்டை. ஆனாலும் பிடிவாதமாக அன்றே பெற்றுக் கொண்டேன். ஒருவாரம் கழிச்சு ஆடி முடிந்துவிடும் அப்போ பண்ணலாம்னு விவாதம் கணவரும் என்போலவே என்பதால் சாத்தியமானது!(ரெண்டு நாளா இந்த பதிவு ஓப்பன் ஆகலையே, ஏன்?)

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 3:55 pm e
about jyothidam it is not only in vadamozhi, tamil mozhiyum jyothidaththai patri koorukirathu. Agathiyaril irunthu arambithu eththanaiyo per.Melum veru veru ooril piranthalum palan verupaduvatharku karanam antha antha ooril ulla atcha regai melum dheerka regai konam marupaduvathal than.ithu oru kanakku. athil thulliyamaga therinthavar inru migavum kuraivu. neengal nambavillai enral jyothidam illai enru aagi vidathu.neengal dharumi enbathal naan nakkeran enru ninaikka vendam.ithu muzhukka muzhukka vignanam.ithaivada indhiyavil sila palkalaikazhagangalill katru tharukirarkal.

தருமி Says:
March 13th, 2006 at 4:13 pm e
தாணு,
உங்க இடத்தில நான் இருந்திருந்தா அவ்வளவு strong-ஆ இருந்திருக்க மாட்டேன் என்று நினைக்கிறேன். Hats off to you and to your hubby.

“!(ரெண்டு நாளா இந்த பதிவு ஓப்பன் ஆகலையே, ஏன்?)”// - தெரியலையே. அதோட இன்னும் என்னென்னவோ நடக்குது…மர்மமாய் இருக்குது
இப்போ ஒரு நாலஞ்சு நாளா இந்தப் பின்னூடங்கள் என் மயில் பொட்டிக்கு வரமாட்டேங்குது. moderation box-ல் வந்து நிக்கிது. ஏன், எப்படின்னு தெரியலை..

தருமி Says:
March 13th, 2006 at 4:29 pm e
Geetha Sambasivam,
“Agathiyaril irunthu arambithu eththanaiyo per.”//
- so what?

“ithu oru kanakku.”
- i think I already made a comment on this routine statement.

“athil thulliyamaga therinthavar inru migavum kuraivu.”
-this is another routine statement, a very handy ‘escape route’!

“neengal nambavillai enral jyothidam illai enru aagi vidathu.”
- neengalum palarum nambuvathaal jyothidam unmai enru aagi vidathu.

“ithu muzhukka muzhukka vignanam.”
- dont keep harping about it this way. i have given a common definition for vignanam earlier. will this come under that category? can it stand for any scientific scrutiny? anyway i want to raise still a lot more Qs. hope you keep track of them too.

“ithaivada indhiyavil sila palkalaikazhagangalill katru tharukirarkal.” - உபயம் பி.ஜே.பி. & PROFESSORஜோஷி.. and there are Universities in U.S. teaching theory of creation and banning of teaching evolution

தருமி Says:
March 13th, 2006 at 4:46 pm e
கொழுந்து சாம்,
* - “……..மீனம்ன்னு, ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டம் இருக்கும்..”// நட்சத்திரக் கூட்டம் அவ்வளவுதானா..?

* - “கணினியில வர ஒரு பஞ்சாங்கம், நம்ம ஊர் பஞ்சாங்கத்த விட சரியா இருக்கு”// அப்போ, no standard and single பஞ்சாங்கம்..அப்படித்தானே?

* - “நட்சத்திரம் மொத்தம் இருபத்தேழு” - அது என்ன கணக்கு..? கோடானு கோடீன்னுல சொல்லுவாங்க!

* - ” நம்ம ஊர்ல தர்மம் தலை காக்கும்ன்னு சும்மாவா சொல்றாங்க?” - சும்மாதான் சொல்லியிருக்காங்க…அப்பத்தான ஏதாவது பண்ணுவோம்னு. எதுக்கும் இந்த பதிவுக்கு முந்தின நம்ம பதிவு பாருங்க, என்ன?

* - “உங்க ஊரில தவிட்டுப் பானை கிடைக்குமா? கொஞ்சம் தகவல் சொல்லுங்களேன்? ” - அதெல்லாம் முடியாது. அது எங்க எப்படி யார் மூலமா கிடைக்கும்னு உங்க சாதகத்தில என்ன சொல்லியிருக்குமோ, எனக்கென்ன தெரியும்.

தருமி Says:
March 13th, 2006 at 4:48 pm e
துளசி,
please define ‘தவுட்டுப் பானை’
தவுட்டுனால செஞ்ச பானையா; தவுடு போட்டு வைக்கிற பானையா..?

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 4:58 pm e
Mr.Dharumi, ellavatrukkum irandu pakkam undu enbathai vasathiyaga maranthu vitterkale.Neengal illai enral undu enru solbavarkalum athai niroobippavarkalum undu.Itharku BJP and Joshi enna seivarkal? People like you accept things only from the foreign countries. If the foreign countries accept Indian jyothidam and all other things you will also begin to praise them.It is not fair. Do not think our culture is conservative and do not make others also. We used to think very cheap ourselves from the British period, I think. It is not an arogyamana sinthanai.vatham enral ethir vathamum undu. To.Thanu, to-day’s doctors are money making minded and they will compell peopleby saying this and that to fulfill their needs.Neengall netrikan thiranthalum en bathil ithuthan.I am also from Madurai.Ullathaiullapadi sollum Maduraikararil nanum oruthi.Do not come to a judgement with your experience only.

Geetha Sambasivam Says:
March 13th, 2006 at 6:07 pm e
Thanu, I am sorry, i did not know you are also a doctor. Again I am sorry if it hurts you in any way. I was just telling about today’s thinking.

Sam Says:
March 13th, 2006 at 6:16 pm e
துளசி டீச்சர்
தவிட்டுப் பானையை எப்படியாவது கண்டு பிடிச்சிட்டா என் கஷ்டம் எல்லாம் போயிடும்ன்னு
நினைச்சிட்டுருந்தேனே!! என் எண்ணத்த போட்டு உடச்சிட்டேன்ங்களே!! வேற எதாவது
ஐடியா இருந்தா குடுங்களே!!!
உங்களை டீச்சர்ன்னு கூப்பிடலாமா?
அன்புடன்
சாம்
தருமி சார்,
உங்க கிட்ட மெதுவா வந்து பேசறேனே
உங்களுக்கு எவ்வளோ கமிஷன் வேணுமோ கொடுத்து விடுகிறேன்

தருமி Says:
March 14th, 2006 at 11:26 am e
கீதா சாம்பசிவம்,
“undu enru solbavarkalum athai niroobippavarkalum undu.” நிரூபிங்கன்னுதானே சொல்றேன்.

“People like you accept things only from the foreign countries.” அய்யோ, என்ன இப்படி சொல்லீட்டீங்க; அப்படியெல்லாம் இல்லை. பாருங்களேன், ஒரு ஃபாரின் விஷயம் இருந்திச்சி, நம்மட்ட. தூக்கிப் போட்டுட்டேன்லா…christianity !

“vatham enral ethir vathamum undu.” எதிர்வாதம் கூடாதுன்னு நான் எப்ப யாருக்கு 144 போட்டேன்!?
வெறும் வார்த்தைகள் - “இது ஒரு விஞ்ஞானம்”, “இது ஒருவகைக் கணக்கு” - மட்டும் போதாது. better you substantiate at least these statements. we need not keep thses things at a high pedestal just ‘coz they had their origin in our land.

thangam Says:
March 14th, 2006 at 12:09 pm e
Ella jathakam kattam melae oru Sanskrit poem undu, athai padiyunga. It says “Jananee janma sowkyanam pathavi poorvapunniyam, kula sampath…..”. ethu avaravarkal thai thanthaiyar seitha nalla, theeya, kariangal, ennia ennangal ellam ‘KARU MAIYATHIL’(Genetic Centre) pathivakum. Athan padi than antha sathakar vazhkai amaiyum. Melum appavin vinthuvum ammavin karu muttaiyum inaiyum nerappadi antha antha kiragangalin kantha alaikal (Magnetic Waves)thanmai otti iyarkaiyana pirappu nikazhavendum. Ithai nam puthisali endru nammai name ematrikkolvathagum. Ithai patri innum niraiya unmaikal irukku oru web site venum. uthavi seithal ennal innum konjam vilakkukiren, therinththai. web site uruvakka uthavi thevai.Vazhga Valamudan-thangam

Geetha Sambasivam Says:
March 14th, 2006 at 2:03 pm e
ungalukkana atharangalai thdi kondu irukkiren. Thakka samayam eluthukiren.

துளசி கோபால் Says:
March 14th, 2006 at 2:29 pm e
சாம்,

தாராளமா டீச்சர்னே கூப்புடுங்க. வாழ்க்கையிலே ஒவ்வொரு கணமும் மனுஷன் வாழ்க்கைப்பாடத்தைப் படிக்கணுமுல்லே?
எப்படி நம்ம தத்துவம்?

ஆமா, நீங்க வேற’சாம்’தானே?:???:
ஆங்…..விஷயத்துக்கு வருவோம். தவிட்டுப் பானைன்னா தவிட்டுலே செஞ்ச பானையா? அப்படி தவிட்டுலே பானை
செய்யமுடியுமா? முடியாதுல்லே? அதனாலே தவிடு போட்டு வைக்கிற பானை.

அந்தக் காலத்துலே புருசன்கிட்டே இருந்து காசை( அப்பெல்லாம் தங்கக்காசு இருந்துச்சுங்களே) ஒளிச்சு வைக்கிறதுதான்.
நல்ல சிக்கனமாக் குடும்பம் பண்ணுற பொண்ணு, காசை ஒளிச்சு வைக்கிற இடம்தான் தவிட்டுப் பானை. அதையாரு
ஆராயப் போறாங்கன்னு அந்த இடம். அப்புறம் அவிட்டம், தவிடு எல்லாம் என்ன ரைமிங்கோ?

ஜோ Says:
March 14th, 2006 at 6:33 pm e
தருமி & ஜோசப் சார்,
இந்த ‘நவநாள்’ என்பது உண்மையில் ‘நவவாரம்’..அதாவது குறிப்பிட்ட அந்த புனிதரிடம் தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் சென்று ஜெபித்து ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை வைத்தால் ,அது நிறைவேறும் என்பது பல கத்தோலிக்கர்களின் நம்பிக்கை .அதற்காக வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளை குறிப்பிட்ட அந்த புனிதருக்காக வைத்திருக்கிறார்கள் .எல்லோரும் ஒரே நாள்,ஒரே நேரத்தில் ஓரிடத்தில் கூடி ஜெபிக்க வசதியாய் இருக்கும் என்பதை விட குறிப்பிட்ட நாளுக்கு எந்த தார்ப்பரியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

(பொதுவான நடைமுறையை நான் சொன்னேன் .நானும் இதை நம்பி கடைபிடிப்பதாக நினைத்து ,என்னை பொறுப்பேற்கச் சொல்லி தருமி கேள்வி மேல் கேள்வி கேட்டால் நான் இந்த ஆட்டத்துக்கு வரல .மற்ற படி நடைமுறைகளைப் பற்றி எனக்கு தெரிந்ததை கட்டாயம் சொல்லுவேன்)

தருமி Says:
March 16th, 2006 at 8:59 am e
ஜோ,
“நானும் இதை நம்பி கடைபிடிப்பதாக நினைத்து..”//
- ஏன் ஜோ, அது உண்மையாய் இருந்தால் தப்பா என்ன? நானெல்லாம் உங்க வயசில எங்க ஊர் ஜெபமாலை மாதா கோவில்ல சனிக்கிழமை சாயுங்காலம் தவறாம நவநாளுக்கு போயிருவேன்ல; அதுவும் வருஷக்கணக்கா…நல்ல பசங்களா இருங்கப்பா.. (சைத்தான் வேதம் ஓதுது.. )

சிவமுருகன் Says:
March 16th, 2006 at 10:04 am e
தருமி சார்,
ஆள் செய்யாத வேலையை நாளும், கோளும் செய்யும்னு கேள்விபட்டுள்ளேன்.

எல்லாம் ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்ட்டுக்காகவும், சிந்தித்து ஆராயவும் செய்யப்பட்ட ஒரு முன்னறிவிப்பு ஜோதிடம், சிஸ்டம் (system).

2 comments:

Aravindhan said...

ராகுகாலம் யமகண்டம் timela பஸ்,ட்ரைன்,aeroplane,satellite எல்லாம் விட கூடாது அப்படின்னு ஒரு பொதுநல வழக்கு யாரவது போடலாமே

தருமி said...

இது நல்ல ஐடியாவா இருக்கே. ஆனா இப்படியே போனா ..

கட்டணக் கழிப்பறைக்காரங்ககூட திறந்து வைக்கக்கூடாதுன்னு வழக்கு போட்ருவோம்...

:)

Post a Comment